பகுதி 93
ஒரு கொலையை செய்துவிட்டு, அதுவும் ஒரு இலங்கை தமிழ் மக்களிடையே பிரபல்யமான ஒரு தலைவரை யாராவது போய் நாங்கள் தான் மரணதண்டனை கொடுத்தோம், தலைவருக்கு நெருக்கமான நம்பகமான தோழர்கள் கூறுவார்களா? விளைவுகள் பற்றி அவர்களுக்குத் தெரியாதா? கொழும்பில் கூடி முடிவெடுத்த முன்னணி தோழர்கள் புளொட் ராணுவத் தளபதி மாணிக்கம் தாசன், அரசியல் கட்சித் தலைவர் சித்தார்த்தன் உட்பட போட்ட திட்டத்தின்படி தான் ஆட்சி ராஜன் ஆனந்தி அண்ணனிடம் பெயர்களைக் கூறி உரிமை கோரியது.
சிறந்த ஆயுத வீரனான மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனை விட பல மடங்கு பலம் பொருந்தியவர். திறமைசாலி. மாணிக்கம் தாசனை எதிர்த்துக்கொண்டு ஆட்சி ராஜனால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அன்று எமது இயக்கத்தின் ( புளொட்) ரெண்டு பெரும் தூண்கள் மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் , மற்றும் பல முன்னணி தோழர்களின் ஆதரவு இருந்தபடியால் தான், ஆட்சி ராஜனும், மற்றும் 6 பேரும் தங்கள் பெயரில் செயலதிபர் இன் மரணதண்டனையை தங்கள் பெயரில் பொறுப்பெடுத்துக் கொள்ள சம்மதித்தார்கள் என்பதுதான் உண்மை. இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த கொலையே நடந்திருக்காது என்பது தான் உண்மை.
வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த சாம் முருகேசு முதலில் ரகசியமாக ஆட்சி ராஜனை சந்தித்துள்ளார். வவுனியாவில் இருக்கும் தோழர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையில் மாணிக்கம் தாசன் மேல் சந்தேகம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அது எப்படி முள்ளிக்குளம் முகாம் தாக்கப்பட முன்பு கொழும்பு போயுள்ளார். அதுபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்படும் முன் வவுனியா வந்துவிட்டார். என்று பல தோழர்கள் கதைத்து உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
பின்பு சாம் முருகேசு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி உடனும், முன்பு சென்னையில் தூதுவராக இருந்த திச ஜெயக்கொடி உதவியுடன் உமா மகேஸ்வரனின் உடலை வானூர்தியில் எடுத்துச் சென்று, வவுனியாவில் இலங்கை இராணுவ majar கொப்பேகடுவ இன் உதவியுடன் தோழர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இங்கு சென்னையில் 18/07/1989 பகல் வரை உமாமகேஸ்வரன் கொலை பற்றி எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. நான் உடனடியாக மத்திய மாநில, இந்திய ராணுவ உளவுஅதிகாரிகளை சந்தித்து, கொழும்பில் நேற்று இரவு எமது இயக்க செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது என்றும், மேற்கொண்டு ஒரு விபரங்களும் தெரியவில்லை என்று கூறினேன். அதோடு யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டில் இருக்கும் சித்தார்த்தன் அவர்களுக்கும் இச்செய்தியை கூறி அவரை உடனடியாக இங்கு வர சொல்லியும் அவர்களிடமே கூறினேன்.
வேலூரில் இருந்த தோழர்களுக்கும் தொலைபேசி மூலம் செய்தியை கூறினேன். சபாநாதன் குமார்தான் பேசினார். அவர் பட்ட சந்தோசம் கூற முடியாது. தான் உடனடியாக சென்னை வருவதாக கூறினார். வேலூரில் மருத்துவ சிகிச்சையில் இருந்த பத்தன் உட்பட எல்லா தோழர்களும் கேக் வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். மாலையில் சென்னை சவேரா ஓட்டலில் தங்கியிருந்த லண்டன் கிருஷ்ணனுக்கு தகவலை சொன்னேன். அவர் உடனடியாக ஆட்டோ பிடித்து தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். நான் அவரை போய் பார்த்தபோது சந்தோசத்தில் கைகொடுத்து, மாணிக்கம் தாசன் சாதித்து விட்டான் என்று கூறினார். லண்டன் கிருஷ்ணன் எனக்கு செலவுக்கு பணமும் கொடுத்து சந்தோஷத்தை கொண்டாடினர்.
அன்று மாலை பத்திரிகைகளில் ஓ அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் ஓ உமாமகேஸ்வரன் கொலை பற்றி செய்தி வந்திருந்தது. பத்திரிகை நிருபர்கள் வந்து விபரம் கேட்டபோது அதுபற்றிய முழு விபரங்களும் எனக்கு தெரியவில்லை, அப்படி நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் மேல்தான் சந்தேகம் இருக்கிறது விபரங்கள் தெரிந்தவுடன் அறிக்கை கொடுக்கிறேன் என்று கூறிவிட்டேன்.
வவுனியாவிலிருந்து மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்தார். உடனடியாக சித்தார்த்தன் ஐ வவுனியா வரும்படியும், தோழர்கள் தன்னை உட்பட எல்லோரையும் சந்தேகிக்கிறார்கள். இப்ப நிலைமையை கவனமாக கையாள வேண்டும். நீ அவசரப்பட்டு இயக்கம்தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று அறிக்கைகள் எதுவும் கொடுக்க வேண்டாம். இப்போ இருக்கும் சூழ்நிலையில் இயக்கத் தோழர்களை கூட்டி,செயலதிபர் இன் கடந்தகால தவறுகளை கூறி வவுனியாவில் இருக்கும் தோழர்களை சமாளிக்க முடியாது. என்னை அடக்கி வாசிக்கும்படி கூறினார்.
இதற்கிடையில் இலங்கையில் ஜனாதிபதி பிரேமதாசா திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். உமாமகேஸ்வரன் உயிருடன் இருக்கும் வரை மறைமுகமாகஉமா மகேஸ்வரனுக்கு எதிராக இருந்த பிரேமதாசா, உமா மகேஸ்வரனின் மரணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். டிவியிலும் ரேடியோவிலும் ஒரு மணித்தியாலத்துக்கு ஒருமுறை உமா மகேஸ்வரனின் புகழ் பாடியுள்ளார். சிங்களவர்களின் நண்பன். இந்திய அமைதிப் படைக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தமிழ் விடுதலை இயக்கத் தலைவர், என்பது போன்ற பல பிரச்சாரங்கள் இலங்கை டிவியிலும் ரேடியோவிலும் நடந்ததாக கூறினார்கள்.
அதேநேரம் பிரேமதாசா சித்தார்த்தனை தேடியுள்ளார். சித்தார்த்தன் இந்தியாவில் இருந்த படியால், சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதரகத்திற்கு தகவல் கொடுத்து, அப்போது இருந்த முதன்மை செயலாளர் அமரசேகர சித்தார்த்தனை உடனடியாக தன்னை வந்து சந்திக்கும்படி என்னிடம்கூறினார். வவுனியாவில் மேஜர் டென்சில் கொப்பேகடுவ அவர்களை தொடர்பு கொண்ட ஜனாதிபதி பிரேமதாசா மாணிக்கம் தாசனுக்கு தகவல் அனுப்பியுள்ளார். இயக்கத்தை தொடர்ந்து நடத்த பணமும் ஆயுதங்களும் தருவதாகவும் கூறியுள்ளார். இப்படியான ஜனாதிபதி பிரேமதாசாவின் நடவடிக்கை மறைமுகமாக இந்திய உளவுத் துறையின் ஏற்பாட்டில் செயலதிபர் உமா மகேஸ்வரனின் கொலை நடந்ததாக பரப்பப்பட்டது. இதை மாணிக்கம் தாசன் சித்தார்த்தர் மறுக்காமல், தங்கள் பதவி பணத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய அமைதிப்படை விமானத்தில் சித்தார்த்தர் சென்னை வந்தார். வவுனியாவில் இருந்த மாணிக்கம் தாசன் இடம் சித்தார்த்தன் பேசியபோது, நாங்கள் நினைத்த மாதிரி தோழர்களின் மனநிலை இல்லை. அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதுவும் இந்திய அமைதிப்படை சிறையில் இருப்பவர்கள் தன்னையும் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். தாசன் மேலும் கூறியதாவது இப்பொழுதும் தோழர்களை அழைத்துக் கூட்டம் போட்டு உண்மைகளை சொல்ல முடியாது. அதனால் ஆட்சி ராஜனிடம் கூறி உரிமை ஏழு பேரையும் உடனடியாக சென்னை போய் வெற்றியின் பொறுப்பில் இருக்கட்டும். இரண்டு மூன்று மாதங்களின் பின் கொஞ்சம் கொஞ்சமாக தோழர்களிடம் பேசி கூட்டத்தைக் கூட்டி எல்லா உண்மைகளையும் கூறுவோம் என்று கூற, சித்தார்த் தரும் உடன்பட்டார். இந்த விடயத்தை ஆட்சி ராஜனிடம் கூறியபோது முதலில் கோபப்பட்ட அவர், கட்டாயம் விரைவில் இயக்கத் தோழர்களை அழைத்து உமாமகேஸ்வரன் கொலை பற்றிய முழு விபரங்களையும் கூறி இயக்கம்தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று கூறுவோம் என்று சித்தார்த்தன் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து ஆட்சி ராஜன் உரிமை கூறிய மற்ற ஆறு பேரையும் அழைத்து சென்னை வருவதாக கூறினார்.
சித்தார்த்தனும் நானும் போய் இலங்கை தூதரக முதன்மை செயலாளரை சந்தித்தோம். அவர் தனக்குப் ஜனாதிபதி பிரேமதாசா நேரடியாக தன்னிடம் பேசியதாகவும், உடனடியாக சித்தரை கொழும்பு போய் ஜனாதிபதி பிரேமதாசாவை சந்திக்க சொன்னார். அதற்குரிய முழு பாதுகாப்பும் ஜனாதிபதியே ஏற்பாடு செய்வார் என்று கூறினர்.
இலங்கை ஜனாதிபதி பிரேமதாச இந்தியாவுக்கு எதிராக எங்களை பயன்படுத்த போகிறார் என்று விளங்கிவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது.
தொடரும்.
No comments:
Post a Comment