பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 7 1983 ஆண்டு வெளிக்கடை சிறைச்சாலையில் நடந்த படுகொலை ஒரு நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 7

உயிர் இருக்கிறதா என்று ஒவ்வொருவராக பார்த்ததில், இரண்டு பேருக்கு உயிர் இருக்கிறது என்று தூக்கி வந்து வெளித் தரையில் கிடத்தினார்கள். இராணுவத்தினர் அவசரப்படுத்தினர். நாமோ இவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டுதான் வருவோம் என்று கூறியதும் காயப்பட்டவர்களை ஏற்ற முடியாது என்றனர் இராணுவத்தினர். நாமும் இங்கிருந்து வரமுடியாது என்றோம். ஒரு சிப்பாய் என்னை துப்பாக்கியின் அடிப்பகுதியால் தாக்குவதற்கு வந்தான்.

எத்தனை பேர் இறந்துள்ளனர் என்று சொல்லும்படி பாபுஜி அவர்களிடம் கேட்டேன். அனைவரையும் அடையாளம் தெரிந்தது. ஆனால், எனது வீட்டுக்கு அருகில் இருந்து என்னுடன் இணைந்து இயக்கத்துக்கு வந்த சிவம் என்ற சிவசுப்பிரமணியம் அவர்களைக் காணவில்லை. அண்ணே! “சிவத்தைக் காணவில்லை” என்றார் பாபுஜி அவர்கள். தேடிப்பார்த்த அனைவரும் சிவம் அவர்கள் இதில் இல்லை என்றனர். ஆனால், எல்லோர் கண் முன்னாலும்தான் சிவம் அவர்கள் பினமாகக் கிடந்தார். அவரது முகத்தில் கோடாலியால் வெட்டப்பட்டிந்தபடியால் அவரது முகம் மூன்று துண்டுகளாகப் பிளவுப்பட்டுக் கிடந்தது. இதனால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. நன்கு ஊன்றிப் பார்த்த சிறிதரன் அவர்கள் சிவம் அவர்களின் அங்க அடையாளம் மற்றும் உடல் அமைப்பை வைத்து இதுதான் அவரின் உடல் என்று அடையாளம் காண்பித்தார்,

இவை ஒருபுறமிருக்க இராணுவ அதிகாரி (லெப்டினெண்ட்) ஒருவர் வந்து காயப்பட்டவர்களை அம்புலன்சில் மருத்துவ மனைக்கு அனுப்புகிறோம், நீங்கள் வாகனத்தில் ஏறுவீர்களா என்றார். நாமும் சரி என்றோம். இராணுவ வாகனம் வெளியே செல்ல, அம்புலன்ஸ் உள்ளே வந்தது.

காயத்துடன் உயிர் தப்பியவர்களில் திரு. நவரத்தினம் அவர்கள் (வவுனியா), திரு. யோகராஜா அவர்கள் (வல்வெட்டித்துறை) ஆகிய இருவரில் நவரத்தினம் அவர்களை முதலில் அம்புலன்சில் ஏற்றினார்கள் எமது தோழர்கள். அம்புலன்ஸ் பிரதான வாயிலை அடைந்ததும் மீண்டும் அம்புலன்சைச் சுற்றி சிங்களக் காடையர்கள் கூடிவிட்டனர். நாம் இங்கிருந்து அதனைக் கவனித்தோம். அந்த அம்புலன்சின் பின்பக்கக் கதவைத் திறந்த சில காடையர்கள் கோடாலியுடன் உள்ளே ஏறி நவரத்தினம் அவர்களை ஓங்கிக் கொத்திக் கொன்றுவிட்டனர். இதனை யாரும் தடுக்கவில்லை.

அடுத்த அம்புலன்சில் யோகராஜா அவர்களை ஏற்றக்கூடாது என்று தடுத்தோம். இராணுவத்தினருக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. பின்னர் எங்களை ட்றக் வாகனத்தில் ஏறச்சொன்னார்கள். அம்புலன்சையும் அதனைத் தொடர்ந்து வரச் சொன்னார்கள். முன்னும் பின்னும் இரண்டு இராணுவ வாகனங்களை காவலுக்கு வரும்படி கூறி இது சரியாயிருக்கும் இப்போது நீங்கள் வருவீர்களா என்று கேட்டனர். யோகராஜா அவர்களை பாதுகாப்புடன்தான் மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்று கூறியதையும் ஏற்றுக்கொண்டனர்.

நாம் ஒவ்வொருவராக வாகனத்தில் ஏறினோம். கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் :

   (01) திரு. மாணிக்கம்தாசன்

   (02) திரு. பாபுஜி

   (03) திரு. பாரூக்

   (04) திரு. அழகிரி

   (05) திரு. தேவானந்தன்

   (06) திரு. மகேஸ்வரன்

   (07) திரு. சுப்பிரமணியம்

   (08) திரு. சிறிதரன்

   (09) திரு. ஜெகதாஸ்

   (10) திரு. ஞானசேகரன்

மேல் தளத்தில் இருந்தவர்கள்:

   (01) வணபிதா. சிங்கராயர் அவர்கள்

   (02) வணபிதா சின்னராசா அவர்கள்

   (03) திரு. ஜெயதிலகராஜா அவர்கள்

   (04) திரு. ஜெயகுலராஜா அவர்கள்

   (05) திரு. டேவிட் ஐயா அவர்கள்

   (06) திரு. நித்தியானந்தன் அவர்கள்

   (07) திரு. கோவை மகேசன் அவர்கள்

   (08) டொக்டர். தர்மலிங்கம் அவர்கள்

ஆகிய 18பேரும் ட்றக் வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதிக் கதவு மூடப்பட்டது.

18 பேரைப் பறிகொடுத்துவிட்டு நாம் 18 பேர் அதே எதிரிகளின் கைகளில். எங்களுடன் கீழ் தள அறைகளில் இறந்த தோழர்கள்:

   (01) அமரர். சிறிகுமார் அவர்கள்

   (02) அமரர். சர்வேஸ்வரன் அவர்கள்

   (03) அமரர் மரியநாயகம் அவர்கள்

   (04) அமரர் நீதிராஜா அவர்கள்

   (05) அமரர் நவரட்ணசிங்கம் அவர்கள்

   (06) அமரர் றொபேட் இராஜேந்திரன் அவர்கள்

   (07) அமரர் பாஸ்கரன் அவர்கள்

   (08) அமரர் தேவகுமார் அவர்கள்.

   (09) அமரர் எஸ். குமார் அவர்கள்

   (10) அமரர் குமார குலசிங்கம் அவர்கள்

   (11) அமரர் கணேசலிங்கம் அவர்கள்

   (12) அமரர் இராஜரெத்தினம் அவர்கள்

   (13) அமரர் மனோ ரஞ்சன் அவர்கள்

   (14) அமரர் சேயோன் அவர்கள்

   (15) அமரர் ஜெயமுகுந்தன் அவர்கள்

   (16) அமரர் சிவம் அவர்கள்

   (17) அமரர் துரைராஜா அவர்கள்

   (18) அமரர் டொக்டர். இராஜசுந்தரம் அவர்கள் ( மேல் தளம்)

முக்கிய வாயிலை அடைந்ததும் சிறையின் பெரிய கதவுகள் திறந்தன. எங்களது வாகனம் ஒரு திசையிலும் யோகராஜா அவர்களை ஏற்றிய அம்புலன்ஸ் மருத்துவமனையையும் நோக்கி பாதுகாப்புடன் விலகிச் சென்றனர்.

நாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது எமக்குத் தெரியாது. வெளியே பார்க்கக் கூடாது என்று சிப்பாய்கள் உத்தரவிட்டனர். அனைவருமே சறம் சேட்டுடன்தான், நான் மட்டும் சேட் இல்லாமல் சறத்துடன் இருந்தேன். சேட்டை எடுத்துப் போடும் நிலையிலும் நான் இருக்கவில்லை. 5மணியிலிருந்து ஐந்தரை மணியளவில்தான் எம்மை வாகனத்தில் ஏற்றினர். ஒரு மணித்தியால ஓட்டத்துக்குப் பின்னர், அந்த வாகனம் கட்டு நாயாக்கா விமான நிலையத்தின் ஓடுபாதையின் அருகில் கொண்டு போய் நிறுத்தினர்.

எங்களை விமானத்தில் ஏற்றப்போகிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. எங்கே என்பதுதான் தெரியாது. இராணுவத்தினர் விமானப்படை சிப்பாய்களிடம் எம்மை ஒப்படைத்தனர். யாரும் கீழே இறங்கக் கூடாது என்றனர். உள்ளேயே இருக்கவிட்டு தலைகளை மட்டும் எண்ணிக் கொண்டனர். இராணுவம் சென்றுவிட்டது. விமானப்படை சிப்பாய்கள் துப்பாக்கியுடன் வாகனத்தைச் சுற்றி நின்றனர்.

இரவு ஏழு மணி, எட்டு மணி என்று மணித்தியாலங்கள் நகர்கின்றன. எங்கள் 18 பேருக்கும் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடையாது. சிறுநீர் கழிப்பதற்குக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. ட்றக் வாகனத்தினுள் இருட்டாக இருந்தது. விமான நிலையத்தின் மின் விளக்கின் வெளிச்சம் ஓரளவுக்குப்பட்டது.

நாம் அத்தனையும் இழந்துவிட்டோம். இழப்பதற்கு உயிர் மட்டுமே இருந்தது. எனவே, ஒரு வேலை செய்வோமா என்று எமது சக போராளிகளான திரு. மாணிக்கம்தாசன் மற்றும் திரு.மகேஸ்வரன் அவர்களிடமும் கேட்டேன். என்ன என்றனர்.

எங்களை எப்படியும் விமானப்படையின் விமானத்தில்தான் ஏற்றுவார்கள். இரண்டு அல்லது மூன்று விமானப்படையினர்தான் உள்ளே ஆயுதத்துடன் காவலுக்கு நிற்பார்கள். அவர்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் விமானத்தை நாங்கள் நினைத்த இடத்துக்குக் கொண்டு செல்லலாம். எங்கே கொண்டு செல்லலாம் என்று கேட்டார் மாணிக்கம்தாசன் அவர்கள்.? இந்தியாவுக்கு, அப்படி இந்தியாவில் அனுமதி மறுத்தால் ஆப்கானிஸ்தானுக்கு, அப்போது ஆப்கானிஸ்தான் சோவியத் ரஸ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

சரி கடத்துவோம் என்றார்கள். எப்படி அவர்களை மடக்குவது? ஒருவர் முன்னாலும், ஒருவர் பின்னாலும், இன்னொருவர் நடுவிலும் நிற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே. விமானப்படையினர் எங்களை அழைக்கும் போது முதலில் திரு. மாணிக்கம் தாசன் அவர்களும் திரு. மகேஸ்வரன் அவர்களும் செல்ல வேண்டும். எட்டாவது மற்றும் ஒன்பதாவது ஆட்களாக திரு. பாபுஜி அவர்களும் திரு. தேவானந்தன் அவர்களும் செல்ல வேண்டும். என்னை முதுகினில் திரு. சிறிதரன் அவர்கள் சுமந்து கொண்டு வருவதால், நான் கடைசியாக இறங்குகிறேன். இப்படியே விமானத்துக்குள்ளும் சென்று அமர வேண்டும். எங்களுக்கு எப்படியும் கைவிலங்கிட்டுத்தான் ஏற்றுவார்கள், ஆதலால் மூன்று பேரையும் ஒரே நேரத்தில் எழுந்து துப்பாக்கியை ஒருவர் கிழே விழுத்தி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் விமானம் புறப்பட்டு குறைந்தது பத்து நிமிடங்களுக்குள் இவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

இவற்றைக் கதைத்துக் கொண்டிருக்கும் போது படைச் சிப்பாய் ஒருவர் வந்து யாரும் கதைக்கக் கூடாது என்றார். சிறிது அமைதியாக இருந்த நாம் மீண்டும் கதைக்க ஆரம்பித்தோம். இதனைக் கவனித்த அதே சிப்பாய் மீண்டும் என்னிடத்தில் வந்து இனியும் கதைத்தால் உன்னை அடிப்பேன் என்றார். சிறிது நேரம் கழித்து நாம் மீண்டும் பேச ஆரம்பித்தோம்.

உள்ளே இருக்கும் மூவரையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின் பைலட் காபினைத் திறக்காதுவிட்டால் என்ன செய்வது? உடைக்க வேண்டியதுதான். இல்லையென்றால் அவர்களது துப்பாக்கியால் சுடவேண்டியதுதான் என்றேன். பாதித் திருப்தியுடன் சரி என்றனர்.

விடியும் வரை இதே சிந்தனை. சிறிதரன் அவர்களிடம் நாங்கள்தான் கடைசியில் அமர வேண்டும். கைவிலங்குடன் இரண்டு கைகளையும் சேர்த்து சிப்பாயை அணைத்து கீழே வீழ்த்தி விட வேண்டும். துப்பாக்கி எம்மவர் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி முடித்து விடியலுக்காகக் காத்திருந்தோம்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 7 1983 ஆண்டு வெளிக்கடை சிறைச்சாலையில் நடந்த படுகொலை ஒரு நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment