பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 27 July 2025

காலத்தின் கோலம் இது ஒரு பழைய பதிவு யார் துரோகி

  வெற்றிசெல்வன்       Sunday, 27 July 2025
இன்று முகநூலில் வந்த தமிழ் தலைவர்களால் துரோகி என்று முத்திரை குத்தப் படப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மேயர் துரையப்பா அவர்களின் பதிவுக்கு நான் சொன்ன கருத்துக்கு சில நண்பர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தான் மாற்று எதிர்க்கட்சி தலைவர்களை துரோகி பட்டம் கட்டினார்கள் என்று எழுதியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டார்கள்.
சில சம்பவங்களை கூற விரும்புகிறேன். 1970 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வட்டு க்கோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் அவர்கள் தியாகராஜா அவர்களிடம் தோற்று விட்டார். அடுத்த தேர்தலில் தான் திரும்பவும் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தமிழ், தமிழ் ஈழம் என்ற கோஷங்களை முன் வைத்தார்கள். அதோடு மாற்றுக் கட்சிக்காரர்களை தமிழ் துரோகிகள் என்று கூறி இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள். மாற்றுக் கட்சிக்காரர்கள் அரச உதவியுடன் குறிப்பாக தபால் தந்தி போக்குவரத்து அமைச்சர் குமாரசூரியர் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தபால் தந்தி துறையில் வேலைகள் எடுத்துக் கொடுத்தார். அதுபோல் வினோதன் ஆளுங்கட்சியில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார். தியாகராஜாவும் தொகுதி அபிவிருத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்று செய்து கொடுத்துள்ளார்.
அதோடு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 70 ஆம் ஆண்டு ஆட்சியில் தமிழ் இளைஞர்களின் விவசாய புரட்சி விஸ்வமடு போன்ற இடங்களில் விஸ்வரூபம் அடுத்து பல தமிழ் இளைஞர்கள் பல தமிழ் குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் பெற்று பணக்காரராக வாழ்ந்தார்கள். சிறிமாவோ ஆட்சியில் கல்வி அரசியலில் தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டாலும், தமிழர்களின் விவசாயம் வேலைகள் வளர்ந்து வந்தன. இந்த விடயங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்கால பாராளுமன்ற ஆசையில் மண் விழுந்துவிடும் போல் இருந்ததால், தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் போன்ற பல தொழில்களை பெற்றுத் தந்த மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தமிழ் துரோகிகள் என்று பொதுக்கூட்டங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து, இளைஞர்களே அவர்களுக்கு எதிராக கோபம் கொள்ள செய்தார்கள்.
இளைஞர்களும் வேலை வாய்ப்புகளை துரோகிஎன்று குற்றம் சாட்டப்பட்ட, அரசியல்வாதிகளிடம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு எதிராகவே வேலை செய்தார்கள். உதாரணத்துக்கு இன்று டக்லஸ் தேவானந்தா இடம் பல பேர் போய் வேலை வாய்ப்புகள் மற்றும் பல உதவிகளை பெற்றுக் கொண்டு வந்து, வெளியில் வந்து துரோகி என்று எழுதி பேசி வாழ்வது போல் தான் அன்றும் நிலைமை இருந்தது.
1976,1977 காலகட்டங்களில் மாணிப்பாய் இந்து கல்லூரியில்  AL படித்துக் கொண்டு நானும் நண்பர்களும் உடுவில் எம்பி வி தர்மலிங்கம் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து  மானிப்பாய் பகுதியில் அரசியல் வேலைகள் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு அமர்தலிங்கம், மங்கையர்க்கரசி அக்கா, நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர்கள் எங்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி, இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்து தான் உங்களின் தமிழ் ஈழ கனவு நனவாகும் என்று கூறி மூளைச்சலவை செய்வார்கள். அப்பொழுது எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தர்மலிங்கம் அவர்கள் அவரது தொகுதியில் எங்களிடம் துரோகிகள் என்று சுட்டிக் காட்டியது வினோதன், எமது தமிழ் ஆசிரியர் வித்துவான் வேலன், வடக்கு சுதுமலை என்னோடு படித்த நண்பனின் அப்பா சிவகுரு மாஸ்டர் இவர்கள் கூட்டங்களில் பேசினால் குழப்ப வேண்டும் என்றும் இவர்கள் துரோகிகள் என்றும் எங்களை அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
நானும் நண்பர்களும் வினோதன் அவர்கள் வீட்டை கிட்டவே போகவில்லை. காரணம் அவர்களின் தம்பி முறையானவர்கள் எமது நண்பர்கள். ஆனால் எமக்கு படிப்பித்த வித்வான் வேலன் மிகச் சிறந்த தமிழ் ஆசிரியர் அவர் வீட்டுக்கு போய் கல்எறிவது, அவர்கள் பேசும் கூட்டங்களை மறைந்திருந்து கத்தி கல்எறிந்து குழப்புவது போன்ற வேலைகளை செய்தோம் இதே வேலைகளை  எனது நண்பனின் அப்பாவுக்கும் சிவகுருஆசிரியர் அவர்களுக்கும் செய்தோம். இப்படி ஒரு சில பெயர்கள் தான் இன்று ஞாபகத்தில் உள்ளது.
அடுத்த நாள் தர்மலிங்கம் எம்பி அவர்களின் வீட்டுக்கு போனால் நடந்த சம்பவங்களை நாங்கள் கூறும் போது உற்சாகமாக எங்களை பாராட்டி, உங்களைப் போன்ற இளைஞர்கள்ஆல் தான் விரைவில் தமிழ் ஈழம் கிடைக்கப் போகிறது என்று கூறும்போது அன்று எங்களுக்கு கிடைத்த சந்தோசம் மகிழ்ச்சியும்இன்று நினைக்க மிக வருத்தமாக கேவலமாக இருக்கிறது.
logoblog

Thanks for reading காலத்தின் கோலம் இது ஒரு பழைய பதிவு யார் துரோகி

Previous
« Prev Post

No comments:

Post a Comment