பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 29 1983 வெளிக்கடை சிறைச்சாலை இனப்படுகொலை நேரடி சாட்சி யம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 29

அனைத்து வாகனங்களிலிருந்தவர்களும் இறங்கி விட்டனர். எனது தோழர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. என்ன செய்வது, அனைவரும் இறங்கிவிட்டனர் என்று மிரட்சியுடன் கேட்டனர். அனைவரையும் மீண்டும் பஸ்சில் ஏறும்படி ஒலிபரப்பு செய்யும்படி கூறினேன். அதன்படி செய்தனர். இறங்கிய மக்கள் மீண்டும் பேருந்துகளில் ஏறி அமர்ந்தனர். 

வாகனங்களை குமாரபுரம் மகாவித்யாலயத்துக்கு அழைத்துச் செல்லும்படி கூறி, தலைமை ஆசிரியர் அவர்களிடம் எந்த அனுமதியையும் பெறாமல், அவர்களை அங்கே தங்க வைத்தேன். தலைமை ஆசிரியரும் அப்போது அங்கு இருக்கவில்லை. 

அழுக்குத்துணி, பலருக்கு காயங்கள், சரிவர உணவு இல்லை, குழந்தைகள் அழுத்தவண்ணம், இப்படியாக வந்த அந்த மக்களை வவுனியாவில் அந்த எம்.பி. ஏற்றுக்கொள்ளவில்லை. கிளிநொச்சி எம்.பி.க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்களது கட்சி தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறது. ஆனால் அடிபட்டு வந்த மக்களைக் கவனிக்க ஆள் இல்லை. எங்களுக்கு இளைஞர்கள் என்ற தகுதியைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை.

பொறுப்பற்ற அரசாங்கம், பொறுப்பற்ற கட்சிகள், எங்களது இனப்பிரச்சினை இவ்விதம் சிக்கலடைய வாக்குச் சேகரிப்பாளர்கள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

இரண்டு நாட்கள் ஊருக்குள்ளும், கடைகளிலும் உணவுப் பொருட்கள் சேகரித்து அவர்களைப் பராமரித்தேன். மூன்றாம் நாள் ஆனையிறவு முகாமிலிருந்து மூன்று வாகனங்களில் இராணுவம் வந்தது.

இரவு 8 மணிக்கு பாடசாலை வந்த இராணுவத்தினர் எனது பெயரைச் சொல்லி வெளியில் வரும்படி அழைத்தனர். வெளியே வரமுடியாது, அவர்களில் இருவரை மட்டும் உள்ளே வரும்படி எனது தோழர்கள் மூலம் சொல்லி அனுப்பினேன். பாடசாலை வாசலில் இரவும் பகலும் பத்துத் தோழர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.

ஒரு கப்ரனும், ஒரு சிப்பாயும் உள்ளே வந்தனர். சிப்பாய் எஸ்.எம்.ஜி. துவக்கை எனக்கு நேராக நீட்டிக்கொண்டு என்னருகில் வந்தனர். நான் அவரது எஸ்.எம்.ஜி.யை பிடித்து வேறு திசைக்கு திருப்பி அதிலிருந்த மகசீனை கழற்றும்படி கூறினேன், வேறு வழியில்லாமல் கப்ரன் உத்தரவிட மகசீனை கழற்றினார் சிப்பாய். இப்போது என்ன விசயம் என்று கேட்டேன்.

கண்டாவிளையில் சிங்கள முதலாளி ஒருவர் ஓட்டுத் தொழிற்சாலை ஒன்றினை பெரிய அளவில் நடத்திவந்தார். கலவரத்தில் அந்தத் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த மூன்று லொறிகள் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நீங்கள்தான் எடுத்துச் சென்றுள்ளீர்கள். அவை உடனே வேண்டும் என்றார். நீங்கள் தான் எடுத்துச் சென்றீர்கள் என்ற தகவல் எமக்கு வந்துள்ளன என்றார். 

உங்களுக்கு கிடைத்த தகவல் தவறானவை. இந்த மக்களை இங்கிருந்து விரட்டுவதற்காக இப்படியான கதை ஒன்றுடன் வந்துள்ளீர்கள். முதலில் இங்கிருந்து வெளியேறுங்கள் என்று கூறி அவர்களை வெளியே அனுப்பிவைத்தேன். வாசல்வரை சென்றவர்கள், நாளை இரவு வருவோம். எங்களுக்கு லொரிகள் தேவை, இல்லையென்றால், வெளியிலிருந்தே துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

அன்று இரவு, திரு. கிருஷ்ணராஜா அவர்களுடனும், திரு. ஆனந்தசங்கரி எம்.பி. அவர்களுடனும் கதைத்து நாளை பிற்பகலில் கிளிநொச்சி பஸ் டிப்போவிலிருந்து ஐந்து பேருந்துகள் தேவை, இந்த முகாமை மாற்றவேண்டும், பிற்பகல் மூன்று மணிக்கு வாகனங்கள் இங்கே வந்து சேரவேண்டும் என்று கூறினேன். நடந்த விபரங்களையும் தெரிவித்தேன். காரணம், மலையக மக்கள் அங்கிருந்து அடிபட்டு நொந்து போய் வந்துள்ளனர். வந்த இடத்தில் மீண்டும் தொல்லையா என்று வேதனை அடைவர் என்பதால், முரசுமோட்டை மகாவித்யாலயத்துக்கு முகாமை மாற்றுவது என்று முடிவெடுத்தேன். 

இராணுவத்தை நாங்கள் பார்த்துக்கொள்ளலாம். முதலில் இவர்களை நிம்மதியாக நித்திரைகொள்ள விடவேண்டும் என்ற முடிவில்தான் மாற்றுவது என்ற முடிவை எடுத்தேன். முரசுமோட்டையில் இருந்த தோழர்களுக்கு செய்தி அனுப்பினேன். அவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

முகாம் பிற்பகலில் மாற்றப்பட்டது. இதே தினத்தில், மேலும் பத்துப் பேருந்துகளில் மலையகத் தமிழர்கள் கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தனர். அந்தப் பேருந்துகளில் வந்தவர்களை திரு. குமாரசூரியர் அவர்கள் கட்டிவைத்த சந்தையில் இறக்கிப் பராமரிக்க, திரு. கிருஷ்ணராஜ அவர்கள் ஏற்பாடு செய்தார். பரந்தனில் பிரச்சினை என்பதால், கிளிநொச்சி மலையக மக்களின் வருகைக்கு மையப்பகுதியாக மாறியது. 

நான்கு தடவைகளில் அந்த மக்களை ஏற்றி முரசுமோட்டைக்குக் கொண்டு சென்றோம். எங்களின் தோழர்கள் பலரையும் அவர்களைப் பராமரிக்கும் பணிக்கு அனுப்பிவைத்து குமரபுரம் பாடசாலையை இழுத்து மூடிவிட்டோம். 

மறுநாள் இராணுவத்தினர் சொன்னது போன்று, இரவு எட்டு மணிக்கு வந்து பாடசாலையை பார்த்தனர். பாடசாலை இருட்டாக வெறிச்சோடிக் கிடந்தது. அவர்களுக்கு ஆத்திரம் வந்தது, எனது வீட்டின் முகவரியை அறிந்து அங்கு சென்றனர். அங்கே எனது மூத்த சகோதரர் திரு. ஞானராஜா அவர்கள் இருப்பதைக் கண்டு அவரை வலுக்கட்டாயமாக இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர்.

ஆனையிறவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே கயிற்றால் கட்டி தொங்கவிட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவரது இடது கை உடைந்துவிட்டது. எனக்குத் தகவல் கிடைத்ததும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியிலிருந்த சப் இன்ஸ்பெக்டர் சிவகுமாரையும் சார்ஜன்ட் சீவரத்தினம் அவர்களையும் தொலைபேசியில் அழைத்து இதுபற்றி கூறினேன். அவர்கள் இருவரும் எங்கள் மீது மிகவும் அனுதாபம் கொண்டவர்கள். தமிழ் உணர்வு மிக்கவர்கள். அந்த நாட்களில் பல தகவல்களை எனக்கு தெரிவித்திருந்தனர். 

அவர்கள் இருவரும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு சென்று நீண்ட நேரம் விவாதம் நடத்தி எனது சகோதரரை அழைத்துவந்துவிட்டனர். பலத்த காயங்களும் கை உடைந்தநிலையிலும் இருந்த அவரை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் ஓர் வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர். 

இதன் பின்னர் தொடர்ச்சியாக கிளிநொச்சி நோக்கி மலையக மக்கள் வரத்தொடங்கினர். இவர்களை எங்கே குடியமர்த்துவதென்று தெரியவில்லை. அரசாங்கம் இவர்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. கிளிநொச்சி புதிய சந்தையிலும் முரசுமோட்டை மகாவித்யாலயத்திலும் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவது பெரும் சிரமமாக இருந்தது. கடன் வாங்க ஆரம்பித்தோம். இதில் திரு. கிருஷ்ணராஜா அவர்கள் தனது உளவு இயந்திரத்தை விற்று அப்பணத்தில் மலையக மக்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து பராமரிக்கமுடியாத நிலை வந்ததும் இவர்களை இங்கயே குடியமர்த்துவோமென்று முடிவெடுத்து கிளிநொச்சி முதல் முறிகண்டி வரை உள்ள காடுகளை உட்புறமாக அழித்து குடியேற்ற ஆரம்பித்தோம். 

இந்த வேளைதான் திரு. சந்ததியார் அவர்கள் இதனை கேள்விப்பட்டு என்னை தேடி வந்தார். அதன் பின்னர் தான் நாம் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தோம், மலையக மக்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அழைத்துவந்து குடியமர்த்துவோம் என்று. இதற்காகவே தான் காந்தியம் இயக்கத்தில் இணைந்தோம். எங்களுடைய விடுதலை போராட்டத்துக்கு இதுவும் பேருதவியாக இருக்கும் என்பது எங்கள் முடிவு. இது தவிரவும் நாம் போராட்டம் என்று ஆரம்பித்தால் சிங்களப் படைகள் மலையக தமிழ் மக்களை அழித்தே விடுவார்கள். எனவே வடக்குக் கிழக்குக்கு வந்து சேர்ந்தால் அவர்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று நம்பினோம்.

எனவே காந்தியம் ஓர் சீரான நிறுவனமாக எங்களுக்குப் பட்டது. இதற்காக நாம் இருவரும் சென்று டொக்டர் திரு. ராஜசுந்தரம் அவர்களை சந்தித்தோம். 

இத்துடன் இந்த வரலாற்றுக் குறிப்புகள் நிறுத்தப் படுகிறது. 1971 தரப்படுத்துதல் முதல், 2009 வரையிலான வரலாறு விரைவில் புத்தகமாக வரவிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இத்தொடரை நிறுத்துகிறேன். வரலாற்றை அரைகுறையாக அறிந்தும் திரிபு படுத்தியும் பலர் எழுதியுள்ளனர். 
வெளிவரவிருக்கும் தமிழ் இளைஞர்களின் "வரலாற்றுப் புத்தகம்" எந்தவித ஏற்றத் தாழ்வும் இல்லாமல் உள்ளது உள்ளபடி வெளிவரும். திரு. சத்தியசீலன், திரு. பிரபாகரன், திரு. சிறிசபாரெத்தினம், திரு. உமா மகேஸ்வரன், திரு. சந்ததியார் போன்றோருடைய தியாகங்களும் செயல்பாடுகளும் எனது புத்தகத்தில் நியாயமாகவும் உண்மையாகவும் இடம்பெறும். அனைவரும் விடுதலைக்காகவே புறப்பட்டவர்கள், பாதி வழியில் திசைகள் மாறின நட்புகள் பகையாக மாறி ஆரம்பித்த இடத்துக்கே மக்கள் வந்து சேர்ந்துவிட்டனர். 

மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து!
logoblog

Thanks for reading பகுதி 29 1983 வெளிக்கடை சிறைச்சாலை இனப்படுகொலை நேரடி சாட்சி யம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment