1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 21
சிறையே பேரதிர்வு கண்ட நிலையில், தன்னையும் மீட்டு விடுவார்கள் என்று திருமதி நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் நினைத்திருப்பார். அரைமணி நேரம்வரை சிறையின் பேரொலி ஓயவில்லை. படிப்படியாக சிறைக்கைதிகள் வெளியேறும் போதுதான் இரைச்சலும் சத்தமும் குறைந்தன. இறுதியில் சிறையில் தங்கியது எங்கள் பகுதியிலிருந்த நால்வர் மற்றும் சாதாரண கைதிகள் ஒன்பது பேர்மட்டுமே. சிறையின் அலை ஓய்ந்ததும், திருமதி நிர்மலா அவர்களும் தீர்மானித்திருப்பார் தன்னையும் ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று. நித்தியானந்தன் அவர்கள் கூட எங்களைத்தான் நம்பியிருந்தார். இராமநாதன் அவர்களை மீட்கச் சென்ற நாம் நிர்மலா அவர்களை மறந்தது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.
இராமநாதன் அவர்களது மருத்துவமனையிலிருந்து பிரதான வாயிலுக்கு வருவதற்குள் சிறையின் ஏனைய அனைத்துக் கைதிகளும் ஏற்படுத்திய பிரளையத்தில் திட்டங்களும் மாற்றப்பட்டன. குழப்பத்தில் திருமதி நிர்மலா நித்தியானந்தன் அவர்களை மறந்தோம். பின்னாளில் நிர்மலா அவர்கள் நித்தியானந்தன் அவர்களைவிட்டுப் பிரிவதற்கும் இதுவும் ஓர் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நாம் எண்ணி மனவேதனை அடைந்ததுண்டு. தனது கணவனே தன்னைச் சிறையில் விட்டு விட்டுச் சென்றுவிட்டார் என்று தப்பாக எண்ணியிருக்கலாம். நித்தியானந்தன் அவர்கள், அவருக்குக் கொடுத்த வேலையை சரியாகத்தான் செய்தார். எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பைத்தான் நாம் நிறைவேற்றவில்லை. இந்தத் தவறுக்கு நாம் இன்றுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இவ்விடயம் இன்றும் எமக்கு மன உளச்சலை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது.
எங்கள் படகுகள் இரவு 12மணியைத் தாண்டியும் ஓடிக்கொண்டிருந்தன. எந்த இடத்துக்குச் செல்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. எனது படகுக்கு அருகில் வந்துகொண்டிருந்த படகில் தங்கமகேந்திரன் அவர்கள் இருந்தார். அவர் அந்தப் படகோட்டியிடம் “எந்த இடத்துக்குச் செல்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். தெரியாது, முன்செல்லும் படகைத் தொடர்ந்து செல்கிறேன் என்று பதில் கூறியுள்ளார்.
பின்னர் எனது படகுக்கு மிக அருகில் வந்த தங்கமகேந்திரன் அவர்கள், “நாங்கள் எந்த இடத்துக்குச் செல்கிறோம்” என்று என்னிடத்துக் கேட்டார். “பார்த்தன் குறிப்பிட்ட இடத்தினைச் சொன்னேன்”. அதற்கு அவர், “ஐயோ! அங்கே சிங்களவர் இருக்கின்றனர். கரையோரம் முழுவதும் மீன்பிடிப்பதற்காக சிங்களவர் கரைவலை விரித்துக் காத்திருப்பர். அந்தப் பாறை இருக்கும் இடத்துக்குச் சென்றால் நாம் அனைவரும் சிக்கிக் கொள்வோம் என்று உரத்த குரலில் சொன்னார்.
தங்க மகேந்திரன் அவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர். இவர் சொல்வதில் உண்மை இருக்கலாம். அதே வேளை பார்த்தன் அவர்கள் இந்த இடத்தைத் தெரியாமல் கூறியிருக்கமாட்டார். எனவே, எங்களது இயக்கத் தோழர் சொன்னதுதான் உண்மையாக இருக்கும். வேறு இடத்தில் நாம் இறங்குவதென்றால் எந்தவித முன்னேற்பாடும் இல்லை. தெரியாத இடத்தில் இறங்கி புதிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று நினைத்தேன். எதுவாக இருந்தாலும் பார்த்தன் தெரிவித்த இடத்துக்கே செல்வோம் என்று கூறிவிட்டு படகுகளை தொடர்ந்து வடக்கு நோக்கிச் செலுத்தும்படி கூறினேன். படகுகள் ஓடிக்கொண்டே இருந்தன.
அதிகாலை நான்கு மணியைத் தாண்டியிருக்கும். வங்கக் கடலின் கீழ்த் திசையில் மெல்லிதாக சிவப்பு நிறக் கோடு தென்பட்டது. அந்தப் பாறையை அடைவதற்கு இன்னமும் எவ்வளவு நேரம் படகை ஓட்டவேண்டும் என்று படகோட்டியிடம் கேட்டேன். அவர் தனக்கு இந்தப்பகுதி சரிவரத் தெரியாது என்றார். படகுகளும் விடிவதற்கு முன்னர் மட்டக்களப்புக்குத் திரும்பிச் சென்றாக வேண்டும்.
நாங்கள் சென்று கொண்டிருக்கிற பகுதி, சேரவேண்டிய இடம் எதுவென்றே எமக்குத் தெரியாது. கிழக்கின் சிவப்புநிறம் இப்போது மஞ்சள் நிறத்தில் தோற்றமளித்தது. விடியும் நேரத்தில் கடலில் தொடர்ச்சியாக நான்கு படகுகள் சென்று கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் அதுவே, ஒரு தகவலாக இராணுவத்தைச் சென்றடையலாம். எனவே. தொடர்ந்து பயணிப்பது எமக்கு ஆபத்தைத் தேடித்தரும் என உணர்ந்தேன். ஆதலால் கரையை நோக்கி படகை ஓட்டும்படி கூறினேன். ஏனைய படகுகளையும் கரையை நோக்கி வரும்படி கூறினோம்.
கரையை அடையும் போது மங்கலான இருட்டும் வெளிச்சமும் கலந்திருந்தது. கரையை விட்டு நாம் உடனடியாக காட்டுப்பகுதிக்குள் சென்றாக வேண்டும். எனது உடைந்த கால் பலமாக வீக்கமடைந்து வலியும் அதிகரித்திருந்தது. படகிலிருந்து தூக்கி எடுத்து கரையில் அமரவைத்தனர். அனைவரும் இறங்கியாகி விட்டது. படகோட்டிகளுக்கு நன்றி தெரிவித்து விரைவாக மட்டக்களப்புக்குச் சென்றடையும்படி கூறி அனுப்பிவைத்தோம். மீண்டும் கரைப் பகுதியைப் பார்த்தோம். சற்றுத் தொலைவில் புதர்களும் பத்தைகளும் தென்பட்டன. அருகில் குடியிருப்புகள் எதுவும் தென்படவில்லை.
முதலில் அந்தப் புதர் நிறைந்த பகுதிக்குச் செல்வோம், அங்கிருந்து அடுத்ததுப்பற்றி சிந்திக்கலாம். வரிசையாக ஒவ்வொருவரையும் செல்லும்படி கூறினோம். எங்களில் இப்போது இரண்டு பேரைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இராமநாதன் அவர்கள் ஒருவர் மற்றொருவர் நான். இராமநாதன் அவர்களை இரண்டு தோழர்கள் தூக்கிக்கொண்டனர். தேவானந்தன் அவர்கள் எனது அருகில் வந்து அமர்ந்து, தனது தோழ்மீது அமரும்படி கூறினார். தனியாக உங்களால் தூக்க முடியாது என்று கூறினேன். இரண்டுபேர் சேர்ந்தால் தாமதமாகும். தனியாக தோழில் தூக்கினால் விரைவாக மறைவிடத்தை அடையலாம் என்று வற்புறுத்தினார்.
அவரது தோழின் மீது அமர்ந்தேன். ஓட்டமும் நடையுமாக புதர் சூழ்ந்த பகுதியை அடைந்தோம். பெரிய புதர்களாக இருந்தன. உள்பகுதிக்குள் புகுந்தால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் புலப்படாது. நான்கு ஐந்து புதர்களைத் தேர்வு செய்து இன்று பகல் முழுவதும் இதனுள்ளேயே கழிக்கவேண்டும். யாருமே இரவு நித்திரை கொள்ளாததால், அனைவரையும் புதரினுள்ளேயே படுத்துறங்கும்படி கூறினேன். சிறிது நேரத்தில் அனைவருமே உறங்கிவிட்டனர். நானும் ஏறக்குறைய ஒருமணிநேரம் உறங்கினேன். தொடர்ந்து நித்திரைகொள்ள கால்வலி இடம்தரவில்லை. ஒரு மருத்துவரைப் பார்த்து ஏதாவது வலிநிவாரணியோ அல்லது எண்ணையோ காலுக்குத் தடவினால்தான் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றியது.
நன்கு விடிந்ததும் மணல் தரையைப் பார்த்தால், நாங்கள் நடந்து வந்த காலடித் தடங்கள் மணலில் நன்கு படிந்திருந்தது. பாபுஜி அவர்களை அழைத்து புதரிலிருந்த கிளைகளை ஒடித்து நாம் நடந்து வந்த வழித் தடங்களை அழித்துவிடும்படி கூறினேன். அவரும் அவ்விதமே குளைகளைக் கொண்டு காலடி தெரியாத வண்ணம் அழித்துவிட்டார். களைப்பும் பசியும் இருந்தது.
வாமதேவன் அவர்கள். பவானந்தன் அவர்கள் மற்றும் மகேந்திரன் அவர்களையும் அழைத்து. நீங்கள் மூவரும் மேற்கு நோக்கி நடந்து செல்லுங்கள். வாகரை வாழைச்சேனை முக்கிய சாலை வரும். அருகில் உள்ள ஊருக்குள் சென்று அங்கே இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று அங்கே பணிபுரியும் மருத்துவரை அழைத்து வாருங்கள். காலில் உடைவு உள்ளது. நடந்துவர முடியவில்லை. வாகனமும் இல்லை.
ஆதலால் அவற்றுக்குரிய மருந்துகளையும் எடுத்துவரும்படி கூறி அவரை அழைத்துவாருங்கள் என்று அனுப்பிவைத்தேன். எங்களது தோழர்கள் கொண்டுவந்திருந்த றிவோல்வார் ஒன்றினையும் கொடுத்தனுப்பினேன். நாம் இருந்த இடம் வாகரையிலிருந்து ஐந்து ஆறு கிலோ மீற்றருக்கு முன்னதாகவே இருக்கும் என்று கணித்தோம்.
காலை ஒன்பது மணியளவில் சென்ற மூவரும் பத்து முப்பது மணியளவில் ஒரு மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்தனர். அவர் கையில் ஒரு பண்டேஜ் இருந்தது. வந்தவர் எனது காலைப் பார்த்தார். இது உடைவல்ல வெறும் சுழுக்குத்தான் என்று கூறி கையில் வைத்திருந்த பண்டேஜ்சால் காலில் பாதத்தையும் சேர்த்து வலு இறுக்கமாக அதைச் சுற்றினார்.
அவரது பெயரை விசாரித்தேன். டொக்டர் சிவநாதன் என்றார். எந்த ஊர் என்று கேட்டேன். யாழ்ப்பாணம் கரவெட்டி என்றார். என்னை யார் என்று நினைக்கிறீர்கள்? என்றேன். இரவும் காலையிலும் றேடியோவில் செய்தி கேட்டேன். சிறையிலிருந்து தப்பியது நீங்கள்தான் என்று நினைக்கிறேன் என்று பதிலிளித்தார்.
நல்லது! எங்களுக்கு சிறிய உதவி ஒன்று செய்யவேண்டும் முடியுமா என்று கேட்டேன். கண்டிப்பாகச் செய்வேன் என்றார். எங்களுக்கு மதிய உணவு தயாரித்துக் கொடுக்கவேண்டும் முடியுமா? என்றதற்கு, முடியும் என்றார்.
அவர் புதரில் இருந்தவர்களை எண்ணிவிட்டு ஏழுபேர்தானே தயாரித்துத் தருகிறேன் என்று கூறினார். நாங்கள் 35பேர் இருக்கிறோம் என்றதற்கு, ஆச்சரியத்துடன் சுழற்சி வடிவில் பார்வையிட்டார். ஏனைய புதர்களுக்குள் இருந்தவர்களை இவர் பார்க்கவில்லை. எல்லோரும் இங்கேதான் இருக்கின்றனரா என்று கேட்டார். நீங்கள் உணவு கொண்டுவந்தால் அவர்கள் வருவார்கள் என்றேன். உடனே புறப்படட்டா என்றார்.
நீங்கள் புறப்படுவதற்கு முன்னர் சில நிபந்தனைகள் உண்டு. அதன்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அவற்றுக்குச் சம்மதித்தால் மட்டுமே நீங்கள் உணவு தயாரிக்கச் செல்லலாம் என்றேன். என்ன நிபந்தனைகள் என்றார்.
உங்களுடன் இப்போது வந்த மூன்று பேரும் மீண்டும் வருவார்கள். நீங்கள் மீண்டும் எங்களைச் சந்திக்கும் வரை இவர்களுடனேயேதான் இருக்கவேண்டும். உணவு தயாரிக்கும் போது அல்லது உணவுக்கான பொருட்கள் எதுவும் வாங்குவதற்காக யாரையும் கடைக்கு அனுப்புவதாக இருந்தாலும் நீங்கள் இரகசியமாகச் செல்லக்கூடாது. உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு கண்களால் சைகை எதுவும் செய்யக்கூடாது. நீங்கள் ஏனையோருடன் கதைப்பது அனைத்தும் எங்களது தோழர்கள் அனைவருக்கும் கேட்க வேண்டும்.
உங்களுக்கு முன்புறத்தில் எங்கள் தோழர்கள் நின்று கொண்டிருப்பார்கள். உங்களுக்குப் பின்புறத்தில் எங்கள் தோழர்கள் நிற்கும் போது நீங்கள் யாருடனும் பேசக்கூடாது. உங்களது வாயசைவு, கண் அசைவுகள் எங்கள் தோழர்களுக்குத் தெரியும் படியாகத்தான் நீங்கள் யாருடனும் கதைக்கவேண்டும். மற்றப்படிக்கு எங்கள் தோழர்கள் உங்கள் விடயங்களில் எந்தத் தலையீடும் செய்ய மாட்டார்கள். குறிப்பாக நீங்கள் யாருடனும் அருகிலோ தள்ளிச் சென்றோ இரகசியம் பேசக்கூடாது. இவையே நீங்கள் செய்யவேண்டியவை என்று கூறி முடித்ததும். கண்டிப்பாக நான் யாருடனும் இரகசியம் பேசமாட்டேன், கண்ணசைவுகளும் காட்டமாட்டேன் என்னை நீங்கள் நம்பலாம் என்றார்.
வாமதேவன் அவர்களிடம் 300 ரூபா கொடுத்து அனுப்பினேன். மகிழ்ச்சியுடன் மருத்துவர் சிவநாதன் அவர்கள், எம்மவருடன் சென்றார். மருத்துவர் சென்ற சிறிது நேரத்தில் எனது காலில் முன்பு இருந்த வலியைவிட மேலும் அதிகரித்தது. அவர் பலமாக இறுக்கிக் கட்டியதால் இரத்தம் ஓடாமல் காலில் வலி அதிகரித்துவிட்டது. கால் உடைவை அவர் சுழுக்கு என்று கூறி அழுத்திக் கட்டி மேலும் மோசமடையச் செய்துவிட்டார். கட்டுகளை அவிழ்த்துவிட்டு காலை ஓர் உயரத்திலிருந்த கிளையின் மீது வைத்துக்கொண்டு மீண்டும் சிறிது நேரம் உறங்கினேன்.
எங்கள் இருவரையும் இனிமேலும் தோழ்களில் சுமந்து கொண்டு செல்ல முடியாது. காட்டுத் தடிகள் வெட்டி, சாக்குப் பைகளினுள் நுழைத்து அதில் எங்களை அமர வைத்துத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மாணிக்கம்தாசன் அவர்களும் சிறிதரன் அவர்களும் மற்றும் சிலரும் கூறினர். டொக்டர் திரும்பி வரும்போது நான்கு சாக்குப் பைகள் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
மதியம் இரண்டுமணியளவில் எங்கள் தோழர்களுடன் டொக்டரும் மேலும் இருவரும் எங்களுக்கான உணவுகளைச் சுமந்துகொண்டு வந்தனர். தட்டுகளும் வாழை இலைகளும் கொண்டுவந்தனர். கூடவந்த இருவரைப்பற்றிக் கேட்டதில் அவர்கள் டொக்டரின் கீழ் வேலை செய்பவர்கள் என்றும், நம்பிக்கையானவர்கள் என்றும் கூறினார்.
உணவைப் பரிமாறி ஏனைய புதர்களில் இருந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. டொக்டரும் அங்கேயே உண்டார். நாங்கள் இங்கிருந்து புறப்படும் வரை நீங்கள் மூவரும் எங்களுடனேயே இருக்கவேண்டும் என்றேன். எத்தனை மணிக்குப் புறப்படுவீர்கள் என்று கேட்டார். மாலை ஆறு முப்பது மணிக்கு என்றேன். அதுவரை நாம் இங்கேயே இருக்கவேண்டுமா என்றார். எங்களது பாதுகாப்புக் கருதித்தான் சொல்கிறோம்.. தயவு செய்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றேன். கண்டிப்பாக ஒத்துழைக்கிறோம் என்றார் டொக்டர்.
தொடரும்...
No comments:
Post a Comment