பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 9 1983 ஆண்டு வெளிகடை சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 9

கைவிலங்குகளுடன் நாம் சென்ற விமானம் மட்டக்களப்பின் விமானத்தளத்தில் தரை இறங்கியது. விமானம் நிறுத்தப்பட்டதும், காவல்துறை மற்றும் இராணுவம் புடை சூழ மட்டுநகர் சிறையின் அதிகாரிகள் இரண்டு வாகனங்களுடன் விமானத்தின் அருகில் வந்தனர். வழக்கம் போல விலங்குகள் நீக்கப்பட்டு, ஒவ்வொருத்தராக கீழே இறக்கப்பட்டோம். கடைசியாக நானும் சிறிதரன் அவர்களும் இறங்கினோம்.

எங்கள் பகுதியில் காலடிப்பட்டதும், எனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறை வாகனத்தில் ஏறி சிறைச்சாலை வந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வேளையும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. நண்பர்கள் சிறிதரன் மற்றும் நித்தயானந்தன் போன்றோர் அழவேண்டாம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் முதல்தடவையாக, என்னை அறியாமல் அழுதது இதுவே முதல்தடவை. காரணம் நடந்து முடிந்த சம்பவங்கள்தான்.

ஏற்கனவே, எழுதியவற்றில் நண்பர் சிறிகுமார் அவர்களைப்பற்றி அதிகமாகவே குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பை அடைந்ததும் அவர்கள் அனைவரும் என் மனக்கண் முன்னே தோன்றினர். எங்கள் கண்முன்னே எம்மவரை வெட்டிக் கொல்கின்றனர் எங்களால் தடுக்க முடியாத நிலையில் இருந்தோம். ஒரு பூனையைக் கூட விரட்டிக் சென்று அடிக்க முற்பட்டால், அது எங்களை மிரட்டும் அல்லது கடிக்கும். நண்பர் சிறிகுமார் அவர்கள் ஓர் சிங்கள காடையரால் கோடாலியால் வெட்டப்படுகிறார் அப்போதும் கூட அவர் கையைத் தூக்கி அந்தக் கோடாலியைத் தடுக்கவில்லை. இந்நிகழ்ச்சி என்மனதைப் போட்டுவாட்டி எடுத்தது. அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பது விளங்காது இருந்தது.

நான் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல சிறிகுமார் அவர்கள். குடும்பஸ்தர். குட்டிமணி அவர்களை தனது கதாநாயகனாக எண்ணியிருந்தார். அப்படிப்பட்ட குட்டிமணி அவர்களே கொல்லப்பட்டு விட்டார். நாங்கள் எப்படித் தப்பிக்க முடியும் என்று மனதார தனக்குத்தான் மரணத்தண்டனையை நிர்ணயித்துக் கொண்டார் போலும். எதற்காக சிரமப்பட்டு மல்லுக்கட்டிச் சாவான்? கொல்லப்போகிறார்கள்! கொன்றுவிட்டுப் போகட்டும் என்ற முடிவில் மாற்றம் செய்ய அவர் விரும்பவில்லை. இவர் வீரனா? அல்லது கோழையா? என்ற குழப்பம் நீண்ட நாட்களாக இருந்தது. சாவைக் கண்டு அஞ்சாத மனிதர் என்றே எண்ணத் தோன்றிற்று. எனது அறையின் எதிர்புறத்தில் இந்தச் சம்பவம் நடந்தபடியால் என்னால் கவனிக்கமுடிந்தது.

இப்படி அத்தனை பேரும் வீரச் சாவைத் தழுவினர் என்பது வெளியுலகுக்கு சரிவரத் தெரியாது. எனது அறைக்கு அருகில் இருந்த அறைகளை என்னால் பார்க்கமுடிய வில்லை ஆனால், இறந்த அனைவரும் வெறுங்கைகளால் போராடித்தான் இறந்தனர் என்பதற்கான அடையாளங்கள் இருந்தன. எங்கள் இனத்தவர்களின் உடல்களைத் தாண்டி வரும் போது இப்படியான கொலைகாரர்களா சிங்களவர் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். பின்னாளில், இவற்றைவிட மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட பயங்கர கொலைகாரர்கள் எங்கள் இனத்தில் தோன்றுவார்கள் என்று சற்றும் எண்ணவில்லை அன்று!

மட்டக்களப்புச் சிறையில் எங்களது வரவையொட்டி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர் அதிகாரிகள். மீண்டும் பதிவுகள் நடைபெற்றன. விமானத்தில் அழைத்துவரப்பட்ட அனைவரும் சிறையின் மூன்றாவதும் கடைசியுமான கட்டிடத்தின் மேல் தளத்தில் அடைக்கப்பட்டோம். கீழ் தளத்தில் அறைகள் இருந்தன. எங்களை அடைத்தப்பகுதி மண்டபம் போன்ற அமைப்பைக் கொண்டது. அறைகள் கிடையாது. குளியலறை, கழிவறைகள் இரண்டும் உள்ளேயே இருந்தன. பசி, நித்திரைக் கலக்கம், களைப்பு இவற்றுடன் உள்ளே அடைத்ததும் பலரும் தரையில் விழுந்து உடனேயே உறங்கிவிட்டோம்.

மட்டக்களப்பு சிறை என்பது நகரின் மத்தியில் அமைந்துள்ள ஓர் தீவாகும். புளியந்தீவுதான், நாகரீக நகர். நகருக்குள் நுளைவு வாயிலில் மிகப் பெரிய காவல் நிலையம் உள்ளது. வாவியால் சூழப்பட்ட நகரின் பின்பகுதியில் விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. எனவே, இதுதான் பாதுகாப்பான சிறை என்று அரசாங்கம் கருதித்தான் எங்களை இச்சிறைக்கு மாற்றியது. இந்த இரண்டு பாதைகளைத் தவிர வேறு வழிகளில் இந்நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்றால் வாவிகளைத் தாண்டித்தான் வெளியேற வேண்டும். கோட்டையைச் சுற்றி அகளிகள் அமைப்பது போன்று, இங்கே நகரைச் சுற்றி வாவிகள் இயற்கையாக அமைந்துள்ளன. அரசின் கணிப்புப்படி இந்தச் சிறை பாதுகாப்பான கோட்டை என்பதாகும்!

பகல் பத்து மணியளவில் நித்திரை கொண்ட நாம் மதியம் 2 மணியளவில்தான் விளித்துக்கொண்டோம். மதிய உணவு வழங்கப்பட்டிருந்தது. பாதி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அருகிலிருந்தவர்களிடம் கதைக்க ஆரம்பித்தேன்!

எங்களுடைய கிளிநொச்சி வங்கி வழக்கு புரட்டாதி மாதத்தில் வருகிறது. கண்டிப்பாக எங்கள் வழக்குகளை மட்டக்களப்பில் விசாரிக்க மாட்டார்கள். மீண்டும் கொழும்புக்குத்தான் அழைத்துச் செல்வார்கள். என்ன செய்யலாம் என்றேன்? எங்களது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எஞ்சியிருந்தவர்கள் நாம் ஐந்து பேர்தான். மீதம் ஆறு பேரும் வெலிக்கடை சிறையில் இறந்துவிட்டனர். நான்கு பேரும் ஏக குரலில் சொன்னார்கள் “இங்கிருந்தே நாம் தப்பிவிடுவோம்” என்று. மட்டக்களப்பு சிறையினுள் பிரவேசித்த அன்றே நாம் இங்கிருந்து தப்பிக்கவேண்டும் என்ற முடிவினை எடுத்தோம்.

எங்களை இந்த சிறைக்கு அழைத்து வரும்போது இங்கே பல சிங்கள காவலர்கள் இருந்தனர். அழைத்து வந்த இரவு எங்கள் அறையின் முன்னால் சிங்கள காவலாளி ஒருவரையும் காவலுக்கு நிறுத்தியிருந்தனர். அந்தக் காவலாளி, எங்கள் இளைஞர்களைப் பார்த்து சிங்களத்தில் வெலிக்கடையில் என்ன நடந்தது என்று கேட்டார். கம்பிக் கதவின் உள்ளே இருந்த எம்மவர்கள், “இஞ்ச கிட்ட வாடா விளக்கமாகச் சொல்கிறோம்” என்று அவரைக் தவறான வார்த்தைகளால் பேசியதும் அவர் கீழ்த்தளத்துக்கு ஓடிச்சென்று தன்னைத் தாக்க வந்ததாக முதன்மை அதிகாரியிடம் முறையிட்டார். அன்றிரவே, அனைத்து சிங்கள அதிகாரிகளும் கொழும்புக்கு மாற்றப்பட்டனர். புதிதாக தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கீழ் தளத்தில் திரு. வரதராஜபெருமாள் அவர்களும், இன்னும் சில ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். எதற்காக உங்களை இங்கே அடைத்துள்ளனர் என்று மறுநாள் காலை கேட்டதற்கு, “அம்பாறை மாவட்டத்தில் இயக்கக் கூட்டம் நடத்துவதற்காக வந்த எங்களை காவல்துறையினர் கைது செய்து இங்கே திணித்துவிட்டனர்” என்றார்கள்.

இவர்கள் அல்லாமல், கொழும்பு மகசீன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திரு. வாமதேவன், திரு. மகேந்திரன், திரு. பவானந்தன், திரு. ஞானவேல், திரு. தட்சணாமூர்த்தி மற்றும் ஒருவரும், மட்டக்களப்புச் சிறைக்கு அழைத்து வந்திருந்தார்கள். மேலும் வெலிக்கடை சிறையிலிருந்து திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்களையும் மட்டக்களப்புச் சிறைக்கு அழைத்துவந்திருந்தார்கள். மட்டக்களப்புச் சிறையில் திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். மகசீன் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட நண்பர் வாமதேவன் மற்றும் அனைத்து நண்பர்களும் எங்கள் பகுதியில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வெலிக்கடையில் எற்கனவே தண்டிக்கப்பட்ட கைதிகளாக இருந்த திரு. தங்கமகேந்திரன் அவர்களும் திரு. ஜெயக்கொடி அவர்களும் வெலிக்கடையிலிருந்து எங்கள் பகுதிக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இப்படி அழைத்துவரப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் பகுதியின் கீழ்த்தளத்திலிருந்து அறைகளுக்குள் (செல்) மூன்று மூன்று பேராக அடைக்கப்பட்டனர். கீழ்த் தளம் மேல்தளம் இரண்டிலுமாக மொத்தம் ஐம்பத்திநான்குபேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்ட்டிருந்தோம். அரசியல் கைதிகள் போக வேறு இருவர் இதே கீழ் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொலை, களவு போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள். ஏனைய தண்டிக்கப்பட்ட கைதிகளுடன் அவர்களை அடைக்கமுடியாது என்றும், அந்தச் சிறையில் பாதுகாப்பான வேறு இடம் இல்லாதபடியால் இந்தப் பகுதியில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.

மறுநாள் காலை சிறையின் அதிபர் எங்களைப் பார்வையிட வந்தார். இவரது பெயர், “பிலிப்” திருகோணமலை கத்தோலிக்கத் தமிழர். ஒவ்வொருவராகப் பார்வையிட்டு வந்தவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெலிக்கடையில் நடந்தவற்றைக் கேள்விப்பட்டேன். இப்படி ஓர் மோசமான நிகழ்ச்சி நடந்ததையிட்டு வருத்தப்படுகிறேன். இங்கே உங்களை நல்லமுறையில் பார்ப்பது எனது கடமை. உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

நாங்கள் அன்றைய தினத்திலிருந்தே எங்கள் தப்பிதலுக்கான பணியினை ஆரம்பித்தோம். நாங்கள் தப்பித்துச் செல்வதானால் இங்கிருக்கும் அனைவரையும் எம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும். இது ஓர் சாதாரண விடயமல்ல. நாங்கள் இங்கிருந்து தப்பித்தால், கிழக்கின் எந்தப் பகுதியிலும் மறைந்திருக்க முடியாது. மட்டக்களப்புப் பகுதி அனைத்தும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், காடுகள் தெரியாது. வடக்கின் அனைத்துக் காட்டுப்பகுதிகளும் எனக்கு நன்கு தெரியும். நாம் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மட்டக்களப்பின் எந்த நகர் பகுதிகளிலும் தங்க முடியாது. காடுகளும் தெரியாது, எனவே, ஒரே வழி வடக்குக்கு தப்பிச் செல்வதுதான். வடக்கின் எந்தக் காட்டுக்குள் இறங்கினாலும் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு தடையின்றிச் சென்றடையலாம். ஆகவே, எங்களது தப்பித்தல் முயற்சி வடக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். இந்த முடிவில் மாற்றம் இல்லை என்பதில் தெளிவு ஏற்பட்டது.

எங்களில் இப்போது நான்கு குழுக்களாக இருந்தோம். புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் (கீழ்த்தளம் உள்பட) பதினான்கு பேர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர், திரு. தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் அவர்களது அமைப்பில் இரண்டு பேர் இவை தவிர ஐந்தாவதாக, “ஈழ விடுதலை இயக்கம்” என்று தனிக்கட்சி ஆரம்பித்த டொக்டர் தர்மலிங்கம் அவர்களும், திரு.கோவை மகேசன் ஆகியோர் குழுக்களாக இருந்தனர்.

ஐந்தாவது குழுவான திரு. தர்மலிங்கம் மற்றும் திரு. கோவை மகேசன் ஆகியோர், எங்களின் தப்பித்தல் முயற்சிகளுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. நடுநிலையில் இருந்தனர். இவர்களுக்கு எந்த பாரிய குற்றச்சாட்டுகளும் கிடையாது. அமைதியாக சிறையிலிருந்தாலே அரசாங்கம் தானாக இவர்களை விடுவித்துவிடும். இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதே போன்றுதான் திரு. வரதராஜபெருமாள் அவர்களும் அவர்களது குழுவினரும், அவர்களும் சிறையில் தொடர்ந்திருந்தால் தாங்களாகவே விடுவிக்கப்படுவார்கள். எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பதுதான் தெரியாது. எங்களுக்கும் திரு. வரதராஜபெருமாள் அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

எங்களுக்கு உடைகள் மற்றும் தேவையான உபயோகப் பொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எம்மை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றியுள்ளார்கள் என்று நகரின் பல பகுதிகளுக்கும் செய்திகள் பரவின. எங்களது நிலைபற்றி சிறைக்காவலாளிகள் மற்றும் சிறையின் ஏனைய கைதிகள் வழியாக புளியந்தீவு பொதுமக்களுக்கு செய்திகள் கிடைத்ததும், எங்கள் அனைவருக்குமான உடைகள், உணவுப்பொருட்கள், சில புத்தகங்கள், செருப்புகள் என்று தேவைக்கேற்ப மக்கள் வாங்கிவந்து சிறை அதிகாரிகளிடம் கொடுத்து எம்மிடம் சேர்ப்பிக்கும்படி கூறினர். சிறை அதிகாரிகளால் இவற்றினைத் தடுக்கமுடியவில்லை. இப்படிப் பொருட்கள் கொடுத்தவர்கள் எவரையும் நாம் நேரடியாகப் பார்க்கவில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை அறிந்து அதன் உணர்வின் அடிப்படையில் எமக்குத் தேவைப்படும் பொருள் எதுவென்று தெரிவுசெய்து எங்களுக்கு அனுப்பிவைத்தமை எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதவை.

இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட மூன்றாம் நாள் மேலும் ஒருவரைக் காயங்களுடன் அழைத்துவந்து சிறையின் மருத்துவமனையில் அனுமதித்தனர். கால்கள் நடக்க முடியாத நிலையில் ஸ்ரெட்சரில் அவரைத் தூக்கிவந்திருந்தனர். அவரது பெயர் திரு. இராமநாதன்! வவுனியா விமானப் படை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யும் போது வேண்டுமென்றே திரு. இராமநாதன் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியிருந்தனர். இவரும் எங்களது புளொட் அமைப்பைச் சேர்ந்தவர். இவருடன் நாங்கள் பதினாறு பேராக ஆனோம். அத்துடன் நாங்கள் தப்பிச் செல்வதென்றால், இவரையும் தூக்கிச் செல்ல வேண்டும்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 9 1983 ஆண்டு வெளிகடை சிறையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment