பகுதி 107
நான் இயக்கத்தை விட்டு போகும் முன்பு, மூன்று கடிதங்கள் எழுதினேன். முதலாவதாக நமது இயக்க மத்திய குழு/கழக உறுப்பினர்களுக்கு, இரண்டாவதாக சென்னை கியூ பிரான்ச் அதிகாரிகளுக்கு, மூன்றாவது கடிதம் மாணிக்கம் தாசனுக்கு கொடுத்த கடிதத்தில் நான் இயக்கத்தை விட்டு விலகுவதாக எழுதவில்லை, தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதாக மட்டும், அதுவும் விலகும் அன்று, காரணம் எனது பாதுகாப்பு கருதி.
கழக மத்திய குழுவுக்கு எழுதிய கடிதம்
த. வெற்றிச்செல்வன்
இந்திய பொறுப்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
11, தேசிகர் வீதி, வடபழனி
சென்னை 26
மத்திய குழு (CRB) உறுப்பினர்கள்
மற்றும் அனைத்து கழக உறுப்பினர் களுக்கும்
இலங்கை.
இதுவரைகாலமும் எனது பொறுப்பில் இருந்த கழக வேலைகளை எந்தவித தவறுகளும் இன்றி திறம்பட செய்துள்ளதாக எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது கழக வேலைகள் பற்றியும் , எனது திறமை பற்றியும் மறைந்த கழக செயலதிபர் இரண்டாவது தள மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவும், கழக தேர்தல் நடத்தும் பொறுப்பையும் எனக்கு கொடுக்கும்போது, பேசிய பேச்சை கேட்ட கழகத் தோழர்கள் இருப்பீர்கள். இல்லாவிட்டால் , ஒலிப்பதிவு நாடா இருக்கும் கேட்டுப்பாருங்கள்.
முள்ளிக்குள எமது தோழர்களின் இறப்பிற்குப்பின், கொழும்பில் எமது மறைந்த செயலதிபர் அவர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கும், இயக்கத்துக்கும் துரோகத்தனம் ஆக மாறிவிட்டது என்று இயக்க முன்னணித் தோழர்கள் (சித்தார்த்தன், மாணிக்கம் தாசன், சிவராம், லண்டன்கிருஷ்ணன், மாறன், மதன்,kl ராஜன், காண்டீபன்,ஜெயா, ஆச்சி ராஜன் போன்ற முன்னணி தோழர்கள் பலர் தனித்தனியாகவும் கூடிப் பேசியும், செயல் அதிபருக்கு எதிராக அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதாக இந்தியாவில் பொறுப்பில் இருந்த எனக்கு சித்தார்த்தன், மாணிக்கம் தாசன், ஆட்சி ராஜன் இவர்கள் மூலம் தெரியவந்தது. இவர்களது முடிவுக்கு கட்டுப்பட்டு நானும் அதனை ஆதரித்தேன்.
செயலதிபர் மரணதண்டனைக்கு பின்பு, வவுனியாவில் நிலைமை சரியில்லை என்று மாணிக்கம் தாசன் சித்தார்த்தன் மரணதண்டனைக்குகழக சார்பாக உரிமை கோரிய ஏழு பேரையும் பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பினார்கள். இப்போது கழக வளர்ச்சி என்று உண்மைகளை மறைத்து அந்த ஏழு பேரையும் சுட்டுக் கொல்வதற்கு மாணிக்கம் தாசன் இங்கு ஆட்களை அழைத்து வந்துள்ளார். அதற்கு நான் இடைஞ்சலாக இருப்பேன் என்று எனக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இலங்கை போன சித்தார்த் தரும் முன்பு போட்ட கடிதங்களுக்கும், ஒலிப்பதிவு நாடாக்கள் அக்கும் எந்த பதிலும் தரவில்லை. பதவியும் பணமும் தான் போது முக்கியமாக போய்விட்டது.
நான் தொடர்ந்து எமது இயக்கத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. இங்கு வந்துள்ள தோழர் விசு விடம் இம்மாத கடைசியில் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து விலகிக் கொள்கிறேன். தயவுசெய்து இக்கடிதத்தை சரி தோழர்களிடம் வாசித்துக் காட்டுங்கள். எமது இயக்கத் தோழர்களும் நடந்த உண்மைகளை அறிந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையில் சிலரை மட்டும் பலிகொடுக்க முயற்சிக்க வேண்டாம்.
த. வெற்றிச்செல்வன் பொறுப்பாளர் (முன்னாள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
இந்தியா.
24/01/90
தமிழ்நாடு கியூ பிரான்ச் எழுதிய கடிதம்
த. வெற்றிச்செல்வன்
11, தேசிகர் வீதி
வடபழனி.26
25/01/90
துணை கண்காணிப்பாளர்
கியூ பிரான்ச்
சென்னை கியூ பிராஞ்ச் அலுவலகம்
மயிலாப்பூர், சென்னை.4
ஐயா
இதுவரைகாலமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக பிரதிநிதியாக நான் செயல்பட்டு வந்தேன். நான் இனி முற்றுமுழுதாக இயக்கத்தை விட்டு விலகி விட்டேன் என்பதை அறியத் தருகிறேன். நான் வெளிநாட்டுக்கு அல்லது இலங்கைக்கு போகும்வரை, இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) புதிய பொறுப்பாளராக திரு. விசு என்பவர் பொறுப்பு எடுத்துக் கொள்வார். இனிமேல் தமிழ்ல மக்கள் விடுதலைக் கழகம் சம்பந்தமான எல்லா விடயங்களுக்கும் விசு தான் பொறுப்பு என்பதை மீண்டும்தெரிவித்துக் கொள்கிறேன் .
நான் பொறுப்பில் இருந்த காலங்களில் தமிழ்நாடு கியூ பிராஞ்ச் அதிகாரிகள் கொடுத்த ஆதரவிற்குஎனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள
த. வெற்றிச்செல்வன்
பொறுப்பாளர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தமிழ்நாடு..
மாணிக்கம் தாசணுக்கு எழுதிய கடிதம்
1/02/90
அன்பின் தாசனுக்கு
மேலும் 30/01/90 முக்கிய அதிகாரிகளை சந்தித்தேன். மேலும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி படங்களுடன் விபரம் நாம் கொடுக்கவில்லை இங்குள்ள நிலைமைகளை முன்னிட்டு நாம் சட்டம்-ஒழுங்கை மதிக்க தவறினால் கட்டாயம் NSA தான். அதற்கு நான் தயாராயில்லை மேலும் இடைப்பட்ட காலத்தில் தோழர் விசுவால் என்னைப் பற்றி பல தவறான கருத்துக்கள் அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளது. நானும் விசுவும் மனம்விட்டு பேசாததால் ஏற்பட்டது என நான் நினைக்கிறேன். மேலும் சித்தரிடம் போனில் பேசினேன். ஒரு வாரத்தில் வருவதாக கூறினார். அவர் வரும் வரை வீண் மனஸ்தாபங்கள் ஐ தவிர்க்க நான் அலுவலகம் வரவில்லை. அவர் வந்தவுடன் பேசி எல்லா பிரச்சினைகளும் அலசி அடுத்த கட்ட வேலைகளை பார்ப்போம்.
இப்படிக்கு
அன்புடன்
வெற்றி .
இத்துடன் எனது சொந்த இயக்க அனுபவங்களும் இந்திய அரசு தொடர்புகளும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி வரும் பதிவுகளில் நான் இயக்கத்தை விட்ட பின்பு நடந்த சில சம்பவங்களும், என்னிடம் உள்ள அன்று எழுதிய முற்றுப்பெறாத கடிதங்களும், டெல்லியில் எனது சில டயரிக் குறிப்புகள், டெல்லியில் வந்து என்னோடு வேலை செய்த பரதன், ராஜா நித்தியன், சவுத் ஆப்பிரிக்கா பயஸ் மாஸ்டர் (சுமதி) ஷெர்லி கந்தப்பா, சித்தார்த்தன் போன்றவர்கள் சந்தித்தவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றையும் தொடர்ந்து பதிவிட விரும்புகிறேன். நன்றி
முற்றும்.
No comments:
Post a Comment