பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 6 October 2021

இந்திய அனுபவங்கள் பகுதி 97

  வெற்றிசெல்வன்       Wednesday, 6 October 2021

பகுதி 97





நாங்கள் எல்லோரும் திட்டமிட்டபடி திரும்பவும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் கான்பத்தில் சித்தார்த்தன் தங்குவதற்கு ஒரு ரூம்போட்டோம். சாம் முருகேசு ஒரு சிறிய  குரல் பதிவு செய்யக்கூடியஆடியோ பிளேயர் வாங்கிவந்தார். நான் சித்தார்த்தன், சாம் முருகேஷ், ஆட்சி ராஜன், மதன், K.L. ராஜன், ராபின் இவ்வளவு பேரும் கலந்து கொண்டோம். 

முதலில் ஆட்சி ராஜன் குறிப்பாக கொழும்பில் செயலதிபர் உமாமகேஸ்வரணுக்காக செய்த வேலைகளை பட்டியலிட்டு கூறினார். கொழும்பில் முதலில் RR தலைமையில்தான் இயங்கிய போது, கொழும்பில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருப்பார்கள் என சந்தேகித்த அவர்களையும் சுட்டுக் கொன்றது. அப்படி சுடும் போது யாரையும் அரைகுறையாக சுட வேண்டாம் என இலங்கை மந்திரிகள் அத்துலத் முதலியும், ரஞ்சன் விஜயவர்தன கூறியதாக உமா மகேஸ்வரன் தங்களிடம் கூறியதாக கூறினார். காரணம் சுடப்பட்டு உயிர் தப்பியவர்கள் போலீஸ் விசாரணை என்று வரும்போது அது ஒரு சிக்கலை கொடுக்கும் என்று கூறினார்களாம். அதோடு வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கோயிலுக்கு வரும் வசதியானவர்களின் வீடுகளை பார்த்து வைத்து தாங்கள் போய் கொள்ளை அடிப்பது, யாழ்ப்பாணம் போகும் பஸ்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து, புத்தளத்துக்கும், அனுராதபுர த்துக்கும் இடையில் பஸ்களை மறித்து மத்திய கிழக்கு நாடுகளில் உழைத்து வரும் தமிழர்களை கொள்ளையடிப்பது, எதிர்த்துப் பேசுபவர்களை சுட்டுக் கொள்வது, சாமான்களுடன் யாழ் லாரிகளை கடத்தி சாமான்களுடன் விற்பது, இப்படி செய்யும் போது கிடைக்கும் பணம், மற்றும் பொருட்களை செயலதிபர் இடம் அடுத்த நாளே தங்கள் ஒப்படைத்து விடுவதாகவும் கூறினார். RR  மாலைதீவு போய் பிடிபட்டவுடன், இப்படியான செயலுக்கு தன்னைத்தான் செயலதிபர் பொறுப்பாக போட்டதாகவும், தங்களை விடுதலைக்கு வந்த ஒரு போராளியாக நினைக்காமல், ஒரு கொள்ளைக் கூட்ட கொள்ளைக்காரனாக தாங்கள் வாழ்ந்தது நினைக்கிற மிகவும் அருவருப்பாக இருக்கிறது என்று கூறி வருத்தப்பட்டார். அவரோடு முரண்பட்ட லண்டன் கிருஷ்ணன், நமது ராணுவ தளபதி மாணிக்கம் தாசன் போன்றவர்களை சுடச் சொல்லியும், முள்ளிக்குளம் தோழர்களின் மறைவுக்குப் பிறகு செயல் அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த மதன், ஜெயா ஆகியோரை சுட்டுக் கொல்லும் படி தனக்கு கட்டளையிட்டு இருந்ததாகவும்,கூறினார். வாய்க்கு வந்தபடி அவரைச் சுடு, இவரை சுடு என்று செயலதிபர் கூறியது தனக்கு வெறுப்பைத் தந்தது என்றார்.

மதன் கொழும்பில் சிங்கள அரசியல்வாதிகளே தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க நியமிக்கப்பட்ட தாகவும், அப்படி ஏற்படும் தொடர்புகளில், பலதரப்பட்ட கொள்கை உடைய சிங்கள அரசியல்தலைவர்களுடன் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதால் யாரும் எங்களோடு துறந்து தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. அதே மாதிரி வடகொரியாவுடன் ஆயுதம் வாங்க கிடைத்த சந்தர்ப்பத்தை, லண்டன் கிருஷ்ணனுக்கு கொடுத்து, கிருஷ்ணன் அதை தனது பிசினஸ் செய்ய முற்பட்டதால், வடகொரிய தொடர்பே இயக்கத்துக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதோடு லண்டன் கிருஷ்ணனும், செயலதிபர் உமா மகேஸ்வரனும் கல்கிசை ஹோட்டல் ஒன்றில் சந்தித்து மிகவும் கீழ்த்தரமாக இருவரும் ஒருவரையருவர் அசிங்கமாக பேசி சண்டை பிடித்ததை, செயலதிபர் உமாமகேஸ்வரன் உடன் போன தான் நேரடியாக பார்த்த கதையைச் சொன்னார். மதனும் நாங்கள் ஒரு விடுதலை இயக்கமாக செயல்பட்டதை விட, ஒரு சமூக விரோத அமைப்பாக செயல்பட்டது போல்தான் தனக்கு தெரிகிறது என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் மதன் கூறுகையில் லலித் அத்துலத் முதலியின் தொடர்பும், பாதுகாப்பு இணை அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொடர்பும் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மிக மிக நெருக்கமாக இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாக கூறினார். மிகவும் இராணுவ பாதுகாப்பான, ராணுவம் உயர்அதிகாரிகள், மந்திரிகள் தங்கியிருக்கக் கூடிய இடத்தில் அத்துலத் முதலியின் தங்கை வீட்டில் தான் உமாமகேஸ்வரன் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KL  ராஜன் பேசும்போது மாலைதீவு பயணத்தில் தாங்கள் எப்படிஏமாற்றப் பட்டோம்.தேவையில்லாமல் எமது இயக்கத்தின் முக்கிய தோழர்களை மாலத்தீவில் பலி கொடுத்து, பறிகொடுத்து விட்டோம் என்று கூறி கவலைப்பட்டார். இந்த தோழர்களே மாலைதீவு அனுப்பாமல் இங்குள்ள மன்னார், வவுனியா முகாம்களை வலுப்படுத்தி இருந்தால், பல தோழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். என்று தனக்குத் தெரிந்த பல உண்மைகளை கூறினார்.

ராபின் தான் செயலதிபர் க்கு ஓட்டுனர் ஆகவும் பாதுகாவலராகவும் இருந்ததாகவும், அப்படி இருக்கும்போது செயலதிபர் இன் பல தவறான நடவடிக்கைகளை பார்த்து உள்ளதாகவும், இப்படியான தவறுகள் என்று சித்தார்த்தன் பதிவு செய்ய விளக்கமாக கூறினார். அதோடு கார் ஏசி வேலை செய்யாவிட்டால் தன்னை அசிங்கமாக திட்டுவது, அடிக்க வருவது போன்ற செயல்கள் தன்னை ஒரு போராளி என்று பார்க்காமல் ஒரு வேலைக்காரன் போல் நடத்தியது மன்னிக்க முடியாதது. அதோடு கடைசியாக தன்னை தனது சாதியை பற்றி சொல்லி திட்டியது தன்னை மிகவும் அவமானப்படுத்தியது என்றும், தானும் திட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறினார்.

சித்தார்த்தன், நான், சாம் முருகேசு மூவரும் பலர் குறுக்குக் கேள்விகளை கேட்டோம். எமது கேள்விகளெல்லாம் இந்தப் பதிவை கேட்கும் மத்திய குழு உறுப்பினர்களும், கழக உறுப்பினர்களும் உண்மையை உணர்ந்து செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு கொடுத்த மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தோம். செயலதிபர் பற்றிய எனக்குத் தெரிந்த எந்த உண்மைகளையும் குறிப்பாக தள மாநாட்டில் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மாற்றி தனக்கு வேண்டியவர்களை போடச் சொன்னது என்பவற்றை நான் கூற முனைந்தபோது, என்னை பேச விடவில்லை. காரணம்சிலவேளை நானும் விசாரணைக் குழு பொறுப்பாளர்களில் ஒருவராக வரக்கூடும் என்று சித்தார்த்தன் , சாம் முருகேசு கூறினார்கள்.

கிட்டத்தட்ட நாலு மணி நேரம் ஓடக்கூடிய 3 ஒலிப்பதிவு நாடாக்கள் இல் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி ராஜனும் ஒரு பிரதி எடுத்துக் கொண்டு ஒரிஜினல் ஒலிப்பதிவு நாடாக்கள் சித்தாத்தூர் இடம் கொடுத்த போது சித்தார்த்தனின் வார்த்தை அவர்களுக்கு மிக நம்பிக்கையை கொடுத்தது, சித்தார்த்தன் தான் எல்லா உண்மைகளையும் தோழர்களிடம் எடுத்துக்கூறி இந்த ஒலிப்பதிவு நாடா களையும் போட்டுக்காட்டி, திரும்ப எல்லோரும் ஒன்றாக எமது தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை நல்லமுறையில் கட்டியெழுப்புவோம் என்று உறுதி கூறினார்.

ஆட்சி ராஜன்

ஆனால் சாம் முருகேசு மிக ரகசியமாக ஆச்சி ராஜனிடம் கூறியுள்ளார். சித்தார்த்தர் நினைப்பதுபோல் நடப்பதற்கு இடமே இல்லை. தோழர்கள் மிக்க கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். மாணிக்கம் தாசன் காண்டீபன் மற்றும் கொழும்பில் இருந்த உண்மை தெரிந்த தோழர்கள் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள். காரணம் செயலதிபர் அவரைப் பற்றி குறை கூறினால் அடித்தே கொன்று விடுவார்கள் போல் நிலைமை இருக்கிறது. மாணிக்கம் தாசனே பயப்படும்போது, சித்தார்த்தன் ஆல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நீங்கள் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் வெளிநாடு போய் விடுங்கள். அதோடு சென்னையில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருங்கள் என்று கூறினார்.

ஆட்சி ராஜனும் வவுனியாவிலும் கொழும்பிலும் நடந்த உண்மைகளை, தோழர்களின் மனநிலையை நேரில் பார்த்த சாம் முருகேசன் வார்த்தைகளை நம்பினார். உடனடியாக பாதுகாப்பாக இருக்க கூடியவாறு வீடு ஒன்றை வாடகைக்கு ரகசியமா தேடதொடங்கினார். புது வீடு தேடுவதை சபாநாதன் குமாருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். என்னிடமும் எச்சரிக்கை செய்தார். காரணம் சபாநாதன் குமார் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற கூடிய மாதிரி மாறக்கூடியவர். சபாவும் சுழிபுரம் என்று கூறினாலும் சபாவை கடைசிவரை கந்தசாமி ஏற்றுக்கொள்ளவில்லை நம்பவில்லை என்று கூறினார்.


தொடரும்.











logoblog

Thanks for reading இந்திய அனுபவங்கள் பகுதி 97

Previous
« Prev Post

No comments:

Post a Comment