1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 27
1979ஆம் ஆண்டு இன்பம் பாலேந்திரன் அவர்கள் உட்டபட நான்குபேர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் போராளிகளை எப்படி அழிப்பது என்று ஜெயவர்த்தன அரசு யோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், மலேசியா நாட்டில் அதன் தாய்லாந்து எல்லைகளில் தீவிரவாதம் வலுப்பெற்றிருந்தது 1970களில்.
அதனை மலேசிய அரசு முறியடித்து வெற்றி கண்டதாக அறிவித்தது. எப்படி பயங்கரவாதத்தை முறியடித்தார்கள் என்பது ஜெயவர்தனாவுக்கு பெரிய ஆச்சரியம், உடனே மலேசிய அரசுடன் தொடர்புகொண்டு, எங்களது இராணுவத்துக்கும் நீங்கள்தான் பயிற்சி அளிக்கவேண்டும். இங்கேயும் வடக்கு மாகாணத்தில் பயங்கரவாதம் மோசமான நிலையை எட்டியுள்ளது அன்று வேண்டுகோள் விட்டார்.
மலேசிய அரசு தனது வல்லமையை இவர்களுக்கும் போதிக்க வரும்படி அழைத்தது. கேணல் கொப்பேகடுவ தலைமையில் ஒரு குழு பயிற்சி பெற சென்றது மலேசியாவுக்கு. அங்கே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் பெற்ற பயிற்சியை கேள்விப்பட்டால் வியப்பாக இருக்கும். இவர்கள் பெற்ற பயிற்சி இதுதான்:
பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவர்களைப் பிடித்துவந்து, அவர்களைச் சும்மா சுட்டுக்கொல்லக் கூடாது. அவர்களது கண்களை தோண்டவேண்டும், காதுகளை வெட்டவேண்டும், இதயத்தை தோண்டி எடுத்து வெளியே போடா வேண்டும், குடல்கள் கிழிக்கப்பட்டு வெளியே தெரியவேண்டும், கைகால்கள் உடைக்கப்பட்டு தாறுமாறான கோலத்தில் உருத்தெரியாமல் மாற்றப்படவேண்டும். இப்படியான ஓர் மனிதனின் உடலை யாராவது பார்த்தால் என்ன உணர்வு வரும் என்ற கேள்விக்கு பதில் "பயம்" வரும் என்பது பதிலாகும். இதனைத்தான் மலேசியாவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டனர் என்று கொப்பேகடுவ குழுவுக்கு போதிக்கப்பட்டது.
போதனையுடன் நின்றுவிடாது, தாய்லாந்து எல்லையில் பயத்தின் காரணமாக விலகியிருந்த தீவிரவாதி ஒருவரை பிடித்துவந்து மலேசிய இராணுவம் இவர்களுக்கு செய்முறை விளக்கமும் காண்பித்தது. அவரை கொலை செய்வதற்கு முன்னர் காதுகளை வெட்டி. கண்களை தோண்டி இப்படியாக அவரைக் கொன்று இறுதியில் இப்படித்தான் அவரது உடல் இருக்கும் என்று, அலங்கோல உடலை செய்முறையில் காண்பித்தபோது கொப்பேகடுவ மகிழ்ச்சியடைந்து, அட இதுதான் இதுதான் எமக்கு தெரியுமே அன்று கூறிக்கொண்டு விடைபெற்றுவந்தனர் இலங்கைக்கு. இந்தப் பயிற்சினை தொலைபேசியில் சொல்லியிருந்தாலே பல லட்சங்கள் மிச்சமாயிருக்கும் என்று கொப்பேகடுவ வருந்திக்கொண்டாராம் அன்று.
யாழ்ப்பாணம் கச்சேரி முன்பாக பிரிகேடியர் வீரசிங்கா தலைமயில் முகாம் அமைத்தனர் 1979ஆம் ஆண்டு ஜூலையில். இந்த இராணுவப்பிரிவுதான் இன்பம் மற்றும் பாலேந்திரன் அவர்களைப் பிடித்துவந்து அதே பணியில் கொலைசெய்து தெருவில் வீசினர். இது 1979 ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் நடந்தது. இதனைக் கண்டு விடுதலைப் போராளிகளும் பொதுமக்களும் மிரண்டு விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்கமாட்டார்கள் என்று ஜெயவர்த்தனா நம்பினார்.
இந்த செயலுக்கு ஓரளவு பயனும் கிடைத்தது என்றால் அது உண்மைதான், அரசினால் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டபோது, நானும் சந்ததியார் அவர்களும் வவுனியா மாவட்டம் நவ்வி என்ற பண்ணையில் இருந்தோம். இந்தப்பண்ணைக்கு பிரபாகரன் அவர்கள்(புலிகள் தலைவர்) வந்தார். இவர் அடிக்கடி இந்த பண்ணைக்கு சைக்கிளில் வருவார். அப்படி வந்தவர் இன்பம் பாலேந்திரன் சுடப்பட்டதுபற்றிச் சொன்னார். இங்கு இருப்பது நல்லதல்ல, நாங்கள் உடனே இந்தியாவுக்குச் செல்லவேண்டும் வாருங்கள் போகலாம் என்றார். சந்ததியார் அவர்களும் உடனே புறப்படுங்கள் என்று எனக்கும் சொன்னார்.
நாங்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி காடுகள் இருக்கின்றன. இராணுவம் ஒரு வழியாக வந்தால் மறுபாதையால் நாங்கள் காட்டுக்குள் இறங்கிவிடலாம், அதைவிடுத்து எதற்காக இந்தியாவுக்கு செல்லவேண்டும் என்று சந்ததியார் அவர்களிடம் கேட்டேன். பிரபாகரன் அவர்கள் சொன்னதைவைத்து சந்ததியார் அவர்கள் மிரண்டுபோய் இருந்தார். இல்லை இல்லை! இந்த இடம் பாதுகாப்பு இல்லை!. நாம் இந்தியா செல்வது தான் நல்லது என்றார் சந்ததியார் அவர்கள்.
அப்படியென்றால், நீங்கள் செல்லுங்கள், நான் வரவில்லை, இங்கேயே இருக்கிறேன் என்றேன். அவரும் சரி நான் செல்கிறேன் என்றவர் எப்படிச் செல்வது, பஸ்சில் சென்றால், மாங்குளம், ஆனையிறவில் வைத்து இராணுவம் பிடித்துவிட்டால் என்ன செய்வது அன்று ஆழ்ந்து கவலைப்பட்டார்.
பிரபாகரன் சொன்னார், தான் வேறொருவரைச் சந்திக்க வேண்டும் என்றும் நாளைய மறுதினம் பண்ணாகத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று என்னிடத்திலும் சந்ததியார் அவர்களிடமும் கூறிவிட்டு, விடைபெற்று சைக்கிளில் சென்றுவிட்டார். சந்ததியார் அவர்களுக்கு மேற்சொன்ன இரண்டு தடைமுகாம்களையும் தாண்டிச் செல்லும் மாற்றுவழிகள் தெரியாதிருந்தது. எனவே, நான் அவரை அழைத்து வந்து ஆனையிறவு தடைமுகாம் தாண்டி விடுவதாகக் கூறி நாங்கள் இருவரும் இரு சைக்கிள்களில் புறப்பட்டோம்.
நவ்வியிலிருந்து மூன்று முறிப்பு, பாண்டியன்குளம், வவுனிக் குளம், பரந்தன் வழியாக ஆனையிறவின் உப்பளத்தைத் தாண்டி இயக்கச்சியில் கொண்டு வந்து விட்டேன் சந்ததியார் அவர்களை. அங்கிருந்து அவர் பண்ணாகத்துக்கும் நான் மீண்டும் சைக்கிளில் நவ்விக்கும் பயணமானோம். நவ்வியிலிருந்து இயக்கச்சி வரை ஏறக்குறைய எண்பது கிலோமீட்டர் நாம் சைக்கிளில் பயணம் செய்தோம், மீண்டும் அதே தூரத்தை சைக்கிளில்.
இன்பம் பாலேந்திரன் அவர்கள் கொல்லப்பட்டதும், இதே நிலைமைதான் எங்களுக்கும் என்று எண்ணிய போராளிகள் இந்தியாவுக்குப் படகுகளில் பயணித்தனர். இப்படிப் பயணம் செய்து தமிழகம் வந்தவர்தான் திரு உமா மகேஸ்வரன், திரு. பிரபாகரன், திரு. சந்ததியார், திரு. சுந்தரம், திரு. ஐயர், திரு. ராகவன், திரு. குமணன் அன்று பத்துக்கும் மேற்பட்டவர்கள்.
நானோ, சந்ததியார் அவர்களோ விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனாலும் பிரபாகரன் அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் 1976ஆம் ஆண்டு முதல் நட்பு இருந்தது. நாங்கள் மாணவர் பேரவையிலிருந்து ஒன்றாக செயற்பட ஆரம்பித்தோம். அவைபற்றி பின்னர் விளக்குகிறேன்.
இப்படியாக இவர்கள் சென்னை வந்து சேர்ந்தபின்னர் இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் தங்க வேண்டிவந்தது.
இவ்வாறு ஓரிடத்தில் தங்கியிருந்த இவர்கள் ஒன்றகச் சமைத்து உண்பது வழக்கம். உமா மகேஸ்வரன் அவர்கள் வெளியில் சென்று வரும் போது அவருக்கென தனியாக உணவு எடுத்துவைத்து பரிமாறுவது ஊர்மிளா ஆற்றிய பணிகளில் ஒன்றாக இருந்தது வந்தது.
ஊர்மிளா அவர்களும், உமா மகேஸ்வரன் அவர்களும் கொழும்பு இளைஞர் பேரவையில் முக்கிய உறுப்பினர்களாக இருந்துவந்னர். இதன்பின்னர்தான் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர். பொத்துவில் எம்.பி.யைச் சுட்ட வழக்கில் இவர்கள் தேடப்பட்டனர். அதனால் ஊர்மிளா அவர்களும் இந்தியா வந்து மறைந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஊர்மிளா அவர்களும் இதே வீட்டில்தான் தங்கியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு புலிகள் இயக்கத்தின் சட்டதிட்டங்களுக்கு முரணானது என்று பிரபாகரன் அவர்கள் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் உமா அவர்களுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. சந்ததியார் அவர்கள் உமா மகேஸ்வரன் அவர்களை ஆதரித்தார்.
காதல் விவகாரத்தில் அவர்களுக்குள் நிரந்தர முறிவே ஏற்பட்டது. பிரபாகரன் அவர்கள் உமா அவர்களைச் சுடவேண்டும் என்று குழுக் கூட்டத்தில் அடித்து சொன்னாராம். இதன் மூலம் உமா மகேஸ்வரன் அவர்கள், சகோதரி ஊர்மிளா அவர்கள், மற்றும் சுந்தரம் அவர்கள் ஆகியோர் ஒரு 4.5 றிவோல்வருடன் தனியாகச் சென்றுவிட்டனர்.
சந்ததியார் அவர்கள் இலங்கைக்கு வருவதற்குத் தீர்மானித்து என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று பிரபாகரன் அவர்களிடத்துக் கேட்டுள்ளார். அவரும் அவரை படகில் இலங்கைக்கு அனுப்பிவைத்தார்.
1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சந்ததியார் அவர்கள் வவுனியாவுக்கு வந்தார். நான் அப்போது கல்மேடு (வவுனியா) குடியேற்றுப்பண்ணையில் இருந்தேன். இந்தியாவில் நடந்த பிரச்சனைகளைச் சொன்னார். அவர் சொன்னவற்றை தான் மேலே நான் எழுதியுள்ளேன்.
நாங்கள் புதிய பெயரில் இயக்கம் ஆரம்பிக்கவேண்டும். பிரபாகரன் அவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது. எனவே நீங்கள் இந்தியா சென்று உமா அவர்களைப் பார்த்து இலங்கைக்கு வரச் சொன்னால் அவர் வருவார். நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.
நான் ஏன் இந்தியா செல்ல வேண்டும், உங்களுக்குத் தொடர்பு இருந்தால் தொலைபேசியில் அழைக்கலாமே என்றேன். இதற்கு பதிலளித்த சந்ததியார் அவர்கள் - இலங்கையில் அவருக்குப் பாதுகாப்பு இல்லை. நீங்கள் நேரில் சென்று அவருடன் கதைத்தால் அவர் வருவார். உங்களுடன் நல்ல போராளிகள் இருக்கின்றனர் என்பது அவருக்குத் தெரியும். நான் சொல்வதை விட நீங்கள் கதைத்தால் நம்பிக்கையும் பலமும் அவருக்கு கிடைக்கும். எனவே நீங்கள் சென்று வருவது எங்கள் அனைவருக்கும் நல்லது என்றார்.
சரி நான் சென்று வருகிறேன் என்று கூறி புறப்படத் தயாரானேன். சந்ததியார் வந்த சில நாட்களில் ஊர்மிளா அவர்களும் படகில் இலங்கை வந்தார். சந்ததியார் அவர்கள் அவரை அழைத்து வந்து கோயில் குளம் குடியேற்ற முகாமில் தங்க வைத்தார்.
நான் மே மாத இறுதியில் தமிழ் நாட்டுக்குப் புறப்பட்டேன். தலைமன்னார் வந்ததும் வவுனியாவுக்குத் தொடர்புகொண்டு பயணத்தை உறுதிப்படுத்தி தெரிவித்தேன். அப்போது சந்ததியார் அவர்கள் சொன்னார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகோதரி ஊர்மிளா அவர்கள் இறந்துவிட்டார். நீங்கள் திரும்பி வரத்தேவையில்லை, நாம் பார்த்துக்கொள்கிறோம், உமா அவர்களிடமும் இதனை கூறவும், நாமும் முயற்சிக்கிறோம் என்றார்.
நான் தலைமன்னாரிலிருந்து கப்பலில் புறப்பட்டேன், ராமேஸ்வரம் வழியாக நேரே சென்னை வந்தேன். சந்ததியார் அவர்கள் என்னிடம் ஓர் முகவரியைத் தந்திருந்தார். லோகநாதன் என்ற பெயருடன் மண்ணடியில் மத்திய உணவு மட்டும் வழங்கும் ஒரு உணவு விடுதியின் மாடியில் உமா அவர்கள் தங்கியிருப்பதாகச் சொன்னார்.
நான் புரசைவாக்கம் சட்டக்கல்லூரியில் எதிரில் இருக்கும் பவர் மேன்சன் என்ற கட்டடத்தில் தங்கியிருந்த நண்பர் திரு. சர்குனதாஸ் அவர்கள் தங்கியிருந்த அறையில் தங்கினேன். நண்பர் சர்குணம் அவர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர். என்னுடன் திரு. சூரியகுமார் என்பவரும் வந்திருந்தார். இவர் 1973 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை கண்டி போகம்பரை சிறையில் என்னுடன் இருந்தவர். மாணவர் பேரவையில் நாம் ஒன்றாக இயங்கிய போது கைது செய்யப்பட்ட 42 இளைஞர்களில் இவரும் ஒருவர். இவரைப்பற்றி வரலாற்றுக் குறிப்பில் பார்க்கலாம்.
இங்கிரித்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு, நான் சந்ததியார் கொடுத்த முகவரிக்குச் சென்றேன். அந்த முகவரியில் உமா அவர்கள் இல்லை. அங்கு உணவு விடுதி உரிமையாளர் இருந்தார். அவரிடத்தில் சிறிய துண்டுக் காகிதத்தில் நான் தங்கியிருக்கும் முகவரியை எழுதிக்கொடுத்து, என்னை வந்து சந்திக்கும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன்.
அன்று மாலை 7 மணியளவில் பவர்மென்சன் அறைக்கு வந்த உமா அவர்கள் அறைக்கதவை தட்டினார். நண்பர் சர்குனதாஸ் அவர்கள் கதவைத் திறந்து பார்த்துவிட்டு உங்களைத் தேடி ஒருவர் வந்துள்ளார் என்றார். எட்டிப்பார்த்தேன், குள்ளமாக ஒருவர் நின்றிருந்தார். நீங்கள் யார் என்றேன், நான்தான் உமா என்றார். ஏனெனில் நாங்கள் இதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை.
நான் நாவலர் பண்ணையை (நெடுங்கேணி) பொறுப்பெடுத்து நடத்தும் போது சில கிலோமீட்டர் தொலைவிலிருந்து கெண்ற் பார்மில் இவரும் திரு. பேபி அவர்களும் தங்கியிருந்தனர். ஆனாலும் நான் இவரைப் பார்க்கவில்லை. பார்க்கவும் முயற்சித்தது கிடையாது.
தொடரும்...
No comments:
Post a Comment