1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 14
முதன்மை ஜெயிலர் மற்றம் சில அலுவலர்களது இருப்பிடம் சிறையின் வாசலிலிருந்து சுமார் ஐம்பது மீற்றர் தொலைவில் இருந்தன. இரவினில் நாம் தப்பிப்பதாக இருந்தால் முதன்மை ஜெயிலரைப் பிடித்துவந்துதான் ஆயுத அறையைத் திறந்து அவற்றை எடுக்க வேண்டும். பகலில் என்றால் சிறையினுள் உள்ள வேளை அவரைப்பிடித்தால் ஆயுதங்களையும் எடுத்துச் செல்லலாம். இதுபற்றியும் கணக்கில் எடுக்கப்பட்டது.
நாம் தப்பித்துச் செல்வதற்கான வாகனங்கள் பற்றி ஆராய்கையில், சிறையின் இடதுபுறத்தில் 200 மீற்றர் தொலைவில் மட்டக்களப்பு மருத்துவமனை உளளது. அங்கே, இரண்டு ஆன்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன என்ற தகவல் கிடைத்தது. எனவே, அந்த வாகனங்கள் பற்றி தகவல் சேகரிக்கும்படி வழமையான மின்கம்பத் தோழருக்கு கடிதம் மூலம் கல்லுக்கட்டி செய்தி அனுப்பினோம். தகவல் வந்தது. அந்த வாகனத்தில் ஒரு வாகனம் மட்டுமே ஓடக்கூடிய நிலையில் உள்ளது என்றும், இரவினில் அந்த வாகனத்தின் திறப்பு அங்கே இருக்கும், பலகையில் மாட்டப்பட்டிருக்கும். சில வேலைகளில் அதனுடைய ஓட்டுனர் தனது சட்டைப்பையிலும் வைத்திருப்பார் என்பது தகவல்.
அந்த ஒரு ஆன்புலன்சில் நாம் அனைவரும் தப்பிச் செல்லமுடியாது. ஆனாலும் மாற்றுத் தேவைக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதேவேளை ஆன்ம்புலன்சை மருத்துவமனையில் இருந்து எடுத்தால் அடுத்த கணமே காவல்துறைக்குத் தகவல் தெரிந்துவிடும். தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்தாலும் நாம் தப்பிச் சென்று அதனை எடுத்துக் கொண்டு செல்லலாமே தவிர, வெளியில் இருப்பவர்களிடம் கூறி அவர்கள் அதனை எடுத்துவைத்திருந்து சிறைக்குக் கொண்டு வருவது முடியாத விடயம். காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. எங்களது தோழர்களால் வாகனங்கள் கொண்டுவர முடியவில்லையென்றால், அந்த ஆன்புலன்சைப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்து வைத்திருந்தோம்.
படகுகள் தயார் செய்யப்பட்டு விட்டன. மகேஸ்வரன் அவர்கள் தனது தொடர்பு வழியாக ஒரு படகு தயார் செய்து, அந்தப் படகுக்கு முன்பணமும் கொடுத்துவைத்திருந்தார். இப்போது அவர் பின்பகுதி ஆற்றுவழியாக செல்வது என்று முடிவை மாற்றிக்கொண்டதால் அந்தப்படகை என்னையே எடுத்துக்கொள்ளும்படி கூறினார். மீதிக் காசையும் செலுத்தி எங்களது தேவைக்காக நிறுத்திவைத்திருந்தோம்.
மட்டக்களப்பில் காந்தியம் கிளை அமைத்தபோது அங்கே ஒரு வாகனம் வாங்கிக்கொடுக்கப்பட்டது. அதன் விபரங்களைச் சேகரிக்கும்படி கூறினோம். மட்டக்களப்பில் காந்தியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் திரு. இராஜசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்ட பின் மட்டக்களப்பு காந்தியம் செயற்படாமல் இருந்தது. எனவே. அந்த வாகனத்தைத் தேடும்படி அறிவுறுத்தினோம். இந்தத் தகவலையும் கல்லில் கட்டி கம்பத்துக்கு வீசினோம்.
மறுநாளே தகவல் வந்தது. நாங்கள் மதிலின் மேலால் கல்லில் கட்டி அனுப்பும் செய்திகளுக்கு மறுநாள் எங்கள் தோழர்களைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள் மூலமாக பதில்கள் வந்து சேரும். ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தோழர்கள் கூட்டம் போட்டு உள்ளே வந்தது போன்று எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கூட்டம் நடத்தி, அந்தவிடயம் காவல்துறைக்குத் தெரியவர அவர்களைப் பிடித்துவந்து எங்கள் பகுதியின் கீழ்த் தளத்தில் புகுத்தியிருந்தார்கள் காவல்துறையினர். அவர்களில் முக்கியமானவர் திரு. தமிழச்செல்வன் அவர்கள். இவர் கல்முனைப்பகுதியைச் சேர்ந்தவர். தீவிர தமிழுணர்வில் இருந்தார். இவரது உறவினர் மூலமே வெளியில் இருந்த தகவல்கள் எம்மை வந்தடையும்.
காந்தியம் வான் மட்டக்களப்பில் இருக்கும் வாகனம் பழுதுபார்க்கும் கடையில் (காராஜ்) நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வாகனம் ஓடக்கூடிய நிலையில் இல்லை என்றும் விபரம் கிடைத்தது. அந்த வாகனத்தை உடனடியாக ஓடக்கூடிய நிலைக்குத் திருத்தம் செய்து வைக்கும்படி மீண்டும் தகவல் அனுப்பினோம். அந்த வாகனம் பழுது பார்க்கும் கடையின் (காராஜ்) சொந்தக்காரர் திரு. மாசிலாமணி அவர்கள். இவரது கராஜில்தான் எங்கள் பகுதிக்கான பூட்டின் திறப்பும், இராமநாதன் அவர்கள் தங்கியிருந்த மருத்துவமனை திறப்பும் தயாரிக்கும் வேலைகள் நடைபெற்றுவந்தன. அதே வேலைத் தளத்தில் காந்தியம் வானும் நின்றது எமக்குப் பேருதவியாக இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தோழர்களும் எம்முடனேயே தப்பித்து வருவதால் அவர்களையும் வாகனத்தில் ஏற்றுவதற்கு இந்த ஒரு வான் போதாது எனவே. இன்னுமொரு வான் தேவை. எமக்குத் தெரிந்த யாரிடமும் வான்வடிவிலான வாகனம் இல்லை. எனவே, தூர இடத்திலிருந்து தெருவில் செல்லும் வாகனம் ஒன்றினைக் கடத்திவந்தால்தான் நாம் அனைவரையும் அழைத்துச் செல்லலாம். எனவே, இது சாத்தியமா என்று வெளியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. காரணம் நாம் சிறையைக் கைப்பற்றும் நேரமும், அப்படிக் கடத்திவரப்படும் வாகனம் சிறையை வந்தடையும் நேரமும் ஒரு சேரச் சரியாக இருக்க வேண்டும். சற்று முன்னராகவே அதனைப் பறித்தோ கடத்தியோ வந்துவிட்டால் புளியந்தீவுப் பாலத்தில் இருக்கும் காவல்துறையினர் உசார் அடைந்துவிடுவார்கள். அத்துடன் அவர்கள் அந்த வானை தடுத்து நிறுத்தி கைதும் செய்து விடுவார்கள். விபரமாகத் தெரிவித்தோம். எதிர்நோக்கும் சிக்கல்கள் கணக்கில் எடுக்கப்பட்டது.
நாங்கள் கொடுத்தனுப்பிய இரண்டு சாவிகளுக்கான தயாரிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. ஒரு திறப்பு நண்பர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மூலம் உள்ளே வந்து சேர்ந்தது. , அது, திரு. இராமநாதன் அவர்களும் மற்றும் திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்களும் இருக்கும் பகுதியைத் திறக்கும் திறப்பாகும்.. எங்கள் பகுதிக்கான திறப்பு வந்து சேரவில்லை. நண்பர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் அடிக்கடி எங்கள் பகுதிக்கு வந்து செல்வதை கவணித்த சக சிறை அலுவலர் ஒருவர் ஜெயிலரிடத்து தகவல் கொடுத்துள்ளார். ஜெயிலருக்கு சந்தேகம் வலுத்தது. இந்தத் திறப்புக் கொடுத்த மறுதினத்திலிருந்து நண்பர் கிருஸ்ணமூர்த்தி அவர்களை வெளிகடமைகளுக்கு மாற்றப்படடுவிட்டார். கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது. பிற சிறைகளுக்கு கைதிகளை அழைத்துச் செல்வது போன்ற வேலைகளுக்குப் பணிமாற்றப்பட்டார்.
எங்கள் பகுதிக்கான இரண்டாவது திறப்பு உள்ளே வந்துசேர்வதில் சிரமம் ஏற்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களுக்கு ஓர் சிறை அலுவலர் உதவி வந்தார். அவரது பெயரை இப்போது மறந்துவிட்டேன். அவரிடத்துக் கொடுத்து அனுப்புமாறு தெரிவித்தோம். அவரும் அடிக்கடி எங்கள் பகுதிக்கு வந்து செல்ல இயலாத நிலை இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்ததும் எடுத்துவந்து ஒப்படைத்துவிட்டார்.
எங்கள் பகுதி காவலாளி கீழ்ப்பகுதிக்குச் சென்ற நேரம் பார்த்து கதவிலிருந்த ஆமைப் பூட்டில் செருகித் திறந்துபார்த்தோம். பூட்டு திறக்கவில்லை. திறப்புச் செய்ததில் தவறு இருந்தது. எனவே, கல்லில் கட்டி அந்தத் திறப்பில் எந்த இடத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று குறித்து வழக்கம் போல் பத்து முப்பது மணிக்கு கம்பத்தை நோக்கி வீசி அனுப்பினோம். திருத்தம் செய்யப்பட்டு உள்ளே அனுப்பி வைக்க யாரும் கிடைக்கவில்லை.
தமிழ்ச் செல்வன் அவர்களைப் பார்ப்பதற்கு வந்த உறவினரிடம் நாங்கள் கால்களில் அணியும் பாட்டா செருப்பு ஒரு சோடி கொடுத்தனுப்பியிருந்தனர். அந்த ரப்பர் செருப்பின் நடுவில் அந்தத் திறப்பு செருகப்பட்டு மறைத்து மூடப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் எங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்தது. இப்போது அடுத்த சந்திப்புக்கு, ஏற்கனவே சந்தித்த அனைவரும் அழைக்கப்பட்டனர். நாம் ஒவ்வொருவரும் செய்து முடித்திருக்கும் வேலைகள் பற்றி அறிய ஆராயப்பட்டது. அத்துடன் சிறையை எப்படி எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றும் ஆராயப்பட்டு பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்தச் சந்திப்பின் போது எமது தோழர்கள் சில குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். அது என்னவென்றால்,
நாங்கள் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்க இருப்பதாக தகவல் வெளியில் கசிந்துள்ளது. சில ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்(கீழ்த்தளத்தில் இருந்தவர்கள்) தங்களுக்குத் தேவையான பொருட்கள் தவிர ஏனையவற்றை தங்கள் உறவினர்களிடத்து ஒப்படைத்து அவற்றைத் தங்களது வீடுகளில் சேர்க்கும்படி கூறியுள்ளனர். ஏனென்றால் நாங்கள் இங்கிருந்து தப்பி ஓடப்போகிறோம் எனவே, இந்தப் பொருட்களை நாம் எடுத்துச் செல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர். இவர்கள் மூலம் அவரவர் ஊர்களுக்குத் தகவல் போய் மீண்டும் இந்தத் தகவல்கள் சிறை அதிகாரிகளுக்கே வந்து சேர்ந்துள்ளன எனவே, உடனடியாக இவற்றுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
உண்மையில் இந்தத் தகவல் மட்டக்களப்பில் பேசப்படுவதாக சிறை அதிகாரிகளே தெரிவித்தனர். “இராணுவம் உள்ளே புகுந்து சுடப்போகின்றனர்” என்ற கதைபோன்ற கதையே இதுவும் என்று கூறி சிறை அதிகாரிகளை திருப்திப்படுத்தினோம். எனவே, எமது தோழர்கள் வைத்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தது. இருந்தபோதும் அதனைப் பெரிதுப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் கண்டிப்பாக அவரவர் சார்ந்த நபர்களுடன் கதைத்து இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
கூட்டத்தில் அவரவர் செய்து முடித்த பணிகளும் செய்ய வேண்டியவை பற்றியும் பேசப்பட்டது. அதன்படி நாம் கடலில் பயணம் செல்வதற்கான படகுகள் நான்கு தயார் செய்து விட்டோம். சிறையிலிருந்து கடற்கரைவரை செல்வதற்கு ஒரு வாகனம் உள்ளது. அடுத்த வாகனத்தைத் தயார் செய்ய வேண்டும். இரண்டு திறப்புகள் செய்தாகிவிட்டது. கீழ் தளத்தில் எட்டு அறைகள் இருந்தன. அவற்றுக்கும் ஆமைப் பூட்டுகள் போடப்பட்டிருந்தன. இவற்றுக்கும் தனித் தனித் திறப்புகள் இருந்தன.
கீழே இருந்த அறைகளில் திரு. வரதராஜப் பெருமாள், திரு. தங்க மகேந்திரன், திரு. ஜெயக்கொடி மற்றும் திரு. பரமதேவா போன்றோர் இருந்தனர். பரமதேவா அவர்கள் வாமதேவன் அவர்களுடன் கொழும்பு மகசீன் சிறையிலிருந்து வந்தவர். செங்கலடி வங்கிக் கொள்ளை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இவர் யாருடனும் சாராது இருந்து இறுதியில் பின்பக்க வாயில்வழியாக திரு. நித்தியானந்தன், திரு. ஜெயகுல ராஜா ஆகியோருடன் தப்பிச் செல்வதாகக் கூறினார். இவர் வெளியிலிருந்து செயற்படும் எங்கள் இயக்கத் தோழர், திரு. வாசுதேவா அவர்களின் உடன்பிறந்தவர் ஆவார்.
கீழ்பகுதிக்கான எட்டுத் திறப்புகளையும் தயார் செய்வது சாத்தியமானதல்ல. எனவே. கதவின் கம்பிகளை வாள்கொண்டு அறுத்துத் தயார் நிலையில் வைத்திருப்பதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தோம். எனவே, இரும்பறுக்கும் வாளினை வெளியிலிருந்து எடுத்து, அடுத்த ஞாயிறன்று ஒரே சமயத்தில் ஒரு கதவின் இரண்டு கம்பிகள் வீதம் 16 கம்பிகளை அறுத்துத் தயார் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
வெளியில் இருந்து வாள்கள் எடுத்துவரும் பொறுப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் திரு. தேவானந்தன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் கீழ் தளத்தில் அதிகம்பேர் இருந்தனர்.
ஒரே நேரத்தில் வாளால் வெட்டுவதென்றால் சத்தம் அதிகமாக இருக்கும். அதே நேரம் வாசலில் காவலாளியும் நின்று கொண்டிருப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் சில காவலாளிகள் மது அருந்திவிட்டும் உள்ளே கடமைக்கு வருவதைக் கவனித்திருந்தோம். இப்படி மது அருந்திவிட்டு வருவது பல சிறைகளிலும் உள்ள பழக்கமாகும். சிறையின் காவலாளிகளும் ஏறக்குறைய ஆயுள்கைதிகள் போன்றவர்கள்தான். ஒருநாளின் 12மணி நேரத்தை அவர்கள் சிறையினுள் கழிக்கின்றனர். உறக்கம் போக வெறும் நான்கு மணிநேரத்தைத்தான் வெளியில் செலவிடுகின்றனர்.
எனவே, இவர்கள் குடித்துவிட்டு வருவதை நிர்வாகம் கண்டும் காணமலும் இருக்கப் பழகிக்கொண்டது. இப்படிக் குடித்துவிட்டு வருபவர்கள்தான் தமக்கு வேண்டாத கைதிகளைப் போட்டுத் தாக்குவதும் வழக்கமாக இருந்துவருகிறது. சில சமயங்களில் மட்டும் இந்தக் குடிகாரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாங்கள் திட்டமிட்டிருந்த ஞாயிறன்று அப்படி ஓர் குடிகார காவலாளி காவலுக்கு வந்தால் நல்லது என்று எதிர்பார்த்திருந்தோம்.
தொடரும்...
No comments:
Post a Comment