பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 20 1983 வெளிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ஒரு நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 20

வெளியில் சென்ற மகேஸ்வரன் அவர்களைக் காணவில்லை, சிறையின் முதல் கதவில் ஒரு மூன்று அங்குல அளவில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். அதனை மூடி வட்டவடிவில் மறைப்புத் தகடு ஒன்றும் அமைத்திருப்பார்கள். யாராவது வெளியிலிருந்து வந்தால் அதன் வழியாகத்தான் பார்த்து கதவைத் திறப்பார்கள். நான் இப்போது அந்தத் தடுப்பை விலக்கி வெளியில் பார்த்தேன். சிறையின் முக்கிய அதிகாரி ஒருவர் தெருவுக்கு அப்பால், அவரது வீட்டின் முன்நின்று கொண்டு சிறைச் சாலையைப் பார்த்துக்கொண்டு நின்றார்.

கதவைத் திறந்துகொண்டு வெளியில் இரண்டு மீற்றர் தூரம் நொண்டிக்கொண்டு வந்து அந்த அதிகாரியை அழைத்தேன். அவரோ மிரண்டு போய் தனது வீட்டின் பின்பகுதியால் ஓடத்தொடங்கினார். நான் அப்படியே சாலையின் நடுப்பகுதிக்கு வந்து மகேஸ்வரன் அவர்கள் சென்ற திசையைப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. திரும்பி மட்டக்களப்பு பொது மருத்துவமனையைப் பார்த்தேன். சில வேளை எங்களது வான் வராதுவிட்டால் ஆன்புலன்சை எடுக்கலாம் என்றை நினைப்பில் பார்வையைச் செலுத்தினேன்.

ஆனால், அந்தத் திசையிலிருந்து ஒரு ஜீப் வந்துகொண்டிருந்தது. நூற்றிஐம்பது மீற்றர் தொலைவில் அது தெரிந்தது. பொலிஸ் அல்லது இராணுவமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, மீண்டும் நான் சிறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். அப்போதும் எம்மவர்கள் யாரும் பிரதான வாயிலுக்கு வந்து சேரவில்லை. இராணுவமோ பொலிசோ இப்போது உள்ளே நுழைந்தால் நான் ஒரு காலுடன் நின்று என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டே கதவைத்திறக்கமுடியாத அளவு குறுக்குச் சட்டத்தை எடுத்து கதவில் பொருத்தினேன். நான் ஊன்றி நடக்கும் தடியை எடுத்து கதவில் இருக்கும் துவாரத்தில் குத்துவதற்குத் தயாராக வைத்துக்கொண்டு, அதே இடுக்கின் வழியாக சாலையைப் பார்த்தேன்.

அந்த ஜீப் வந்து நின்றது. அந்த வாகனம் பொலிசுக்குச் சொந்தமானது. ஜீப் நின்றதும் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஒரு பொலிஸ்காரர் இறங்கினார். சற்று நேரம் சிறையை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்போது சிறையிலிருந்து பயங்கரச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த பொலிஸ்காரர் இப்போது சிறையின் கதவை நோக்கி நடந்துவந்தார். நான் தயாராக துவாரத்தின் நுணியில் தடியை வைத்திருந்தேன். அவர் கதவைத் தட்டி அந்தத் துவாரத்தின் வழியாகத்தான் பார்க்கவேண்டும் அப்படிப் பார்த்தால் குத்துவதற்குத்; தயாராக இருந்தேன்.

அருகில் வந்த அவர் கதவைத் தட்டவில்லை. ஏதோ சிந்தித்தவர் மீண்டும் திரும்பி வேகமாக நடந்து ஜீப்பின் ஓட்டுநர் இருக்கையருகில்ச் சென்று ஜீப்பில் இருந்தவர்களிடம் ஏதோ சொன்னார். அடுத்தகணமே விரைவாகச் சென்று ஜீப்பின் பின்பகுதியில் ஏறிக் கொண்டார். ஜீப் வேகமாக கிழக்குத் திசையில் செல்லும் சாலையில் சென்றது.

இப்போதும் கூட எங்கள் தோழர்கள் பிரதான வாயிலுக்கு வரவில்லை. நானென்றாலும் வெளியில் சென்று வாகனத்தை அழைத்துவரலாம் என்று எண்ணி, மீண்டும் கதவைத் திறந்து சாலையின் நடுப்பகுதிக்கு வந்து மகேஸ்வரன் அவர்கள் சென்ற திசையைப் பார்த்தேன். மகேஸ்வரன் அவர்கள் வேறொரு திசையிலிருந்து ஓடிவந்து கொண்டிருந்தார். என்னருகில் வந்ததும், எதிரில் ஒரு ஜீப் வந்துகொண்டிருந்தது. “நான் அந்த ஜீப்பைக் கண்டதும் மறுபக்கத்துக்கு ஓடி அங்கு ஒழிந்துகொண்டேன். ஜீப் போன பின்னர்தான் வந்தேன்.

“எங்கள் தோழர்கள் பறாக்சில் இருந்த காவலர்களைப் பிடித்துவிட்டனர். ஆனால், வான்தான் ஸ்டார்ட் பண்ண மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. அதனால், வானைத் தள்ளிக் கொண்டு நிற்கின்றனர். அதனைச் சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்தனான். நீங்கள் கேற்றில் நிண்டுகொள்ளுங்கோ, நான் வானுடன் வருகிறேன்” என்று மகேஸ்வரன் அவர்கள் என்னிடம் கூறிவிட்டு மீண்டும் சாலையால் பின்பகுதிக்கு ஓடினார்.

நான் திரும்பவும் சிறைவாசலுக்கு வருவதற்குள் காந்தீயம் வான் எனது அருகில் வந்து நின்றது. அடுத்த வானும் உடனேயே வந்து சேர்ந்தது. வானிலிருந்தவர்களிடம் சிறையின் பெரிய கதவினைத் திறந்து வானை பின்பக்கமாக நோக்கி உள்ளே விடவும் என்றேன். கதவு திறக்கப்பட்டு இரண்டாவதாக வந்த வான் றிவேர்சில் உள்ளே சென்றது.

இந்த வேனை, சிறையின் அனைத்துக் கைதிகளும் எங்களையும் வானையும் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியில் ஓடுவதற்கு ஆரம்பித்தனர். அவர்களை யாரும் தடுக்க முடியவில்லை. பலர் எங்களது வானின் உள்ளேயும் ஏறிக்கொண்டனர். இந்தக் கூட்டத்தின் நடுவில்தான் எங்கள் தோழர்களும் வந்துகொண்டிருந்தனர். வாசலில் எங்களது தோழர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். வானினுள் வேறு கைதிகள் ஏறி அமர்ந்து கொண்டனர்.

வாமதேவன் அவர்களும், பாபுஜி அவர்களும் என்னிடத்தில் வந்து என்ன செய்வது என்றனர். அடித்து இறக்குங்கள் என்றேன். வெளியில் இருந்து வந்த எங்கள் தோழர்கள் கைகளில் வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தனர். அவற்றின் பிடிகளால் அவர்களைத் தாக்கி கீழே இறங்கும்படி மிரட்டினர் அதன் பின்னர்தான் அவர்கள் வானைவிட்டு இறங்கினர்.

கைதிகள் இறங்கியதும் எங்கள் வான்களில் ஏறினர். எல்லோரும் ஏறிவிட்டனர். புறப்படலாம் என்று குரல் கொடுத்தனர். நான் முன்வாகனத்தில் ஏறினேன். வாகன ஓட்டுநரின் அருகில் ஏறுவதற்கு முன்னர் வாமதேவன் அவர்களை அழைத்து டேவிட் ஐயா ஏறிவிட்டார்களா? என்று கேட்டேன். பின்வாகனத்தில் இருக்கிறார் என்றார். பின்வாகனத்திலிருந்தவர்களிடம் பாபுஜி அவர்கள் விசாரித்த போது டேவிட் ஐயா முன்வாகனத்தில் ஏறிவிட்டார் என்று யாரோ கூறிவைத்துள்ளனர்.

அனைவரும் வந்துவிட்டார்களா? என்று மீண்டும் கேட்டதற்கு, இரண்டு வாகனங்களிலிருந்து ஒருசேர அனைவரும் வந்துவிட்டார்கள் என்று ஏக குரலில் கோசமிட்டனர். சரி புறப்படலாம் என்று முதல் வாகன ஓட்டுனருக்கு கூறினேன். மறுவாகனத்தை ஐம்பது மீற்றர் இடைவெளி விட்டு ஓட்டிவரவும் என்று கூறிவிட்டு, முதல் வாகனத்தின் ஓட்டுநர் சிங்களவாடி வழியாக வானை இயக்கினார்.

சிங்கவாடி வழியாக புறப்பட்ட வானின் முன்பாக பல கைதிகள் ஓடிக்கொண்டே இருந்தனர். பலர் பிரதான வாயிலால் வெளியில் வந்து இருபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.

வாகனத்தை பத்து முதல் பதினைந்து கிலோ மீற்றர் வேகத்திலேயே ஓட்டும்படி ஓட்டுனரிடம் கூறினேன். வெளி ஆட்களுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்படிக்கூறினேன். புளியந்தீவு பாலத்தில் வாகனம் வரும்போது ஒரிருவரைத் தவிர ஏனையோர் தலைகளைத் தாழ்த்தி வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தெரியாத வண்ணம் அமர்ந்துவரும்படி கூறினேன். பாலத்தின் முடிவில் காவல் நிலையம் இருக்கிறது. இதே வேகத்திலேயே பொலிஸ் நிலையத்தின் முன்பாகவும் செல்ல வேண்டும் என்று ஓட்டுனரிடம் மீண்டும் கூறினேன்.

பொலிஸ் நிலையத்தைக் கடக்கும் போது அந்தப் பகுதியைப் பார்த்தேன். பொலிசார் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். பொலிஸ் குவாட்டர்சும் காவல் நிலைய வளாகத்திலேயே இருப்பதால், அங்கிருந்து சில பொலிசார் நிலையத்தை நோக்கி ஓடிவருவதும் தெரிந்தது. இதன் மூலம் சிறை உடைக்கப்பட்ட தகவல் அவர்களை எட்டிவிட்டது என்பதனை அவர்கள் காட்டும் வேகத்தை வைத்து தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தப் பொலிஸ் நிலையத்தில்தான் எங்கள் கவனம் முழுவதும் இருந்தது. நாங்கள் பிடிபடுவதென்றால், இந்தப் பாலத்தில்தான் சாத்தியம். இதனைக் கடந்தால் பெரும் கண்டத்திலிருந்து கடந்துவிட்டதற்கு ஒப்பானது என்று பாபுஜி அவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார். இந்நிலையில் கண்டத்தைக் கடந்துவிட்டோம். பொலிசார் தயாராவதற்கு முன்னர் நாம் அவர்களின் இடத்தைக் கடந்துவிட்டோம்.

பொலிஸ் நிலையததைத் தாண்டியதும் எங்வளவு வேகமாக வாகனத்தை ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகத்தில் ஓட்டும்படி கூறினேன். ஐம்பது மீற்றர் இடவெளியில் அடுத்த எங்களது வாகனமும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

சரியாக பத்து நிமிட ஓட்டத்தில் முகத்துவாரத்தை அடைந்தோம். அங்கே சங்கர் அவர்களும் வேறு சில தோழர்களும் நின்று கொண்டிருந்தனர். படகுகள் தயாராக இருக்கின்றன என்றார். கடற்கரை மணலில் வானின் டயர்கள் சிக்குண்டு நிற்கும் வரை வாகனம் ஓட்டப்பட்டது. மேலும் நகர முடியாது என்றதும் வாகனத்தை விட்டு அனைவரும் இறங்கினோம். படகுகள் சில மீற்றர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.

சிறிதரன் அவர்களும் பாபுஜி அவர்களும் என் இரு கைகளையும் தங்கள் தோழ்கள் மீது போட்டுக்கொண்டு தூக்கிச் சென்றனர். மறு வானிலிருந்து, இராமநாதன் அவர்களை, பவானந்தன் அவர்களும் வாமதேவன் அவர்களும் தூக்கி வந்தனர். படகுகளில் ஏறும் போது எங்களது அனைத்துத் தோழர்களையும் எண்ணிக் கணக்கிட்டுச் சரிபார்த்துக் கொள்ளவும் என்றேன். எண்ணிப் பார்க்கும் போது எங்கள் தோழர்களில் இருவர் குறைகின்றனர். அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய நபர் இருப்பதைக் கண்டோம்.

டேவிட் ஐயாவையும், ஞானவேல் அவர்களையும் காணவில்லை. வாமதேவன் அவர்களிடம் கேட்டதற்கு மிரண்டு போய் ஏதேதோ உளறினார். முன்வாகனத்தில் இருப்பவர்கள் பின்வாகனத்திலென்றும், பின்வாகனத்தில் இருப்பவர்கள் முன்வாகனத்திலென்றும் சொல்லப்பட்டதே தவிர யாரும் சரியாக அவர்களைப் பார்க்கவில்லை. இனிமேல் திரும்பிப் போய் எந்தப்பயனும் இல்லை. அனைவரையும் படகுகளில் ஏற்றும்படி கூறி, அதிகமாக வேறொருவர் வந்திருக்கிறார். அவரையும் படகில் ஏறும்படி கூறினேன். அவரை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வது நல்லதல்ல என்பதால் அந்த முடிவை எடுத்தேன். ஆனாலும் வான் புறப்படும் போதும் வேறு ஆட்கள் யாரும் வாகனத்தில் ஏறக்கூடாது என்று எச்சரித்திருந்;தோம். அந்த வேளையும் அந்த நபர் வானினுள் இருந்துள்ளார். பின்னர் இவர்பற்றி விசாரிக்கலாம் என்று தீர்மானித்து எனது படகிலேயே அவரையும் வைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய இரவு எட்டு நாற்பத்தைந்திலிருந்து ஒன்பது மணிக்குள் படகுகள் புறப்பட்டன. ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெற் பார்சல் தவிர ஏனைய அனைத்தையும் சிறையினுள் விட்டுவிட்டதை அறிந்தோம். ஞானவேல் அவர்களிடம் இரண்டு பார்சல்கள் இருந்தன. டேவிட் ஐயாவையும் ஞானவேல் அவர்களையும் எப்படித் தவறவிட்டீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் சிறையின் பின்பகுதிச் சுவருக்குச் சென்று காத்திருந்தனர். திட்டத்தின்படி பின்பகுதியால் செல்வதுதான் ஏற்பாடு. முன்பகுதிக்கு மாற்றப்பட்டது தொடர்பாக பின்பகுதியில் நின்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் எப்படித் தவறினார்கள் என்பது தெரியவில்லை என்றனர்.

நாங்கள் பயணம் செய்யும் இந்தப் படகுகள் பைவர் இளையினால் ஆனவை. ஒரு படகில் பத்துப்பேர்வரை இருந்தோம். படகின் இயந்திரம் எட்டு குதிரைச் சக்தி விசையைக் கொண்டவை. பத்துப் பேரையும் தாங்காது, மிகவும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் படகுகள் குறிப்பிட்ட இடத்தில் எங்களை இறக்கிவிட்டு விட்டு விடிவதற்குள் மட்டக்களப்புக்குத் திரும்பிவந்துவிட வேண்டும். நான்கு படகுகளும் அலைகள் இல்லா அந்த வங்கக் கடலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.

எனது உடைந்த கால் மேற்கொண்டும் வலியை ஏற்படுத்தியது. தாங்கவே முடியாததால் ஓடிக்கொண்டிருந்த படகின் விளிம்பில் இருந்து கொண்டு காலை கடல் நீரில் நனைத்தேன். படகு ஓடிக் கொண்டிருந்த படியால் காலைப் பின்நோக்கி கடல் நீர் இழுத்துவிட்டது. இதனால், மேலும் உடைவு ஏற்பட்டு வலி அதிகரித்தது. காலை மேல் பகுதியில் வைத்துக்கொண்டு தோழர்கள் மகேஸ்வரன், நித்தியானந்தன் போன்றவர்கள் பிரச்சினை இல்லாமல் ஆற்றைக் கடந்திருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டு இடுப்பில் ஏதோ அண்டுவது போல் தெரிந்தது. தொட்டுப்பார்த்தேன். இராமநாதன் அவர்கள் தங்கியிருந்த மருத்துவமனையைத் திறந்தபின் கதவின் திறப்பினை இடுப்பில் சொருகிவைத்தேன். அதுதான் இடுப்பிலிருந்து அண்டிக்கொண்டிருந்தது.

இந்தத் திறப்பு மாணிக்கம்தாசன் அவர்களிடம் இருக்கவேண்டியது. எப்படி எனது இடுப்பில் என்று யோசித்தபோதுதான் திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் தங்கியிருந்த மகளீர் பகுதி திறக்கப்படாததையும், அவர்களையும் சிறையில் விட்டுவிட்டதையும் உணர்ந்தேன். மாணிக்கம் தாசன் அவர்களும் எனது படகிலேயேதான் இருந்தார். அவரை அழைத்துத் திட்டினேன். நான்தான் மறந்துவிட்டேன் நீங்கள்என்றாலும் ஞாபகப் படுத்தியிருக்கக் கூடாதா என்று!

உண்மையில், பிரதான வாயிலில் நின்ற மாணிக்கம்தாசன் அவர்களை உள்ளே மீண்டும் அனுப்பியது நான்தான். தவறு அவரிடத்தில் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். நாம் செய்துவிட்டது பெரும் தவறாகப்பட்டது.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 20 1983 வெளிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ஒரு நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment