அத்துலத் முதலி - உமா மகேஸ்வரன் |
மாணிக்கம் தாசன், ஆட்சி ராஜன் தனித்தனியாக தொலைபேசி எடுக்கும்போது இதே கருத்தை தான் கூறினார்கள். தோழர்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, இதே மனநிலையில் தான் தாங்களும் இருப்பதாக கூறினார்கள். நாங்களும் அதே மனநிலையில்தான் இருந்தோம் என்பது உண்மை. எங்களுடன் சபாநாதன் குமார், வேலூரில் மருத்துவ சிகிச்சை எடுத்த பக்தன், அவருக்கு உதவியாக இருந்தவர்களும் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயல்களை நாங்கள் கூறும் போது மிகவும் கோபப்பட்டார்கள். பத்தன் தான் இவ்வளவு சூடுபட்டு கஷ்டப்பட்டு இயக்கத்தை விட்டு போவதற்கு தானா என்று கோபப்பட்டார்.
சிவசிதம்பரம், யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் |
நான் சித்தாத்தர் ரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பின்பு இனி இயக்கம் தேவையில்லை. எங்கள் இயக்கம் இனி யாருக்காக போராடப் போகிறார்கள். சுத்தி எதிரிகள்தான். மிச்சமிருக்கும் தோழர்கள் சரி தப்பிப் பிழைத்தும் வீட்டை பார்க்கட்டும் என்று கூறினேன். எனது மனக் கணிப்பு இனி இயக்கத்தை நடத்தக்கூடிய ஒரு தலைவர் எங்களிடம் இல்லை என்பதுதான். ஆனால் சித்தார்த்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இனி திரும்ப லண்டன் போய் வேலை செய்ய முடியுமா.? பார்க்கும் சனம் காரித்துப்பும், உமாமகேஸ்வரன் இல்லாத இயக்கத்தை நல்ல முறையில் நடத்தி நாங்கள் நல்ல ஒரு அரசியல் கட்சியாக வளரமுடியும். இனி ஆயுதப்போராட்டம் இருக்காது. அதோடு இந்திய அமைதிப்படை சிறையிலிருக்கும் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும். அதே மாதிரி செயலதிபர் உமாமகேஸ்வரன் ஆல் தேவையில்லாமல் மாலைதீவு சிறையிலிருக்கும் தோழர்களை முடிந்தால், விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என சித்தார்த்தன் என்னிடம் கூறினார்.
நானும் சித்தார்த்தனும் முடிந்த அளவு தமிழ்நாட்டு, இந்திய உளவு அதிகாரி களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி னோம். இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வவுனியாவில் சிறையில் இருக்கும் எமது தோழர்களை விடுவிக்கும்படி கேட்டபோது, அந்த அதிகாரி வவுனியாவில் எமது இயக்கம் சிங்கள ராணுவ அதிகாரி மேஜர் கொப்பேகடுவ உதவியுடன் செய்யும் அட்டகாசங்களை கூறினார். சிங்கள ராணுவம், இந்திய அமைதிப்படை ராணுவத்துக்கு எதிராக, உங்களைப் இயக்கத்தை பயன் படுத்தி விடுதலைப்புலிகளை அழிக்கிரன் என்று பொதுமக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்துள்ளீர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக உங்கள் இயக்கத்தை இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்று கூறினார். சித்தார்த்தன், இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மீண்டும் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு விடுதலைப்புலிகள் இந்திய ராணுவம் மிக நெருங்கிய நட்பில் இருந்தபோது, மன்னார் வன்னி மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பல விடுதலைப் புலிகளை அழித்து எமது இயக்கம் பல இடங்களில் முகாம்களை போட்டார்கள். இது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. விடுதலைப்புலிகள் இந்திய அதிகாரிகளிடம் பலமுறை புளொட் இயக்கம் தங்கள் இயக்கத்தின் மேல் தாக்குதல் நடத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படுவதாகவும்,புளொட் இயக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் தாங்களும் திரும்ப ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்று பலமுறை கூறியுள்ளார்கள். இந்திய அதிகாரிகள் நான் டெல்லியில் இருக்கும்போதும் சரி, சென்னை வந்த பின்பும் சரி எமது செயல் அதிபரிடம் கூறி விடுதலைப்புலிகளுடன் நடக்கும் சண்டையில் நிறுத்தும்படி பலமுறை என்னிடம் கூறியுள்ளார்கள். நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தொலைபேசியில் இதைக் கூறும்போது, செயலதிபர் தன்னை தொடர்பு கொள்ள முடியாது இருப்பதாகக் கூறும் படி என்னிடம் இந்திய அதிகாரிகளிடம்கூறச் சொன்னார்.
இந்திய அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர்அத்துலத்முதலி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உடைப்பதற்கு மறைமுகமாக எமது செயலதிபர் உமா மகேஸ்வரனை பயன்படுத்துவதாக நினைத்தார்கள். அதேநேரம் விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை அழிக்க இந்திய அதிகாரிகள் புளொட் அமைப்பை பயன்படுத்துவதாக நினைத்தார்கள். உண்மையில் எமது புளொட் தோழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த சண்டை பழிக்குப் பழி வாங்குவது ஆகவே இருந்தது. காரணம் எமது பல முக்கிய தலைவர்களை புலிகள் தேவையற்ற விதத்தில் கொலை செய்தது எமது தோழர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பகையை இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தனது மிக நெருங்கிய நண்பர் எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் மூலம் மூன்று வழிகளில் பயன்படுத்திக் கொண்டார். ஒன்று இந்த plote-ltte சண்டையை பயன்படுத்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்துவது,
விடுதலைப் புலிகளை அழிப்பது, மூன்றாவதாக புளொட் ஆக இருந்தாலும் போராடும் இளைஞர்களை அழிப்பது , இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தனது வேலையை திறமையாக செய்தார் என்பது மட்டும் உண்மை.
சித்தார்த்தன் |
நானும் சித்தார்த் தரும் இந்திய , தமிழ்நாட்டு அதிகாரிகளை சந்தித்துப் பேசும்போது, நட்பு ரீதியில் அவர்கள் கேட்கும் கேள்வி உங்கள் இயக்கம் உண்மையில் யாருடன் சண்டை போடுகிறது. உங்கள் இயக்கத்தின் நோக்கம் என்ன? உங்கள் இயக்கம் நீங்களெல்லாம் இந்திய அரசுக்கு எதிராக இருப்பதாகவும், இலங்கை அரசோடு நெருக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அப்படி இருந்தும் உங்களது தோழர்கள் இருந்த பெரிய முகாமை விடுதலைப் புலிகள் தாக்கி அழிக்கும் போது இலங்கை ராணுவம் தானே விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது. இலங்கை அரசோடு குறிப்பாக இலங்கைபாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி யோடு மிக நெருக்கமாக இருந்தும் ஏன் உங்கள் தோழர்களை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்விக்கே எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.
கொழும்பிலிருந்து ஆட்சி ராஜன் மூலம், மாணிக்கம் தாசன் மூலம் வந்த செய்திகள் ஆச்சரியமாக இருந்தது. செயலதிபர் உமாமகேஸ்வரன் மிக மிக ரகசியமாக வெளிநாட்டுக்கு முஸ்லிம் பெயரில் ஓர் இலங்கை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு விரைவில் வெளிநாட்டுக்கு போவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக. அப்படி அவர் வெளிநாட்டுக்கு போது ஆயின் அதற்கு முதல் தாங்கள் அவர்மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஆட்சி ராஜன் நேரடியாகவும், மாணிக்கம் தாசன் பெரியவர் (உமா மகேஸ்வரன்) இயக்கத் தோழர்களை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு போக விடக்கூடாது என்றும் கூறினார்
வெற்றி செல்வன் |
திடீரென ஒருநாள் இரவு 13/07/1989 கொழும்பில் இருந்தும், இந்திய raw உளவுத்துறை அதிகாரிகளும் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினார்கள் கொழும்பில் விடுதலைப் புலிகள் அமிர்த லிங்கத்தையும் கூட இருந்த தமிழ் தலைவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டதாக, நம்ப முடியாவிட்டாலும் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இரவிரவாக நானும் சித்தார்த்தனும் கொழும்புக்கு தொலைபேசி எடுத்து உண்மையை அறிந்தோம். இருவரும் அமிர்தலிங்கத்தை பற்றிய பழைய கதைகளை பேசிக்கொண்டு கவலையோடு இருந்தோம்.
தொடரும்.
No comments:
Post a Comment