பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 21 July 2025

எனக்குத் தெரிந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் PLOTE. பகுதி 1

  வெற்றிசெல்வன்       Monday, 21 July 2025

தமிழீழ விடுதலை புலிகள் அதன் முதல் தலைவராக உமா மகேஸ்வரன் தலைவராக இருந்த போது1979 ஆண்டு கருத்து வேறுபாடுகள் காரணமா பிரிவுகள் ஏற்பட்டன. பிரிந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலை வெறியுடன் மற்றவரை கொலை செய்ய தேடித் திரிந்த காலமும் கூட. உமா மகேஸ்வரன் சென்னையில் தலைமறைவாக இருந்தார். பிரபாகரன் இலங்கை போய் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருடன் சேர்ந்து டெலோ இயக்கத்தில் இயங்கினார். அப்பொழுது தமிழீழ விடுதலை புலிகள் இயக்க பெயரை வைத்துக்கொண்டு ராகவன், ஐயர் நாகராஜா தொடர்ந்து இருந்தார்கள். 

இலங்கையில் விடுதலைப் புலிகள் இருந்து பிரிந்த சந்ததியார், சுந்தரம் போன்றவர்கள் ஒரு புதிய இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருப்பதாக கருதி, இன கலவரங்களால் பாதிக்கப்பட்ட  மலையக மக்களை கிளி நொச்சி வவுனியா போன்ற இடங்களில் குடியேற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த பரந்தன் ராஜனை ரகசியமாக சென்னைக்கு அனுப்பி வட சென்னையில் ராஜகோபால் என்ற பெயரில் தலைமுறைவாக இருந்த உமா மகேஸ்வரன் அவர்களை இலங்கை அழைத்து வர ஏற்பாடு செய்தார்கள். 

1980 ஆண்டு பிற்பகுதியில் கொக்குவில் என்ற இடத்தில் என நினைக்கிறேன் சுந்தரம் சந்ததியார் உமா மகேஸ்வரன் பரந்தன் ராஜன் மற்றும் சிலரால் சேர்ந்து புதிய இயக்கமான தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதில் தவறு இருந்தால் சரியாக அறிந்தவர்கள் சரியான பதிவை கூறலாம். 

புதிய இயக்கமான பிளாட் கிளி நொச்சி வங்கிக் கொள்ளை ஆனைக்கோட்டை காவல் நிலைய தாக்குதல் மற்றும் சிறு சிறு தாக்குதல்களை நடத்தி மக்கள் மத்தியில் பேசப்படும் அமைப்பாக மாறியது. இதே நேரம் டெலோ இயக்கம் பல காவல் அதிகாரிகளை கொலை செய்தது பெரிய வங்கிக் கொள்ளகள் அடகு கடை கொள்ளைகள் போன்றவற்றை செய்த போது 19 81 ஆம் ஆண்டு அதன் முக்கிய தலைவர்கள் குட்டிமணி தங்கதுரை மற்றும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெருமளவு பணத்துடன் தப்பிய பிரபாகரன் தனது பழைய நண்பர்களை சேர்த்துக்கொண்டு இந்தியா வந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை வைத்துக் கொண்டு இருந்த ராகவன் ஐயர் நாகராஜா போன்றவர்கள் சேர்ந்து கொண்டார். அதோடு பல புதிய உறுப்பினர்களும் சேர்ந்து தமிழிலே விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் புதிய வேகத்தோடு நடத்த தொடங்கினார்கள். ஆனால் பழைய உறுப்பினர் ஐயர் ஒதுங்கி விட்டதாக அவரே கூறினார். 

பிளாட் இயக்கத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அதன் மிக முக்கிய தலைவரான சுந்தரம் அவர்கள் யாழ்ப்பாண சித்ரா அச்சகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

உடனடியாக பாதுகாப்பு கருதி உமா மகேஸ்வரன், சிவனேஸ்வரன் சோதீஸ்வரன் மாறன் போன்றவர்கள் இந்தியா வந்து ரகசியமாக இயக்க வேலைகளை செய்ய தொடங்கினார்கள். இங்கும் பிரபாகரன், உமா மாமேஸ்வரனுக்கும் பாண்டி பஜாரில் துப்பாக்கி சண்டை நடந்து தமிழ்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு எம்ஜிஆர் அரசால் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடந்த முயற்சிகள்எல்லாம் நடந்தன. 

          துப்பாக்கி சூட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த பிரபாகரன் ராகவன் பிணையில் வந்து வெவ்வேறு ஊர்களில் தங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. 

அதுபோல் உமா மகேஸ்வரன் சென்னையிலும் சோதிஸ்வரன் பவானி ஊரிலும் சிவனேஸ்வரன் திருச்சியிலும் தங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதன் பின்பு 1983 ஆரம்ப மாதங்களில் நிபந்தனைகள் தளர்த்த பட்டு, புதுக்கோட்டை தங்கியிருந்த ராகவன் மதுரையில் இருந்த பிரபாவுடன் தங்க அனுமதி கிடைத்தது.

இதே நேரம் எம்ஜிஆர் அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை போலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜ சிங்கம் சென்னை வந்திருந்தார். அதோடு தமிழ் போராளிகளை சட்டப்படி இலங்கைக்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசாங்கமும் ரகசிய ஏற்பாடுகள் செய்து வருவதாக அப்போது மந்திரியாக இருந்த காளிமுத்து எஸ்டி சோமசுந்தரம் மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் செய்திகளை ரகசியமாக கூறினார்கள்

.,



அதை தடுத்து நிறுத்துவதற்கு சந்ததியார் தலைமையில் நாங்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடர் கழகம் மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகளை சந்தித்து ஆதரவு கேட்டோம். அதே நேரம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனது பங்குக்கு பல அரசியல்வாதிகளை சந்தித்து எங்களையும் அவர்களை சந்திக்க வைத்து, பல உதவிகள் செய்தார். அதோடு அனைத்துக் கட்சிகளையும் திராவிடர் கழக திடலில் சந்திக்க வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் போராளிகளை நாடு கடத்த கூடாது என தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் இந்திய அரசுக்கும் மனு கொடுக்க வைத்தார்.இதனால் கோபம் கொண்ட எம்ஜிஆர் அரசு பலமுறை பாவலரேறு பெருஞ் சித்ரனார் ஐயாவின் தென் மொழி அச்சகத்தை தலைகீழாக புரட்டி சோதனை என்ற பெயரில் மிகக் கொடுமைகள் செய்தார்கள். இந்த நேரில் பார்க்கும்வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

1983 மார்ச் மாதம் அளவில் பிரபாகரன், தானும். ராகவன் இருவரும் பிணையில் இருந்து தப்பி இலங்கைக்கு போவதாகவும் முடிந்தால் உமா மகேஸ்வரன் மற்றும் நண்பர்களை தப்பி தலைமறைவாக போகும் படியும் அமைச்சர் காளிமுத்து அவர்களிடம் இன்றைய சீமானின் மாமனார் மூலம் புலவர் புலமைப்பித்தனிற்கு செய்தி அனுப்பி இருந்தார். இவர்கள் எம்ஜிஆர் நெருக்கமாக இருந்தாலும் எம்ஜிஆருக்கு தெரியாமல் எங்களுக்கு விடுதலை இளைஞர்களுக்கு மிக மிக உதவிகளை ரகசியமாக செய்து கொடுத்தவர்கள். 

உமா மகேஸ்வரன் தலைமறைவாக போக முடிவு செய்து அன்றைய இரவு எங்களையும் கூட்டிக்கொண்டு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தான் தலைமறைவாகும் விடயத்தை கூற கலைஞர் கருணாநிதி தடுத்து நீங்கள் விடுதலை போராளிகள் தலைமறைவாகி இந்தியாவில் குற்றவாளிகளாக தேடப்பட கூடாது. உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரச எடுத்தால் தமிழ்நாட்டில் நாங்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். தொடர்ந்து வழக்கு நடத்துங்கள் வெற்றி உங்களுக்குத்தான் என்று கூற, உமா மகேஸ்வரன் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

ஆனாலும் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசியில் உமா மகேஸ்வரன் சிவனேஸ்வரன் சோதி ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதோடு இலங்கை பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜ சிங்கம் திரும்பவும் சென்னை வந்து எம்ஜிஆர் அரசாங்கத்தோடு இவர்களை இலங்கை கொண்டு போக பேச்சு வார்த்தை நடத்த தொடங்கினார். 

இந்த நிலையில் பெருஞ்சித்திரனார் ஐயா உட்பட பலரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆலோசனையை கேட்கச் சொல்ல, சந்ததியார் என்னையும் அழைத்துக் கொண்டு கலைஞரை பார்க்கும்போது கலைஞர் வேங்கை போராளிகள்பற்றி இந்திய பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் இந்திரா காந்தி அம்மையாரிடம் மனு கொடுக்கவும் தான் ஏற்பாடு செய்வதாக கூறி தஞ்சாவூரை சேர்ந்த ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய அன்புக்குரிய அண்ணன் எல். கணேசன் அவர்களை சந்திக்க சொன்னார். 

இது பற்றிய பதிவுகளில் விவரமாகமுன்பு போட்டுள்ளேன். புதுடெல்லியில் அனைத்து அனைத்து திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் எமக்காக குரல் கொடுக்க தயாராகி குரலும் கொடுத்தார்கள். அப்போது இலங்கையில் எதிர்பாராமல் இன கலவரம் நடந்து பல தமிழர்களும் வெளிக்கடை சிறையில் இருந்த பல தமிழ் தலைவர் கொல்லப்பட்டார்கள். பிரதமர்இந்திரா காந்தி உட்பட அனைத்து தலைவர்களும் குரல் கொடுக்க, தமிழ்நாட்டில் இதன் எதிரொலியாக எம்ஜிஆர் பயந்து தனது முடிவை மாற்றிக் கொண்டு சிறையில் இருந்த உமா மகேஸ்வரன் மற்றும் நண்பர்களே விடுதலை செய்து தனது வீட்டுக்கு வரச் சொல்லி கட்டித்தழுவி நான் எப்பொழுதும் உங்களுடன் நான் இருப்பேன் உங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்னிடம் கேளுங்கள் நான் செய்து தருகிறேன் என்றார். 

இதன் பின்பு PLOTE இயக்கம் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றது .இயக்கங்களில் கூடிய போராளிகளையும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் பெற்று வளர்ந்து வந்தது. 


இப்படி பெரிதாக வளர்ந்த இயக்கம் எப்படி சிதறி போனது. எப்படி சொந்த இயக்கப் போராளிகளையே கொலை செய்தது என்பதற்கு என்ன காரணம். உண்மைகளை தெரிந்தாலும் சரியாக தெரிய விட்டாலும் இலகுவாக இந்தியா உளவுத்துறை தான் காரணம் என்று தங்களுக்கு தெரிந்த மாதிரி பேட்டிகளும் முகநூல் பதிவுகளும் கருத்துக்களும் சொல்லி தங்களை பெருமைப்படுத்தி கொள்வார்கள். 


இயக்கம் இல்லாமல் போவதற்கு காரணம் தலைவரின் நடவடிக்கை மட்டுமே. 


பகுதி இரண்டு தொடரும்


logoblog

Thanks for reading எனக்குத் தெரிந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் PLOTE. பகுதி 1

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment