1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 26
பிரதான சாலைகளைத் தவிர்த்து ஒழுங்கைகளைப் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டிச்சென்றனர். யாழ்ப்பாணத்தில் அப்போது இராணுவத்தினரின் கெடுபிடி மிகவும் மோசமாக இருந்தது. திடீரென ஒரு தெருவை மறித்து வருவோர் போவோரை சோதனைக்குள்ளாக்குவராம். விடுகளில் புகுந்து சந்தேகம் என்று கூறி இளைஞர்களை அழைத்துச் சென்று விடுவர் என்று குமுறினர் வானில் வந்தவர்கள்.
1983ம் ஆண்டின் எழுச்சி அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. விளக்கொளியில் மக்களின் முகங்களைப் பார்க்கும் போது துணிச்சலும் வீரமும் பளிச்சிட்டது. இராணுவத்தையோ பொலிசையோ கண்டு அஞ்சி நடுங்கக்கூடிய மக்களாகத் தெரியவில்லை. மக்கள் இந்த அளவுக்கு உறுதியுடன் இருந்தால் எங்கள் இனத்துக்கு விரைவிலேயே விடுதலை கிடைத்துவிடும் என்று மனதுக்குள் மகிழ்ச்சி அலை மோதியது, எப்படியெல்லாம் நாம் போராடினால் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நப்பாசையுடன் மாலைக் கனவுடனேயே நாங்கள் கொக்குவில்லை அடைந்தோம்.
இரவு 11மணியாகியிருந்தது. இயக்கத்தின் தோழர் ஒருவரது வீட்டில் நாம் தங்கினோம். எங்களுக்கான உணவை ஏற்பாடு செய்து தந்துவிட்டு சதீஸ் அவர்கள் மாதகல் சென்றார், படகு ஏற்பாடு செய்தவருவதற்கு. மறுநாள் இரவு மாதகல்லிலிருந்து படகு மூலம் நாம் இந்தியா செல்வது என்பதுதான் சதீஸ் அவர்களின் ஏற்பாடு. அதன்படி மறுநாள் பகல் முழுவதும் கொக்குவில்லில் இருந்தோம். மாலையில் அதே வான் வந்தது. அதில் ஏறி மாதகல் சென்றோம்.
தோழர் பாபுஜி அவர்களின் சொந்த ஊர் மாதகல், அவரது வீட்டருகில் தங்கினோம். அவரும் தனது குடும்பத்தாரைப் பார்த்து சுகம் விசாரித்துவிட்டு வந்தார். இரவு 11மணிக்கு படகு புறப்படத் தயார் என்று சதீஸ் அவர்கள் கூறினார். இரண்டு மோட்டார் பூட்டிய படகு தயார் நிலையில் கடற்கரைக்கு இழுத்துவரப்பட்டது. நாங்கள் 14பேர் ஒரே படகில் பயணம் செய்ய முடியாது என்பதால் இரண்டாகப் பிரித்து 7பேர் வீதம் பயணம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, இன்று ஒரு தடவையும் நாளை ஒரு தடவையும் என்று மாற்றப்பட்டு, பாபுஜி அவர்களுடன் ஆறு பேரை அங்கேயே நிறுத்திவைத்தோம்.
நாங்கள் 7 பேர் அந்த விசைப்படகில் ஏறினோம். சதீஸ் அவர்களும் எங்களுடனேயே வந்தார். கோடியாக்கரை நோக்கிப் புறப்பட்ட அந்தப் படகு இரண்டு மணி நேரத்தில் அக்கரையின் கலங்கரை விளக்கின் ஒளி எங்கள் முகங்களில் பட்டுத் தெறித்தது. படகை கரை ஒதுக்கமுடியவில்லை. முழங்கால் அளவு தண்ணீரில் நாம் இறங்கினோம். எங்கள் இருவரையும் வழக்கம்போல் தூக்கிச் சுமந்து கரை சேர்த்தனர். அந்த நடு இருட்டிலும் சதீஸ் அவர்கள் ஓடிச்சென்று கார் ஒன்றினை அழைத்துவந்தார். அங்கிருந்து வேதாரணியத்துக்கு வந்த நாம் அதிகாலையில் பேருந்து ஒன்றில் ஏறி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
காலை எட்டு மணியளவில் ஒரத்தநாடு திரு. சாமித்தவுடன் அவர்களின் இல்லத்தில் நாம் தங்கவைக்கப்பட்டோம். காலை, பகல் உணவுகள் அங்கேயே ஏற்பாடு செய்து கொடுத்தார் சாமித்தவுடன் அவர்கள். இரவு அரசுப் பேரூந்தில் சென்னை செல்வதற்கான ஆசனங்கள் பதிவு செய்யப்பட்டன. எங்களுடன் சதீஸ் அவர்கள் வரமுடியவில்லை. அவர் அன்று இரவு புறப்பட்டு தோழர் பாபுஜி அவர்களின் குழுவினரை அழைத்துவர மீண்டும் கோடியக்கரை செல்லவேண்டியிருந்தது. எங்களுக்குத் துணையாக ஒரத்தநாடு பா.இராமசாமி அவர்கள் சென்னைவரை வந்தார்.
இரவு புறப்பட்ட பேரூந்து காலை எட்டுமணியளவில் சென்னையை அடைந்தது. திரு. இராமசாமி அவர்கள், எங்கள்; அனைவரையும் ஆட்டோக்களில் அழைத்துக்கொண்டு சென்னை பழைய எம்.எல்.ஏ. விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே 26ம் இலக்க அறையில் எங்கள் இயக்கத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அறை செஞ்சி இராமச்சந்திரன் (எம்.எல்.ஏ) அவர்களுக்குச் சொந்தமானது. அவர் எங்கள் இயக்கத்தின் பயன்பாட்டுக்குக் கொடுத்திருந்தார்.
எங்களை அங்கே யாரும் இன்முகத்துடன் வரவேற்கவில்லை. நாங்கள் சிறையிலிருந்த காலத்தில் சிலர் எங்கள் இயக்கத்தில் புதிதாகச் சேர்ந்திருந்தனர். இந்த இரண்டு வருடகாலத்தில் அவர்கள் எல்லோரும் மூத்த அங்கத்தவர்களாக மாறியிருந்தனர். எங்களைக் கண்டதும் அவர்களது முகங்களில் அதிர்ச்சி காணப்பட்டது. குறிப்பாக கந்தசாமி என்பவர் எங்களைப் பார்த்தும் பார்க்காதது போன்று சென்றார்.
தோழர் மாணிக்கம்தாசன் அவர்கள் கந்தசாமி அவர்களை அழைத்து எப்படி இருக்கிறீhகள்ஃ என்று கேட்டதற்கு, அவர் பதில் ஏதும் சொல்லாது சென்றது விரும்பத்தக்க செயலாகத் தெரியவில்லை. இவர்கள் ஏதோ பொறுப்பில் இருக்கிறார்கள் என்று என் மனதுக்குள் அன்றே தோன்றியது. அதற்கான காரணங்கள் பின்நாளில் எமக்குத் தெரியவந்தது.
காலை ஒன்பது மணியளவில் திரு. உமா மகேஸ்வரன் அவர்கள் வந்தார். எங்களிடத்து சுகம் விசாரித்தவர் உங்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன் என்றார். நாங்களும் தலையசைத்தோம். அந்தவேளை “தராசு’ பத்திரிகையிலிருந்து ஒரு நபர் உமாமகேஸ்வரன் அவர்களைச் சந்தித்தார். உமா அவர்கள் எங்களைச் சுட்டிக்காட்டி இவர்கள்தான் என்றார். என்னிடத்தில் அறிமுகப்படுத்தி, நீங்கள் சிறையிலிருந்து தப்பிவந்ததை செய்தியாக வெளியிடவேண்டும். எனவே நீங்கள் அவருக்கு அதுபற்றிப் பேட்டி கொடுங்கள் என்றார்.
பேட்டி கொடுக்க நான் மறுத்துவிட்டேன். யாராவது கொடுக்க வேண்டுமே என்றார், அப்படியாயின் மாணிக்கம்தாசன் அவர்களையும், வாமதேவன் அவர்களையும் பேட்டிக்கொடுக்கச் சொல்கிறேன், அவர்கள் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டு. எந்த மருத்துவமனைக்கு நாம் செல்லவேண்டும் என்று கேட்டேன். அரசு மருத்துவமனை. சென்றல் ஸ்ரேசன் எதிரில் உள்ளது என்றார். நாம் மகிழ்ச்சியுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.
அரசு மருத்துவ மனைக்குச் சென்ற எங்கள் இருவரையும் 41ம் இலக்க வார்டில் அனுமதித்தனர். எங்களுடன் சிறிதரன் அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கினார். எனது பெயராக வெளிக்கடையில் இறந்த சர்வேஸ்வரன் அவர்களின் பெயரை பதிவு செய்தேன். சிறிதரன் அவர்களிடம் ரூ. 200 கொடுக்கப்பட்டது. அதில் காலை மதியம் இரவு உணவுகளை கடையில் வாங்கி உண்டோம். மறுநாள் சந்ததியார் எங்களைப் பார்க்கவந்தார். நாங்கள் சிறையிலிருந்து தப்பிவந்த அதே உடையுனுடனேயே மருத்துவமனையிலும் இருந்தோம்.
துவாய், சுடுதண்ணிப்போத்தல் போன்றவை வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்கென பணம் அனுப்புவதாகக் கூறி கண்ணண் அவர்களை அனுப்பியிருந்தார் உமா மகேஸ்வரன் அவர்கள். கண்ணன் அவர்கள் ரூ.3000 உள்ளதாக சிறிதரன் அவர்களிடத்தில் அந்தக் காசை நீட்டினார், எங்களது கட்டில்களுக்கு நடுவில் நின்றிருந்த சந்ததியார் அவர்கள், அந்தப் பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்துவிட்டு அதில் ஆயிரம் ருபாவை மட்டும் எடுத்து சிறிதரன் அவர்களிடம் கொடுத்து. இந்தக் காசுக்கு உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு, அவற்றுக்கான கணக்கைக் கொடுத்துவிட்டு மீதிக்காசைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.
நாங்கள் மூன்றுபேர் மருத்துவமனையில் இருக்கிறோம். நாங்கள் உடுத்தியிருந்த உடையைத் தவிர எதுவும் எங்களிடத்துக்கிடையாது இந்தக் காசு எங்களுக்குப் போதாது என்பது தெரிந்ததே. இருந்தாலும் சிறிதரன் அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, சென்று சுடுதண்ணிப்போத்தலும், சவற்காரமும், பேஸ்ட் பிரஸ் போன்றவற்றை வாங்கிவந்தார்.
பிற்பகலில் மாணிக்கம்தாசன் அவர்கள் மருத்துவமனைக்கு வந்தார். பாபுஜி அவர்களும் மற்ற தோழர்களும் வந்துவிட்டனர். டேவிட் ஐயாவையும். ஞானவேலு அவர்களையும் பார்த்தன் அவர்கள் அழைத்துவந்து திருமலையில் தங்கவைத்திருப்பதாகவும் கூறினார். எங்களுடன் வந்தவர்களுக்கு தேவையான உடைமற்றும் பொருட்களை வாங்கிக் கொடுத்தார்களா என்று கேட்டேன். இல்லை என்று மாணிக்கம் தாசன் அவர்கள் பதில் கூறினார்.
அன்று பகல் எனது பழைய நண்பர் ஒருவர் எனது செய்தி அறிந்து என்னைப் பார்ப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்துள்ளார். அவரது பெயர் அம்பன் என்று கூறினார் மானிக்கம்தாசன் அவர்கள். அவரது தொலைபேசி இலக்கம் எதுவும் கொடுத்திருந்தால் அவரை அழைத்து மருத்துவமனைக்கு வரும்படி கூறவும் என்றேன்.
அவரும் மாலையில் வந்தார். அம்பன் அவர்களும்; நானும் நீண்டநாள் நண்பர்கள். 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான் அவரை சந்திக்கவில்லை.(அம்பன் அவர்கள் இப்போது தமிழ்நாடு, சென்னையில் இருக்கிறார்.) நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தவரிடம் எனக்கு ஒரு சிறிய உதவி செய்யமுடியுமா என்று கேட்டேன். உங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்வது என்று கூறி, என்ன உதவி என்றார்.
எனக்கு ரூபா 10,000 வேண்டும் என்றேன். உங்களுக்குப் பணம் கொடுப்பதற்காகவே நான் பத்தாயிரம் கொண்டுவந்துள்ளேன் என்று கூறி அவரது பையில் இருந்து எடுத்து கொடுத்தார். நன்றி கூறிப் பெற்றுக்கொண்ட பணத்தை சிறிதரன் அவர்களிடமும் மாணிக்கம்தாசன் அவர்களிடமும் கொடுத்து, எங்களுடன் சிறையிலிருந்து வந்த 13பேருக்கும் உடைகளும் மற்றும் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுக்கும்படி அனுப்பிவைத்தேன்.
அன்று இரவே அனைவருக்கும் உடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. மறுநாள் காலையில் சந்ததியார் அவர்கள் எங்களைப் பார்க்கவந்தார். அவரிடத்தில் அவர் கொடுத்த 1000 ரூபாவை திருப்பிக் கொடுத்து எங்கள் கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாவை நீக்கிவிடுங்கள் என்றேன். பேய் அறைந்தவர் போன்று இருந்தார் என் கட்டிலில். ஏன் திருப்பித் தருகிறீர்கள் என்றார். நான் சொன்னேன், எங்கள் இயக்கம் மிகவும் வறுமையில் இருக்கிறது. எனவே, வீண் செலவு செய்ய வேண்டாம் என்று தோன்றியது அதனால்தான் திருப்பித் தந்தேன் என்றேன்.
நாங்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்தியா வந்து மருத்துவமனையில் சேரும்வரை எங்களது இயக்கமான அன்றைய புளொட் இயக்கம் எமக்காக ஒரு ருபாயைக் கூட செலவு செய்தது கிடையாது.
நாங்கள் கைது செய்யப்ட்டது கிளிநொச்சி வங்கிக் கொள்ளை தொடர்பாகத்தான். புளொட் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது 1980ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் சங்கானையில் தொண்டர் கந்தசாமி அவர்களின் மகன் கண்ணன் அவர்களது இல்லத்தில் (கண்ணன் அவர்கள் இப்போது ஜெர்மனியில் இருக்கிறார்). அதன் முதல் சந்திப்பும். கூட்டமும் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் திரு. உமா மகேஸ்வரன் அவர்கள், திரு. சந்ததியார் அவர்கள் (வசந்தன்), திரு. மாணிக்கம்தாசன் அவர்கள், திரு. கண்ணன் (சங்கானை) அவர்கள், திரு. சுந்தரம் அவர்கள் மற்றும் நானும் கலந்துகொண்டேன்.
இந்தக் கூட்டத்துக்கான இடத்தை நானே தெரிவு செய்தேன். கண்ணன் அவர்கள் என்னுடன் 1976ஆம் ஆண்டு முதல் இயக்கப் பணியாற்றிவந்தவர். அதனால் அவரது வீடு பாதுகாப்பானது என்று தீர்மானித்து அந்த இடத்தைத் தெரிவு செய்தேன். மாணிக்கம்தாசன் அவர்களையும் கண்ணன் அவர்களையும் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு முதல் முதலாக அறிமுகம் செய்துவைத்தேன்.
சரி! உமா மகேஸ்வரன் அவர்கள் எப்படி எம்முடன் இணைந்தார் என்பதனைப் பார்ப்போம்!
தொடரும்...
No comments:
Post a Comment