பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 24 1983 ஆண்டு வெளிகட சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 24

நாங்கள், தங்கியிருக்கும் பகுதியிலிருந்து துணுக்காய் செல்வதுதான் திட்டம், துணுக்காய்ப் பகுதிக்கு இந்தத் தீயவரையும் அழைத்துச் சென்றால் எங்கள் மக்கள் எங்களைக் காறித்துப்புவார்கள் என்று நவரெத்தினம் அவர்களுடன் வந்தவர்கள் கூறினர்.

என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு, இவரைச் சுடவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நான் இதற்கு உடன்படவில்லை. இவரை விசாரிப்பதற்கோ தண்டனை வழங்குவதற்கோ எங்களுக்கு உரிமை கிடையாது. நீதிமன்றங்களில் எடுக்கவேண்டிய முடிவை நாம் எப்படி எடுப்பது? மற்றபடி நீங்கள் சொல்வதெல்லாம் கேள்விப்பட்டவை, கேள்விபட்டதை வைத்து எப்படி தண்டனை வழங்குவது?

இப்போது, நன்கு இருட்டிவிட்டது. அந்த நபருக்குப் பாதுகாப்பாக நான்கு பேரை நியமித்தோம். இரவு காவலுக்கும் எங்கள் தோழர்களை நியமித்தோம். நாங்கள் தனியாக கலந்து பேசுவது தன்னைப் பற்றித்தான் என்று அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருந்ததை அறிந்தேன். நவரெத்தினம் அவர்களும், ஏனையவர்களும் இந்தத் தரகையின் விடயத்தில் முடிவுகட்டாமல் இங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினர். காலையில் கதைத்துக்கொள்ளலாம் என்று கூறி எங்களுக்காக வாங்கிவந்திருந்த பாணையும் வாழைப்பழத்தையும் உண்டு விட்டு இரவு உறங்கினோம்.

இன்றுதான் நான் கால்வலியின்றி நித்திரை கொண்டேன். வெதமாத்தையாவின் (சிங்கள வைத்தியரின்) எண்ணையும் புக்கையும் எனது காலிலிருந்த வீக்கத்தையும் வலியையும் குறைத்திருந்தது. ஆனால், நிலத்தில் கால்வைத்தால் கடுமையான வலி ஏற்பட்டது.

விடிந்ததும் நவரெத்தினம் அவர்கள் தகரையைப் பற்றி கதைக்க ஆரம்பித்தார். நான் அனைவரையும் தள்ளிச் செல்லுமாறு கூறிவிட்டு தகரையை அழைத்து, உங்கள் மீதிருக்கும் குற்றச் சாட்டுகள் என்ன? என்று கேட்டேன். களவு எடுத்தது, கொலை செய்தது போன்றவை உண்மை. ஆனால், நான் இப்போது திருந்திவிட்டேன். என்னை மன்னித்து உங்களுடனேயே கூட்டிச் செல்லுங்கள். இனிமேல் எந்தத் தவறும் செய்யமாட்டேன் என்று கூறினார். நீங்கள் களவு எடுக்கும் இடங்களில் பெண்களைக் கற்பழித்ததாகக் கூறுகின்றனர். இவை உண்மையா என்று கேட்டேன். இல்லை, அவர்கள் பொய் சொல்கின்றனர் என்று கூறினார்.

களவும் எடுத்துள்ளார். கொலையும் செய்துள்ளார். மூன்றாவது குற்றச்சாட்டை மட்டும் மறுக்கிறார். இந்தவிடயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருந்தது. பொதுவாக கொலை, மற்றும் களவுகளைச் செய்தவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழ விருப்பம் தெரிவித்தால், அவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதில்லை. ஆனால், இவர் எவ்விதம் கொலை செய்தார் என்பது விளக்கப்படவேண்டும். கற்பழித்துக் கொலை செய்திருந்தால் மரண தண்டனைதான் வழங்கவேண்டும், ஆனால் இவர் மறுக்கிறார்.

நாங்கள் கடந்த இரண்டாண்டுகளாக சிறையிலிருந்து வருகிறோம். இவரது வழக்குகள் பற்றி எமக்குத் தெரியாது. களவு. கொலை இரண்டையும் இவர் ஒப்புக்கொள்கிறார். இவருக்கு மரண தண்டனை வழங்குவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனி ஒரு நபர் இவருக்கு தண்டனை வழங்கி தீப்புச் சொல்ல முடியாது. அந்தத் தகுதி எங்களுக்கு இல்லை என்று நான் கூறினேன். இவரைத் தொடர்ந்து அழைத்துச் செல்வோம் என்று கூறினேன். முடியாது, இவரை நாங்கள் அழைத்துச் சென்றால் எங்கள் இயக்கத்தின் பெயர் கெட்டுவிடும் என்று நவரெத்தினம் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார். இதன்படி நவரெத்தினம் அவர்களின் முடிவு அவரை இங்கேயே கொல்ல வேண்டும் என்பது தெளிவாயிற்று. நவரெத்தினம் அவர்களுடன் வந்தவர்களும் இந்த முடிவையே வலியுறுத்தினர்.

பொதுமகன் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் எமக்குக் கிடையாது. அரசியல் ரீதியான துரோகமோ குற்றங்களோ அவர் செய்யவில்லை. சமுதாயத்தில் நடக்கும் களவு, கொலை இவற்றில் சம்பந்தப்பட்ட இந்தக் குற்றங்களை சமுதாயம் சார்ந்த நிர்வாகம் விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். அந்த நிர்வாகம்தான் நீதிமன்றம்.

நாங்கள் காட்டுக்குள் இருந்துகொண்டு ஒருவரது உயிரைப் பறிப்பதற்கு நான்கு ஐந்துமணி நேரத்தில் முடிவெடுப்பது சரியானது அல்ல. மரண தண்டனை என்பது ஒரு நீதிபதியால் வழங்கப்படக்கூடாது என்று எண்ணித்தான் முன்னர் ஜூரர்களை நியமித்தனர். ஏழுபேர், ஒன்பதுபேர், பதினொருபேர் என்று குற்றச்சாட்டுக்கு ஏற்ப ஜூரர்களை நியமித்து விசாரணை நடத்துவர். அதிகமானவர்கள் வழங்கும் தீர்ப்பை நீதிபதி ஏற்று தண்டனை வழங்குவார். இப்போது ஜூரர்கள் முறையையே நீக்கிவிட்டனர் என்பது வேறு விடயம்.

இந்தத் தகரை எங்களது வாகனத்தில் ஏறாமல் வேறு வழியில் ஓடித் தப்பியிருந்தால் இந்தப் பிரச்சினையே எழாது. இவரை நாங்கள் அழைத்துவந்துவிட்டோம் என்பது பெரும் குற்றச் சாட்டாக சுமத்தினர். நாங்கள் அழைத்து வந்ததன் நோக்கம் படகுகளிலிருந்து எந்த இடத்தில் இறங்கினோம் என்பது இவர் மூலம் கசிந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக மட்டுமே. மதியம் ஒரு மணியாகியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இன்றைய மதிய உணவு செம்மலையிலிருந்த எங்கள் இயக்க அங்கத்தினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நவரெத்தினம் அவர்கள்தான் இந்த ஏற்பாடையும் செய்திருந்தார்.

சோறும் மீன் கறியும் சமைத்து உழவு இயந்திரத்தில் கொண்டு வந்திருந்தனர். உணவுக்குப் பின் சூரியன் சாயும் நேரம் அங்கிருந்து துணுக்காய்க்குப் புறப்படுவது என்பது திட்டம் உணவு உண்டபின்னரும் தகரையின் தண்டனைப் பற்றி கதைக்க ஆரம்பித்தனர். இப்போது எறக்குறைய 20பேர் வரையில் கூடி இதுபற்றி கதைத்தனர். எங்கள் தோழர்களும், நவரெத்தினத்துடன் வந்தவர்கள், உணவு சமைத்துக் கொண்டுவந்தவர்கள் என்று அனைவருமே தகரைக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று இறுதி முடிவெடுத்து என்னிடம் சம்மதம் கேட்டனர்.

எனது தனிப்பட்ட அபிப்பிராயம், மரண தண்டனை வழங்கக் கூடாது என்பதாகும். எங்களுக்கு விசாரணை செய்யும் அதிகாரம் இருந்தால் அவரை எங்களுடன் அழைத்துச் சென்று சரிவர விசாரணை செய்து அதில் அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி என்று கண்டால் மட்டுமே தண்டனை வழங்கலாம். இதுவே எனது அபிப்பிராயம் என்று கூறினேன்.

தகரையை அழைத்துச் செல்ல முடியாது. இதன் மூலம் எங்கள் இயக்கத்துக்கு கெட்ட பெயர் வரும். எங்கள் பகுதி மக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று நவரெத்தினம் தனது பொறுப்பை வெளிப்படுத்தினார். இப்போது நேரம் மூன்றுமணியாகிவிட்டது. என்னாலும், இராமநாதன் அவர்களாலும் நடக்க முடியாது என்பதனால், ஏனைய அனைவரும் சற்றுத் தூரம் தள்ளிச் சென்று ஒன்று கூடி தனியாகக் கதைத்து இறுதி முடிவு ஒன்றுடன் என்னிடம் வந்தனர்.

தகரை ஒரு சமூக விரோதி, அவர் களவு எடுத்ததையும், அந்த வேளை கொலை செய்ததையும் உங்களிடத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இதை மட்டும் செய்யவில்லை, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கியுள்ளார். இவருக்கு மரண தண்டனை வழங்குவதில் எந்தவிதத் தவறுமில்லை. அப்படி நாங்கள் செய்தது தவறு என்றால், அதே மரணதண்டனையை எங்களுக்கும் வழங்கலாம். குறிப்பாக எனக்கு மரணதண்டனை வழங்கலாம் என்று நவரெத்தினம் அவர்கள் கூறினார்.

தகரைக்கு மரண தண்டனை வழங்கியது தவறு என்று கண்டபின் இன்னுமொரு தவறைச் செய்யச் சொல்கிறீர்கள், அப்படித்தானே என்று நான் கேட்டதற்கு, இவருக்கு ஒரு மரணதண்டனையில்லை, மூன்று மரணத் தண்டனைகள் வழங்க வேண்டும் என்று மேலும் உறுதிப் படுத்தினார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை என்பது நியாயமானதே, ஆனல் அந்த மரண தண்டனையை வழங்குவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறதா என்பதுதான் எனக்கிருந்த சந்தேகம். நீதி விசாரணை நடத்தி ஒரு நபருக்குத் தண்டனை வழங்கும் தகுதியும் அதிகாரமும் எங்களுக்கு இல்லை என்பது மட்டுமே தகரையின் விடயத்தில் எனக்கிருந்த தயக்கம். பிற்காலங்களில் இயக்கங்களுடைய தகுதியே கொலை செய்வதும் மரணதண்டனைகள் வழங்குவதுமே அவற்றுக்கான வளர்ச்சியின் அளவுகோலாக மாறின.

தகரைக்கு மரணதண்டனை வழங்குவதற்கு நான் உடன்படமுடியாது. நீங்கள் கூறுவதை எழுத்தில் எழுதி அதில் கையொப்பமிட்டு கொடுத்து அதனை தலைமைப்பீடம் ஏற்றுக்கொண்டால் சரி. என்னிடம் அனுமதி பெற்றுத்தான் இவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது என்று யாரும் சொல்லக்கூடாது. அடுத்தப்படியாக நாங்கள் இரண்டாண்டுகளாக சிறையிலிருந்து வருபவர்கள். இயக்கத்தின் இரண்டாண்டு செயற்பாடுகளும் எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் தண்டனை வழங்கப்போகும் நபர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர். எனவே, நீங்கள் முடிவெடுக்கலாம் என்று கூறினேன்.

இப்போது சிறையிலிருந்து வந்த எங்கள் தோழர்களும் இந்த நபருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினர். நவரெத்தினம் அவர்களுடன் துணுக்காயிலிருந்து வந்தவர்கள் எங்கள் தோழர்களையும் தண்டனை வழங்கவேண்டும் என்று விளக்கங்கள் கூறி சம்மதிக்க வைத்துவிட்டனர்.

எனவே, அவரை விசாரணை செய்யாது தண்டனை வழங்குவதென்று அனைவரும் ஒரு தாளில் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். இதற்காக காகிதத்தாள் வாங்குவதற்காக செம்மலைப்பகுதிக்கு உழவு இயந்திரத்தில் சென்று வந்தனர். காலையிலிருந்து நடந்துவரும் இந்த விவாதங்களையெல்லாம் தகரை தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார். நாங்கள் என்ன கதைத்தோம் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் விவாதங்கள் தன்னைப்பற்றியது என்று அவர் ஊர்ஜித்து அறிந்துகொண்டார்.

முடிவுக்குவர மாலை ஐந்து முப்பது மணியாகிவிட்டது. நாங்கள் துணுக்காய்க்குப் புறப்படும் நேரம் ஏழுமணி என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தகரையை விசாரிப்பது மூன்றுபேர் கொண்ட குழு என்று முடிவெடுத்து அவர்கள் அவரை விசாரணைக்கு அழைத்தனர்.

அதுவரை அமைதியாக இருந்து அவதானித்துவந்த தகரை தன்னை குற்றம் சாட்டிக் கொண்றுவிடுவார்கள் என்று கணித்துக்கொண்டார். அவரை அழைத்துக்கொண்டு சில அடிகள் தூரம் நடந்துவந்ததும் திடீரென ஒரு மரத்தின் மறைவில் பாய்ந்து காடுவழியே ஓடத் தொடங்கிவிட்டார். தகரை ஓடுகிறான் என்று கூறிக்கொண்டு கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தோழர் ஒருவர் அவரை நோக்கிச் சுட்டார். அவரது முதுகில் சூடு பட்டதாகக் கூறினார். ஆனாலும் அவர் தப்பிவிட்டார்.

எங்கள் தோழர்கள் தொடர்ந்து மூன்று முறை அவரை நோக்கிச் சுட்டனர். இவை அனைத்திலிருந்தும் தகரை தப்பிவிட்டார். பின்னர் அவர் சென்ற பாதையில் தேடிச்சென்றவர்கள் காட்டு இலைகளில் இரத்தக்கரை படிந்திருந்ததைக் கண்டு பல கிலோ மீற்றருக்கு தேடிச்சென்றனர். அவர்கிடைக்கவில்லை.

மாலை ஐந்து முப்பது மணியைத் தாண்டியிருந்ததால் மரங்களின் கீழ் வெளிச்சம் இருக்கவில்லை. இருட்டாக இருந்தபடியால் அவர் தப்பிப்பதற்கு சுலபமாகிவிட்டது. மொத்தத்தில் ஒரு மரணதண்டனை அங்கு வழங்கப்படவில்லை. (அப்படித் தப்பிச் சென்ற தகரை முதுகில் இருந்த காயத்துக்கு மறுநாள் நெடுங்கேணியை அண்டிய பகுதியில் இருக்கும் கிரமத்துக்குச் சென்று கைவைத்தியம் பார்த்து ஒரு மாதம் கழித்து துணுக்காய்க்குச் சென்றுள்ளார். பழையபடி அவர் கொள்ளை அடிக்க ஆரம்பித்து அது ஊர் முழுவதும் தெரியவர, அடுத்த இரண்டு மாதங்களில் எங்கள் இயக்கத்தின் தோழர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி பின்நாளில் எனக்குக் கிடைத்தது.)

தகரையைத் தேடிச் சென்றவர்கள் திரும்பிவர நீண்டநேரம் ஆகிவிட்டது. அவர்கள் வந்ததும் நாம் துணுக்காயை நோக்கி உழவு இயந்திரத்தில் பயணமானோம். இரவு முழுவதும் குறுக்கு வழிகளாலும் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளாலும் சென்று காலையில் துணுக்காய்கும் வெள்ளாங்குளத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு பகுதியை அடைந்தோம்.

அங்கு, நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருக்கவேண்டியதாகிவிட்டது. எங்களை அழைத்துச் செல்ல நாவாந்துறையிலிருந்து டீசல் இயந்திரப்படகு ஒன்றை சதீஸ் என்பவர் கொண்டுவருவார். வெள்ளாங்குளத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் வடக்கே இருக்கும் ஒரு முகத்துவாரத்துக்கு படகுவரும் என்பது தகவல். நாங்கள் தங்கியிருந்தது, ஓர் தண்ணீர் இல்லாத குளக்கரையாகும். ஆயினும் இது ஓர் காட்டுப்பகுதியாகும். குளக்கரையிலோ அதை அண்டியபகுதியிலோ கிராமங்கள் எதுவும் இல்லை.

குளத்தின் வெளிப்பகுதியிலும் காடு இருந்தபடியால் மரத்தின் நிழலில் கூடாரம் ஒன்று அமைத்து உணவைச் சமைத்து உண்டோம். நாம் திருமலையிலிருந்து பஸ்சில் அனுப்பிவைத்த ஐந்து மட்டக்களப்புத் தோழர்களையும், கிளிநொச்சியிலிருந்து அழைத்துவர அதே உழவு இயந்திரத்தில் நாங்கள் ஐந்துபேரும் கிளிநொச்சிக்குச் சென்றோம். இரவு வேளை சென்றபடியால் எங்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

இந்த ஐவரில் மூன்று பேர் கிளிநொச்சியில் எனது சகோதரன் ஞானராஜா அவர்கள் நடத்தி வந்த மலையக அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இருவர் வட்டக்கச்சியில் இருக்கும் எனது தந்தையாரின் சகோதரி வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 24 1983 ஆண்டு வெளிகட சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment