பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 11. 1983 ஆண்டு வெளி கடை சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 11

இரவு பத்து மணியைத் தாண்டியதும், உடுகம்பொளை உள்பட பலர் வந்தனர். எங்களது அறைக்கதவுகள் திறக்கப்பட்டன. அவர்களது விருப்பத்துக்கு தாக்கினர். எனது அறையைத் திறந்தவர்கள் ஏதோ ஓர் எண்ணத்தில் மீண்டும் மூடிவிட்டனர். (எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும் அதனால் தவிர்த்தனர் என்று நான் நினைத்தேன்.)

தப்பி ஓடிய வேளையும் அதன் பின்னரும் அடிக்கவில்லை, துன்புறுத்தவில்லை. ஆனால், மீண்டும் பிடித்துவந்த பின்னர்தான் தாக்கினர். இதில் அவர்களது வீரத்தை வெளிப்படுத்தினர். மகேஸ்வரன் அவர்களை எம்மவர்கள் அனைவரும் வெறுத்தனர். தப்பி ஓடியதே தவறான செயல், அதே வேகத்தில் பிடிபட்டு மீண்டும் அங்கேயே கொண்டு வரப்பட்டதன் மூலம் அனைவரது ஆத்திரத்தையும் கிளப்பிவிட்டார் மகேஸ்வரன் அவர்கள்.

பனாகொடையிலிருந்து நாங்கள் அனைவரும் மொத்தமாகத் தப்புவது பற்றி நாம் எடுத்திருந்த முடிவு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:

தினமும் மூன்று வேளையும் எங்களுக்கான உணவு இராணுவத்துக்கான பொதுச் சமையல் அறையிலிருந்துதான் வருகின்றது. இரண்டு இராணுவத்தினர். உணவினை இராணுவ லொறியில் ஏற்றிவருவர். சில சமயங்களில் அந்த லொறி உடனேயே திரும்பிவிடும். இன்னும் சில சமயங்களில் எங்களுக்கு உணவு பரிமாறி முடிந்த பின்னர்தான் அந்த லொறி அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

எங்களுக்கான உணவைத் தட்டுகளில் போட்டு சிறை அறைகளுக்கான பிரதான வாயில் அருகில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். எங்களது அறைகளை (செல்) திறந்து விடுவார்கள். நாங்கள் வரிசையாகச் சென்று ஒவ்வொரு தட்டையும் எடுத்துக்கொண்டு எங்கள் அறைகளுக்குத் திரும்பிவிட வேண்டும். சில சமயங்களில் அவர்களது வேலைச் சுலபத்துக்காக வேகமாகத் திறந்து விடுவார்கள். பத்து அல்லது பதினைந்து பேர் ஒரே தடவையில் வரிசையாகச் சென்று உணவு எடுத்துக்கொள்வோம். பலதடவை அந்த லொறி வாசலில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம். மதியவேளையும், இரவு உணவுக்கும் சிலசமயங்களில் இரண்டு பேர் உள்ளே எங்கள் பகுதியிலும் இரண்டு பேர் வெளியிலும் சிப்பாய்கள் நிற்பார்கள்.

இந்த நான்கு சிப்பாய்களையும் மடக்கிப் பிடித்தால் இராணுவ லொறி எங்கள் வசம் வந்துவிடும். ஆனால், பனாகொடையிலிருந்து எந்தவழியாக கொழும்பைத் தவிர்த்து நாங்கள் தப்பிப்பது என்பதுதான் எங்களுக்கு தெரியாத விடயமாக இருந்தது. கைப்பற்றும் லொறியில் தொடர்ந்து நாம் பயணம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அளவு தூரத்தில் லொறியை விட்டுவிட்டு தப்பியவர்களைத் தனித்தனியாக அனுப்பிவைக்கவேண்டும். இவற்றுக்கு வெளியில் இருக்கும் எங்கள் இயக்க அங்கத்தினரின் ஒத்துழைப்பு வேண்டும். அப்படி ஓர் ஏற்பாடு இல்லை என்றால் நாம் மகேஸ்வரன் அவர்கள் திரும்பி வந்தது போன்று மறுநாளே பனாகொடைக்கு அழைத்து வரப்படுவோம் என்பது உறுதி.

எனவே, எங்கள் இயக்கத்தின் தலைவர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். எனது நண்பர் திரு. இரவி மூர்த்தி (கொக்குவில்) என்பவர் அப்போது எயர் லங்கா விமானத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அவருக்கு தகவல் அனுப்பி வேண்டிய உதவிகளை திரு. உமாமகேஸ்வரன் அவர்களுக்கு செய்து கொடுக்கும்படி கேட்டிருந்தேன். அவரும் தனது முழுமுயற்சிகளையும் மேற்கொண்டு, தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களது தகவலுக்காகக் காத்திருந்தார்.

இந்தியாவில் இருந்த திரு. உமாமகேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து எனது தகவலைத் தெரிவிக்கும்படி அன்று எங்கள் வழக்குகளுக்காக திரு. சிவசிதம்பரம் அவர்களுடன் நீதிமன்றங்களில் ஆஜராகி வந்த திரு. கரிகாலன் சட்டத்தரணி அவர்களை இந்தியாவுக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டேன். சட்டத்தரணிக்கு என்ன விடயம் என்று தெரிவிக்கவில்லை. “ரவி மூர்த்தி அவர்களைச் சந்திக்கவும் அல்லது தொடர்புகொள்ளவும், விபரங்களை அவர் கூறுவார்” இதுவே நான் சட்டத்தரணி மூலம் அனுப்பிய தகவல். (சட்டத்தரணி கரிகாலன் அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்.)

பனாகொடை இராணுவ முகாமிலிருந்து குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வது எங்களின் திறமை. அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வது எங்கள் இயக்கத்தின் கடமை. சட்டத்தரணி அவர்களும், திரு. உமா மகேஸ்வரன் அவர்களை இந்தியாவில் சந்தித்து விடயத்தைக் கூறினார். உமா மகேஸ்வரன் அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறாமல்; திருப்பி அனுப்பிவிட்டார். இந்தியா சென்றது வீண்வேலை என்று பின்னர் சிறையில் என்னைச் சந்தித்த சட்டத்தரணி அவர்கள் கூறி வேதனைப்பட்டார்.

இருந்தப் போதிலும் எங்கள் முயற்சிகளைக் கைவிடவில்லை. பனாகொடை சிறையில் கடமையாற்றும் இராணுவத்தினரை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எங்களுக்கு சிரமமான காரியமில்லை என்பதனை உறுதிப்படுத்தியிருந்தோம். வெளியில் இருக்கும் பாதைகள்தான் எங்களுக்குத் தெரியாது.

பின்னர் இந்த வழியைக் கண்டுபிடிக்கும் வேலையை திரு. ரவிமூர்த்தி அவர்களிடமே விட்டிருந்தேன். ஆனால், ரவி மூர்த்தி அவர்களிடம் வாகனங்கள் ஒழுங்கு செய்வதற்கான பணம் இருக்கவில்லை. அவர் இயக்கத்தில் உதவியை நாடிநின்றார். இந்த வேளையில்தான் திரு. தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் தனியாக தப்பிச் சென்ற நிகழ்ச்சி நடந்தது.

உண்மையில், இந்தத் திட்டத்தினை நாங்கள் சிறையிலிருந்த வேறு எவரிடமும் கதைக்கவில்லை. திரு. மாணிக்கம்தாசன், திரு. சிவசுப்பிரமணியம் மற்றும் நான் உள்பட மூன்றுபேர்தான் இதனைத் தீர்மானித்தது. காரணம் ஏனையோருடன் கதைக்கும் சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு பனாகொடையில். திட்டத்தைச் செயல்படுத்தும் அன்றுதான் அனைவரிடத்திலும் சொல்வதென்று தீர்மாணித்திருந்தோம். திரு. மகேஸ்வரன் அவர்கள் தப்பிச் சென்ற பிறகு சிறையின் வெளிப்புறத்;தில் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர். இது எங்களைச் சேர்வடையச் செய்தது. தொடந்த சித்திரவதையால் நாம் சிறைமாறும் தீர்மானத்துக்கு வரவேண்டியதால் பனாகொடையிலிருந்து தப்பிப்பது பைவிடப்பட்டது.

மட்டக்களப்புச் சிறையில் நாங்கள் தனியாக திட்டம் வகுக்க, ஏனையோரும் தனித்தனியாக திட்டம் வகுத்து மொத்த முயற்சியையும் வீணடித்துவிடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. இவைபற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில்,

கொழும்பிலிருந்து இரண்டாவது நாள் (யூலை 27) படுகொலைகளுக்கான விசாரணைக் குழுவொன்று மட்டக்களப்பு சிறைக்கு வந்திருப்பதாகவும், அன்று தப்பித்த 18 பேரிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லப்பட்டது. அன்று மதியமே விசாரணை ஆரம்பமாகும் என்று தெரிவித்தனர்.

மதியம் ஒருவரை விசாரணைக்கு அழைத்தனர், அவர் யாரென்று இப்போது மறந்துவிட்டேன், அவர் சென்று வந்த பின்னர் இரண்டாவதாக என்னை அழைத்தனர். நான் கைத்தடியுடன் சென்றேன். சிறை அலுவலகத்தினுள் விசாரணைக்காக மூன்று பேர் வெள்ளை உடையுடன் இருந்தனர். 25ம் திகதி நடந்த கொலைகளை விசாரித்த அதே நீதிபதியும் இருந்தார். மாறப்பனையைக் காணவில்லை.

அழைத்துச் சென்ற அதிகாரிகள் என்னை ஓர் வாங்கில் இருக்கச் சொன்னார்கள். எனக்கும் நீதிபதிக்கும் இடையில் ஐந்து மீற்றர் இடைவெளியிருந்தது. அந்த இடைவெளியில் ஒர் மேசையும், சில நாற்காலிகளும் இருந்தன. என்னைப் பார்த்து பழைய அதே நீதிபதி எப்படி இருக்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டார். என்னைப்பார்த்து கேலி செய்வது போல் இருந்தது அவரது கேள்வி.

“டேய் நாயே, நான் கொடுத்த வாக்குமூலத்தை சீப் ஜெயிலரிடம் கொடுத்துவிட்டு எங்கள் ஆட்களைக் கொலையும் செய்துவிட்டு எப்படி இருக்கிறீங்கள் என்றா கேட்கிறாய்” என்று எனது கையிலிருந்த தடியை அவர்கள் மீது வீசுவதற்கு ஓங்கிய போது அருகில் நின்று கொண்டிருந்த சிறைக்காவலர்கள் எனது தடியைப் பிடித்துக் கொண்டு என்முன்னே வந்து அவர்களை மறைத்துக் கொண்டு நின்றனர் இருவர். ஏனையோர் அவர்களை வெளியில் செல்லுமாறு கேட்டதும் பின்பக்கத்துக் கதவால் ஓடிச்சென்று விட்டனர். அதன் பின் விசாரணை நடைபெறவில்லை. அவர்கள் உடனடியாக வந்த வானில் ஏறி விமானநிலையம் சென்று அங்கிருந்து கொழும்புக்குச் சென்றுவிட்டனர். விசாரணை ரத்து என்று சிறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

விசாரணைக்கு வந்த நீதிபதிகளும் முன்ஜாக்கிரதையாக எங்களை தங்களுக்கு அருகில் அனுமதிக்கவேண்டாம் என்று சிறைக் காவலருக்கு உத்தரவிட்டிருந்தனர் என்பது பின்னால் எமக்குத் தெரியவந்தது. ஆதலால்தான் எங்களை ஐந்து மீற்றர் இடைவெளியில் அமரவைத்தனர். நான் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய தூரத்தில்தான் இருந்தனர். அப்படிச் செய்தால் எனது கால்கள் நன்கு இயங்கக்கூடியவை என்பது சிறைநிர்வாகத்துக்குத் தெரியவரும். பின்னர் என்பாதுகாப்புக்கென்று கையிலிருக்கும் தடி அகற்றப்பட்டுவிடும். இதனால் ஓடிச் சென்று தாக்குவதைத் தவிர்த்தேன்.

இந்தச் சம்பவங்களை எழுதிக் கொண்டிருக்கும் போதுதான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசு நியமித்த “Presidential Truth Commission on the ethnic Violence 1981 - 1984” என்ற குழுவின் “ஜனாதிபதியின் உண்மை கண்டறியும் ஆணைக்குழு” அறிக்கையின் ஒரு பகுதியைப் படிக்கக் கிடைத்தது. அவற்றில் சில சிறை அதிகாரிகள் தமிழ்க் கைதிகளை தாக்குவதற்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் “என்னைக் கொன்று போட்டுவிட்டு இந்தப் பகுதிக்குச் செல்லும்படி” (அதாவது நாங்கள் தங்கியிருந்த பகுதி) கூறியதாக உண்மை கண்டறியப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இருக்கலாம்! மனிதர்களும் இருக்கின்றனர், மிருகங்களும் இருக்கின்றனர் மனிதருள்.

ஆனால், அந்த ஆணைக்குழுவின் அறிக்கை, சிறையின் துணைக் கொமிசனர், எஸ்.பி., சீப் ஜெயிலர் இவர்களைப் பாதுகாத்து நற்பெயர் வழங்கியுள்ளது. இரண்டு நாட்களும் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்த மூன்று அதிகாரிகளும்தான் பொறுப்பு என்பதைத் தட்டிக்கழித்து உள்ளே இருந்த தண்டிக்கப்பட்ட கைதிகள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர், வெளியில் நடந்த 13 இராணுவத்தினர் கொலை மற்றும், கனத்தை மைதானத்தில் நடந்த கலவரம் போன்றவற்றால் தூண்டப்பட்டுவிட்டனர் என்று திசைத் திருப்பப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்.

அதில், சிறை அதிபர் (எஸ்.பி.) மகன் கொடுத்த வாக்குமூலத்தில், தனது தந்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துநின்றார். அவர் அவற்றைத் தடுக்கச் சென்றிருந்தால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்திருந்தார். இறந்தவர்களுக்காக வேதனைப்பட்டார் என்றெல்லாம் அவர் (எஸ்.பி.) எழுதி வைத்திருந்ததாக அவரது மகன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

24ம் திகதி 200க்கும் மேற்பட்டவர்கள் சிறையின் வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தமிழ் தீவிரவாதிகளைக் கொலை செய்ய வேண்டும் என்று முயற்சித்தனர். மறுநாள் 25ம் திகதி காலையிலும் இதே போன்று நடந்துள்ளது. சிறைக்காவலாளிகள், தண்டிக்கப்பட்ட சிங்களக் கைதகள் 2000 பேர் தமிழ்க் கைதிகளைச் சுற்றி இருக்கின்றனர். இவர்களுக்கு வெளியில் நடப்பவை அணைத்தும் நிமிடத்துக்கு நிமிடம் தெரியவந்துகொண்டிருக்கிறது.

இப்படி ஓர் நிலையில் சிறையினுள் பதட்டம் நீடிக்கிறது. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு சிறைக் கொமிசனர், அதிபர். சீப் ஜெயிலர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்பாளர்கள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காது இருந்துள்ளனர் என்றால் இவர்களும் நடந்து முடிந்த கொலைகளுக்கு உடந்தையாகத்தானே இருந்துள்ளனர். அதுவுமல்லாது ஒரு கொந்தளிப்பான நிலையை தெரிந்தும் அதைத் தடுக்காமல், அமைதியாக இருந்தால், நடக்கப் போகின்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாகவே அர்த்தம். மௌனம் சம்மதம் என்றுதானே அர்த்தம்.

இதுமட்டுமல்ல, இந்தப் படுகொலைகளில், வெளியில் இருந்து வந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள். அந்த அறிக்கையின் படி பார்த்தால் வெளிநபர்கள் வந்தால்தான் குற்றம் என்பது போலவும், உள்ளே இருப்பவர்கள் கொலை செய்தால் அது குற்றமல்ல என்ன தொணியில்தான் எழுதப்பட்டுள்ளது.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 11. 1983 ஆண்டு வெளி கடை சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment