1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 23
ஆற்றின் மறுகரையை அடைந்த எம்மை கரையில் இருக்கும்படி கூறிவிட்டு, ராஜ் அவர்கள் மிக வேகமாகச் சென்று மாட்டுவண்டிலை எடுத்துவந்தார். எங்கள் இருவரையும் அதில் அமரும்படி கூறிவிட்டு ஒற்றையடி வழித் தடத்தில் அந்த மாட்டுவண்டியை ஓட்ட அனைவரும் இப்போது சுமையின்றி நின்மதியாக விரைந்து நடந்துவந்தனர்.
எங்களை எந்த இடத்தில் கொண்டுசேர்க்க வேண்டும் என்று குமாரதுரை அவர்கள் கேட்டார். கன்னியாவரை வழிகாட்டினால் போதும், அங்கிருந்து நண்பர் பார்த்தன் அவகர்ளை அழைத்து மறு ஏற்பாடுகள் செய்யலாம் என்று கூறி கன்னியாவுக்கான வழித்தடங்களில் நடக்க ஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் நடந்து, காலையில் சைனாபேயின் பின் பகுதியை அடைந்தோம். விடிந்துவிட்டபடியால் இனியும் நடந்து செல்வது உகந்ததல்ல. சைனாபே விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்பட்டால் நாம் நடந்து செல்வதை விமானிகள் கவனித்து இராணுவத்துக்குத் தகவல் கொடுக்கலாம் என்பதால் இன்றைய பகலை இந்தப் புதரும் காடு சார்ந்த பகுதியிலும்தான் கழிக்கவேண்டும் என்று தீர்மானித்தோம்.
நாம் தப்பித்த மறுதினம் புதர்களில் தங்கியது போன்று இங்கேயும் தங்கவேண்டும். இரண்டு மூன்று பேர்களுக்கு மேல் இந்தப் புதர்களில் தங்க முடியாது. எனவே, பிரிந்து பிரிந்து பல புதரினுள் படுத்து உறங்கும்படி அனைவருக்கும் கூறப்பட்டது. ராஜ் அவர்கள் ஊருக்குள் சென்று பாண் வாங்கிவருவதாகக் கூறிச்சென்று, மதியம் பாணுடன் வந்து சேர்ந்தார்.
ராஜ் அவர்கள் வந்து சேர்வதற்குள் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் அமைதியாக இருக்காது, ஒரு புதருக்குள்ளிருந்து மறுபுதருக்குள் ஓடுவது, சத்தம் போடுவது என்று பல குழப்படிகளைச் செய்ய ஆரம்பித்தனர். இதனால், நாம் தங்கியிருக்கும் இடம் தெரியவரும் என்பதனால், எங்கள் தோழர்கள் அவர்களைச் சத்தம் போட்டனர்.
தேவானந்தன் அவர்களை அழைத்து, ஒழுங்காக சத்தமில்லாமல் இவர்களை இருக்கச் சொல்லுங்கள் என்று மாணிக்கம்தாசன் அவர்கள் சொன்னார். தேவானந்தன் அவர்களும் அவர்களை சத்தமில்லாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டும், அவர்கள் கேட்கவில்லை. அவர் பேச்சுக்கும் அவர்கள் கட்டுப்படுவதாக இல்லை. எனவே, எங்கள் தோழர்கள், மக்கள் நடமாட்டத்துக்கு வந்துவிடுவார்கள்; இனிமேலும் கூட்டமாக சத்தம்போட்டுக்கொண்டுச் சென்றால் பிரச்சினையாகிவிடும் ஆதலால் இந்த இடத்திலிருந்து நாம் தனியாகவும் அவர்கள் தனியாகவும் செல்வது நல்லது என்று கூறினர்.
மீண்டும் தேவானந்தன் அவர்களை அழைத்து, மாலையில் இங்கிருந்து நாம் தனித் தனியாக செல்வது நல்லது. திருகோணமலை நெருங்க நெருங்க மக்கள் நடமாட்டம் அதிகரித்துவந்தது. கூட்டமாகச் செல்வது இனிமேல் முடியாத விடயம். ஆதலால் தனியே பிரிந்து சென்றால், உங்களால் சமாளித்து பாதுகாப்பாக வடக்குக்குச் செல்ல முடியுமா? என்று கேட்கப்பட்டது. அவரும் சரி, தனித்து எங்களால் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்றார்.
மாலையில் அங்கிருந்து நாம் தனியாக கன்னியா நோக்கிப் புறப்பட்டோம், அவர்கள். திரு. தேவானந்தன், திரு. வரதராஜ பெருமாள், திரு. தங்கமகேந்திரன் ஆகியோரது தலைமையில் தனித்துப் புறப்பட்டனர். அவர்கள் எங்கே செல்கின்றனர் என்று நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. தங்கமகேந்திரன் அவர்கள் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் அவர்களுக்கான வழிகாட்டியானார்.
நாங்கள் மீண்டும் நடைப்பயணத்தை ஆரம்பித்து அதிகாலை கிண்ணியாவின் மலை ஒரம் மரத்தடிகளில் தங்கினோம். இங்கிருந்து பார்த்தன் அவர்களை அழைத்து வருவது சுலபமானது என்பதால் திருகோணமலை நகருக்குள் சென்று அவரை அழைத்துவரும்படி குமாரதுரை அவர்களிடம் கேட்டேன். அவர் தனக்குத் தெரிந்த ஒருவரை அனுப்பி பிற்பகலில் பார்த்தன் அவர்களை கன்னியாவின் காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.
எங்களைப் பார்த்ததும் பார்த்தன் அவர்கள். எங்கே தவறிநீர்கள்? ஏன் சொன்ன இடத்துக்கு வரவில்லை. இடையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டதா? என்று ஆவலுடன் கேட்டார். குறித்த இடத்துக்கு வரமுடியாமல் போனது எங்கள் தவறுதான். படகுகள் விரைந்து ஓடமுடியாதவையாக இருந்ததால் நேரம் ஆகிவிட்டது. அதே வேளை நீங்கள் கூறிய அந்த கடல்பாறையின் அருகில் சிங்கள மீன்பிடி மக்கள் குடியிருப்பதாக தங்கமகேந்திரன் அவர்கள் கூறினார்கள். இந்த இரண்டு விடயங்களும் பொருந்தாததால் விடிவதற்கு முன்னர் கரையில் இறங்கிவிட்டோம். அதனால் இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது என்று கூறி முடித்ததும்,
பார்த்தன் அவர்கள் சொன்னார், நான் குறிப்பிட்ட பாறை உள்ள இடத்தில் எந்தச் சிங்கள குடிகளும் கிடையாது. நாங்கள் 24ம் திகதி காலை எட்டுமணி வரை அங்கேயேதான் காத்திருந்தோம். உங்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்கள் இரண்டும் தயாராகவே வைத்திருந்தோம், வாசுதேவா அவர்கள் சொன்னபடி நீங்கள் குறித்த நேரத்தில் வராததால் நாங்கள் இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகவேகமாகச் சென்று ஒன்பது ஐம்பது மணிக்கு மட்டக்களப்புச் சிறைச்சாலையை அடைந்தோம். சிறைச்சாலை மூடியிருந்தது. யாரையும் வெளியில் காணவில்லை, அந்தப் பகுதியில் மயான அமைதிநிலவியது.
எனவே, நீங்கள் சிறையிலிருந்து தப்பிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு புளியந்தீவு பால் நிலையம் எதிரில் இருந்த தேனீர் கடையில் காலை உணவுக்காக தோசை தரும்படி கூறிவிட்டு மேசையில் அமர்ந்தோம். கடையின் உரிமையாளரும் வேறொருவரும் சிறைச் சாலைப்பற்றி சுவாரஸ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தனர். பொலிசாரைப் பிடித்தார்கள், கட்டிப்போட்டார்கள், வான் வந்தது ஏறித் தப்பிவிட்டார்கள், பலர் ஆற்றில் விழுந்து நீந்திச் சென்றார்கள் என்று அடுத்த நபரது ஆவலுக்கேற்ப விபரித்துக்கொண்டிருந்தார்.
நாம் குறுக்கிட்டு, எந்தச் சிறையைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களுக்குத் தெரியாதா? இராத்திரி எங்கட புளியந்தீவுச் சிறையை உடைத்துக்கொண்டு வெலிக்கடையிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தப்பிவிட்டனர். இது தெரியாமலா இங்கே சாப்பிட வந்தீர்கள் என்று அதிர்ச்சியுடன் விபரம் கூறினார்.
தோசையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு. பதறி அடித்துக்கொண்டு ஒரு மணிநேரத்தில் மீண்டும் பாறையை அடைந்தோம். அங்கு யாரும் வந்ததாகத் தெரியவில்லை. மீண்டும் அங்கிருந்து கடற்கரை ஓரமாகவே மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனை வரை சென்றோம் எந்தவித தகவலும் கிடைக்க வில்லை, என்ன ஆனார்கள் என்று கவலையுடன் மீண்டும் மட்டக்களப்புக்குச் சென்றோம். அங்கே!
அங்கே, பொலிசும் இராணுவமும் மட்டக்களப்பு நகரை சல்லடை போட்டுக் கொண்டிருந்தது. சிறையிலிருந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் சிறையின் பின்பகுதியிலிருக்கும் வாவிவழியாகத் தப்பிக்க முயற்சித்ததாகவும், பொலிசார் சிறக்கு விரைந்து அங்கிருந்து பின்பகுதி வாவிவரை சென்று பார்த்தபோது, பலபேர் சிறு சிறு தோணிகளில் துடுப்புடனும், சில துடுப்பகள் இல்லாமலும், கைகளால் வலித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர் என்றும், பொலிசார் தங்களது ஜீப்பின் வெளிச்சத்தை வாவியினுள் செலுத்தி தோணியில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன என்றார் பார்த்தன் அவர்கள்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும் சிறிய தோணிகள் அப்படியே கவிழ்ந்து தண்ணீரில் மிதந்ததாகவும் பலரும் நீந்தி மறுகரையை அடைந்ததாகவும், சிலர் கவிழ்ந்து கிடந்த சிறிய தோணிகளின் மேல் படுத்திருந்து தண்ணீரை வலித்து நீந்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
வெலிக்கடையிலிருந்து வந்தவர்கள் யாராவது மீண்டும் பிடிபட்ட தகவல் ஏதும் கிடைத்ததா என்று கேட்டதற்கு, அப்படி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் நீங்கள் அலிஒலுவை வழியாக வந்ததை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. எப்படிக் கண்டுப்பிடித்தனர் என்று கேட்டதற்கு, நீங்கள் ஒரு டொக்டரை அழைத்து மருத்துவம் பார்த்ததையும், அவர் உணவு பரிமாறியதையும் கூட இருந்த பணியாளர்கள் மூலம் தகவல் இராணுவத்தை எட்டி, அவர்கள் டொக்டரைக் கைதுசெய்யச் சென்றபோது அவர் தப்பிவிட்டார் என்றும் தகவல் கிடைத்தன.
நீங்கள் அலிஒலுவக் காட்டுக்குள் தங்கி பிஸ்கற் சாப்பிட்டதையும் அதன் உறைகளையும் கண்டுபிடித்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்தது. எனவே, உங்களை இராணுவம் கைது செய்துவிடுவார்களோ என்று நாங்கள் பயந்திருந்தோம் என்றார் பார்த்தன் அவர்கள். பாலாற்றுக் கரைவரை இராணுவம் வந்ததையும் அங்கிருந்து எந்தப் பகுதிக்குச் சென்றனர் என்பதை இராணுவத்தால் கண்டறிய முடியவில்லை என்றும் தகவல் திருகோணமலையை எட்டியிருந்தது.
இப்போது நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி கதைத்தோம். மட்டக்களப்பிலிருந்து சிறைக்கு வந்திருந்தவர்களுக்கு பாரிய குற்றச் சாட்டுகள் எதுவும் இருக்கவில்லை. பவானந்தன் அவர்களுக்கும் மகேந்திரன் அவர்களுக்கும் கொலைக் குற்றச்சாட்டுகள் இருந்தன. எனவே, பெரும் குற்றச் சாட்டுகள் இல்லாத ஐந்துபேரை கிளிநொச்சிக்கு பஸ்சில் அனுப்புவது என்று முடிவெடுத்தோம். அதன்படி அன்று இரவு புறப்பட்ட வாகனத்திலும் மறுநாள் காலையில் புறப்படும் வாகனத்திலும் இருவர் மற்றும் மூவராக கிளிநொச்சிக்கு அனுப்பும்படி கூறி அவர்களைப் பார்த்தன் அவர்களுடனேயே அனுப்பிவைத்தோம்.
மீண்டும், திரும்பிச் சென்ற பார்த்தன் அவர்கள் என்னையும் இராமநாதன் அவர்களையும் அழைத்துச் செல்ல கார் ஒன்றினை அனுப்பியிருந்தார். ஏனைய அனைவரையும் திருகோணமலையில் அவரது நண்பர்கள் வீடுகளில் தங்கவைத்தார். திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு செல்வதற்கு படகு ஒன்று ஏற்பாடு செய்து நாளை புறப்படலாம் என்று கூறி திருகோணமலை திரு. குமாரசாமி அவர்கள் வீட்டில் தங்கவைத்தார். (திரு. குமாரசாமி அவர்கள் தற்போது இலண்டனில் இருக்கிறார்.)
திரு. குமாரசாமி அவர்கள் என்னை அவரது காரில் சிங்கள நாட்டுவைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பாசித் தரையில் வழுக்கி விழுந்து காலில் உடைவு ஏற்பட்டது என்று கூறினார். அந்தச் சிங்கள வைத்தியர் எனது காலைப்பார்த்துவிட்டு இதற்கு புக்கை கட்ட வேண்டும் என்று கூறி மாலைவரை காத்திருக்கவைத்து மருந்துகள் தயார்செய்து கட்டுப் போட்டுவிட்டார். அவர் ஒரு சிறந்த வைத்தியர் என்று குமாரசாமி அவர்கள் என்னிடத்துக் கூறினார்
எங்களது வரவு பற்றி துணுக்காயிலிருந்த எங்கள் இயக்கப் பொறுப்பாளர் நவரத்தினம் அவர்களுக்கு பார்த்தன் அவர்கள் தகவல் தெரிவித்து, மறுநாள் முல்லைத்தீவுக்குப் புறப்படுகிறோம் என்றும், மறுநாள் காலையில் செம்மலை என்ற இடத்தில் வந்திறங்குவோம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் தொலைபேசி வாயிலாக உறுதி செய்து எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார்.
நாங்கள் இரவு ஏழுமணியளவில் திருமலை பத்தாம் நம்பருக்கு அடுத்துள்ள பகுதியிலிருந்து படகில் புறப்பட்டோம். இது டீசல் என்ஜீன் பொருத்தப்பட்ட படகு. நாங்கள் எதிர்பார்த்தபடி இந்தப்படகு குறித்த நேரத்துக்கு அங்கு செல்லாமல் மிகவும் தாமதமாக மறுநாள் பிற்பகல் மூன்றுமணியளவில் இடத்தை அடைந்தது.
அங்கு, நவரெத்தினம் அவர்களும் மேலும் நான்கு நண்பர்களும் எங்களுக்காகக் காத்திருந்தனர். பார்த்தன் அவர்கள் எங்களுடன் வரவில்லை. திருகோணமலையிலேயே தங்கிவிட்டார். காரணம், திரு. டேவிட் ஐயாவும். திரு. ஞானவேல் அவர்களும் வந்தாறு மூலையின் காட்டுப் பகுதியில் இருக்கும் ஆட்டுப் பட்டி ஒன்றில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரையும் அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால் அவர் திருமலையில் தங்கிவிட்டார். இரவு ஏழு மணியளவில் தயாரான படகில் நாம் ஏறினோம்.
நாங்கள் வந்திறங்கியதும் ஒரு காட்டுப்பகுதிதான். எனவே, கிராமப்பகுதிக்குள் செல்லாமல் இன்று இரவை இந்தக் காட்டுப்பகுதிக்குள் கழிப்பது என்றும் காலையில் இங்கிருந்து புறப்படுவதற்காக உழவு இயந்திரம் ஒன்றை எடுத்துவருவதாக நவரெத்தினம் அவர்கள் கூறினார். அதன்படி நாம் காட்டுக்குள்ளேயே தங்கினோம்.
நாங்கள் மொத்தம் ஒன்பதுபேர் என்பது நவரெத்தினம் அவர்களுக்குத் தகவல். ஆனால் இங்கு பத்துபேர் இருக்கின்றனர். மற்றவர் யார்? அவரை ஏங்கோ பார்த்தது போன்று இருக்கிறது என்றார். அவர்தான் எங்களது அனுமதியில்லாமல் எங்கள் வானில் ஏறி பின்னர் படகிலும் ஏறிவந்த தண்டிக்கப்பட்ட கைதியாவார். அவரை எங்கும் செல்வதற்கு நாம் அனுமதிக்கவில்லை, எங்களுடனேயே வைத்திருந்தோம். அவர் துணுக்காய்ப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் அவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவரெத்தினம் அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார். இவரது பெயர் “தகரை” இது இவரது பட்டப் பெயர்தான். இவர் பல கொள்ளைகள் செய்துள்ளார். பல பெண்களைக் கற்பழித்துள்ளார், இறுதியில் மட்டக்களப்பில் கொள்ளையிடும் போது கைதுசெய்யப்பட்டவர் என்று விபரம் கூறினார்.
தொடரும்...
No comments:
Post a Comment