பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 13 July 2025

ஆப்ரேஷன் மாலத்தீவு பற்றி ஆங்கிலத் தமிழ் பத்திரிகையில் வந்த செய்தி

  வெற்றிசெல்வன்       Sunday, 13 July 2025
1988: ஆபரேஷன் மாலத்தீவு
 
என். அசோகன் | Issue Dated: மார்ச 4, 2012 
 
சில நாட்கள் முன்பாக மாலத்தீவில் கலகம் ஏற்பட்டது. இதே மாலத்தீவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிளாட்’  உறுப்பினர்களின் ஆயுதக் குழு ஆட்சிக்கவிழ்ப்புக்காக சென்று தோல்வியடைந்தது பற்றி என். அசோகனிடம் சொல்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் டெல்லிப் பிரதிநிதி வெற்றிச்செல்வன்.

இலங்கையில் இயங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களின் வரலாறு என்பது பெரிய நாடுகளின் அதிகாரப்போட்டியில் தங்கள் குறிக்கோளை விட்டு ஆயுதக்குழுக்கள் விலக நேர்வதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். எழுபதுகளின்   இறுதியில்  சிங்களர் களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் முக்கிய தலைவராக உருவானார். பிரபாகரனுடன் சிலகாலம் இணைந்து இருந்தாலும், பின்னர் பிரிந்து வந்து ‘பிளாட்’ என்ற தனி இயக்கத்தை கம்யூனிச சிந்தாந்த வழிகாட்டுதலில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் புதுடெல்லி வழியாக டமாஸ்கஸ் சென்று அங்கிருந்து லெபனான் எல்லையில் பாலஸ்தீன குழுக்களிடம் ஆயுதப்பயிற்சி பெற்று திரும்பியவர்கள். இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டம். 1988 நவம்பர் மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் இலங்கையிலிருந்து ஆயுதம் ஏந்திய பிளாட் இயக்கத்தினர் சுமார் 70 பேர் கொண்ட ஒரு குழு 400 மைல்கள் தொலைவில் உள்ள மாலத்தீவை நோக்கி பயணம் செய்து அதன்மீது தாக்குதல் நடத்தியது. ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவது அந்த தாக்குதலின் நோக்கமாகும். ஆனால் இந்திய அரசு மாலத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக செயல்பட்டு, அந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தது. பிளாட் அமைப்பின் இந்த மாலத்தீவு தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி பல்வேறு விஷயங்கள் பலமட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த விடுதலை ராசேந்திரன், தான் எழுதிய நூல் ஒன்றில் ‘ரா’ அமைப்புதான் இந்த தாக்குதலுக்காக உமா மகேஸ்வரனின் அமைப்பைத் தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவு அரசு இன்னொரு ஆட்சிக்கவிழ்ப்பை கண்டுள்ளது. இதன் பின்னணியில் பிளாட் அமைப்பின் முன்னாள் டெல்லி பிரதிநிதியாகப் பணியாற்றிய வெற்றிசெல்வனைச் சந்தித்து 1988-ல் நடந்தது பற்றிப் பேசினோம். 1983-ல் புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடந்தபோது ஈழத்தமிழர் பிரச்னை குறித்த கையேடுகளை இலங்கை தூதரகத்திற்குள்ளேயே சென்று விநியோகித்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 10 நாட்கள் அடைக்கப்பட்டார் வெற்றிச் செல்வன். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது வைகோ நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“எண்பதுகளின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தது. இந்தியாவில் நம்பிக்கைக் குரிய சில ஆட்களை வைத்துவிட்டு, முகுந்தனும் இலங்கையில் இருந்து இயங்கிவந்தார். 1985க்குப் பிறகு அவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியோடு நெருக்கமாக இருந்து இந்தியாவுக்கு எதிரான சில வேலைகளை செய்துவந்தார். எங்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மன்னார் அருகே முள்ளிக்குளம் போன்ற முகாம்களில் இருந்தனர். எங்களுக்கு எதிராக புலிகள், அமைதிப்படை, இலங்கை அரசு என்று எல்லோரும் இருந்தனர். முகுந்தன் ஜேவிபியோடும், சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்காவோடும் நெருக்கமாக இருந்தார். விஜய குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஜேவிபியின் ஆட்கள் விஜய குமாரதுங்காவின் ஆட்கள் சிலரை தாக்கியபோது, அந்த தாக்குதல்களில் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களும்கூட பங்கு கொண்டிருந்தனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முகுந்தன் இது தன்னுடைய அரசியல் தந்திரோபாயம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மாலத்தீவு தாக்குதல் ஏன்?
அப்போது இலங்கையில் மாலத்தீவைச்  சேர்ந்த தொழிலதிபரான அப்துல்லா லுத்தூபி என்பவர் இருந்தார். இவர் அதுலத் முதலிக்கு நெருக்கமானார். எனவே லுத்தூபிக்கு ஆதரவாக மாலத்தீவின் அரசை கவிழ்க்கவேண்டும் என்று அதுலத் முதலியிடம் லுத்தூபி கேட்டார். இதையடுத்து முகுந்தனிடம் பிளாட் இயக்கத்தினருக்கு மாலத்தீவு அரசை கவிழ்த்தால் ஒருசில தீவுகளைத் தருவதாகவும் இயக்கத்துக்கு மாலத்தீவு ஒரு தளமாக இருக்கும் என்றும் அதுலத் முதலி கூறி தாக்குதல் திட்டத்திற்கு சம்மதிக்கச் செய்தார். மாலத்தீவில் மிகவும் குறைவான ராணுவம், போலீஸாரே இருப்பதாகவும் மிக எளிதாக அதை கைப்பற்றி விடலாம் என்றும் முகுந்தன் தன் இயக்க உறுப்பினர்களை நம்பச்செய்து அவர்களை ஒரு படகில் ஏற்றி மாலத்தீவை நோக்கி அனுப்பினார். அது  பிளாட்  இயக்கத்தை ஒழிப்பதற் காக அதுலத் முதலி செய்த திட்ட மாகவும்கூட இருக்கலாம். முகுந்தனுக் கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால் சில மூத்த உறுப்பினர்கள் போவதற்கு மறுத்துவிட்டார்கள். மாலத்தீவை இந்தக் குழுவினர் அடைந்தபோது இவர்கள் எதிர்பார்த்துபோல் நிலைமை எளிதாக இல்லை.  சண்டை நடந்தது. முதலில் வசந்தி என்கிற பிளாட் உறுப்பினர் இறந்தார். சண்டை நடந்து கொண்டிருந்தபோது இந்தியா ராணுவத்தை அனுப்பி தாக்குதலை முறியடித்தது. இந்திய ராணுவம் வருவதைக் கண்டு எங்கள் இயக்க உறுப்பினர்கள் நான்கு  பேர் ஒரு படகை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து இலங்கையை அடைந்தனர். வழியில் இந்திய கப்பலால் வழிமறிக்கப்பட்டாலும் மீனவர்கள் என்று நினைத்து அவர்களை விட்டுவிட்டனர். இவர்கள் சொல்லித்தான் மாலத்தீவில் நடந்தது என்ன என்று தெரியவந்தது. அதுவரை முகுந்தன் மாலத்தீவில் பிளாட் ஆட்கள் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த தாக்குதலுக்குப் பிறகு பிளாட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு சந்தேகம் வந்தது. இயக்கமே பின்னர் முகுந்தனைக் கொலை செய்வதாக முடிவெடுத்தது. 1989 ஜூலை 16ந் தேதி வெள்ளவத்தை என்ற இடத்தில் உமா மகேஸ்வரன் தன்னுடைய பாதுகாவலர் ராபின் என்பவரால் கொல்லப்பட்டார்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட பிளாட் உறுப்பினர்கள் என்ன வானார்கள்? 
அங்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து 13 பேருக்கு மரண தண்டனையும் 56 பேருக்கு 15 முதல் 33 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. ஆனால் எந்த தண்டனையும் நிறைவேற்றப் படவில்லை. பிளாட் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் இந்திய அரசின் உதவியால் அவர்களை சிறைமீட்டனர். ஆனால் அவர்கள் இலங்கை ராணுவத்தின் முகாம்களில் வைக்கப் பட்டனர். அங்கிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. பலர் இதுபோன்ற மோதல்களில் இறந்துவிட்டனர். மிகக்குறைவான பேர்தான் இப்போது இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ரா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறதே?
அப்படி ஒன்றும் இல்லை. ‘ரா’ பற்றி என்ன சொன்னாலும் நம்பி விடுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
logoblog

Thanks for reading ஆப்ரேஷன் மாலத்தீவு பற்றி ஆங்கிலத் தமிழ் பத்திரிகையில் வந்த செய்தி

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment