1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 6
கதவைத் திறந்த அந்த மிருகங்களில் ஒருவன் கோடாலி ஒன்றினால் சிறிக்குமார் அவர்களின் கழுத்தினில் ஓங்கி கொத்தினான். அந்த வேளையும் சிறிக்குமார் அவர்கள் அந்தக் கோடாலியைத் தடுக்கவில்லை. கைகளைக் கட்டியபடியே சாய்ந்தார். சாய்ந்தவர் மீது மீண்டும் பலபேர் சேர்ந்து கோடாலியால் கொத்தினார். கட்டைகளால் அடித்தனர். இரும்புக் கம்பிகளால் குத்தினர். அந்தக் கொடூரம் இன்றும் என் கண்களில் நீரைவார்க்கும். அந்தக் கொடுமையின் நேரடிக்காட்சிகள் எனது பல நாள் உறக்கத்தைக் நான் இழந்துள்ளேன்.
இப்போது எங்கள் அறை முன்பு வருவதற்குப் பயந்தனர். சுவர் ஓரமாக மறைந்து நின்று கதவின் பூட்டை கோடாலியால் கொத்தினர். அவர்களைக் குத்துவதற்கு தடியினை கம்பிகளுனூடே செலுத்தும்போது அவர்கள் மரக்கட்டைகளினாலும், இரும்புக் கம்பிகளினாலும் தடியை அடித்தனர். இதனால் எங்களிடமிருந்த அந்த ஆயுதமும் முறிந்தது. முறிந்து இப்போது சிறியதாகிவிட்டது.
இந்த நிலையில். எமது சக போராளிகளான திரு.மாணிக்கம்தாசன், திரு. பாபுஜி, திரு. பாரூக் மற்றும் திரு. அழகிரி ஆகியோர் இருந்த அறைக்கதவைத் திறந்துவிட்டனர் அந்த சிங்கள வெறியர்கள். உள்ளே நுழைந்தவனைத் தாக்கி, அவனிடமிருந்த விறகு கட்டை ஒன்றினைப் பறித்துவிட்டார் போராளி மாணிக்கம்தாசன் அவர்கள். அதன் மூலம் உள்ளே நுழைய முற்பட்டவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர் அவர்கள்.
இதே போன்று திரு. தேவானந்தன், (அப்போதைய டக்ளஸ் அவர்களின் பெயர் வெறும் தேவானந்தன் மட்டுமே. சிறையிலிருந்து மீண்ட பின்னர்தான், “டக்கிளஸ்” என்ற ஆங்கிலப் பெயரை தேவானந்தன் என்ற பெயருக்கு முன்னால் இணைத்துக்கொண்டார்.)திரு. மகேஸ்வரன், திரு. சிவசுப்பிரமணியம் ஆகியோர் ஓர் அறையில் இருந்தனர். இந்த அறையினுள் நுழைய முற்பட்ட வெறியர்களை வாளிகளினாலும், காடையரிடமிருந்து பறித்த இரும்புக் கம்பி மற்றும் மரக்கட்டைகளாலும் திருப்பித் தாக்கி அறைக்கு வெளியே விரட்டியடித்தனர்.
ஏனைய ஐந்து அறைகளிலிருந்தவர்களை அவர்களது கதவுகளைச் சாவி கொண்டு திறந்து எந்தவித எதிர்ப்புமின்றி அடித்தும், வெட்டியும், குத்தியும் கொன்று அவர்களது உடல்களை இரத்தம் வடிய வடிய இழுத்துச் சென்றனர். எங்களிடம் அடிவாங்கிய பலர் வெளியே ஓடிச்சென்று, “கொட்டி மரணவா” என்று சிங்களத்தில் சத்தமிட்டனர்.
அறையின் முன்பக்கம் எமது எதிர்த் தாக்குதலினால், வரமுடியாமல் இருந்ததால் சிறையின் வெளியே ஓடிய பலர் எங்கள் அறையின் பின்பக்கத்துச் சுவரை இடிக்க ஆரம்பித்தனர். எங்களது அறையைத் தாண்டி இடிபாடுகளுடன் குளியலறைப் பக்கம் பலர் ஒதுங்கினர். அவர்கள் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். எங்கள் அறை அருகாமையில் இருந்ததினால் நாங்கள் அவர்களைத் தடியினாலும் அவர்களிடமிருந்து பறித்த இரும்புக் கம்பியாலும் குத்தினோம்.
மறு கரையால் சென்ற திரு. பாபுஜி, திரு. மாணிக்கம் தாசன் போன்றோர் கட்டையால் அடித்தனர். இதனால், குளியல் அறையில் சிக்கியவர்கள் “கொட்டி மரணவா” (புலிகள் கொல்கிறார்கள்) என்று கத்தினர்.
நாம் கண்களிலும் வயிற்றிலும் தடியால் குத்தப்பட்டவர்கள் ஓடிச் சென்று சிறை அதிகாரிகளிடம் கொட்டி மரணவா என்று முறையிட்டதனைத் தொடர்ந்து இராணுவத்தை சிறை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
உண்மையில், திரு. குட்டிமணி மற்றும் தோழர்களைக் கொல்லும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் இருந்தனர். இதனால் அவர்களுக்கு தாக்கி கொலை செய்வது சுலபமாக இருந்தது. ஆனால் இங்கே நாம் மூன்று மூன்று பேர் அறைகளில் இருந்ததை அந்தச் சிங்களவர் எதிர்பார்க்கவில்லை.
நாமும் மூன்று பேர் வீதம் அறைகளில் இருந்தபடியால்தான் எதிர்த்துத் தாக்கி தப்பிக்க முடிந்தது. தனித் தனி அறை என்றால் நாமும் இறந்து 36 வருடங்கள் ஆகியிருக்கும்.
இப்படி நாம் தாக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கூட்டம் எங்கள் பகுதியின் மேல் மாடிக்கு ஓடிச் சென்றனர். அங்கே வயது முதிர்ந்தவர்கள் மண்டபம் போன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தனர். சாவியுடன் சென்ற அந்த மிருகங்கள் அந்தக் கதவையும் திறந்துவிட்டனர். எதிர்பார்த்திருந்த எம்மவர்கள், மேசை நாற்காலிகளின் கால்களை உடைத்து அவற்றினைக் கைகளில் ஏந்தி உள்ளே நுழைய முற்பட்டவர்களைத் தாக்கினர்.
முதியவர்களின் மேல் மாடியில், தாக்குதலுக்கு உள்ளான சேபால என்ற சிங்கள நபர் தலைகீழாக வந்து எமது தரைத்தளத்து வாசலில் விழுந்தார். இவர் இத்தாலிய நாட்டு விமானத்தைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எங்கள் பகுதித் தாக்குதலுக்கு இந்த சேபாலதான் முன்னின்று செயற்பட்டு, சிறை அதிகாரியிடம் (எஸ்.பி.) நற்பெயர் பெற்றவர்.
சிங்கள வெறியர்களால், மாடியில் இருந்தவர்களது தாக்குதலுக்குப் பயந்து உள்ளே யாரும் செல்லவில்லை. அதேவேளை, டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் வாசலருகே வந்து “ஏன் எங்களைத் தாக்குகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டிருந்த போதே அவரது கையைப் பிடித்து வெளியே இழுத்து, அவரது தலையில் தாக்கிவிட்டனர். மேல் தளத்தில் இருந்தவரை அப்படியே இழுத்து வந்து தரைத் தளத்தின் வாசலில் போட்டு வெட்டியும், குத்தியும் தங்கள் வெறியைத் தணித்துக் கொண்டனர்.
கீழ்த் தளத்தில் எங்களது அறைகளைத் தவிர உயிர் தப்பிய ஏணைய இரண்டு அறைகளும் சிங்களவர்களால் திறக்கப்பட்டுவிட்டன. அதே வேளை, எமது சக போராளிகளின் மரணத் தாக்குதலினால், ஒரு சிங்களவரால் உள்ளே நுழைய முடியவில்லை. இனிமேலும் உள்ளே நுழைந்தால், உள்ளே இருப்பவர்கள் அடித்தே கொன்று விடுவார்கள் என்று தெரிந்ததும் கீழ் தளத்தை விட்டு வெளியேறவே முயற்சித்தனர் அந்த வெறியர்கள்.
ஆயினும் குளியலறையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் வெளியே வர முடியாததை அறிந்த, சிங்களக் காடையர்கள் வெளியே சென்று மிண்டும் கத்திக் கதறினர். பிரதான வாயில் வழியாக வந்த இராணுத்தினரை அழைத்துக்கொண்டு எங்கள் கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தனர். வெளியில் இருந்து கொண்டே கண்ணீர் புகையை வீசினர் உள்ளே. ஆறு குண்டுகள் உள்ளே வந்து விழுந்தன. அதே வேளை, குளியலறையிலிருந்தவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. இந்த வேளை பார்த்து, திரு. மாணிக்கம் தாசன் அவர்கள், சிங்களவர்களிடம் இருந்து பறித்த ஓர் கட்டையுடன் எனது அறைக்கு முன்பு வந்து அண்ணே! குளியலறையில் அகப்பட்டவர்களை அடிப்போமா என்று கேட்டார். எனது அறை திறக்கமுடியாத நிலையிலிருந்தது. வேண்டாம் உடனே திரும்ப அவரது அறைக்குள் போகும்படி கூறி அனுப்பிவைத்தேன். இதற்குள் கண்ணீர் புகை அறை முழுவதுமாக பரவி விட்டது.
ஏறக்குறைய கட்டிடம் முழுவதும் புகை முட்டியதும் என்னால் மூச்சு விடுவதற்கே முடியவில்லை. நான் ஏற்கனவே, பலவீனமான உடல்நிலையில் இருந்ததால் மூச்சுநின்று விடுமளவுக்கு புகை தாக்கியது. கண்களை மூடிக்கொண்டு, மூளையில் கிடந்த துணி ஒன்றினை தடவி எடுத்து கீழே ஈரமாக இருந்த தண்ணீரில் பிரட்டி உறுட்டி எடுத்து மூக்கையும் முகத்தையும் மூடினேன். உடனே எனது சிரசில் இரத்தவாடை அடித்தது. அப்போதுதான் உணர்ந்தேன் கீழே ஈரமாக இருந்தது எதிர் அறையில் இருந்த எமது தோழர்களது இரத்தம்தான் என்று. நாம் ஊற்றிய குழம்புகலந்த தண்ணீர் எமது அறைக்குள்ளும் புகுந்திருந்தது. அந்தத் துணியை வீசிவிட்டு, எனது சறத்தினால் மீண்டும் முகத்தை மூடிக்கொண்டு குப்புறபடுத்துவிட்டேன் அந்த இரத்தத்தினுள். குறைந்தது 6 முதல் 7 நிமிடங்களின் பின்னர் புகை குறைந்ததும்தான் எழுந்திருக்கமுடிந்தது.
இதற்குள் இராணுவ சிப்பாய்கள் உள்ளே வந்து சிங்களத்தில், “யார் உள்ளே இருக்கிறீர்கள்” என்று கூறிக்கொண்டு, குளியலறைக்குள் இருந்தவர்களை அழைத்துச் சென்றனர். அவர்களை வெளியே அனுப்பிவிட்டு. எங்கள் அறைகளை நோக்கி யார் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கேட்டுவந்தனர். திரு. மாணிக்கம்தாசன அவர்கள், திரு. பாபுஜி அவர்கள், திரு. அழகிரி அவர்கள், திரு. பாரூக் அவர்கள், திரு. மகேஸ்வரன் அவர்கள், திரு.சுப்பிரமணியம் அவர்கள், திரு. தேவானந்தன் அவர்கள் ஆகியோர் வெளியே வந்தனர்.
எங்களது அறையைத் திறக்கமுடியவில்லை. எனவே, எங்களது அறையை அப்படியே விட்டுவிட்டு ஏனையோரை வெளியில் வரும்படி கூறினர் இராணுவத்தினர். திரு. மாணிக்கம் தாசன் உள்பட இரு அறைகளில் உள்ள அனைவரும் வெளியில் வரமுடியாது, எங்களது அறையைத் திறந்து எங்களுடன்தான் வெளியே வருவோம் என்றனர். எங்களது அறையின் பூட்டைத் திறக்கவிடாதபடியால், வெறியர்கள் மறைந்து நின்று கோடாலியால் கொத்தியதில் பூட்டும் அதன் கொழுக்கியும் சேர்ந்து பூட்டு சட்டத்தின் துவாரத்தை அடைத்துக்கொண்டது. இப்போது எப்படித் திறப்பது என்றே தெரியவில்லை. இரும்பறுக்கம் வாள் கொண்டு வெட்டவேண்டும், அல்லது வெறியர்கள் செய்தது போன்று கோடாலியால் கொத்தி உடைக்க வேண்டும்.
இந்த வேளையில், இரண்டு மூன்று சிங்களக்கைதிகள் இராணுவத்துடன் உதவிக்கு வந்தனர். அவர்கள் ஓடிச்சென்று வெளியிலிருந்து இரண்டு கோடாலிகளை எடுத்து வந்தனர். திரு. மாணிக்கம் தாசன் அவர்களும் மற்றும் இரண்டு சிங்களக் கைதிகளும் சேர்ந்து எங்கள் கதவின் பூட்டை கோடாலியால் பல தடவை கொத்தி இறுதியில் உடைத்தனர். திரு. சிறிதரன் அவர்களும், திரு. ஜெகதாஸ் அவர்களும் மற்றும் நானும் வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும், நிலத்தைப் பார்த்தேன். எம்மவர் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத அளவில் இரத்தத்தில் தோய்ந்து போய்க் கிடந்தனர். நான் ஊன்று தடியில்லாமல் சிறைபட்ட அந்த இரண்டு ஆண்டுகளும் நடந்ததில்லை. இப்போது எனது ஊன்றுதடி உடைந்து வெறும் ஒன்றரை அடி நீளத்தில்தான் இருந்தது. நான் நடந்து வெளியில் வருவதைப் பார்த்தால் சிறை அதிகாரிகள் சந்தேகப்படுவார்கள், அடுத்தது எனது சிறை வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடவில்லை. எனவே, ஊன்று தடியில்லாமல் என்னால் நடக்கமுடியாது என்பதை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். அதனால், என்னை முதுகில் சுமந்து கொண்டு கட்டடத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்லும்படி சிறிதரன் அவர்களிடம் கூறினேன். அவரும் சரி என்று என்னை முதுகில் சுமந்துகொண்டு கட்டடத்தைவிட்டு வாசலுக்கு வந்தார்.
வெளியில் வந்து பார்த்ததும், ஐந்து ஆறு உடல்கள் கிடந்தன. மாடியில் இருப்பவர்கள் கீழே இறக்கப்பட்டு ஓரமாக சிலரை அமர்த்தியிருந்தனர். இராணுவ வாகனம் ஒன்று பின்புறம் நோக்கி உள்ளே வந்தது. அதனுள் ஏறும்படி உத்தரவிட்டனர் இராணுவத்தினர். எம்மவரிடம் சொன்னேன் யாரும் வாகனத்தில் ஏறவேண்டாம் காயப்பட்டவர்கள் யாராவது உயிருடன் இருப்பார்கள் அவர்களை கண்டு பிடித்து அவர்களையும் ஏற்றிக்கொண்டு போவோம் என்றேன். இராணுவத்தினரை திரும்பிகூடப்பார்க்காது, ஒவ்வொருவராக உயிர் இருக்கிறதா என்று பார்க்கும்படி கூறினேன். திரு. பாபுஜி, திரு. மாணிக்கம்தாசன். திரு. சிறிதரன் போன்றோர் ஓடி ஓடி ஒவ்வொருவராகப் பார்த்தனர்.
தொடரும்...
No comments:
Post a Comment