1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 22
நாங்கள் அங்கிருந்து புறப்படும் நேரம் நெருங்கியதும். எங்கள் இருவரையும் தூக்கிச் செல்வதற்கான சாக்குகளைத் தயார் செய்தனர். இரண்டு சாக்குகளை அடுக்கி அதனூடாக இரண்டு தடிகளை நுழைத்து சாக்கின் மீது அமரும்படி கூறி, நான்கு பேர் தூக்கினர். இப்படியாக இரண்டு பேரையும் எட்டுப்பேர் சேர்ந்து தோழில் சுமந்தபடி எங்கள் பயணம் ஆரம்பமானது.
எங்களுக்கு அந்தப்பகுதியின் நில அமைப்புகள் தெரியாதபடியால் வாகரை - வாழைச்சேனை சாலையைக் கடந்து செல்வதற்கு பாதை காண்பிக்கும்படி டொக்டரிடம் கேட்டேன். கூட வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, டொக்டர் சாலையை நோக்கிச் சென்றார்.
இடையில் நீங்கள் இப்போது எங்கே செல்லப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் வாழைச்சேனைக்குச் செல்லவேண்டும் என்று கூறி சாலை ஓரத்தில்வைத்தே டொக்டருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்ப முடிவுசெய்தோம். டொக்டரை அழைத்து, அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்த முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி அவரிடத்து யாழ்ப்பாண முகவரியொன்றினைக் கொடுத்தேன்.
அந்த மூவருக்கும் நாம் விடை கொடுக்கும் போது முற்றிலுமாக இருட்டிவிட்டிருந்தது. நாங்கள் சாலையைக் கடந்து நூறு மீற்றர் தூரம் வரை காட்டுக்குள் சென்று அங்கிருந்து வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு காடுகளில் நடப்பது சிரமமான ஒன்றாக இருந்தது. வழி தெரியாது. துணைக்கு நாம் வைத்திருந்தது சிறிய கொம்பாஸ் ஒன்றுதான்.
இரவில் ஒற்றறையடிப் பாதையில் செல்லும் போது முன்னுக்கு இரண்டு பேரும் பின்னுக்கு இரண்டு பேர் வீதம் எங்களைத்தூக்கிக்கொண்டு நடக்கும் போது திடீரென ஏதாவது செடிகள் தடக்கித் துன்புறுத்தும். செடி கொடிகளுக்குள் மாட்டிக் கொண்டு திக்குமுக்காடிவிட்டனர் தோழர்கள்.
இரவு நீண்ட நேரம் நடக்க முடியவில்லை, இரவு 12மணிவரை நடந்தனர். அதற்கு மேலும் எங்களையும் தூக்கிக்கொண்டு நடக்கமுடியாமல் போயிற்று. இரவை விட பகலில் நடப்பதே நல்லது. தனியாகவென்றால், பாதை தெரியாதவிடத்துக்குக் கூட காடுகளில் நடந்து செல்லலாம். இரண்டு பெரும் சுமைகளைத் தூக்கிக்கொண்டு செல்ல யாராலும் முடியாத காரியம்.
எனவே, இரவில் தங்கி பகலில் செல்வோம் என்று முடிவு செய்யப்பட்டது. அங்கேயே நுளம்புக்கடிக்குள் அடுத்தக் கட்ட உறக்கத்தை ஆரம்பித்தோம். அதிகாலையில் எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். இப்போது மரம் செடிகளை விலக்கிக் கொண்டு நடக்கக் கூடியதாக இருந்தது.
காலடிகள் தெரியும் பகுதிகளை, தோழர்கள் காட்டு மரத்தின் இலைகளைக் கொண்டு அழித்துக் கொண்டே வந்தனர். எத்தனை கிலோ மீற்றர்கள் நடந்தோம் என்பது தெரியாது. பகல் முழுவதுமே நடந்தோம். விமானப் படை விமானங்கள் அடிக்கடி அந்தக் காடுகளின் மேலாகப் பறக்கும் சத்தங்கள் கேட்டன. அடர்ந்த காடுகள் என்றபடியால் கண்பார்வைக்குத் தெரியவில்லை. இப்போது நாங்கள் நிற்கும் காடு அலிஒலுவக் காடு என்று பவானந்தன் அவர்கள் கூறினார்.
என்னையும் இராமநாதன் அவர்களையும் அனைவரும் மாறி மாறித் தூக்கிவந்தனர். மதியத்துக்கு மேல் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் எங்களின் முன்னர் நடக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது எங்கள் இருவரையும் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடந்துவந்தனர்.
காலடித் தடங்களை அழிக்கும் பொறுப்பு தங்கமகேந்திரன் அவர்களிடமும் பாரூக் அவர்களிடமும் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் இலை குளைகளைக் கட்டி ஆங்காங்கே காலடித் தடங்களை அழித்துக்கொண்டு வந்தனர்.
பிற்பகலில் ஓரிடத்தில் அனைவரும் தங்கி எங்களிடமிருந்த பிஸ்கற் பக்கற்றில் இருந்து ஆளுக்கு இரண்டு பிஸ்கற்றை பிரித்துக்கொடுத்தோம். மீதியை மறுதினத்துக்காக மீண்டும் பொட்டலம் கட்டி வைத்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் எங்களையும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
மாலை ஐந்து மணிக்கே இருட்டாகிவிட்டது. முதல்நாள் போன்று இப்போதும் எங்களைத் தூக்கிக் கொண்டு நடப்பது சிரமமாக இருந்தது. செடி காடுகள் எங்களது சாக்குப் பைகளை கொளுவி இழுத்து தடுமாறச் செய்தன. எனவே, இன்று இரவு இவ்விடத்திலேயே தங்குவோம். காலையில் நடப்போம் என்று மிண்டும் முடிவு.
இரண்டு பிஸ்கற் யாருக்குமே போதாது பசி வன்செயலுக்குத் தூண்டியது. துப்பாக்கி எடுத்துக்கொண்டு தங்கமகேந்திரன் அவர்களும் வேறு இருவரும் ஏதாவது மிருகங்களைச் சுட்டுக்கொண்டு வருகிறோம் என்று கூறிச்சென்றனர். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் கேட்டது. வேட்டையாடிவிட்டனர் என்று அனைவரும் மகிழ்ந்தனர். சொற்ப நேரத்தில் அவர்களில் ஒருவர் வந்தார். மேலும் நான்குபேர் வேண்டும் என்றார். என்ன வேட்டையாடினீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு பெரிய எருமை மாடு என்று பெருமையுடன் கூறினார். அந்தப் பசிக்கொடுமையிலும் அனைவரும் சிரித்தனர்.
நான்குபேர் எருமையின் நான்கு கால்களுடன் வந்தனர். நெருப்பு மூட்டி அதனைச் சுட்டு எடுத்தனர். எனக்கும் ஒரு துண்டு வெட்டிக்கொடுத்தனர். சாப்பிட்டால் எந்தவித சுவையும் தெரியவில்லை. வயிற்றைக் குமட்டியது. ஒரு துண்டைக் கூட விழுங்க முடியவில்லை. அனைவருக்கும் இப்படியான குமட்டல் இருந்தது. பசியினால் வலிந்து விழுங்கினர். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன்.
எனது காலில் வீக்கம் அதிகரித்தது. உறங்குவதற்கு முடியவில்லை. விடியும் வரை வலியுடனேயே இருந்தேன். இராமநாதன் அவர்களைத் தூக்கிவரும் போது அவரது காலுக்கு இரும்புக் கம்பிகள் போட்டுப் பொருத்தியிருந்தனர். அது தொடையிலிருந்து உள்ளங்கால் வரை பொருத்தப்பட்டிருந்தது. அவரை அதனுடனேயேதான் தூக்கிவந்தோம். வட்டவடிவமான நான்கு கம்பிகளுக்குள் அவரது காயப்பட்ட கால் நுளைக்கப்பட்டு இழுத்துவைத்துக் கட்டுப் போட்டிருந்தனர். எங்கள் தோழர்கள் தூக்கிக் கொண்டு நடந்து வர வர கம்பிகள் விலகி விட்டன. அவருக்கும் வலி ஆரம்பித்தது. வேதனைப்பட்டுக்கொண்டே இருந்தார்.
காலையில் மீண்டும் நடைப் பயணம் ஆரம்பித்தோம். இப்போதும் எங்கள் இயக்கத் தோழர்கள்தான் எங்கள் இருவரையும் மாறிமாறித் தூக்கிவந்தனர். அவர்களது இருபகுதித் தோழ்களிலும் காவுதடிகள் உரஞ்சி புண்ணாகிவிட்டது. சிலருக்கு கண்டல் ஏற்பட்டு வீங்கிவிட்டது. பகல் 11 மணிக்கு மேல் தூக்கிக் கொண்டு நடக்க முடியாத அளவு அவர்களுக்கு வலி ஏற்பட்டது.
எனக்கு, அவர்கள் படும் கஸ்டத்தைப் பார்க்க முடியாதிருந்தது. என்னையும் இராமாநாதன் அவர்களையும் இங்கேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள் நாங்கள் இங்கேயே இருந்து கொள்கிறோம். நீங்கள் சென்று திருகோணமலையில் பார்த்தனைச் சந்தித்து விபரம் கூறினால். எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வார். எங்களிடத்து பிஸ்கற் மூன்று பக்கற் இருக்கிறது. ஒருவாரம் சமாளிப்போம் என்று கூறி எங்களை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தினேன்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த தங்கமகேந்திரன் அவர்களுக்கு. ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் மீது கடும் கோபம் வந்தது. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, உங்கள் எல்லோரையும் சுட்டுவிடுவேன். நீங்கள் மனிதர்களே இல்லை. இவ்வளவு கஸ்டப்படுகின்றனர், நீங்கள் பார்த்துக்கொண்டு உடல்வலியில்லாமல் வேகமாக விரைந்து செல்கின்றீர்கள் என்று ஆவேசப்பட்டு துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டினார். பாபுஜி அவர்கள் விரைந்து சென்று அவரைத் தடுத்து, நீங்கள் ஆத்திரப்பட வேண்டாம், எங்களால் இருவரையும் தூக்கிச் செல்ல முடியும் என்றார்.
தங்கமகேந்திரன் அவர்களது ஆவேசத்தைக் கண்டு, சில ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் எங்கள் இருவரையும் தாக்குவதற்காக வந்தனர். மாணிக்கம்தாசன் அவர்களும் பாபுஜி அவர்களும் அவர்களைத் தடுத்தனர். நீங்கள் யாரும் அந்தத் தூக்கும் தடிகளைத் தொடக்கூடாது. எங்களுக்குத் தெரியும் எங்களது ஆட்களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு என்று விரட்டிவிட்டனர்.
எங்கள் இயக்கத் தோழர்கள் 12 பேர் எங்களை மாறி மாறித் தூக்கிவந்தனர். உரசிப் புண்ணான தோழ்கள் மீது துண்டுகளைப் போட்டு அதன் மீது தடியை வைத்து நடக்கத் தொடங்கினர். கொம்பாசைப் பார்த்து வடக்குத் திசை நோக்கி மீண்டும் நடை ஆரம்பித்தது.
இரண்டு மணியளவில் ஒரு ஓடை தென்பட்டது. அதில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதன் மீது துண்டுகளைப் போட்டு உறுஞ்சித் தண்ணீர் குடித்துவிட்டு, எனக்கும் துவாயில் வடித்துக் கொடுத்தனர். அனைவரும் வயிறு நிறையக் குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடந்தோம். மாலை ஐந்து மணியளவில் மரத்தடியில் ஓய்வெடுக்க முடிவுசெய்து நெருப்பு மூட்டி தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன.
இன்றைய உணவுக்காக நாம் வைத்திருந்த பிஸ்கற் பக்கட்களை உடைத்து மீண்டும் ஆளுக்கு இரண்டு பிஸ்கற்கள் கொடுத்துவிட்டு, மீதி இருந்தவற்றை மறுநாளுக்காக கட்டிவைத்தோம். இன்னும் ஒரு நாளைக்கு போதுமான பிஸ்கற் இருந்தன. முதல்நாள் வேட்டையில் எஞ்சிய எருமை மாட்டுத் தொடையின் சிறிய பாகத்தை ஒருவர் சுமந்து வந்திருந்தார். அவரும் சிலரும் சேர்ந்து அதனை உண்டனர்.
களைப்பில் அனைவரும் உறங்கிவிட்டனர். நாங்கள் ஏறக்குறைய மகாவலிகங்கையின் கிளை ஆறான பாலாற்று கரையை அண்டிவந்திருந்தோம். பாலாற்றில் அனைத்து இடங்களிலும் முதலைகள் இருக்கின்றன. சில குறிப்பிட்ட இடங்களில்தான் முதலைகள் இருக்கமாட்டாது என்று தங்கமகேந்திரன் அவர்கள் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்தார். இவர் திருகோணமலை பிரதேசம் என்பதால், இவரின் கூற்றை நாங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. இரவு முழுவதும் எப்படி ஆற்றைக் கடப்பது என்ற சிந்தனையே இருந்தது.
விடிந்ததும் தோழர்கள் வாமதேவன், மகேந்திரன், பவானந்தன் ஆகியோர்களை அழைத்து, நீங்கள் ஆற்றைத் தாண்டிச் சென்று எதிர்வரும் ஊரை அடையுங்கள். கிளிவெட்டி என்ற ஊர் எங்கே இருக்கிறது என்று கேளுங்கள். கிளிவெட்டிக்குச் சென்று அங்கு தங்கத்துரை அவர்களின் தம்பி குமாரதுரை அவர்களது வீடு எங்கே இருக்கிறது என்று கேளுங்கள். காட்டுவார்கள். அவரிடத்து எனது பெயரைச் சொல்லி நான் அழைத்துவரும்படி கூறியதாகச் சொல்லவும் அவர் வருவார். அவருக்கு இந்தப்பகுதி காடுகள் நன்கு தெரியும். திருகோணமலை வரை நாம் செல்வது சுலபம். புறப்படுங்கள் என்று கூறி அதே மூன்று பேரை மீண்டும் அனுப்பிவைத்தேன் கிளிவெட்டிக்கு.
காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டவர்கள், தாங்கள் செல்லும் பாதைகள் மாறாது இருக்க ஆங்காங்கே மரக் கிளைகளை வெட்டி வெட்டி அடையாளத்துக்குப் போட்டுச் சென்றனர். இப்படிச் சென்றவர்கள் மாலை ஆறு மணியளவில் மீண்டும் எங்கள் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். குமாரதுரை அவர்களையும் அவருடன் ராஜ் என்ற நண்பரையும் அழைத்துவந்தனர். (திரு. குமாரதுரை அவர்கள் தற்போது டென்மார்க்கிலும், திரு. ராஜ் அவர்கள் சுவிசிலும் இருக்கிறார்கள்)
இவர்கள் வரும் போது, காயமடைந்த எங்கள் இருவரையும் ஏற்றிச் செல்வதற்கு இரண்டு மாடுகள் பூட்டிய வண்டில் ஒன்றையும் ராஜ் அவர்கள் கொண்டுவந்திருந்தார். ஆற்றைத் தாண்டி வண்டிலைக் கொண்டு வர முடியாதபடியால் மாட்டையும் வண்டியையும் மறுகரையில் விட்டு விட்டு வந்திருந்தனர். குமாரதுரை அவர்கள் ஒரு கோடாலியும், ராஜ் அவர்கள் ஒரு காட்டுக் கத்தியும் கொண்டுவந்திருந்தனர்.
நாங்கள் அனைவரும் ஆற்றைக் கடப்பதற்கு நாங்கள் இருந்த இடத்திலிருந்து மேற்கொண்டும் மேற்கு நோக்கி மூன்று கிலோ மீற்றர் தூரம் நடக்கவேண்டியிருந்தது. காரணம் அந்த இடத்தில்தான் இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது. ஏனைய பகுதிகளில் கழுத்துக்கும் மேலாக தண்ணீர் செல்லும். அந்த இடங்களில் முதலைகள் உண்டு. தண்ணீர் குறைந்த இடங்களில் முதலைகள் கடித்தாலும் கோடாலியால் கொத்தியும் வெட்டியும் தப்பிக்கலாம் என்றார் குமாரதுரை அவர்கள். இப்போது இவரே எங்கள் வழிகாட்டி என்பதால் அவர் சொற்படி புறப்பட்டோம்.
சோர்ந்திருந்த எங்கள் அனைவருக்கும் தகுந்த ஒரு வழிகாட்டி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களை, எங்கள் இயக்கத் தோழர்கள் தோழ்களில் சுமந்தபடி ஆற்றைக் கடக்க ஆரம்பித்தனர். சாக்கில் அமர்ந்திருக்க. தடிகளை உயர்த்திப் பிடித்து நீரில் நனையாதயளவு சுமந்துவந்தனர். இடுப்பளவு தண்ணீர் என்று நினைத்து இறங்கினால், அது கழுத்தையும் தாண்டியது சில இடங்களில். சுமார் 200 மீற்றர் நீளம் கொண்டது அந்த ஆறு. இரவு எட்டு மணியளவில் பாலாற்றைத் தாண்டி மறுகரையை அடைந்தோம்.
தொடரும்...
No comments:
Post a Comment