1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 10
நாங்கள் இருந்த பகுதிக்கும் மருத்துவமனைக்கும் ஏறக்குறைய நூறு மீற்றர் தூரம்தான் இருக்கும். ஆனால், இந்த இடைவெளியில் இரண்டு பெரும் கட்டிடங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டிடங்களில், வேறு குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் சுமார் முன்னூறுக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். பிரதான வாயிலிருந்து எங்களது கட்டிடத்துக்கு வரவேண்டுமென்றால் இந்த இரு கட்டிடத்தின் நடுப்பகுதிகளினூடாகத்தான் வரவேண்டும். இந்த மூன்று கட்டிடங்களும் (எங்களது உள்பட) நீள் சதுரவடிவைக் கொண்டவை.
எங்களது பகுதியான மேல்தளத்தின் கிழக்கு மூலையில் குளியலறைகளும், கழிவறைகளும் இருக்கின்றன. இவைகளுக்கு ஜன்னல்களும் இருக்கின்றன. இந்த ஜன்னல்கள் சுமார் 7 அடி உயரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஜன்னல் வழியாகப் பார்த்தால் கிழக்குப் பகுதியில் இருக்கும் வினாயகர் கோவிலும், அதனை ஒட்டிச் செல்லும் சாலையும் தெரியும். அதே வேளை சிறையின் பின்புறத்தில் இருக்கும் பறாக்ஸ் (barracks) சின் ஒருபகுதியும் கண்ணுக்குத் தெரியும்.
சிறையினுள் நுழைந்ததும் வலப்புறமாக ஐம்பது மீற்றர் தொலைவில் பெண்களுக்கான பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பகுதி ஏனையோரது கண்களுக்குத் தெரியாதவாறு சுவரால் மறைத்திருந்தனர். அப்பகுதிக்கு செல்வதற்கு தனியான ஓர் பெரிய கதவும் அதற்கு உண்டு. இதே போன்று சிறையின் வாயிலிருந்து இடப்புறமாக ஐம்பது மீற்றர் தூரத்தில்தான் திரு. இராமநாதன் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையும் அமைந்திருந்தது. 24மணி நேரமும் நாம் எங்கள் பகுதியில் அடைக்கப்பட்டிருந்தாலும் தினமும் அரைமணித்தியாலம் வெயில் படுவதற்காக எங்கள் கட்டிடத்தின் பக்கவாட்டில் இருக்கும் ஓர் சிறிய இடத்தில் பகல் பத்து மணி முதல் பத்து மணி முப்பது நிமிடங்கள் வரை அனுமதிப்பார்கள்.
இந்தத் தருணத்தை நாம் சிறையின் முழுவடிவத்தையும் பார்ப்பதற்கு பயன்படுத்திக்கொண்டோம். எங்களது கட்டிடத்தின் மேல்த்தள குழியலறைக் கழிவு நீர் வடிந்து வருவதற்கான குழாயின் பலத்தைப் பார்ப்பதற்காக திரு. மாணிக்கம் தாசன் அவர்கள் அதனைத் தட்டிப்பார்த்தார். இந்தச் செயலை கண்காணித்துக்கொண்டிருந்த காவலாளி ஒருவர் ஜெயிலரிடத்து சொல்லிவிட்டார். அன்று மாலையே அந்தக் கழிவுநீர் குழாயைச் சுற்றி முள்ளுக் கம்பியைப் பதித்துவிட்டனர்.
இவை ஒருபுறம் இருக்க நாம் சிறைக்கு வந்த மறுதினமே என்னால் நடக்க முடியாது என்று கூறி ஊன்று கோல் ஒன்று இருந்தால்தான் நடக்க முடியும் என்றும், வெலிக்கடை மற்றும் பனாகொடை சிறையிலும் அதனை அனுமதித்தார்கள் எனவே, இங்கேயும் எனக்கு ஊன்றுகோல் வேண்டும் என்று உறுதியாக நின்றுகொண்டேன். இறுதியில் எனக்கு ஊன்றுகோல் ஒன்று கொடுத்தார்கள். வெலிக்கடைச் சிறையில் நான் பயன்படுத்திய ஊன்று கோல், என்னை “றாஜறட்ட றைபிள்” இராணுவ முகாமில் வைத்திருக்கும் போது அவர்களால் வழங்கப்பட்டது. ஓரளவுக்கு பலமானது. ஆனால், இங்கு வழங்கப்பட்டது அவ்வளவு பலம் உள்ளதாக இருக்கவில்லை. அதே வேளை பலமாக ஒருவருக்கு குத்தினால் அவர் நிலை தடுமாறி கீழே விழுவார். எனவே, இது போதுமானது என்று கூறி என்னுடனையே வைத்துக்கொண்டேன்.
எங்களுக்குள் நான்கு இயக்கங்கள் இருந்ததினால் இந்தத் தப்பித்தல் என்ற இரகசியத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ள பயமாக இருந்தது. இங்கு வந்திருந்தவர்கள் பலதரப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தனர். கூட்டம் போட்டு மேடையில் பேசியவர்களும் வந்திருந்தனர். முயற்சி வெளியில் கசிந்தால், மீண்டும் இங்கிருந்து கண்டி அல்லது நீர் கொழும்புச் சிறைக்கு மாற்றிவிடுவார்கள் என்ற பயமும் எமக்கிருந்தது. தயாரிப்பு வேலைகளை முடித்துக்கொண்டு இறுதிக் கட்டத்தில் முக்கியமானவர்களை அழைத்துப்; பேசலாம் என்ற தீர்மானத்தில், நாம் மட்டும் அனைத்து வேலைகளையும் தனியாகச் செய்தோம்.
எங்களது இயக்கத்துக்கு முழுநேர ஊழியர்களாக மட்டக்களப்பில் சிலர் வேலைசெய்து வந்தனர். அவர்களது தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டேன். மட்டக்களப்பு 1978ஆம் ஆண்டு சூறாவளியில் சிக்கியபோது, வடமாகானத்து இளைஞர்கள் அறுநூறு (600) பேர் வரையில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதன் வழியாக எனக்கு பல முக்கியஸ்தர்கள் உள்பட பல இளைஞர்களையும் தொடர்பில் வைத்திருந்தேன்
அதிஸ்டவசமாக அப்படி மீட்புப் பணியில் அன்று எம்முடன் பணிசெய்த திரு. சத்தியமூர்த்தி அவர்கள் இதே சிறைச் சாலையில் சிறை அலுவலராக இருந்தார். இவர் புளியந்தீவு சிங்கவாடிப் பகுதியைச் சேர்ந்தவர். எங்களை அழைத்து வந்த மறுதினமே என்னையும் ஏனையோரையும் பார்த்து தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். எங்களுக்கு கிடைத்த முதலாவது ஆதரவு இதுவாகும். எங்கள் இளைஞர்களுக்கும் இவரது கூற்று மன அமைதியைத் தந்தது.
ஐந்தாவது நாள் காலையில் நாங்கள் ஆறு பேர் மட்டும் கூடிப் பேசினோம். நாங்கள் செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன? யார் யார் அவற்றினைச் செய்வது! என்பதனைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் தனியாகச் சந்தித்து கதைப்பதைக் கவனித்த ஏனையோர் நாங்கள் தப்பிப்பதற்காகத்தான் ஏதோ திட்டம் போடுகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டனர். எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கதைத்ததால் இப்படி அவர்கள் எண்ணவேண்டியதாயிற்று. நாம் அனைவரும் பனாகொடை சிறையிலிருந்தபோது இப்படி ஒருவர் தனியாகத் தப்பி ஓடிவிட்டார். அதே போன்று நாமும் இங்கிருந்து தனியாகத் தப்பி ஓடிவிடுவோமோ என்ற அச்சம் ஏனையோருக்கு வந்ததில் வியப்பிருக்கவில்லை. அப்படி பனாகொடையிலிருந்து தனியாகத் தப்பி ஓடிய தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களும் இப்போது எம்முடைய தளத்திலேயே இருக்கிறார்.
மகேஸ்வரன் அவர்கள் பனாகொடையிலிருந்து தப்பித்துப் போனபோது, இப்போது உயிர் தப்பியிருக்கும் அத்தனைபேரும் பனாக்கொடையில் இருந்தோம். உண்மையில் நாங்கள் அனைவரும் பனாகொடையிலிருந்து தப்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். நாங்கள் திட்டமிட்டிருந்ததை ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ளாததால் திரு. மகேஸ்வரன் அவர்கள் தனியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பது எங்களது கருத்தாக இருந்தது ஆயினும் எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு மகேஸ்வரன் அவர்கள் தப்பிச் சென்றது எங்கள் அனைவருக்கும் அவர் செய்த துரோகமாகவே கருதினோம். ஏனெனில் நாம் சிங்கள இராணுவத்தினரிடம் பட்டுவரும் அவஸ்தைகளை மகேஸ்வரன் அவர்கள் நேரில் பார்த்துள்ளார். அவரும் இவற்றினை அனுபவித்துள்ளார். அங்கிருந்து தனியாகத் தப்பித்தால் எஞ்சியிருப்பவர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்பது இவருக்கு கண்டிப்பாகத் தெரிந்தவிடயம்தான். இரக்கம், மனிதாபிமானம் அனைத்தும் சுயநலத்துக்கு முன்னால் சாம்பலாகிவிட்டது. மகேஸ்வரன் அவர்கள் தனியாக தப்பி விட்டார் பனாகொடையிலிருந்து.
அன்றைய தினம் இரவு எட்டுமணியளவில்தான் இவர் தப்பிவிட்ட செய்தி இராணுவத்தினருக்குத் தெரியவந்தது. நாங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு அறைகளில் (செல்) இருந்தபடியால் அடுத்த அறையில் என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. இவர் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் உணவு கொண்டு வரும் அட்டைப்பெட்டிக்குள், அட்டைகளின் நடுவில் இரும்பு அறுக்கும் வாளைச் செருகி அதன் வழியாக தனது அறைக்குள் அந்த வாளை கொண்டுவந்து விட்டார். அந்த வாளைக் கொண்டு தினமும் மாலை வேளைகளில் பின்பகுதியின் ஜன்னல் கம்பிகள் இரண்டை அறுத்துவந்துள்ளார்.
அடிப்பகுதியில் அறுத்து துண்டானபிறகு சரியான நாளைக் கவனித்துவந்துள்ளார். மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணிவரை பின்பகுதியில் யாரும் நடமாடமாட்டார்கள். என்பதனைக் கவனித்து, அந்தவேளை பார்த்து கம்பிகளை வளைத்து வெளியில் இறங்கிவிட்டார். பனாகொடை சிறையானது பரந்த பிரதேசத்தின் ஓர் ஓரமாக அமைந்துள்ளது. முன்புறத்தைவிட ஏனைய பகுதிகளில் மரங்கள் நிறைந்திருக்கும் ஐந்து மணிக்கு மேல் அந்தப் பகுதி இருண்டு காணப்படும். மகேஸ்வரன் அவர்கள் இந்தக் காட்டுப் பகுதியால் நடந்து கொழும்பு புறநகருக்குள் சென்றுவிட்டார்.
மகேஸ்வரன் அவர்கள் தப்பித்த செய்தி பனாகொடை முழுவதும் பரவியதும். அவர்களது ஆத்திரம் எல்லாம் எங்கள் மீது திரும்பியது. தப்பிய செய்தி அறிந்தபின்னர் ஒவ்வொருதடவையும் சிறையின் முதல் வாயில் கதவு திறக்கப்படும் போதெல்லாம், நாங்கள் அடிவாங்குவதற்குத் தயாராகிக்கொள்வோம். நாங்கள் எதிர்பார்த்தபடி இராணுவத்தினர் எங்களைத் தாக்கவில்லை. உள்ளே வரும் இராணுவத்தினர் இறுகிய முகத்துடன் எங்களைப் பார்த்து தங்களுக்குள் கதைத்துக் கொண்டு செல்லுவார்கள். ஒவ்வொரு இரவும் சித்திரவதையை எதிர்பார்த்திருந்தோம். நடக்கவில்லை. இவ்விதம் பத்து நாட்கள் கழித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இரவு ஏழுமணியளவில் இராணுவத்தினர் பலரது காலடிச்சத்தம் கேட்டன. கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டது. எதிர் பக்கத்தில் இருந்த செல்லின் கதவும் திறக்கப்பட்டது. இராணுவத்தினர் வேகமாக வந்து கழுத்தைப் பிடித்து ஒருவரை அறையின் உள்ளே தள்ளி கதவை தாழிட்டனர். உள்ளே இராணுவத்தினர் தள்ளியது வேறுயாருமல்ல, தப்பிச்சென்ற தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் அவர்களேதான். மகேஸ்வரன் அவர்கள் மீண்டும் பனாகொடை கம்பிக்குள். தப்பி ஓடியவர் இவ்வளவு விரைவில் வந்து சேருவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஒருவருடன் ஒருவர் கதைக்கமுடியாது. எதிர்திசையில் இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர்.
தொடரும்...
No comments:
Post a Comment