பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 19 1983 வெளிக்கடை சிறை சாலை படுகொலைகள் ஒரு நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 19

மேல்தளத்தின் காவலர் கட்டப்பட்டதும், எங்கள் பகுதிக் கதவைத் திறந்து கீழ் தளத்தை எட்டிப்பார்த்தால், படிக்கட்டுகள் முடிவடையும் இடத்தில் இரண்டு காவலாளிகள் நின்று கொண்டு தங்களுக்குள் எதோ கதைத்துக்கொண்டு நின்றனர்.

உடனே குளியலறை ஜன்னல் கம்பிகளை விலக்கி கயிற்றைத் தயார் நிலையில் வைக்கும்படி கூறினேன். ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டுவிட்டது. இனியும் தாமதிக்க முடியாது கீழே இறங்குவோம் என்றேன்.

மீண்டும் கதவைத் தாண்டி கீழ்த் தளத்தைப் பார்த்தால் அதே இரண்டு அதிகாரிகளும் எங்கும் நகராது தமக்குள் தீவிரமாகக் கதைத்துக்கொண்டு நிற்கின்றனர். நாம் யாராவது இறங்கிச் செல்வதைக் கண்டால் அவர்கள் வெளியில் ஓடிவிடுவார்கள். அதுவுமல்லாமல் எங்கள் தலைக்கு மேல் இருக்கும் மின் விளக்கின் நிழல் அவர்கள் மீது விழக்கூடிய விதத்தில் இருந்தது.

சற்று நேரம் தாமதிக்கும் போது நாங்கள் எதிர்பார்த்த அடுத்த வாகனமும் வந்து விட்டது. எங்கள் தோழர்கள் கயிற்றை ஜன்னல் வழியாக வீசி அதன் வழியே இறங்குவதற்குத் தயாரான வேளை மறு வானும் வந்து சேர சரியாக இருந்தது. அதிகாரிகளை எப்படி மடக்குவது என்று யோசனை செய்வதற்குள், பாபுஜி அவர்கள் இந்தத் தகவலைச் சொன்னார், அவர்களையும் செயலில் இறங்கும்படி வெளிச்ச செய்கை காண்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார். அவர்களும் பின்பகுதி தெருவைக்கடந்து பறாக்ஸ் இருக்கும் பகுதிக்குள் செல்கின்றனர் என்றார்.

இப்போது ஒரு உபாயம் தோன்றியது. கீழே நின்று கொண்டிருக்கும் காவலர்களில் ஒருவர் வாமதேவன் அவர்களிடம் சிகெரெட் வேண்டிப் புகைப்பவருள் ஒருவராவார். உடனே வாமதேவன் அவர்களை அழைத்து “நீங்கள் கீழே இறங்கிச் செல்லவும், உங்களை அவர்கள் பார்த்தால், ஹலோ! சேர், உங்களைத்தான் பின்னேரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன், சிகெரெட் புகைக்காமல் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறிக்கொண்டு இரண்டு காவலர்களின் யூனிபோமையும் பலமாகப் பிடித்துக்கொள்ளவும் அதற்கிடையில் நாங்கள் வந்து விடுவோம். ஐந்து நொடிகள் அவர்களை நிலைகுலையச் செய்தால் போதும் என்றேன்.

சரி நான் செல்கிறேன் என்று கூறிய வாமதேவன் அவர்கள், முதல் நான்கு படிகளைத் தாண்டி திரும்பி அவர்கள் நின்று கொண்டிருக்கும் முதல் படியில் கால்வைத்ததும் அவர்களில் ஒருவர் வாமதேவனைப் பார்த்துவிட்டார். வாமதேவன் அவர்கள் “சேர் என்று சொல்லி அடுத்த வசனத்தைச் சொல்வதற்குள் அவர்கள் விரைவாக வெளியில் ஓட ஆரம்பித்தனர்.”

வாமதேவன் அவர்களும் வேகமாக ஓட, அந்த இருவரும் கட்டடத்தின் வாசல்கதவை இழுத்து மூடினர். வாமதேவன் அவர்கள் கதவை உள்புறம் இழுத்துக் கொண்டு பலமான சத்தத்தில் எனது பெயரை கூறி ஓடிவாங்கோ என்றார். வாமதேவன் அவர்கள் என்னை அழைத்ததும். அந்த இரு அதிகாரிகளும் சத்தம்போட ஆரம்பித்தனர். அவர்கள் போட்ட சத்தம் சிறை அதிரக்கூடிய அளவில் இருந்தது.

நான் முதல் நான்கு படியைக் கடந்து அங்கிருந்த வாமதேவன் அவர்கள் நிற்கும் இடத்துக்கு குதித்தேன். எனது வலது கால் பலவீனமாக இருந்ததால், இடது காலைத்தான் ஊன்றினேன். குதித்த வேகத்தில் எனது இடது காலின் பாதத்துக்குள் உடைந்து விட்டது. நான் வாமதேவன் அவர்களின் காலுக்கு அருகில் விழுந்தேன். தலைசுற்றியது. சில நொடிகளில் எழுந்த நான் பாதித் தலைச்சுற்றலில் தெரிந்தது, வாமதேவன் அவர்கள் உள்பகுதிக்கு கதவை இழுப்பதும், காவலாளிகள் மூடுவதற்கு இழுப்பதும்,

அப்போதும் எனது கையில் நான் ஊன்றி நடக்கும் தடியினை வைத்தே இருந்தேன். அநதத் தடியினை கம்பிகளுக்கு நடுவில் விட்டு முதலில் ஒரு அதிகாரியின் முகத்தில் குத்தினேன். அவர் பிடித்திருந்த கையை விட்டுவிட்டார். அடுத்தவருக்கும் குத்தினேன் அவரும் விட்டுவிட்டார். கதவைத் திறக்க, மகேஸ்வரன் அவர்கள், மாணிக்கம்தாசன் அவர்கள், தேவானந்தன் அவர்கள் ஆகியோர் ஓடிவந்து அந்த இருவரையும் பிடித்து உள்ளே இழுத்துவந்தனர்.

வாமதேவன் அவர்கள் அந்த இரண்டு அதிகாரிகளுடன் கதவைப் பிடித்து இழுப்படும் வேளையில், கீழ்தளத்தில் இருந்தவர்கள் இதனைக் கண்டு தங்கள் தங்கள் கதவுகளின் கம்பிகளை இழுத்துவளைத்து வெளியில் வந்தனர். அதிகாரிகள் போட்ட சத்தம் சிறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் கேட்டதால் ஏனைய பகுதிகளில் கடமையில் நின்ற அதிகாரிகள் உசாரடடைந்துவிட்டனர்.

வாமதேவன் அவர்களை தெரிவு செய்து அதிகாரிகளைப் பிடிக்க அனுப்பியதில் ஒரு தவறு நடந்தது. அதுஎன்னவென்றால், வாமதேவன் அவர்கள் கீழ்த்தளத்தில் அடைக்கப்பட்டிருந்தவர். அவர் எப்படி மேல்த்தளதத்திலிருந்து இறங்கி வருகிறார் என்பதே அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம். நாங்கள் ஆள்மாறாட்டம் செய்து வாமதேவன் அவர்களை மேல்தளத்துக்கு எடுத்ததை மறந்துவிட்டோம். ஆனால் அதிகாரிகள் மறக்கவில்லை. எனவேதான் வாமதேவன் அவர்களைக் கண்டதும் அவர்கள் வெளியில் ஓட ஆரம்பித்தனர்.

பிடிபட்ட இருவரும் முறைப்படி கட்டப்பட்டுக்கொண்டிருக்கையில், அவரவர் வேலைகளைச் செய்யப் புறப்பட்டனர். பிரதான வாயிலுக்குச் செல்ல வேண்டியவர்கள் தயாராகும் போது அதிகாரிகளின் கூச்சல் கேட்டு ஏனையோர் ஒன்று கூடிவிட்டனர். அப்படி ஒன்று கூடிய அதிகாரிகள் கூட்டமாக எங்கள் பகுதியை நோக்கி ஓடிவந்தனர். ஏறக்குறை பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டடங்களைத் தாண்டி ஓடிவந்தனர். இதுவே எமக்குச் சாதகமாகிவிட்டது.

அதிகாரிகள் எங்கள் பகுதியை நோக்கி ஓடிவருவதைக் கவனித்த எம்மவர்கள், இரண்டாவது கட்டடத்தின் அருகில் மறைந்து நின்றனர். அதிகாரிகள் எங்கள் கட்டடத்துக்கு அருகில் வந்ததும் எங்கள் தோழர்கள் அவர்களுக்குப் பின்பக்கமாகச் சென்று அனைவரையும் சத்தம் போடாமல் கீழ்த்தளத்துக்குள் செல்லும்படி கூறினர்.

அதிகாரிகள் எங்கள் தோழர்களது கையிலிருந்த எஸ்.எம்.ஜி. மற்றும் அலுமினய கத்திகளின் வடிவங்களைக் கண்டு பயந்துவிட்டனர். சத்தம் போட்டால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என்று மாணிக்கம்தாசன் அவர்கள் பலமாகச் சத்தம் போட்டு மிரட்டினார்.

இந்த அதிகாரிகளைப் பிடிப்பதை அடுத்தக் கட்டடத்திலிருந்த ஏனைய சிவில் கைதிகள் பார்த்துவிட்டனர். மின்விளக்கில் மாணிக்கம்தாசன் அவர்கள் வைத்திருந்த எஸ்.எம்.ஜி.யை பார்த்து, அடுத்த இரண்டு கட்டடத்திலிருந்தவர்களும் சத்தம் போட்டுக்கொண்டு தங்களது கதவுகளை உடைக்க ஆரம்பித்துவிட்டனர். இராணுவம் உள்ளே நுழைந்துவிட்டது என்றே அவர்கள் நினைத்து தப்பிப்பதற்காக தங்கள் கதவுகளை உடைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இப்போது முக்கிய பிரதான வாயில் கதவை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். திட்டத்தின்படி மகேஸ்வரன் அவர்கள், மாணிக்கம்தாசன் அவர்கள் மற்றும் தேவானந்தன் அவர்களும் வாசலுக்குச் செல்லவேண்டும். அதிகாரிகளை விட்டுவிட்டு முக்கிய கதவுக்குச் செல்லும்படி மாணிக்கம்தாசன் அவர்களிடம் கூறினேன். பிடிபட்ட அதிகாரிகளில் இரண்டு மூன்று பேர் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள். அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து பிளாஸ்ரர் ஒட்டினர் எம்மவர்கள்.

நான் பாவனந்தன் அவர்களை என்னுடன் வரும்படி கூறிவிட்டு. நகர முற்பட்டேன். நகர முடியவில்லை! திடீரென உடைந்த காலில் வலி ஏற்பட்டது. நிலத்தில் கால் ஊன்ற முடியவில்லை. உடைந்த காலை மடக்கிக் கொண்டு, வலது காலில் துள்ளி துள்ளி தடியையும் ஊன்றிக் கொண்டு இராமநாதன் அவர்கள் இருந்த மருத்துவமனைக்குச் சென்றேன். கதவைத் திறந்துவிட்டு, பாவானந்தன் அவர்களை உள்ளே அனுப்பி, இராமநாதன் அவர்களை தூக்கிக்கொண்டு பின்புற சுவருக்குச் செல்லும்படி கூறிவிட்டு நான் பிரதான கதவுக்குச் சென்றேன். நான் வாசலுக்குச் செல்லும் போது, சிறையிலிருந்து எழுப்பப்படும் சத்தம் அதிகரித்துவிட்டது. முதலாவது கட்டடத்திலிருந்த கைதிகள் சிலர் கட்டடத்தின் கூரைமீது ஏறி நின்றதைக் கண்டேன்.

பிரதான வாயிலுக்குச் சென்ற ஐந்து பேரும் வாசலில் காவலுக்கு நின்ற இரண்டு பேரையும் பிடித்துவிட்டனர். அவர்கள் கதவு அருகில் வரும்போது ஒரு காவலாளி பொலிசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, தொலைபேசி ரீசீவரைக் கையில் எடுத்துள்ளார். அதற்குள் மாணிக்கம்தாசன் அவர்கள் எஸ்.எம்.ஜி. யை கம்பிகளினூடே செலுத்தி போனை வைத்துவிட்டு கையைத் தூக்கு, இல்லையென்றால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதும், அவர் ரீசீவரை வைத்துவிட்டு கையைத் தூக்கிக் கொண்டு, என்னைச் சுட்டுவிடாதீர்கள், நான் பிள்ளைக் குட்டிக்காரன், நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என்றார். உடனே அருகில் வரும்படி மகேஸ்வரன் அவர்கள் கூறினார். அவரும் அருகில் வந்தார். அவரது கைகளில் இந்த கதவின் சாவிகள் இருந்தன. அதனைக்கொண்டு முதலாவது கதவைத் திறந்தனர்.

இப்போது பிரதானக் கதவு மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. அதற்கு திறப்புத் தேவையில்லை. பிடித்த இருவரையும் அழைத்துக்கொண்டு ஏனையோர் எங்கள் பகுதிக்குச் செல்ல, மாணிக்கம் தாசன் அவர்களும் மகேஸ்வரன் அவர்களும் பிரதான வாயிலில் நின்று கொண்டிருந்தனர். இப்போது மேலும் சத்தம் அதிகரித்தது. நிலமை கட்டுக்கடங்காமல் போய்விடும் போல் தோன்றியது. பாபுஜி அவர்களும் மற்றும் ஒருவரும் ஓடிவந்து இப்போது என்ன செய்வது? கட்டுப்படுத்த முடியாது போல் தோன்றுகிறது என்றனர். மாணிக்கம்தாசன் அவர்களையும் அழைத்துக்கொண்டு எப்படியும் ஏனைய கைதிகளை அடக்கி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்தான் நாம் வெளியேறலாம் என்றேன். உடனே மாணிக்கம்தாசன் அவர்களும் பாபுஜி அவர்களும் மற்றும் வந்த ஒருவரும் உள்பகுதிக்கு ஓடிச்சென்றனர் கைதிகளை அடக்குவதற்கு!

இப்போது மகேஸ்வரன் அவர்கள் என்னிடத்தில் கேட்டார், “என்ன செய்யலாம் நாம்” என்றார். திட்டத்தை மாற்றுவோமா என்று நான் மகேஸ்வரன் அவர்களிடம் கேட்டேன். எப்படி என்றார்ஃ நீங்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று பின்பகுதியில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை இந்தப்பிரதான வாயிலுக்குக் கொண்டுவாருங்கள். சுவரை இடித்துத் தாமதப்படுத்த வேண்டியதில்லை. தாமதித்தால் எதிரே குடியிருக்கும் அதிகாரிகள் பொலிசுக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள். எனவே வெளியில் சென்று வாகனத்தைக் கொண்டு வரவும் என்றேன். சரி செல்கிறேன் என்று கூறி மகேஸ்வரன் அவர்கள் பிரதான வாயிலைத் திறந்து வெளியில் சென்றார்.

எனது கால் வலி மேலும் அதிகரித்தது. இடது காலை கீழே விட முடியவில்லை. பிரதான வாயிலில் நின்று சிறையின் உள்பகுதியைப் பார்த்தேன், கைதிகள் போட்ட சத்தம் விண்ணைத் தொட்டது. எங்கள் தோழர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை அடக்க முயன்றனர். பிடிக்கப்பட்ட அதிகாரிகளைக் கட்டி பிளாஸ்ரர் ஒட்டும் வேலையை வேகமாகச் செய்து முடித்தனர் எம்மவர்கள்.

கீழ்தளத்தில் இருந்த அனைவரும் கம்பிகளை வளைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டனர். தங்க மகேந்திரன் அவர்கள் மட்டும் வெளியில் வரமுடியவில்லை. இரண்டு கம்பிகளைத்தான் ஒவ்வொரு கதவிலும் வெட்டியிருந்தோம். தங்கமகேந்திரன் அவர்கள் சற்றுத் தடிப்பானவர். அவரது உடல் அதனுள் நுழைய மறுத்தது. இறுதியில் தலையையும் இரண்டு கைகளையும் வெளியில் நீட்டும்படி கூறி, நான்குபேர் சேர்ந்து கதவினில் உதைத்தபடி நின்றுகொண்டு, அவரை பலம்கொண்டு இழுத்து வெளியில் எடுத்தனர். அவர் ஐயோ அம்மா என்று கதறிக் கொண்டு வெளியில் வந்து விழுந்தார். அவ்வளவு பெரிய உடல். பத்து அங்குல இடைவெளி ஊடாக இழுத்து எடுக்கப்பட்டது. மிகவும் கடுமையான தண்டனையாகத்தான் இருந்தது அவருக்கு. கம்பிகளை வெட்டும்போது இவரது உடல் அளவைக் கருத்தில் கொள்ளாதுவிட்டது எங்களது தவறுதான்.

இப்போது, சிறிதரன் அவர்களும் பாபுஜி அவர்களும் மீண்டும் ஓடி வந்தனர். இனிமேல் கட்டுப்படுத்த முடியாது. என்ன செய்வது? என்றனர். நீங்கள் பின்பகுதிக்குச் சென்று அனைவரையும் முன்வாசலுக்கு அழைத்துவாருங்கள். அதே நேரம் ஏனையோரையும் முன்வாசலுக்கு வரும்படி கூறிவிட்டுச் செல்லவும் என்று கூறி அனுப்பிவைத்தேன். அவர்கள் ஓடிச்சென்று முதல் கட்டடத்தில் கைதிகளை அடக்கிக் கொண்டிருந்தவர்களிடம் கூறிவிட்டு, இரண்டாவது கட்டடத்துக்குச் சென்றனர்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 19 1983 வெளிக்கடை சிறை சாலை படுகொலைகள் ஒரு நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment