பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 8 1983 ஆண்டு வெளிக்கடை சிறையில் இனப்படுகொலை நேரடி சாட்சியம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 8

காலை ஐந்து முப்பது மணிக்கு ஒவ்வொருவராக கீழே இறங்குங்கள் என்றனர். திட்டமிட்டபடி முறையாக மாணிக்கம்தாசன் அவர்கள், மகேஸ்வரன் அவர்கள் என்று இறங்கி வரிசையாக நின்றனர். இறுதியில் சிறிதரன் அவர்கள் என்னையும் முதுகில் சுமந்து கொண்டு (மூட்டை சுமப்பது போல்) இறங்கினார். ஒவ்வொருவராக பார்வையிட்டு வந்தார் விங்கொமாண்டர். என் அருகில் வந்ததும் ஓர் சிப்பாய் என்னைச் சுட்டிக்காட்டி இவன்தான் என்றார். விங்கொமாண்டர் சிங்களத்தில் நீ என்ன கதைத்துக் கொண்டிருந்தாய் இரவு முழுவதும் என்று மிரட்டும் தொணியில் கேட்டார். நீ தனியாக இந்தப்பக்கம் வந்து நின்று கொள் என்றார். அவரைத் தாண்டி சிறிதரன் அவர்கள் என்னைத் தூக்கிச் செல்லும் போது உனது மற்றக் காலையும் உடைக்க வேண்டும் என்று கூறி முறைத்தார். நான் ஓரமாக அமர்ந்தேன் சிறிதரன் அவர்களும் என்னுடன் நின்று கொண்டார்.

பின்னர் வரிசையில் நின்றவர்களை அழைத்தனர். நாம் திட்டமிட்டிருந்தபடியே அவர்களும் வரிசையாக அழைத்து விமானத்தில் ஏறி அமரும்படி கூறினர். இரண்டு பக்கமும் விமானப்படை சிப்பாய்கள் வரிசையாக நிற்க ஒவ்வொருவராக எம்மவர் விமானத்தில் ஏறினர். விமான வாசலில் வைத்து இருவர் இருவராக கைவிலங்கிடப்பட்டனர்.

இறுதியாக என்னையும் சிறிதரன் அவர்களையும் அழைத்தனர். சிறிதரன் அவர்கள் என்னையும் சுமந்துகொண்டு விமானத்தில் ஏறினார். விமானத்தினுள் நோட்டம் விட்டேன். திட்டமிட்டபடி அனைத்தும் அமைந்திருந்தன. கடைசி இரு இருக்கைகளிலும் அமரும்படி கூறினர். ஜன்னலோரம் சிறிதரன் அவர்களும் நடுப்பகுதியில் நானும் அமர்ந்தோம். விங்கொமாண்டரும் மற்றும் ஒருவரும் உள்ளே வந்தனர். என்னையும் சிறிதரன் அவர்களையும் எழுந்து இருக்கையின் பின்னால் வரும்படி கூறினர். நான் நொண்டிக்கொண்டு ஒரு காலில் எழுந்து இருக்கையின் பின்னால் வந்தேன். சிறிதரன் அவர்களும் அவ்விதமே வந்தார். இருவரையும் இருக்கையின் பின்புறத்தின் இடைவெளியில், தரையில் அமரும்படி கூறினார். அமர்ந்ததும் எனது வலது கையையும் சிறிதரன் அவர்களது இடதுகையையும் பிடித்து கைவிலங்கினை இருக்கையின் ஒரு காலுக்கீளால் எடுத்து பூட்டிவிட்டார் அந்தச் சிப்பாய்.

எம்மவர்கள் அனைவரும் ஆசனங்களில் இருக்க, நாம் இருவர் மட்டும் பின்பக்கம் பார்த்தபடி இருக்கையின் கீழ் அமர்ந்திருந்தோம். முன் பக்கத்தைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். எனக்கு அருகில் ஓர் விமானப்படை வீரர் துப்பாக்கியுடன் முன்புறத்தினைப் பார்த்தபடி உசார் நிலையில் நிற்க. முன்புறத்தில் ஓர் வீரர் துப்பாக்கியுடன் ஆசனங்களில் இருப்பவர்களின் முகங்களைப்பார்த்தபடி உசார் நிலையில் நின்றிருக்க விமானம் தரையிலிருந்து புறப்பட்டது. நாங்கள் இரவிரவாக கண்விளித்துப் போட்ட திட்டம் சாம்பலானது.

எனக்கு அருகில் தரையிலிருந்த சிறிதரன் அவர்கள் என்னிடத்து எதையோ கூற தயாரானார். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிப்பாய் துப்பாக்கியின் அடிப்பகுதியால் சிறிதரன் அவர்களது தலையில் ஓங்கி இடித்தார். அந்தச் சத்தம் விமானத்தில் இருந்த அனைவருக்கும் கேட்டது. கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானம் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தது.

இரண்டு நாட்களும் நடந்த இந்த தமிழர் அழிப்பு நடவடிக்கையானது கோபத்தினாலோ, ஆத்திரத்தினாலோ நடைபெற்றவையல்ல. யாழ்ப்பாணம் கந்தர் மடத்தடியினில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குழுவினரால் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இப்படிக் கொல்லப்பட்டவர்களது சடலங்கள் 24-07-1983 இரவு கொழும்பு கனத்தை மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

அப்படி அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மரியாதை செலுத்தவென்று குறிப்பாக சிறில் மத்தியூவின் ஆதரவாளர்கள் மைதானத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். மயான நிகழ்ச்சிகள் முடிந்ததும் அந்த இடத்திலிருந்தே தமிழர்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தனர் அந்தச் சிங்கள இனப்பற்றாளர்கள்.

அவர்களில் ஏறக்குறைய இருநூறு பேர்வரை உள்ளடக்கிய வெறி கொண்ட கூட்டம் ஒன்று நேராக வெலிக்கடைச் சிறை நோக்கி ஊர்வலமாக வந்தனர். சிறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்லவேண்டும் என்று சத்தமிட்டுக் கொண்டு முக்கிய கதவுகளைத் தகர்க்க முற்பட்டனர். இந்தச் சிறை வாசலிலும், ஏனைய நாற்புறமும் இராணுவத்தினரே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இராணுவத்தினர் அந்த வெறி கொண்ட கூட்டத்தினை உள்ளே அனுமதிக்கவில்லை. அதே வேளை, முதன்மை சிறை அதிகாரியும் (Chief Jailor) , எஸ்.பி. யும் அந்தக் கூட்டத்தை சமாதானப்படுத்தி நீங்கள் உள்ளே வந்துதான் அவர்களைக் கொல்ல வேண்டியதில்லை. நாங்களே நல்ல செய்தி ஒன்றினை நாளை தருகிறோம் என்று உறுதி அளித்து காடையர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த உறுதி மொழிக் கொடுப்பினை சிறைக்கு வெளியில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த தமிழ் காவல் அதிகாரி ஒருவர் கவனித்துக்கொண்டிருந்தார். அந்த தமிழ் அதிகாரி பின்னாளில் நாம் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்ட பின்னர் மட்டக்களப்புச் சிறையில் காவலுக்கிருந்த தமிழ் அதிகாரிகளுக்கு இந்தச் செய்தியினை அனுப்பியிருந்தார். பல நாட்கள் கழித்து இச் செய்தி எங்களை எட்டியது.

இச் செய்தி முற்றிலும் உண்மையென நாங்கள் நம்பினோம். ஏனெனில், எங்களை வெலிக்கடைச் சிறைக்கு மாற்றப்படும் அன்றைய தினம் சிறையின் காவலாளிகளாக இருந்த தமிழ் அலுவலர்கள் அனைவரும் சிறையினுள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்துத் தமிழ் உத்தியோகத்தர்களுக்கும் வெளிவேலைகளே வழங்கப்பட்டுவந்தன. கைதிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்வது, பிறச் சிறைகளுக்கு காவலுக்குச் செல்வது, நாங்கள் இருந்த சிறைக்கு வெளியேயும் காவலுக்கு நிர்ப்பது போன்ற பணிகளே வழங்கப்பட்டுவந்தன. அப்படி வெளியில் காவலுக்கு நின்ற தமிழ் உத்தியோகத்தர் ஒருவர்தான் மேற்கண்ட தகவலை தெரிவித்திருந்தார்.

தமிழ் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாதபடியால்தான், தமிழ் அதிகாரிகளை இவ்விதம் இடமாற்றம் செய்தனர். இவ்விதம் செய்வதே ஒரு இனப்பாகுபாடுதான். தமிழ் உத்தியோகத்தர்கள் சிறைக்கு உள்ளே பணியாற்றினால், தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவிகள் செய்துவிடுவார்கள் என்று அவர்கள் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். தமிழ் இனம் வேறு, சிஙகள இனம் வேறு என்பது அரசு இயந்திரத்தினுள்ளும் இருந்தது என்பதை இதன் மூலம் எடுத்துக்கொள்ளலாம்.

அரசு அலுவலர்களாக இருந்தாலும், பொதுமகனாக இருந்தாலும் தமிழர்கள் சந்தேகத்துக்குரியவர்கள் என்பது சிங்கள இனத்திடம் ஊறியுள்ள பகையுணர்வாகும். இலங்கை சிங்கள நாடு என்றும் பௌத்தமே அந்நாட்டின் மதம் என்றும் சிங்கள இனத்தவருக்கும் போதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, “மகாவம்சம்” என்னும் அவர்களது வரலாற்று நூலானது சிங்கள இனம் தோன்றியதே பௌத்தத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று போதித்துள்ளது. இவர்களது “பைபிள்” இந்த மகாவம்சம்தான். இந்த மகாவம்சம் இந்தியாவிலிருந்து பௌத்தத்தைப் பரப்பச் சென்ற பிக்குகளால் எழுதப்பட்டது. அதுவும் தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்டது. முழுக்க முழுக்க, சிங்களவர்கள் இன ரீதியாக சண்டையிட்டு தமிழரை அழிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட புத்தகம்தான் இந்த மகாவம்சம்.

இன்றுவரை புத்த பிக்குகள் அதன் வாசகங்களைத்தான் சிங்களவர்களுக்குப் போதித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்த தமிழர்கள் பௌத்தத்தை பெருமளவு வரவேற்று வளர்ச்சிபெறச் செய்யவில்லை. பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட புத்த பிக்குகள் இந்தியாவின் தென்பகுதியில் செய்ய முடியாததை இலங்கையில் செய்தனர்.

ஏனெனில், அன்றைய தமிழ் நாட்டில், ஆட்சியிருந்தது. நிர்வாகம் இருந்தது. வழம்பெற்ற மொழி இருந்தது. வழிபாட்டுக்கு பல தெய்வங்கள் இருந்தன. மக்கள் பன்பட்டிருந்தனர். எனவே, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவிலிருந்து பௌத்தம் பரப்பப் புறப்பட்ட பிக்குகளுக்கு தென் திராவிட நாட்டில் புத்தத்தைப் புகுத்த முடியாமல் போனது. அதே வேளை இலங்கையின் தென்பகுதியில் இருந்த நாகரிகம் குறைந்த, மொழிவழமற்ற, எழுத்து வடிவமில்லாத, வழிபாட்டுக்கு குறிப்பிடும்படியான தெய்வங்களற்ற நிலையைக் கண்ட பௌத்த பிக்குகளுக்கு இந்த இனம்தான் தங்கள் மதத்தை திணிப்பதற்கு சிறந்த இனம் என்று கண்டு, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

சிங்கள இனத்துக்கான வரலாறு என்று எழுதப்பட்டவைதான், தீப வம்சமும், மகா வம்சமும் ஆகும். எப்படி சிறு குழந்தைகளுக்கு, பேய் பிசாசைக் காட்டி உணவூட்டப்படுகிறதோ, அதே போன்றுதான் புத்தப் பிக்குகள் சிங்களவருக்கும் மதத்தைப் போதிப்பதற்காக தமிழர்களைப் பகைவர்களாகக் காண்பித்தனர். சிங்கள இனத்தை நிர்வகிப்பதே பௌத்தம்தான். அந்த அளவுக்கு பிக்குகள் சிங்கள இனத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

சிங்கள இனம் தோன்றியதே பௌத்தத்தைக் காப்பாற்றத்தான் என்பது அவர்களது தலைகளில் ஆணிபோல் அறையப்பட்டுள்ளது. இந்த ஆணியை சுலபமாக யாரும் அகற்றிவிட முடியாது. முன்னாள் சிங்களத் தலைவர்களான திரு.பண்டார நாயக்கா, திரு. ஜெயவர்த்தனா, திருமதி. சிறிமாவோ, திரு. எம்.என்.பெரேரா (இவர்கள் கம்யூனிஸ்டாக இருந்தும்) திரு. பிரேமதாசா, திருமதி. சந்திரிகா, திரு. ராஜபக்சே போன்றோர் சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் தலைவர்களாக வந்து அந்த ஆணியை மேலும் ஆழமாக பதித்தனரே தவிர அதனை அகற்றி எறிய முற்படவில்லை.

தமிழர்கள் பௌத்தத்தையோ, சிங்களவர்கள் இந்து அல்லது சைவ மதத்தையோ தழுவுவது கிடையாது. காரணம் இவை தமக்குள் பகையை வளர்த்ததன் மூலம் வளர்ந்துவிட்ட மதங்கள் ஆகும். தமிழர்கள் மகாவம்சம் போன்று இந்து. சைவ மதங்களை வளர்க்கவென சிங்களவர்களுக்கு எதிராக பைபிள் வடிவிலான தமிழ் வம்சத்துக்கான நூல்கள் எதனையும் எழுதி அவற்றினைப் போதித்து உணர்வுகளைத் தூண்டி சிங்கள இனத்தை அடக்கி ஒடுக்க நினைக்கவில்லை.

இடது சாரிகள் என்று கூறிக்கொண்ட ஜனதாவிமுக்தி பெரமுனையின் ஆரம்பகால தொண்டர்களில், முன்னூறுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் அங்கத்தினராக இருந்தனர். 1971இல் அவர்களது தோல்வியுற்ற புரட்சியின் போது கைது செய்யப்பட்டவர்களில் 200 பிக்குகளும் அடக்கம்.

பாலி மொழி பேசிய பிக்குகள் ஈழத்தை திட்டமிட்டு பிரித்தனர். குகைகளில் பதுங்கியிருந்த இவர்கள் எழுத்துவடிவம் இல்லாத இனமான “கெல” என்ற இனத்துக்கு “சிங்-கெல” என்று பெயர் சூட்டினர் புத்த பிக்குகள். வங்கத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட பல துட்டர்களின் கூட்டமே, வங்கக்கடல் வழியாக இலங்கையின் தென்கரையில் இறங்கினர் என்பது அவர்களது வரலாறு.

இவர்களை வீரம் மிக்கவர்களாக காண்பித்து, தமிழர்களை வீழ்த்தி, பௌத்தத்தை வளர்க்க இவர்களுக்கு கட்டப்பட்ட தலைப்பாகைதான் சிங்கத்திலிருந்து தோன்றியவர்கள், “சிங்களவா” என்பதாகும். இதனையே தீப வம்சத்திலும், மகாவம்சத்திலும் ரீல்விட்டு எழுதி சிங்களவரின் வழிபாட்டு பைபிளாக்கி விட்டனர் பாலி புத்த பிக்குகள். பாலி ஒர் இந்தோ – ஆரிய மொழியாகும். பின்னாளில் புத்த பிக்குகளே சிங்களத்துக்கான எழுத்து வடிவததை அமைத்துக் கொடுத்தார்கள். இவற்றினால் பௌத்தமும், பௌத்த பிக்குகளும் இவர்களது வழிகாட்டியாகினர்.

பிக்குகள் ஆங்காங்கே விகாரைகளை அமைத்து சிங்களவரின் தலைமை இடமாக மாற்றினர் விகாரைகளை. போத்துக்கீசியரும், ஒல்லாந்தரும், பின்னாளில் பிரித்தானியரும் இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தபோது, விகாரைகள் அளிக்கப்படவில்லை.

அப்போது தமிழருக்கென்று மத ரீதியான அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தவில்லை. அரசர்களே தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட்சி செய்து வந்தனர். மதம் என்பது தமிழர் மத்தியில் இரண்டாம் பட்சமாகவே இருந்துவந்தது. சூரியனை வணங்குவது காலம் காலமாக இருந்து வந்த வழக்கமாகும். இவற்றுக்கு அமைப்புகள் தேவைப்படவில்லை. கிறிஸ்தவர்கள் தம் மதத்தை வளர்க்க அமைப்பினை ஏற்படுத்தினர், இஸ்லாம் செய்தது, பௌத்தமும் செய்தது, சைவம் வாய்ப் பேச்சுடன் நின்றது. அரசர்களை அழித்தால் இனம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். சிங்கள இனத்துக்கு அரசர்கள் இல்லாதுவிட்டாலும் பௌத்தம் அவர்களை வழிநடத்தியது. போத்துகீசரால் தமிழ் அரசர்கள் அழிக்கப்பட்டதும் தமிழினம் தலைமையற்றதாகிவிட்டது. தமிழினத்துக்கான பின்னடைவு இதில்தான் தொடங்கியது.

பிரித்தானியர்கள் கொள்ளையிட்டுக் களைத்து நாடு திரும்பும்போது தீய எண்ணங்களைக் கொண்ட சிங்கள தலைவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். வெள்ளையன் ஓடிவிட்டான். இனிமேல் நாங்கள் இந்த நாட்டின் எஜமானர்கள் நிர்வாகம், பாதுகாப்பு, படை, நிதி, அனைத்துமே எங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிட்டன. இனிமேல் அடுத்தது என்ன? மகாவம்சக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் எங்கள் கொள்கை என்று முடிவெடுத்தனர் சிங்களத் தலைவர்கள்.

முதல் இராணுவப்படைக்குப் பெயர் சூட்டினர் “ சிங்க றெஜிமெண்ட்” இரண்டாவது படைக்குப் பெயர் சூட்டினர், “கமுனு –றெஜிமெண்ட்” (துட்ட கைமுனு றெஜிமெண்ட்) அதே வேளை எங்களது தமிழ்த் தலைவர்களோ உயர் நீதிமன்றங்களில் வழக்குப் பேசி வருவாய் பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது.

ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் விளித்துக்கொண்டனர் சிங்களவரும் அதன் தலைவர்களும். தமிழின அழிப்புக்கான தயாரிப்பு வேலைகளையும் தொடங்கி பல மைல் தூரம் வந்த பின்னர்தான் துயில் கலைத்தனர் எங்கள் தலைவர்கள்.

நாம் பெரிதும் மதித்த எங்களது காலத்துத் தலைவர்களில் உயர் திரு. செல்வநாயகம் அவர்கள் முக்கியமானவர். அவரும் “கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எம்மினத்தை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். கடவுள் எப்படிக் காப்பாற்றுவார்? எந்தக் கடவுள்? இவற்றுக்கு பதில் கிடையாது. “தன்னால் முடியவில்லை இனிமேல் கடவுள்தான்” என்று தட்டிக்கழித்ததன் சொற்கூற்றுதான் “கடவுள் காப்பாற்ற வேண்டும்” என்பது. சிலருக்கு இது தவறான கருத்தாகத் தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 8 1983 ஆண்டு வெளிக்கடை சிறையில் இனப்படுகொலை நேரடி சாட்சியம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment