பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 25 July 2023

பகுதி 3 1983 வெலிக்கடைசிறைச்சாலை படுகொலை நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 25 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 3

எங்களின் செக்கிறிகேசன் அறைகளுக்கு மேல் தளத்தில் வயதில் முதிர்ந்தவர்களான வண. பிதா. சிங்கராயர் அவர்கள், வண. சின்னராஜா அவர்கள், திரு. டேவிட் ஐயா அவர்கள், டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள், திரு. ஜெயதிலகராஜா அவர்கள், திரு. ஜெயகுலராஜா அவர்கள், திரு. நித்தியானந்தன் அவர்கள், டொக்டர். தர்மலிங்கம் அவர்கள், திரு. கோவை மகேசன் அவர்கள் ஆகிய ஒன்பது பேரும் இருந்தனர்.

இந்த ஒன்பது பேரும் அடைக்கப்பட்டிருந்த மேல்தளம் ஒரு மண்டபம் (hall) ஆகும். எங்களது “பி” பகுதியிலிருந்த டொக்டர். இராஜசுந்தரம் அவர்களையும், திரு. டேவிட் ஐயாவையும் இந்தச் சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் இந்த மேல் தளத்துக்குக் கொண்டு வந்தனர். இவர்கள் ஒன்பது பேருக்கும் சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. இவர்கள் அறைகளில் அடைக்கப்படுவதில்லை. கதிரை, மேசை போன்ற தளவாடங்களும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாட்டினை அப்போது சிறைகளின் கொமிசனராக இருந்த தெல்கொட என்பவர் செய்து கொடுத்திருந்தார். கொமிசனர் தெல்கொட அப்படி ஒன்றும் நியாயமானவரல்ல. மேலே சொன்ன ஒன்பது பேரில் ஒருவரது உறவினர் தெல்கொடையிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார். தனியாக ஒரு நபரை மட்டும் கவனித்தால் அது தவறாகத் தோன்றும். எனவே, வயது முதிர்ந்தவர்களை தனியாக வைக்கிறோம் என்றுதான் அந்த ஒன்பது பேரும் செக்றிகேசனின் மாடிக்குக் கொண்டுவரப்பட்டனர் என்பது எங்களுக்கு அப்போது கிடைத்த தகவல்.

நாம் 27 பேரும் காலையில் ஐந்து மணிக்கு நித்திரைகொள்ள ஆரம்பித்து ஒன்பது மணிக்கு மேல் ஒவ்வொருவராக உறக்கம் கலைந்து மீண்டும் கம்பிக் கதவின் அருகில் அமர்ந்து இனிமேல் என்ன நடக்கும் என்பதனைப் பற்றி அவரவர் அறிவுக்கு எட்டியதை கதைக்க ஆரம்பித்தோம். காலை உணவு கூட கம்பிக் கதவின் வழியாக உள்ளே தள்ளப்பட்டு கிடந்ததையும் கவனியாது இனியொருதடவை அந்தக் காடையர் வந்தால் என்ன செய்வது? இதுதான் எனக்கிருந்த கவலையும் கூட.

எனது அறையில் சிறிதரன் மற்றும் ஜெகதாஸ் என்பவர்கள் அடைக்கப்பட்டனர். இதில் ஜெகதாஸ் என்பவர் எந்த இயக்கங்களையும் சாராதவர். வெளிநாடு செல்வதற்காக சிங்கள முகவர் ஒருவரிடம் பணம் கொடுத்திருந்தார். இவரை வெளிநாட்டுக்கு அந்த நபர் அனுப்பாததால், கொடுத்தப் பணத்தை திருப்பித் தரும்படி ஜெகதாஸ் கேட்டுள்ளார். இதுதான் அவர் செய்த தவறு. புலி என்று கூறி ஜெகதாசை வெலிக்கடையில் அடைத்துவிட்டனர் கொழும்பு காவல்துறையினர்.

இந்தக் கொட்டடியில் எங்களை அடைக்கும் போது எங்களது உடைகள் தவிர கீழே விரித்துப் படுப்பதற்கு ஆளுக்கு ஓர் கன்வஸ் பாயும், சிறுநீர் கழிப்பதற்கு ஓர் சிறிய பிடியில்லாத வாளியையும்தான் உள்ளே அனுமதித்தனர். இவை தவிர நான் ஊன்றி நடப்பதற்கு என்று சுமார் நான்கு அடி நீளமுள்ள ஊன்று தடி ஒன்றினை என்னுடன் உள்ளே அனுமதித்தனர்.

நான் கைதுசெய்யப்படும் போது, துப்பாக்கியால் சுடப்பட்டதால் எனது முதுகு எலும்பிலும் காயம் ஏற்பட்டது. இதனால், எனது வலது காலுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்ததால் கால் பலவீனப்பட்டு நடக்க முடியாத நிலையிலிருந்தேன். என்னை பரிசோதித்த இராணுவ மருத்துவர் எனது வலது கால் இயங்காது என்று உறுதி செய்து சான்றிதள் கொடுத்தார். உண்மையில் அவர் கொடுத்த சான்றிதள் தவறானது. எனது வலது கால் பலவீனப்பட்டிருந்ததே தவிர இங்ங்கக் கூடிய நிலையிலேயே இருந்தது. மருத்துவரின் சான்றிதளைப் பயன்படுத்தி என்னால் நடக்க முடியாது என்று அடம்பிடித்து இறுதியில் அந்தச் சிறிதளவான ஊன்று கோல் ஒன்றை மட்டும் பெற முடிந்தது.

எனது கைகளில் இந்தத் தடியை ஒன்றரை ஆண்டுகளாக வைத்திருந்தேன். எனது அறையில் இப்போது அடைக்கப்பட்டிருக்கும் சிறிதரனுக்கும் ஜெகநாதனுக்கும் தவிர வேறு யாருக்கும் எனது கால்கள் சரிவர இயங்கும் என்பது தெரியாது. இந்தத் தடிதான் எங்கள் மூவரினது உயிரையும் காக்க மறுநாள் பேருதவியாயிருந்தது.

எனது அறைக்கு நேர் எதிரே போராளிகள் சிறிக்குமார், குமார குலசிங்கம், யோகராசா ஆகியோர் இருந்தனர். தாக்குதல் நடந்தால் எப்படி நாம் தப்பிப்பது என்பது பற்றி அறைகளில் இருந்தவர்களுக்கு உரத்த குரலில் எடுத்துச் சொன்னேன்.

மதிய உணவுக்கு சோற்றுடன் மரக்கறியும் மீன்குழம்பும் தருவார்கள். குழம்பை சிறிய குவளையில் நாம் பெற்றுக் கொள்வது வழக்கம். ஏனெனில் எங்களுக்குத் தரப்படும் சோற்றில் கற்கள் நிறைந்திருக்கும். அவற்றைத் தண்ணீர் விட்டுக் கழுவி பிளிந்தெடுத்துத்தான் நாம் உண்பது வழக்கம். எனவே, இன்று வாங்கும் குழம்பை யாரும் உண்ணவேண்டாம். அந்தக் குவழையிலேயே வைத்திருக்கும்படி கூறினேன்.

சிறுநீர் கழிப்பதற்கென்று தரப்படும் வாளியில் தண்ணீர் விட்டு வைத்திருந்தால் இந்தக் குழம்பை அதில் ஊற்றி கலக்கி தாக்கவரும் சிங்களவர் முகம்களில் வீசலாம். எங்களைத் தங்க வைத்த இந்தக் கட்டிடத்தை ஜப்பான் அரசு கட்டிக் கொடுத்திருந்தது. எனது அறைக்கும் எதிர் அறைக்கும் உள்ள இடைவெளி சுமார் எட்டு முதல் பத்தடிதான் இருக்கும்.

ஒருபக்கம் நான்கு, எதிர்புறம் நான்கு அறைகளே மொத்தமும். கடைசியில் அதாவது எனது அறையைத் தாண்டிதான் கழிவு மற்றும் குளியல் அறைகள் இருந்தன. எங்கள் அறைகளின் கம்பிக் கதவுகள் வெளிப்புறமாக திறக்கும் வண்ணம் அமைக்கபட்டிருந்தது. எங்கள் அறையின் நீளம் சுமார் ஒன்பது அடிகள்தான். பின் பக்கத்துச் சுவரில் சிறிய அளவு இரும்புக்கம்பி வைத்த ஜன்னல் எட்டு அறைகளுக்குமே இருந்தன.

எனவே, எங்களுக்கான படுக்கைக்கு தரப்பட்டிருந்த கன்வாஸ் பாயைக் கிழித்து ஒன்றுடன் ஒன்றாக முடிச்சுப் போட்டால் கம்பிக் கதவையும். ஜன்னல் கம்பியையும் ஒன்றுடன் ஒன்று இழுத்து இறுக்கமாக கட்டிவிடலாம். எங்கள் அறைகளில் மூன்று பேர் வீதம் இருப்பதால் காடையர்கள் வந்ததும் ஒருவர் மிளகாய் தண்ணீரை ஊற்ற ஏனைய இருவரும் இரண்டு கம்பிகளையும் இறுக்கமாக கட்டும் வேலையைச் செய்யலாம். இதன் மூலம் தாக்குதல் செய்யும் சிங்களவரது முயற்சிகளை சில நிமிடங்கள் தாமதப்படுத்தலாம். வெளிப்புறமாக அவர்களால் திறக்கமுடியாது. திணறுவார்கள். எங்களிடம் ஆயுதங்கள் என்று இருப்பவை சிறு நீர்களிக்கும் வாளியும், உணவக்கான அலுமனியத் தட்டுமே!

குட்டிமணி போன்ற போராளிகள் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாமும் “பி” வார்டில் தனித்தனி அறைகளில்தான். ஆனால், இங்கு நாம் மூவர் இருக்கிறோம். யாரும் கதவு திறக்கப்பட்டாலும் வெளியில் செல்லவேண்டாம். அவர்களை உள்ளே வரவிட்டு வாசலில் வைத்து வாளியால் தலையில் அடித்து வீழ்த்த வேண்டும். கூடியவரை அவர்களது கைகளில் வைத்திருக்கும் கருவிகளைப் பறித்துத் தாக்க முயற்சிக்க வேண்டும். எனவே, உங்கள் உங்கள் அறைகளில் இருக்கும் கன்வஸ் பாயை அதன் முனைகளில் கிழித்து வைக்கும்படி கூறினேன்.

நான் சொன்னவற்றையெல்லாம் மிகவும் அமைதியுடன் எதிர் அறையிலிருந்த சிறிகுமார் அவர்கள், எல்லாம் சரி. அவங்கள் அவ்வளபேரை நாங்கள் எப்படி சமாளித்து நிற்பது என்று கவலையுடன் கூறினார். சிறி குமார் அவர்களுக்கு அப்போது வயது 38க்கும் மேல் இருக்கும். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

ஆறு மாதத்திற்கு முன்னர்தான் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரைப் பனாகொடைக்கு வந்து பார்த்துச் சென்றனர். மாதம் ஒரு முறை வந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு வசதிகள் இருக்கவில்லை. அடிக்கடி குழந்தைகளை நினைத்து வேதனைப்படுவார். இவர் குட்டிமணி மற்றும் தங்கத்துரை போன்ற போராளிகள் நீர் வேலியில் வைத்து மக்கள் வங்கியின் பணம் நாற்பது இலட்சம் (40,000,00) கொள்ளையடிக்கப்பட்டதில் உதவிகள் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பனாகொடை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டவர்.

 நான் சொன்ன எதிர் தாக்குதல் உத்திகள் எதனையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு! பேசாமல் பனா கொடையிலேயே இருந்திருக்கலாம் என்றார். எனது முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்தது அவரது கூற்று! ஏனெனில் பனாகொடை முகாமில் இருந்த நாம் 29 பேரும்( திரு. இராஜசுந்தரம் அவர்களையும், திரு. டேவிட் ஐயா அவர்களையும் உள்பட) வெலிக்கடை சிறைக்கு மாற்றப்படுவதற்கு நானே காரணமாக இருந்தேன்! எனவே, நான் செய்தததை தவறாகவே அவர் அதனைச் சுட்டிக் காட்டினார். அந்தத் தவறு என்னவெனில்:

 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி மடுப் பகுதியிலிருக்கும் பண்டிவிரிச்சானில் வைத்து இலங்கை இராணுவம் என்னைத் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தது. ஓராண்டு காலமாக அனுராதபுரம் சாலியபுர இராணுவ முகாமிலும், ஆணையிறவு முகாமிலும், குருநகர் முகாமிலும் தடுத்து வைத்திருந்துவிட்டு என்னை பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றினார்கள்.

அங்கே மேற்சொன்னவர்களில் திரு. இராஜசுந்தரம் மற்றும் திரு. டேவிட் ஐயாவைத் தவிர ஏனைய அனைவரும் இருந்தனர். பனாகொடை இராணுவ முகாமில் இருக்கும் தடுப்புக் கொட்டடியில்(Detention Barracks)தான் எங்களைத் தடுத்து வைத்திருந்தனர். இராணுவத்தினரில் குற்றம் செய்பவர்களை இங்கேதான் தடுத்துவைப்பது வழக்கம். ஏற்கனவே, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை வேறு சிறைக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தையே எங்களைத் தடுத்துவைப்பதற்குப் பயன்படுத்தினர். இது இராணுவத்திற்கான சிறையாகும்.

என்னை இந்தப் பனாகொடை சிறைக்கு மாற்றிய போது, அங்கே அடைக்கப்பட்டிருந்த சக போராளிகள் அனைவரும் தோற்றத்தில் சிவில் உடையிலிருக்கும் காவல்துறையினர்கள் போன்று தோன்றீனர். காரணம் அங்கே அடைக்கப்ட்டவர்கள் யாரும் தலைமயிர் வளர்க்கக் கூடாது. எழுதப்படாத சட்டம் ஒன்றினை மேஜர் உடுகம்பொளை நடைமுறைப்படுத்தியிருந்தார். எனவே எல்லோருக்கும் பொலிஸ் குறோப் (காவல்துறை போன்று முடி திருத்தம்) தான். நான் மட்டும் தோள்வரை வளர்ந்த தலை மயிருடன் உள்ளே சென்றேன். எனது தலை மயிரை ஒரு வாரம் கழித்து பல வந்தமாக வெட்டினார்கள். அதன் விளைவை அவர்கள் (சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள்) பின் அனுபவித்தனர். அதனை வரலாற்றுக் குறிப்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

என்னை பனாகொடை சிறைக்கு மாற்றப்பட்ட மறுதினம் இரவு திடீரென எனது அறையின் எதிர்புறம் அமைந்திருந்த அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. இரவு பதினொரு மணியிருக்கும் என்று நினைக்கிறேன். யாரையோ அழைத்துச் செல்லும் காலடி சத்தம் கேட்டது. ஒருவரின் அறையை ஒருவர் பார்க்காதபடி இடை துவாரங்கள் வைத்த தடுப்புச் சுவர்கள் வைத்திருந்தனர். அதனால் அழைத்துச் செல்பவர்களை அடையாளம் காணமுடியாது. நானோ வயிற்றில் ஆறாத காயங்களுடன் இருந்ததால் படுத்தே இருந்தேன்.

சிறிது நேரத்தில் ஐயோ, அம்மா என்று அலறும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தம் எனது காயங்களிலும் வலியை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் அலறும் சத்தம் எங்கள் அறைகளை நடுங்கவைத்தன. எனக்கு அருகிலிருந்த அறையில் அப்போது குட்டிமணி அவர்களின் வழக்கில் சம்மந்தப்பட்டிருந்த நடேசதாஸ் என்பவர் இருந்தார். அவரை மெதுவாக அழைத்து, “யாரை இந்த நாய்கள் தாக்குகிறார்கள்” என்று கேட்டேன். அவரும் மெதுவாக, “மாணிக்கம்தாசனை” என்றார். ஏறக்குறைய அந்த அலறல் சத்தம் ஒருமணி நேரமாக கேட்டது.

மதுவின் மயக்கம் தீரும்வரை அந்த அதிகாரிகள் தாக்கினர். அதுவும் சும்மாவில்லை. தலைகீழாகத் தொங்கவிட்டு இரண்டு மிருகங்கள் கட்டைகளால் தாக்கினர். இரவு ஒரு மணிக்கு மேல் சார்ஜன் சிறிசேனா என்பவர் மாணிக்கம் தாசனை அணைத்துக்கொண்டு மெதுவாக அவரது அறையில் அமரவைத்து கதவை மூடிவிட்டுச் சென்றார். இப்படி இவர்கள் எம்மவரைத் தாக்கும் போது இந்த சார்ஜன்ட் சிறையை விட்டு வெளியே சென்று விடுவார். அடித்துத் துவைத்தப் பின்னர்தான் இவர் உள்ளே வருவார். அவரிடத்தில் ஏன் நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்று பின்னொரு நாளில் அவரிடத்துக் கேட்டேன். அதற்கு அவர் அளித்தப் பதில் வருமாறு:

இந்த மிருகங்கள் இந்த பொடியன்களை அடிப்பதையும், அவர்கள் அலறுவதையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் மேல் அதிகாரிகள், இன்னாரைக் கொண்டு வா என்று கூறினால், நான் அழைத்துச் செல்ல வேண்டும். அடிக்கும்படி எனக்கு உத்தரவிடமுடியாது. நான் அதனைச் செய்யவும் மாட்டேன். அதனால் நான் வெளியே சென்றுவிட்டு, அவர்களது குடிவெறி முறியும் நேரம் பார்த்து மீண்டும் உள்ளே வருவேன் என்றார். இராணுவத்தில் இப்படியும் ஒரு சிப்பாயா? என்று எண்ணத் தோன்றியது. என் மீது அவருக்கு மிகுந்த இரக்கம் ஏற்பட்டிருந்தது. காரணம் எனக்கிருந்த ஆறாத துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 3 1983 வெலிக்கடைசிறைச்சாலை படுகொலை நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment