1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 28
பவர்மென்சனில் நண்பர் சர்குனதாஸ் இருந்தபடியால், உமா அவர்களை அழைத்துக்கொண்டு பூந்தமல்லி சாலையில் இருக்கும் நேரு பூங்காவுக்குள் சென்று அங்கு ஓரமாக அமர்ந்து கதைக்க ஆரம்பித்தோம், சிறிது நேரத்தில் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அந்த பூங்காவில் கருப்பு-வெள்ளையில் பெரிய தொலைக்காட்சி பெட்டி ஒன்று வைத்திருந்தனர். அதில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் அதனைப் பார்க்க கூட்டம் கூடியது. வெள்ளிக்கிழமை மட்டும் சிறப்பு நிகழ்ச்சியாக இருக்கும், அன்றும் வெள்ளிக்கிழமை, எனவே நாம் எழுந்து வேறு இடத்தில அமர்ந்து கதைக்க ஆரம்பித்தோம்.
நான் சென்னை வந்ததும் வவுனியாவுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது சந்ததியார் அவர்கள் ஓர் தகவல் சொன்னார். சகோதரி ஊர்மிளாவை பிரபாகரன் அவர்கள் தான் கொன்றுவிட்டதாக ஜனாதிபதி ஜெயவர்தனாவுக்கு திரு. மணவைத்தம்பி பெயரில் தந்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி உமா அவர்களிடம் தெரிவிக்கவும், சகோதரி ஊர்மிளா மஞ்சள்கமலை நோயால் பாதிக்கப்பட்டுத்தான் இறந்தார், அவரை யாரும் கொல்லவில்லை, மேற்கொண்டு பத்திரிகைகளுக்கு செய்தி எதுவும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார் சந்ததியார் அவர்கள்.
அதன்படி, நான் உமா அவர்களிடம் எடுத்துச் சொல்லி, எதற்காக நீங்கள் தந்தி கொடுத்தீர்கள், பிரபாகரன் அவர்களே கொன்றிருந்தாலும், இது எமக்குள் உள்ள பிரச்னை, ஜனாதிபதி ஜெயவர்த்தனா எப்படி தீர்த்து வைப்பார், இது தவறுதானே என்று கேட்டேன்.
அதற்கு உமா அவர்கள், நான் தந்தி கொடுக்கவில்லை, மணவைத் தம்பிதான் கொடுத்தார், நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன், ஆயினும் அவர் கேட்கவில்லை, இது அவர் செய்ததுதான், எனக்குச் சம்மதிமில்லை என்றார்.
நேரம் ஆகிக்கொண்டிருந்ததால், நாளை பிற்பகல் நாம் சிந்திப்போம் என்று கூறிக்கொண்டு, நீங்கள் எதில் வந்தீர்கள் என்று கேட்டேன், நடந்து வந்தேன் என்றார். எங்கிருந்து என்று கேட்டதற்கு, மண்ணடியிலிருந்து நடந்துவந்தேன் என்று மீண்டும் சொன்னார். ஏன் பணம் இல்லையா என்று கேட்டேன் பதில் சொல்லாது தலையை கவிழ்ந்து மௌனமானார்.
சரி, சாப்பிட்டீர்களா என்றேன், இல்லை என்றார். உணவு விடுதியில்தானே இருக்கிறீர்கள் என்றதற்கு அவருக்கு காசு கொடுக்கவேண்டியிருக்கிறது என்றார். எனது கல்ச்சட்டைப் பையில் இருந்து ரூபா இரண்டாயிரத்தை எடுத்து அவரிடத்தில் கொடுத்து முதலில் எதிரில் இருக்கும் கடையில் சாப்பிட்டுவிட்டு, மற்றவேலையைப் பாருங்கள் என்று கூறி நாளை பார்க்கலாம் என்று விடைபெற்றேன்.
மறுநாள் அண்ணா பல்கலைக்கழக உணவு விடுதியில் உமா அவர்களைச் சந்தித்தேன். இலங்கை திரும்பிச் செல்வது தொடர்பாகவும், அங்கு நாங்கள் அனைவரும் கூடி புதிய அமைப்பை உருவாக்கலாம் என்றும், வவுனியா மாவட்டத்தில் இருக்கும் குடியேற்றப்பண்ணைகளில் என்னுடன் பணியாற்றிய அனைவரும் ஒவ்வொரு பொறுப்புகளில் இருப்பதால் தங்கிச் செயல்படுவதில் பிரச்னை எதுவும் இருக்காது என்றும் கதைத்துமுடித்து உமா அவர்கள் வரவேண்டிய திகதியை நான் வவுனியா சென்று தொலைபேசி மூலம் தெரிவிப்பது என்றும் கூறி ஏனைய அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையில் நான் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து அங்கிருந்து புறப்படத் தயாரானேன்.
இங்கு காசு இல்லாமல் எப்படிச் சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டதற்கு வழி தெரியவில்லை என்றார். என்னிடம் திரும்பிச் செல்வதற்கான காசு போக மேற்கொண்டு இருந்த ரூபா 3000 த்தை அவரிடம் கொடுத்துவிட்டு நான் விடைபெற்று இராமேஸ்வரம் புகையிரதத்தைப் பிடித்தேன்.
இராமேஸ்வரம் வழியாக வவுனியாவை அடைந்து சந்ததியார் அவர்களை கல்மடுப் பண்ணையில் சந்தித்து விவரங்களையும் தெரிவித்து, நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியவை பற்றி தீர்மானித்தோம்.
அதன்படி, ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி உமா அவர்களை இலங்ககைக்கு வரும்படியும், ஏனைய அனைத்து விடயங்களையும், நாங்கள் சரிவரச் செய்து அடுத்த நகர்வுக்கு தயார் செய்து வைப்போம் என்றும் தொலைபேசி வாயிலாக உமா அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவர் படகில் வந்து இறங்கவேண்டிய இடத்தையும் தெரிவித்தேன். இந்த தகவலை திரு. ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலக தொலைபேசி வழியாகத்தான் தெரிவித்தேன் ஏனெனில் அப்போதெல்லா STD வசதி கிடையாது, பதிவு செய்துதான் வெளிநாடுகளுக்கு அழைக்க முடியும்.
இந்தியாவிலிருந்து வந்த பின்னர் நான் பல இடங்களுக்கும் சென்று என்னுடன் பணியாற்றிய தோழர்களையும், எனது பழைய நண்பர்களையும் புதிய இயக்கம் ஒன்று ஆரம்பிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி நாங்கள் அனைவரும் சந்திப்பதற்கான நாளையும் விரைவில் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்து வந்தேன்.
உண்மையில் நானும் சந்ததியார் அவர்களும் 1977ஆம் ஆண்டு கலவரத்தை அடுத்து மலையகத்திலிருக்கும் தமிழ்மக்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடியமர்த்தி அவர்களுக்கும் பாதுகாப்பான வாழ்வு ஒன்றினை ஏற்படுத்திய பின்னர் தான் போராட்டத்தையே ஆரம்பிக்கவேண்டும் என்ற முடிவினை எடுத்துத்தான் காந்தியத்தில் இணைந்து மலையக மக்களைக் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டோம்.
எங்களுடன் செயல்பட்டு வந்த திரு. சிறிசபாரெட்ணம் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்து திரு. குட்டிமணி மற்றும் திரு. தங்கதுரை அவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அவர் எங்களை விட்டுப் பிரிந்தது 1978 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில்.
1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாவலர் பண்ணையை நான் பொறுப்பெடுத்து நடத்தினேன், அன்று முதல் சிறிசபாரெட்ணம் அவர்கள் அந்தப் பண்ணையிலேயே பல பணிகளைச் செம்மையாக செய்துவந்தார். நான் ஏனைய குடியேற்றப் பண்ணைகளுக்கு செல்லும்போதெல்லாம் சிறிசபாரட்ணம் அவர்கள் நாவலர் பண்ணையை நன்கு கவனித்துவந்தார். அவர் எங்களை விட்டுப் பிரிந்து சென்றது எங்களுக்கு கவலை அளித்தது.
மாணவர் பேரவை ஆரம்பித்த காலம் முதல் சிறிசபாரட்ணம் அவர்கள் இணைந்து செயல்பட்டுவந்தார். நானும் அவரும் கண்டி போகம்பரைச் சிறையில் மூன்று ஆண்டுகள் (1973 முதல் - 1975 வரை) அரசினால் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருந்தோம்.
நாங்கள் குடியேற்றங்களில் ஈடுபடுவது போராட்டத்தில் தொய்வை ஏற்படுத்தும் என்று சிறிசபாரட்ணம் அவர்கள் அடிக்கடி சொல்லிவந்தார். அவர் எங்களை விட்டுப் பிரிந்து செல்வதற்கு அதுவும் ஒரு கரணம் ஆயிற்று. தவிர வேறு காரணமும் உண்டு, அதனை பின்னர் வரும் வரலாற்றுக் குறிப்பில் சொல்கிறேன்.
எனவேதான் சமகாலத்தில் நாங்கள் போராட்டத்தையும் ஆரம்பிக்கவேண்டும் என்று சந்ததியார் அவர்கள் வற்புறுத்தி வந்தார்.
திரு. உமாமஹேஸ்வரன் அவர்களையும் இந்தியாவிலிருந்து அழைத்துவந்த நாம், புதிய வடிவத்தில் எங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று சந்ததியார் வற்புறுத்தியதாலேயே நான் இந்தியா சென்று உமா மகேஸ்வரன் அவர்களை திரும்பிவரும்படி அழைக்கநேர்ந்தது.
வன்முறை போராட்டதை ஆரம்பிக்கும் தருணம் அதுவல்ல என்பது எனது கருத்தாக இருந்தது. நாங்கள் மலையாகத் தமிழ் மக்களை வடக்குக் கிழக்கில் குடிஅமர்த்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. 1977 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பின்னர் மலையக மக்கள் வடக்குக் கிழக்குப் பகுதியில் நிரந்தரமாகக் குடியமர்வதை விரும்பி, எங்களது முயற்சிக்கு ஆதரவுகொடுத்து குடும்பம் குடும்பமாக குடிபெயர்ந்து வன்னிப் பகுதிக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கும் வந்து சேரலாயினர்.
உண்மையில் இந்த நகர்வுக்கு அன்றைய அரசியல் கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி எந்தவித ஆதரவும் வழங்கவில்லை. அப்படி அவர்கள் வழங்கியிருந்தால், மலையகம் அப்போதே வெற்றிடமாயிருக்கும், தமிழர்கள் ஒருபுறமாகவும் சிங்கள இனம் இன்னொருபுறமாகவும் இயற்கையாகவே தனித் தனியாகியிருக்கும்.
1977 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடந்ததை அனைவரும் அறிவோம். மலையக மக்கள் இந்தக் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாத்தளயில் ஏறக்குறைய 80 சதவீதமான தமிழர்கள் வீடு வாசல்களை விட்டு, கோவில்களிலும், பள்ளிக்கூடங்களிலும், போலீஸ் நிலையங்களிலும்தான் தங்கினர்.
அவர்களைப் பிடித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா வடக்குக்கு அனுப்பிவைத்தார். முதலில் 20 பேருந்துகளை அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் அதிகமானவர்களுக்கு காயங்கள் இருந்தன. ஒருவாரமாக குளிக்காமலும், எந்தவித கவனிப்பும் இல்லாமலும் அவர்கள் அடைக்கப்பட்டு பஸ்களில் ஏற்றி வடக்கு நோக்கி அனுப்பப்பட்டனர்.
பஸ்சில் அனுப்பப்பட்டவர்களை யார் ஏற்றுக்கொள்வது, என்ன நிவாரணம், யார் அவர்களைப் பராமரிப்பது என்ற எதுவித ஏற்பாடும் இல்லாமலேயே ஒரு அரசாங்கம் தனது மக்களை நாடு கடத்துவது போல் அனுப்பிவைத்தது. தமிழர்களை மலையகத்திலிருந்து விரட்டி அடிக்கவேண்டும் என்று சிங்கள ஆட்சியர்களுக்கு நூற்றாண்டுகாலமாகவே திட்டங்கள் இருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவர்கள் தனது கலவரக் கொள்கையில் பழைய கொள்கையையும் நடைமுறைப்படுத்தினார்.
வடக்குப் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு வரும்படி பஸ் ஓட்டுனர்களுக்கு உத்தரவு. வவுனியா வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வவுனியா வந்ததும் வன்னி எம்.பி.யான T. சிவசிதம்பரம் அவர்களிடம் பொலிஸ் எஸ். பி. தொடர்பு கொண்டு கேட்டுள்ளார், மலையாகத் தமிழர்கள் வருகின்றனர் என்ன செய்யலாம்? இங்கேயே எங்காவது தங்கவைக்க முடியுமா? என்றதற்கு, சிவ சிதம்பரம் எம்.பி. அவர்கள், இங்கு யாரும் தங்கக் கூடாது, அவர்களை அப்படியே கிளிநொச்சிக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ அனுப்பிவையுங்கள், வேண்டுமென்றால் ஒரு நேர சாப்பாடு கொடுக்கலாம் என்று கூறி 800 பேருக்கு ஒவ்வரு பார்சல் உணவு கொடுத்து அனுப்பிவைத்தனர். அந்த வாகனங்களை ஓடும் ஓட்டுனர்கள் சிங்களவர்கள், அவர்கள் பயந்து பயந்து பஸ்சை ஓட்டிவந்துள்ளனர்.
பேருந்து புறப்பட்டு கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, கிளிநொச்சி எம்.பி.யான திரு. ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் வவுனியா எம்.பி. தகவல் தெரிவித்தார்.
என்ன செய்வதென்று கிளிநொச்சி எம்.பி. ஆனந்தசங்கரி அவர்களுக்குத் தெரியவில்லை, நான் அப்போது விஸ்வமடு பயிற்சி முகாமில் இருந்தாலும் பரந்தனுக்கு வந்து செல்வேன். அப்படி வந்த என்னிடம் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தொலைபேசியில் இதுபற்றிக் கூறி என்ன செய்யலாம் என்றார். அந்தப் பேருந்துகளை பராந்தனுக்கு அனுப்பிவையுங்கள் என்றேன்.
அதன்படி மாலை நான்குமணியளவில் பஸ்கள் கிளிநொச்சியைத் தாண்டிப் பராந்தனுக்கு வந்தன. என்னுடன் பணியாற்றிய இளைஞர்களிடம் ஒலிபெருக்கியை கார் ஒன்றின் மீது பொருத்தி, கீழ்கண்டவாறு ஒலிபரப்புச் செய்யுமாறு கூறினேன்;
"யாழ்ப்பாணத்தில் வீடு அல்லது உறவினர்கள் இருப்பவர்கள் பஸ்ஸைவிட்டு கீழே இறங்கவேண்டாம், உறவும் வீடுகளும் இல்லை என்பவர்கள் மட்டும் இங்கேயே இறங்கவும்" என்று இருபது பேருந்துகளில் இருந்தவர்களுக்கும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பப்பட்டது.
தொடரும்...
No comments:
Post a Comment