அன்பான முகநூல் நண்பர்களே
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்து நான் எனது நேரடிஇயக்க அனுபவங்களை பதிவுகளாக போட்டு வந்தேன். பலர் ஆதரித்தார்கள் சிலர் கோபப்பட்டார்கள் சிலர் இது தேவையற்ற வேலை என்றார்கள். அதோடு சிலர் இயக்கத்தில் நடந்த உள் சம்பவங்களை எழுதுவது தவறு என்றார்கள்.
இப்படி எழுதுவதால் எதிரிக்கு அதாவது இலங்கை அரசுக்கு இயக்கங்கள் பற்றிய எதிர் பிரச்சாரம் செய்ய நான் உதவி செய்வதாக கூறினார்கள்.
இன்னும் சிலர் விடுதலைப்புலி இயக்கம் மற்ற இயக்கங்களை தடை செய்தது சரி என்று உங்கள் பதிவுகளை பார்த்து மக்கள் கூறுவார்கள் என்றார்கள். இன்னும் சிலர் மல்லாக்க படுத்திருந்து கொண்டு எச்சில் துப்ப வேண்டாம் என்று கூறினார்கள்.
எல்லா இயக்கங்களும் விடுதலை புலிகள் உட்பட நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள அரசும் சிங்கள ராணுவம் தான் எமது எதிரிகள் என்று கூறுவார்கள். உண்மைதான் நல்ல விடயம்.
ஆனால் சொந்த இன தமிழ் மக்களை துரோகிகள் என்றும் எதிரியின் கைக்கூலி என்றும் ஆண் என்றும் பெண் என்றும் பாராமல் சித்திரவதை செய்து கொலை செய்வார்கள். இயக்கங்களால் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பத்து வீதம் நான் உயிருடன் திரும்பி வந்தவர்கள். ஆனால் கைது செய்யப்பட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மரியாதையாக நடத்தி அரசிடம் ஒப்படைத்தோம் என்று தங்கள் புகழ் மட்டும் பாடுவார்கள்.
தலைவரை நம்பி இயக்கத்துக்கு வந்த இளைஞர்களை தலைவரை தோழர் என்று அழைத்ததற்காக சந்தேகப்பட்டு கொலை செய்த இயக்கங்களும் இருக்கிறது.
கடந்த காலத்தில் இந்த ஆயுதம் தூக்கி விடுதலை இயக்கங்கள் எல்லாம் சொந்த தமிழ் மக்களுக்கு எதிராகவே இருந்தன. ஆனால் வெளியில் என்ன கதை நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று.
இன்றும் கூட மறைந்த தலைவர்களுக்கு புகழ் பாடி ஒரு கூட்டம் தங்களை வளர்த்துக் கொள்கிறது. மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் தியாகங்கள் கொள்கைகள் பற்றி எல்லாம் அந்த மறைந்த தலைவர்களுக்கே தெரியாத பல விடயங்களை புகழ்ந்து எழுதி பாராட்டுகிறார்கள். அந்த தலைவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால் இப்படி நடந்திருக்கும் இன்று தமிழர்களுக்கு உரிமை கிடைத்திருக்கும் என்றெல்லாம் கூட எழுதுகிறார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் போது தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள். என்பதை யாரும் எழுதுவது இல்லை. பத்மநாபாவை பற்றி எழுதும்போது இன்று அவர் இருந்திருந்தால் நிலைமையை வேறாக இருந்திருக்கும் என்று எழுதுவார்கள். அவர் நல்ல மனிதர் தான் ஆனால் இந்தியா அமைதிப்படை காலத்தில் அவரது இயக்கம் செய்த கொலை கொள்ளை சித்திரவதைகளை ஏன் அவரால் நிறுத்த முடியாமல் போனது.
அதுபோலவே உமா மகேஸ்வரன் ஸ்ரீ சபாரத்தினம் பிரபாகரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா.
எனக்கு தெரியக் கூடியதாக எல்லா இயக்கமும் தங்கள் சுயநலத்துக்காக பொய்யாக வெளியிட்ட செய்திகளை இன்று பலர் உண்மை என நம்பி பதிவுகள் போடுகிறார்கள். நான் பதிவுகளை எழுத முன்பே உமா மகேஸ்வரன் கொலை பற்றிய பலவித பொய்க் கதைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி எழுதினார்கள். அதைவிட சிலர் தங்கள் கற்பனைக் கட்டியவாறு டெல்லி அலுவலகம் பற்றி கூட ஏதோ தாங்கள் தான் நடத்தியது போன்று எழுதினார்கள்.
சந்ததியார் எப்படிப்பட்டவர் என்று பலருக்குத் தெரியும். ஆனால் சந்ததியர் போதைப்பொருள் கடத்தும் பெண்ணுடன் ஓடி விட்டதாக உமா மகேஸ்வரன் கட்டிய கதையை கூட இன்றும் பலர் நம்புகிறார்கள். உண்மைகள் வெளிவர வேண்டாமா. டேவிட் ஐயாவை இன்று பலரும் வியந்து எழுதுகிறார்கள். ஆனால் அவர் புளொட் பக்கத்தில் இருந்த கடைசி காலங்களில் அவரையும் கொலை செய்ய உமா மகேஸ்வரன் விரும்பினார். அதை இன்று புளொட் இயக்கம்மறந்து விட்டது.
எல்லா இயக்கங்களிலும் கொலை கொள்ளைகள் மற்ற இயக்கங்களை சேர்ந்த இளைஞர்களே சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் தலைவர் சொல்லியதற்காக சொந்த இயக்க இளைஞர்களையே கொலை செய்தவர்கள் , இயக்க பணத்தை கொள்ளையடித்த பொறுப்பாளர்கள்பலர் வெளிநாடுகளில் இன்று சொகுசாக இருந்து கொண்டு தாங்கள் உத்தமர் போல் நடித்துக் கொண்டு பல கருத்துக்கள் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
யாருக்காக எந்த தமிழ் மக்களுக்காக போராடும் விடுதலை உரிமைகள் என்று போராட்டத்தை நடத்திய இயக்கத் தலைவர்களால் எத்தனை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபடாமலும் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த தியாகத்தால் தங்களை தலைவர்களாக காட்டிக் கொண்ட தலைவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள். இது நான் ஒரு இயக்கத்தை மட்டும் குறிப்பிடவில்லை. ஆயுதம் தூக்கிய எல்லா இயக்கங்களும் பற்றி தான் குறிப்பிடுகிறேன்.
இவ்வளவு அழிவுகளுக்கு பிறகும் பழைய ஆயுத குழுக்களின் இன்றைய அரசியல் தலைவர்களும் பழைய அரசியல் கட்சிகளின் இன்றைய தலைவர்களும் எந்த மாதிரி அரசியல் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களை என்றும் ஆதரிக்கிறார்கள்.
மக்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் கடந்த காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட அயோக்கிய அரசியல் விடுதலை இயக்கங்கள் நடத்தினோம் என்று தெரிய வேண்டும். எனது எழுத்துக்கள் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காவிட்டால் அதை பார்க்காமல் கடந்து போங்கள். உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்காக நடந்த தெரிந்த உண்மைகளை எழுதாமல் இருக்க முடியாது..
No comments:
Post a Comment