பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 25 July 2023

பகுதி 4. 1983 ஆண்டுவெளிக்கடையில் நடந்த இனப்படுகொலை நேரடி சாட்சியம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 25 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 4

ஒரு நாள் எமது சக போராளிகளான மாணிக்கம்தாசனையும், பாபுஜியையும் இரவு வேளை அதே மேஜர் உடுகம்பொளை மரணவெறியில் அறையை விட்டு வெளியே எடுத்தார். இரண்டு கைகளையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டார். துணைக்கு ஒரு கப்டன். மற்றும் இருவர். தாக்குதலை ஆரம்பித்தார். அவர்கள் போட்ட அலறல் சத்தம் பனாகொடை முழுவதும் கேட்டிருக்கும். களைத்துப் போன உடுகம்பொளை, அந்த சார்ஜன் சிறிசேனாவை அழைத்தார். அவரையும் அடிக்கும்படி பணித்தார். சார்ஜன் மறுத்துவிட்டார். இவர்களை அடிக்கச்சொல்லி என்னை இங்கே பணிக்கு அமர்த்தவில்லை. நீங்கள் இவர்களைத் துப்பாக்கியால் சுடும்படி எழுதிக் கொடுத்தால் நான் சுட்டுக் கொல்வேன். மற்றபடிக்கு நான் உங்கள் வாய் மூல உத்தரவை ஏற்கமுடியாது என்று உறுதியாகக் கூறினார். உடுகம்பொளைக்கு வெறிமுறிந்துவிட்டது. சிங்கள இராணுவத்துக்குப் பொருத்தமில்லாத இந்த நியாயவான் எப்படி இராணுவத்தில் இணைந்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

மேலதிகாரிகள் தாக்கி காயப்படுத்தும் எமது போராளிகளுக்கு மருந்து கட்டும் பணியினை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே செய்துவந்தார் சிறிசேனா. இரண்டு தினங்களுக்கு ஒரு தடவை எம்மவர் யாரேனும் இந்த அதிகாரிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர். குடடிமணி, ஜெகன், சிவபாதம் போன்ற எம்மவர்கள் பல நாட்களாக இந்த அதிகாரிகளால் தாக்கப்பட்டு சொல்ல முடியாத கொடுமைகளைச் சந்தித்தனர்.

1983 ஆம் ஆண்டு மே மாதமளவில் என்று நினைக்கிறேன். டொக்டர். இராஜசுந்தரம் அவர்களும், திரு. டேவிட் ஐயா அவர்களும் பனாகொடைக்கு அழைத்துவரப்பட்டனர். “காந்தியத்தின்” தலைவர் டேவிட் ஐயா, மற்றும் செயலாளர் டொக்டர். இராஜ சுந்தரம் அவர்கள். டொக்கடர். இராஜசுந்தரம் அவர்களைப் பார்த்ததும் உடுகம்பொளை உள்பட இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஆத்திரம் அடைந்தனர்.

நீ டொக்டராக இருந்துகொண்டு பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாயா? என்று தினமும் இரவில் அவரை வெளியில் எடுத்து அடிக்கத் தொடங்கினர். தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டனர். அலறும் சத்தம் எங்கள் கண்களில் நீரை வரவழைக்கும்.

காலையிலும் மாலையிலும் வெறும் தேனீர் தருவார்கள். அந்தத் தேனீரை ஓர் பானையில் ஊற்றி ஒரு குவழையும் கொடுத்து, டொக்டரது தலையில் வைத்து ஒவ்வொரு அறையாக எடுத்துச் சென்று பானையை இறக்கிவைத்து ஒரு குவழை தேனீர் எங்களிடம் இருக்கும் பாத்திரத்தில் ஊற்றவேண்டும்.

அப்படி ஊற்றும் போது, சிங்களத்தில் கீழ் கண்டவாறு சொல்லச் சொல்வார்கள் இராணுவத்தினர். “தவசக்கட்ட தும்பாற க்காமட்ட பஸ்ச” இதன் அர்த்தம்: ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்குப் பின்னர் என்பதாகும். ஒரு மருத்துவர் தன் நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் உபயோக முறையே இதுவாகும். இதனை ஒவ்வொருவருக்கும் டொக்டர் அவர்கள் சொல்ல வேண்டும்.

எனது அறைக்கு முன்பாக வந்து இதனை டொக்டர் சொல்லும் போது, நான் மறுபக்கம் பார்த்துக் கொள்வேன். என்னால் அவரது முகத்தை அந்த நேரத்தில் நேராகப் பார்ப்பதற்கு முடியாமல் இருந்தது. நானும் அவரும் 1977 முதல் ஒன்றாகப் பண்ணைகளில் பணியாற்றியுள்ளோம். எங்களது தீவிர நடவடிக்கைகளே அவரையும் இந்தச் சித்திரவதைக்கு உள்ளாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

நாங்கள் தடுத்துவைக்கப்பட்ட இந்த இடம் நாட்சார் வீட்டின் வடிவத்தைக் கொண்டது. நாலு புறமும் அறைகள், நடுவினில் திறந்த வெளியிருக்கும். 50 அடி நீளம் 30 அடி அகலம் கொண்ட நிலத்தில் சிறிதளவு மணல் பரப்பப்பட்டிருக்கும்.

அன்றைய தினம் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு 12 மணியைத் தாண்டியவேளை. லெப்டினன் பப்பி என்பவர், மது மயக்கத்தில் பிரதான வாயிலைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். தோற்றத்தில் சிறிய உருவம் கொண்ட இவரை நாம் பப்பி என்றே கூறிக்கொள்வோம். உடுகம்பொளை, செனிவிரெத்தினா போன்றோர் எம் இளைஞர்களைத் தாக்கும் போது இவர் அதனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இன்றைய தினம், மேஜர், கப்டன் போன்றோர் இல்லாத படியினால் இந்தப் பப்பி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு புதுமையான தண்டனை ஒன்றினை வழங்கினார். எங்கள் அறைகளுக்கு முன்பாக இருந்த மணலில் பெய்துகொண்டிருக்கும் மழையின் நீர் இரண்டு அங்குலமளவு தேங்கி நின்றது. லெப்டினன் பப்பி அன்றைய தினம் சார்ஜன்டாக இருந்த சிறிசேனா அவர்களை அழைத்து, அனைத்து அறைகளின் கதவுகளைத் திறக்கும் படி கூறினார். அவருக்கு எதுவும் விளங்கவில்லை. தயங்கி நின்ற போது மீண்டும் அதட்டி உத்தரவு கொடுத்தார். அவரும் வேறுவழியின்றி அனைத்து அறைகளின் கதவுகளையும் திறந்தார்.

லெப்டினன் பப்பி உரத்தக் குரலில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சொன்னார், எல்லோரும் வரிசையாக வந்து அந்த மணல் பகுதியில் நிற்கவேண்டும் என்றார். அனைவரும் வரிசையாக வந்து நின்றதும், இங்கிருந்து அந்தப் பகுதிக்கு இந்தத் தண்ணீரில் நீந்திச் செல்ல வேண்டும்.

றெடி ஸ்டார்ட். என்றார், அனைவரும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். எல்லோரும் நீந்த வேண்டும். இல்லையென்றால் இராணுவத்தினரை விட்டு அடிக்கும்படி செய்வேன் என்று தனது உத்தரவைச் செய்யும் படி மிரட்டினார். எல்லோரும் அந்த இரண்டங்குல நீரில் நீந்தத் தொடங்கினர்.

நான் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னருகில் வந்த லெப்டினன் பப்பி என்னை உற்றுப் பார்த்துவிட்டு நீ, அந்த மணலின் நடுவில் நின்று கொள் என்றார். எனது வயிற்றில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம் அப்போதும் ஆறாமல் காயமாகவே இருந்ததை லெப்டினன் பப்பி அறிந்திருந்தார். அதனால் என்னை மணலில் நீந்தவிடவில்லை. மழை பெய்து கொண்டே இருக்கிறது. எம்மவர் மணலில் நீந்துகின்றனர். அந்த மணலும் 2 அங்குலத்துக்குத்தான் போடப்பட்டிருந்தது. அதன் கீழே கரடு முரடான சீமெந்து நிலமாக இருந்தது.

ஏறக்குறைய அரைமணி நேரம் இந்தத் தண்டனையை வழங்கி அந்த லெப்டினன் ரசித்துப் பார்த்தார். அனைவரையும் கொணடு போய் அறைகளில் பூட்டும்படி லெப்டினன் பப்பி உத்தரவிட்டுச் சென்றுவிட்டார்.

எம்மவரது நெஞ்சு, முழங்கை, வயிறு, முழங்கால் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் இரத்தம் வடிய ஆரம்பித்தன. திரு. டேவிட் ஐயா மற்றும் டொக்டர் இராஜசுந்தரம் அவர்களும் மிகுந்த சிரமத்தில் நீந்தினர் அந்த மணல் தரையினில். இந்தக் காட்சியை நான் அவர்கள் மத்தியில் நின்று கொண்டே பார்க்க நேர்ந்தது. இதன் வேதனையை எப்படி வர்ணிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. இப்படி மணலில் நீந்தியவர்களில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்தியவர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான். நம்புவீர்களா?

இப்படி தொடர்ச்சியாக ஒரு தினம் விட்டு ஒரு தினம் நடந்த கொடுமைகளை நாம் முறையிட எந்தவித மார்க்கமும் இருக்கவில்லை. இந்த வேளையில்; ஒரு நாள் திடீரென எங்கள் பதினொருபேருக்கு கிளிநொச்சி வங்கிக் கொள்ளைத்; தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், நாளைய மறுதினம் எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துவருகின்றனர் என்றும் சட்டத்தரணி கரிகாலன் என்பவர் என்னை நேரில் பார்த்து தகவல் சொன்னார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எண்ணி, ஏனைய போராளிகளிடம் கேட்டேன். இங்கேயே தொடர்ந்து இருப்போமா அல்லது சிறைச்சாலைக்கு செல்வோமா என்று! சிறைச்சாலைக்கு செல்வதே நல்லது. இங்கு இருந்தால் ஒரு நாளைக்கு உடுகம்பொளை மூளை வரைக்கும் மதுவைக் குடித்துவிட்டு வந்து அனைவரையும் சுட்டுக்கொன்று விடுவான் போல் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்கு மாற்றினால் நல்லது. எல்லாம் சரி நாம் எப்படி பனாகொடை இராணுவ சிறையிலிருந்து, சிவில் சிறைச்சாலைக்கு மாற முடியும்? என்று கேட்டனர்.

நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள மறுத்தால் நீதிபதி எதற்காக என்று கேள்வி கேட்பார். இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தினால் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வோம். இது சிவில் நீதிமன்றம் எனவே எங்களை சிவில் சிறைச் சாலைக்கு மாற்றினால்தான் வழக்கைச் சந்திப்போம். இல்லையென்றால் விசாரணை நடத்தாமலேயே தண்டனை வழங்கும்படி கோரினால் எங்களைச் சிவில் சிறைச்சாலைக்கு மாற்றியே தீர வேண்டும் என்று விளக்கம் கொடுத்ததும் அனைவரும் சம்மதித்தனர்.

வழக்கு விசாரணைக்காக எங்கள் பதினொருபேரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர் இராணுவ அதிகாரிகள். மூன்று நீதிபதிகள் அமர்ந்திருந்தனர். இரண்டு சிங்களவர் ஒருவர் தமிழர். முதலாம் எதிரியான என்னிடத்தில் குற்றப்பத்திரிகையை நீட்டினார் நீதிமன்ற உத்தியோகத்தர்.

பெற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்தேன்;. அவர் திரும்பி நீதிபதியைப் பார்த்தார். நடுவில் இருந்த சிங்கள நீதிபதி சிங்களத்தில் என்னிடம் கேட்டார் ஏன் பெற்றுக் கொள்ளமறுக்கிறீர்கள்? நான் தமிழில் பதில் கூறினேன்: எங்களை இராணுவ முகாமில் சிறைவைத்துக் கொண்டு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களைச் சிவில் சிறைச்சாலைக்கு மாற்றினால், நாங்கள் குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டு வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றதும்,

நீதிபதியின் முகம் சிவந்து உரத்தக் குரலில் சொன்னார், இது சிங்களநாடு, நிர்வாகம் சிங்களத்தில்தான் நடைபெறுகிறது. எனவே, நீங்கள் சொல்லவேண்டியதை சிங்களத்தில் சொல்லுங்கள் என்று என்னைப் பார்த்து சிங்களத்தில் கூறினார்.

ஓர் நீதிபதி இப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறிமத்தியூவின் சகோதரர் பேசுவது போன்று, ஓர் பெஞ்சின் தலைவர் பேசுகிறார். நான் ஒரே வார்த்தையில் சொன்னேன், எனக்கு சிங்களம் தெரியாது என்று. மீண்டும் முறைத்துவிட்டு, நீதிமன்ற அலுவலரிடம் சொன்னார், ஏனையோருக்கு குற்றப்பத்திரிகையை வழங்கும்படி. அவர் மீண்டும் எனக்கு அருகில் நின்ற, சக போராளியான மாணிக்கம்தாசனிடம் நீட்டினார். அவரும் பெற்றுக்கொள்ள மறுத்தார். இப்படியே ஒவ்வொருவராக மறுத்ததும் அலுவலர் நீதிபதியை மீண்டும் பரிதாபத்துடன் பார்த்தார்.

தலைமை நீதிபதியால் இருக்கையில் அமர முடியவில்லை. நாலாபுறமும் சுற்றிப் பார்க்கிறார். தன்னை நாங்கள் அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டார் போலும், எங்கள் அவஸ்தை எங்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த ஆள் தன்னை கேவலப்படுத்துவதாக நினைத்து பல்லைக் கடித்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேச புறப்பட்டார்.

வாட் யூ வோன்ட்? வை ஆ யூ றிபுயூசிங்கி த சார்ச் சீற்? ஏன்றார். மீண்டும் நான் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தமிழில் பேசுங்கள் என்றேன். கோபம் உச்சக் கட்டத்துக்குப் போனது நீதிபதிக்கு. இவ்வளவுக்கும் நீதிபதிகளில் ஒருவரான தமிழ் நீதிபதி எதுவும் தெரியாதவர் போன்று கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில், மீண்டும் ஆங்கிலத்தில் பேசினார். இது சிங்களநாடு. சிங்களத்தில்தான் அனைத்து நிர்வாகமும் நடைபெறுகின்றன. வேண்டுமானால் உங்களுக்கு ஓர் வாய்ப்புத் தருகிறேன். உங்கள் கோரிக்கை என்ன வென்பதை ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்றார்.

நான் இதற்கும் பதில் சொல்லாமல் நின்றபோது என்னருகில் நின்ற எனது தோழர்கள், அண்ண, இங்கிலிசில சொல்லுங்க, சொல்லுங்க என்று ஏக குரலில் மெதுவாகக் கூறினர். நீதிபதியோ வில்லங்கம் பிடித்த ஆளாக இருக்கிறார். உண்மையில் அவருக்குத் தமிழ்த் தெரியவில்லை என்றால் நான் சிங்களத்திலேயே சொல்லியிருப்பேன். இது சிங்கள நாடு என்று சொன்னபடியால்தான் நான் சிங்களத்தில் பேசுவதைத் தவிர்த்தேன். இந்த நீதிபதியுடன் சண்டை போடுவதன் மூலம் எங்கள் காரியம் கெட்டுவிடும் போல் தோன்றியதால் எங்கள் கோரிக்கையை நான் ஆங்கிலத்தில் சொன்னேன்.

கோரிக்கையைக் கேட்டதும், அருகில் இருந்த நீதிபதிகளிடம் ஏதோ ஆலோசணை நடத்திவிட்டு, சரி உங்களை சிவில் சிறைக்கு மாற்றினால் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்வீர்களா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நானும் ஆம் என்றேன்.

உடனே உத்தரவு பிறப்பித்து எழுதத் தொடங்கினார். சிறிது நேரத்தில் எங்களிடத்து குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. மறு திகதியும் அறிவிக்கப்பட்டது. 12 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்ட கூண்டிலிருந்து இறங்கிய எம்மை, 2 மணியளவில் வெளிக்கடைச் சிறைக்கு ஏகப்பட்ட இராணுவ வாகனங்களுடன் அழைத்துச் சென்றனர்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 4. 1983 ஆண்டுவெளிக்கடையில் நடந்த இனப்படுகொலை நேரடி சாட்சியம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment