கொலை பற்றி விசாரிக்க வந்த சிவனேஸ்வரன் அவர்களின் அண்ணாவும் கவிதா லட்சுமி அவர்களின் அப்பாவும் ஆன விக்னேஸ்வரனும் நடுக்கடலில் வைத்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
காக்கா/நிரஞ்சன் (சிவனேஸ்வரன்) என்றழைக்கப்பட்ட ஒரு போராளியின் மரணம்.
...
நான் நோர்வே மண்ணிற்கு புலம்பெயர்ந்த பின் ஒரே ஒருமுறை மாவீரர் தினத்திற்குச் சென்றிருக்கிறேன். விழா தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே ஒரு இசை நிகழ்ச்சி காரணமாகச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது அங்கே யாரும் இருக்கவில்லை. நான் மேடை அருகில் முன்னிருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.
அமர்ந்து சில நிமிடங்களிடையே என்னருகில் வந்த ஒருவர் என்னை அந்த அரங்கின் பின்பகுதியில் போய் அமருமாறு கட்டளையிட்டார். அப்போது எனக்கு இளம்வயது. இருந்தும் அந்த அதிகாரத் தொனியையும் மீறி ஏன் என்று அவரைக் கேட்டேன்.
முன் இருக்கைகள் எல்லாம் மாவீரர் குடும்பத்திற்கானவை என்றார். எனது குடும்பத்தில் இருந்தும் மூன்று குடும்பத்தவர்கள் போராடச் சென்று மடிந்தவர்கள் தான் என்றேன். இல்லை 'இது மாவீரர்களுக்கானது 'விடுதலைப் புலிகளுக்கு மட்டுமானது' என்றார். நான் கடைசியாக இருந்த நாற்காலிக்கு அனுப்பப்பட்டேன்.
இது நடந்து ஏறத்தாழ 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதன்பின் நான் எந்த ஒரு மாவீரர் தினத்திற்கும் சென்றதில்லை.
மாவீரர் தின ஏற்பாட்டாளர்கள் சில தடவைகள் நிகழ்ச்சிகள் தருமாறு என்னை அழைத்துக் கேட்டிருந்தாலும் அத்தனை முறையிலும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டது- எனது அப்பாவையும் சித்தப்பாவையும் போல பிற இயக்கங்களில் இருந்து போராடி மடிந்தவர்களுக்கும் பொதுவாக அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
அவர்களுக்கு (அனைத்து தமிழ் போராளிகளுக்கும்) இடம் இல்லாத ஒரு அரங்கில் நான் நிற்க மாட்டேன் என்றும் சொன்னேன். இந்நிகழ்வை அனைத்து இயக்கங்களுக்காகவும் மாற்றும் ஒரு தருணத்தில் தான் என்னால் இங்கே நிற்க முடியும் என்றும் சொல்லிவிட்டு ஒவ்வொரு முறையும் வந்து விடுவேன்.
மாவீரர் தினங்களில் நடன நிகழ்ச்சிகள் வழங்கினாற்தான் பெரிய நடன ஆசிரியர்களாக பார்க்கப்பட்ட காலம் அது. அங்கே பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடினார்கள். அப்படி இருந்தும் அத்தகு மேடைகளை எத்தனையோ வருடங்களாக இன்றளவும் நான் தவிர்த்து வந்திருக்கிறேன்.
1983 /84 ஆண்டுகளில் எங்கள் குடும்பங்களில் இருந்து மூன்று பேர் சிறிலங்கா இராணுவத்தினாலும் இயக்கங்களின் உட்கொலையினாலும் (சித்திரவதை செய்யப்பட்டு) கொல்லப்பட்டனர். ஒருவரைத் தவிர மீதி இருவருடைய மரணமும் எப்படி ஏன் எதற்காக நிகழ்ந்தது என்று இன்றுவரை தெரியாமல் இருக்கிறது. அதை அறிவதற்கு நான் பலரையும் பலவிதமாக தொடர்பு கொண்டிருக்கிறேன்.
சித்தப்பாவை பற்றி உறவுகள் சொல்லும் பொழுந்துதெல்லாம் அத்தனை பெருமையாக இருக்கும். ஒரு போராளியாக, அதற்கு எத்தனை உண்மையாக எத்தகைய ஒரு வீரராக, சிறந்த தலைமை பண்போடு இருந்தார் என்பதற்கெல்லாம் அத்தனை கதைகள் உண்டு.
காக்கா அல்லது நிரஞ்சன் என்று அழைக்கப்பட்ட எனது சித்தப்பாவின் மரணம் பற்றிய ஒரு ஒளிப்பதிவு ஒன்றினை செந்தூரன் Shanmugalingam Senthuran அவர்கள் இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
இங்கு சொல்லப்படும் கதைகள், விபரங்கள், எத்தனை தூரம் உண்மை என்பதை நான் அறியேன். ஆனாலும் இங்கு வாமதேவன் சொல்லும் சித்தப்பா கொல்லப்பட்ட விதம் என்பவை சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அதை அறிந்து கொள்வது எனக்குத் தேவையாக இருந்தது.
எத்தனை வருடங்கள்.. எத்தனை வலிகள்.. எத்தனை போராட்டங்கள்... எத்தனை காத்திருப்புகள்... எத்தனை நிராகரிப்புகள்....
வாழ்வில் எத்தனை உயரங்கள், உறவுகள் வந்தாலும் அப்பா இல்லாத ஏக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மக்களின் உரிமைக்காக எதிர்நின்று போராடிய அத்தனை போராளிகளுக்கும் (மாவீரர்களுக்கும்) எனது அஞ்சலிகள்!
🙏
No comments:
Post a Comment