1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 16
இவை ஒருபுறமிருக்க எங்கள் பகுதியில் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினோம். உடற்பயிற்சி முதற்கொண்டு, விழுந்த ஒருவரை எப்படிச் சுலபமாக தனியே ஒருவரை தூக்கிச் செல்வது, அப்படித் தூக்கியவரை எவ்வளவு மணி நேரம் சுமந்து செல்லலாம், ஒருவரது உடலை கீழே வைக்காமல் இன்னொருவர் எப்படிச் சுமப்பது, மற்றும் பிடிக்கப்படும் சிறைக் காவலர்களை எப்படிக் கட்டிப் போடுவது, முரண்டு பிடிப்பவரை எப்படி வீழ்த்துவது போன்ற அனைத்துப் பயிற்சிகளும் தொடர்ந்து ஒரு வாரமாக வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சிக்கான போதிய உணவு எமக்குக் கிடைத்தது. தினமும் எங்கள் ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 200ல் வெளியிலிருந்து தயிர், பால், பழங்கள் விலைக்குப் பெற்று பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கினோம். சிறை நிர்வாகமே இவற்றை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தனர். தடுப்புக் காவல் கைதிகளுக்கு இவற்றுக்கு சட்டத்தில் இடம் இருந்தது. அவற்றை இங்கே வலியுறுத்திப் பெற்றுக்கொண்டோம்.
வெலிக்கடைச் சிறையின் கீழ்த் தளத்திலிருந்து தப்பித்த எட்டுப்பேரும், மகசீன் சிறையிலிருந்து வந்திருந்த நான்குபேரும் பயிற்சியில் ஈடுபட்டோம். நாங்கள் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் மொத்தம் மூன்று இரும்பறுக்கும் வாள் எடுத்திருந்தனர். எங்களிடம் ஏற்கனவே, ஒரு வாள் இருந்தது. நான்கு வாள்களாலும் 16கம்பிகளை வெட்டவேண்டும். வாளுக்குப் பிடி கிடையாது. எனவே, ஒரு கம்பி வெட்டுவதற்கே நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்தோம்.
பாடகர்கள், தாளம் போடுபவர்கள் அனைவரையும் தெரிவு செய்தனர் கீழே இருந்தவர்கள். திரு. மாணிக்கம்தாசன், திரு. பாரூக், திரு. தட்சணாமூர்த்தி போன்றோர் கீழ்த் தளத்திலிருந்த மற்றும் சிலருடன் இணைந்து ஏறக்குறைய இரண்டரை மணிநேரம் விடாது தாளம் போட்டனர்.
மூன்று மூன்று போராக இணைந்து பாடினர். அனைத்தும் சினிமாப் பாடல்களே. நான்கு காவலாளிகளையும் கீழ்த் தள செல்களுக்குள் அனுமதிக்காது அனைத்துச் செல்களுக்கான பொதுவான வாசலுக்கும் கட்டடத்தின் வாசலுக்கும் இடையில் மறித்துவைத்துக் கொண்டு பாடகர்கள் பாட, தாளம் போடுபவர்கள் போட கம்பிகள் அறுக்கப்பட ஆரம்பித்தன.
மேல் தளத்திலிருந்த நாங்கள் அலுமினிய மற்றும் இரும்புக் கூர்க்கத்திகளுடன் காவலாளிகளுக்கு அருகிலும் சற்றுத் தள்ளியும் பாடல்களை ரசிப்பது போன்று பாவனை செய்து கொண்டு இருந்தோம். பாடல்கள் அனைத்தும் விறுவிறுப்பான படல்களாகவே தெரிவு செய்திருந்தனர்.
காவலாளிகளுக்கும் இரும்புக் கம்பிகள் அறுக்கப்படும் இடத்துக்கான தூரம் 20 அடிகள்தான். நான்கு வாள்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் போது ஒலிக்கும் சத்தத்துக்கு அதிகமாகவே பாடல்களும் தாளங்களும் ஒலித்தன. கம்பிகளை வெட்டுபவர்கள் செல்லுக்குள் இருந்து கொண்டு கதவின் அடிப்பகுதியில் வெட்டவேண்டும்.
ஒரு கதவுக்கு எட்டுக் கம்பிகள் இருந்தன. ஒரு குறுக்குக் கம்பியும், மேல் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு பக்கவாட்டில் மேலும் ஒரு குறுக்குக் கம்பியும், அதே போன்று கீழ்ப் பகுதியில் வலது மூலையிலிருந்து இடது மூலை நிலத்தடிவரை பக்கவாட்டில் ஓர் குறுக்குக்கம்பியும் கதவுகளுக்குப் பொருத்தப்பட்டிருந்தன. நாங்கள் வெட்டுவதற்கு தெரிவு செய்த கம்பிகள் வலது புறத்தின் அடியில் இரும்புச் சட்டத்தை ஒட்டி வெட்டவேண்டும் என்பதே.
உள்பகுதியில் இருந்து கம்பியை வெட்டினால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சத்தம் கேட்டு எங்கள் தோழர்களை விலக்கிக் கொண்டு வந்து பார்த்தால்தான் விபரீதத்தைக் கண்டு பிடிக்கலாம். எதிர் எதிரே இருக்கும் இரண்டு செல்களுக்கு இடையில் உள்ள தூரம் வெறும் எட்டு அடிகள்தான் இருக்கும். இந்தப் பகுதி பகலிலேயே இருட்டாகத்தான் இருக்கும். எனவே, எந்தவித பயமுமின்றி தங்கள் பாட்டுக்குப் போட்டிப் போட்டுக்கொண்டு கம்பிகளை வெட்டினர்.
ஒரு குழு பாடி முடிய அடுத்த குழு சிறிதளவு கூட இடைவெளி விடாது பாடினர். இறுதிக் கட்டத்தில் காவலாளிகள் இருவர் எம்முடன் இணைந்து படத்தொடங்கிவிட்டனர். அந்த இருவரும் மது அருந்தியிருந்தது தெரிந்தது.
சந்தேகம் எதுவும் இன்றி, எட்டு அறைகளின் கம்பிகள் பதினெட்டும் வெட்டப்பட்டன. வெட்டியபின் அந்த வெற்றிடத்தை பழைய ஒரு சதம் செப்புக்காசைக் கொண்டு அடைத்து அதன் மேல் கரியும் எண்ணையும் கலந்து அரைத்த படிவம் ஒன்றினைப் பூசி அந்த இடம் மறைக்கப்பட்டது. இந்த அனுபவம், மேல்தளத்தில் குளியல் அறையின் ஜன்னல் கதவில் வெட்டி தயார் நிலையில் வைத்த போது எமக்கு ஏற்பட்டது. அங்கேயும் ஜன்னலின் அடிச்சட்டத்தோடு வெட்டி ஒரு சதம் செப்புக் காசு சொருகிவைக்கச் சரியாக இருந்தது. எனவே. அதையே இங்கேயும் பயன்படுத்தினோம்.
தினமும் மாலை ஆறுமணிக்கு கீழே உள்ள செல்களை மூட வரும்போது பூட்டைப் பூட்டிவிட்டு கதவின் கம்பிகளில் காவலாளிகள் தங்கள் கைத் தடியினால் தட்டிப்பார்த்துவிட்டுச் செல்வர். எங்களுக்கு சந்தேகம் வராதபடி அவர்கள் ஒரே இழுவையில் கம்பிகளின் சத்தத்தை உணர்ந்து கொள்வர். இந்தப்பயிற்சி சிறைக் காவலாளிகளுக்கு வேலையில் சேரும் போதே கொடுத்துவிடுவார்கள். எனவேதான் கீழ்ப்பகுதியில் வெட்டி அதனை மீண்டும் காசு கொண்டு நிரப்பினோம். ஆயினும் இந்த ஒரு சதம் காசை நாம் நம்பியிருக்கவில்லை. தினமும் ஆறுமணிக்கு அறைகள் மூடவரும் போது நாங்கள் நால்வர் அந்த அதிகாரிகளின் பின்னாலே ஏதாவது கதைத்துக்கொண்டு செல்வோம். கீழ்த்தளம் கதவுகள் மூடப்பட்டபின்னர்தான் மேல்தளத்துக்கு வருவார்கள்.
நாங்கள் கத்திகளைத் தயார் நிலையில் இடுப்புகளில் சொருகிக்கொண்டு கட்டட வாசல், கீழ்த் தள செல்களுக்கான வாசல் மற்றும் அவர்களுக்கு அருகில் நின்று கம்பிகளைத் தட்டும் போது காவலாளிகளின் முகத்தில் மாறுதல்கள் தோன்றுகிறதா என்று கவனிப்போம். கம்பிகள் வெட்டப்பட்ட நாள்முதல் ஐந்து நாட்களும் நாம் தயார் நிலையிலேயே இருந்தோம். எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.
ஞாயிறு கம்பிகள் வெட்டி முடிக்கப்பட்டது. திங்கள் எமக்கான தகவல் வெளியிலிருந்து கிடைக்கவில்லை. செவ்வாய் அன்று கம்பத்துக்கு கடிதம் அனுப்பினோம்.
நாங்கள் உள்ளே தயாராகிவிட்டோம். உங்களிடம் என்ன தாமதம்? என்பதை உடனே தெரிவிக்கவும் என்ற தகவல் அனுப்பப்பட்டது. அன்று பிற்பகலே எமக்கு பார்வையாளர் ஒருவர் மூலம் பதில் கிடைத்தது. நாங்களும் தயார்! நீங்கள் திகதியையும், ஜெயில் உடைப்பின் முறையையும், நேரத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தவும் என்பதே அவர்கள் எமக்கு அனுப்பிய பதில் தகவலாகும்.
இப்போது நாம் செயல்படவேண்டிய விதம் பற்றி கலந்து பேசினோம். சிறையின் காவலர்களை நாம் பிடிக்கும் போது பிரதான வாயிலில் இருக்கும் காவலாளிகளைத் தவறவிட்டால் அவர்கள் உள்பகுதிக் கதவை மூடிவிட்டு வெளிவாயிலால் ஓடிவிடுவார்கள். அப்படி அவர்கள் ஓடினால் எங்கள் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, நண்பர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கடமையில் இருக்கும் நாளில் நாம் சிறையுடைப்பைச் செய்தால் பிரதானவாயில் காவலர்களைச் சுலபமாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. இதனை மனதில் வைத்துக்கொண்டே திட்டங்கள்பற்றிக் கலந்து பேசினோம்.
பிளாஸ்டர், கயிறு, இலங்கையின் படம், கொம்பாஸ் போன்றவை இன்று இரவுக்குள் கிடைத்துவிடும் என்று தகவல் கூறுவதுடன், வாகனம், படகுகளுக்கு எரிபொருள் நிரப்பி வைக்கவேண்டும் என்றும் தெரிவிப்பதுடன், சிறையைக் கட்டுப்பாட்டுக்குள் எப்படிக் கொண்டுவருவது என்பது பற்றித் தீர்மானித்தோம்.
முதலில் எங்களின் மேல் தளத்தில் கடமையில் இருக்கும் காவலாளியைப் பிடித்து கையைக்கட்டி பிளாஸ்டர் ஒட்டவேண்டும். அடுத்து கீழ்த்தளத்தில் கடமையிலிருப்பவர்களை பிடித்து அதே போன்று கட்டி பிளாஸ்டர் ஒட்டி கீழ் அறைகளுக்குள் பூட்டிவிட்டு எங்கள் கட்டடத்துக்கு வெளியேயும், ஏனைய பகுதிகளில் கடமையிலிருக்கும் காவலாளிகளையும் பிடிக்கவேண்டும்.
ஏற்கனவே திட்டமிட்டபடி எங்கள் இருபகுதிக் காவலாளிகளையும் பிடித்தபின் ஐந்துபேர் நேராக பிரதானவாயிலுக்கு ஓடிச்செல்லவேண்டும். மூன்று பேர், சிறையின் மேற்பகுதியில் கடைமையிலிருக்கும் காவலாளிகளைப் பிடிக்கவேண்டும். மேலும் மூன்றுபேர், கிழக்குப் பகுதிக்கு ஓடிச்சென்று அங்கே இருப்பவர்களை பிடித்துவர வேண்டும். மேலும் நான்கு பேர் 2வது மற்றும் 1வது கட்டடத்தின் காவலாளிகளைப் பிடித்துவரவேண்டும்.
பிரதான வாயிலுக்குச் செல்பவர்கள், மாணிக்கம் தாசன் அவர்கள் அவர் தயாரித்த எஸ்.எம்.ஜி. துவக்கு மற்றும் அதனுடன் ஓர் அலுமினியக்கத்தி, மகேஸ்வரன் அவர்கள் ஒரு கத்தி, பாபுஜி அவர்கள் ஓர் அலுமினியக் கத்தி, தேவானந்தன் அவர்கள் இரும்பிலான கத்;தி, வாமதேவன் அவர்கள் அலுமினியக்கத்தி இவையே பிரதானவாயிலுக்குச் செல்பவர்களது ஆயுதங்கள்.
பிடித்து வருபவர்களைக் கட்டிப்போட்டு பிளாஸ்டர் ஒட்டும் பொறுப்பு திரு. நித்தியானந்தன், திரு. ஜெயதிலகராஜா, திரு. ஜெயகுலராஜா, திரு. வரதராஜபெருமாள், திரு.சின்னராசு, திரு. பரமதேவா போன்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எங்கள் இரு பகுதியின் காவலர்கள் பிடிக்கப்பட்ட பின்னர் பிரதானவாயில், மற்றைய பகுதிகளுக்கு தோழர்கள் செல்லும்போது, நானும் பாவானந்தன் அவர்களும் அந்தக் கதவுத் திறப்புடன் இராமநாதன் அவர்கள் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று இராமநாதன் அவர்களை மீட்டு, அவரை பாவானந்தன் அவர்கள் சிறையின் பின்பகுதிக்குத் தூக்கிச்செல்ல, அதே திறப்பைக் கொண்டு நான் பிரதான வாயிலுக்குச் செல்லவேண்டும்.
பிரதான வாயிலில் நிற்கும் மாணிக்கம் தாசன் அவர்களிடம் திறப்பைக் கொடுத்து, பெண்கள் பகுதியில் அடைக்கப்பட்டிருக்கும் திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்களது அறைக்கதவைத் திறந்து திருமதி. நிர்மலா அவர்களை அழைத்துக்கொண்டு சிறையின் பின் பகுதிக்குச் செல்லவேண்டும். பிரதான வாயிலில் பிடிக்கப்படும் காவலாளிகளை அழைத்துக்கொண்டு மகேஸ்வரன் அவர்கள், தேவானந்தன் அவர்கள் மற்றும் பாபுஜி அவர்களும் எங்களது பகுதி அறைகளில் பிளாஸ்டர் ஒட்டும் பணியிலிருப்பவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
திரு. ஞானவேல், திரு. மகேந்திரன், திரு. பாரூக், திரு.சிறிதரன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட பணி, சிறையின் தென்கிழக்குப் பகுதியின் சுவரை இடித்து நாம் அனைவரும் வெளியேறக்கூடிய அளவுக்கு சுவரில் துவாரம் ஏற்படுத்துவது. அந்த சுவர் மிகவும் பழமையானது. சுலபமாக இடிக்கக்கூடிய நிலையிலையே இருந்தது. ஏனையோர் தங்கள் பணிகளைச் செய்ய ஆரம்பித்ததும் இவர்கள் யார்பற்றியும் கவலைப்படாது சுவரை இடிக்கும் வேலையைச் செய்யவேண்டும் என்பதே உத்தரவு.
காவலாளிகளைப் பிடித்து, அடைத்த பின்னர், எங்கள் அனைத்துத் தோழர்களையும் பின்பகுதிக்கு அழைத்துவந்து வெளியேற்றப்பட்டதும், தோழர்கள் மாணிக்கம்தாசன், பாபுஜி, வாமதேவன் ஆகியோர் சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டிருந்த முதலாவது இரண்டாவது கட்டடங்களுக்குச் சென்று அவர்களது அறைக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும். அவர்கள் ஏறக்குறைய முன்னூறு பேர்வரை இருந்தனர். அவர்கள் சிறையை விட்டு வெளியேறி புளியந்தீவு நகரின் பலபகுதிகளாலும் ஓடத்தொடங்கினால் சிறையை நோக்கி வரும் இராணுவமும், காவல்துறையும் குழப்பமடையும் என்பது நாம் எதிர்பார்த்தது.
நாம் திட்டமிட்டபடி அனைத்தையும் செய்து முடிப்பதற்கு நாங்கள் தெரிவு செய்திருந்த தோழர்கள் அனைவரும் மிகவும் மன உறுதியும், துணிவும் காண்பித்தனர். இப்போது, வெளியில் இருப்பவர்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பது பற்றி தகவல் கொடுத்தோம்.
தொடரும்...
No comments:
Post a Comment