1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 18
எனவே, நாளை வெள்ளிக்கிழமை (23-09-1983) இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் சிறை முழுவதையும் நாம் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்தோம். ஏற்கனவே, வகுத்திருந்த திட்டத்தின்படி செயற்படுவது என்றும், வெளியில் இருதரப்பும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று தெரிவிப்பது என்றும் தீர்மானித்தோம்.
நாம் தெரிவித்த சமிஞ்சைகளை தவறாது கடைபிடிக்கவேண்டும், படகுகள் நான்கிற்கும் எரிபொருள் நிரப்பி வைக்கவேண்டும், எங்கள் உத்தரவு லைற் வெளிச்சம் மூலம் கிடைத்ததும் சிறைக் காவலர்கள் குடியிருப்பான பறாக்ஸ்சுக்குள் நுழைந்து அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். காந்தீயம் வாகனம் உட்பட வேறொரு வாகனமும் கொண்டுவரப்படவேண்டும், சிறையினுள் நீங்கள் யாரும் வரவேண்டியதில்லை. எனவே, இரவு ஏழு மணி முதல் எட்டுமணிக்குள் வாகனம் இரண்டு குறிப்பிட்ட ஒழுங்கைக்குள் நிறுத்தப்படவேண்டும். இவையே வெளியில் இருந்த வாசுதேவா அவர்களுக்கும் சங்கர் அவர்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தி.
இவைமட்டுமல்லாமல், நாங்கள் இரவு எட்டு முப்பது மணிக்கு படகுகளில் ஏறி பார்த்தன் அவர்கள் சொன்ன கடல் பாறை அருகே வந்து சேருவோம் என்பதனையும் அவருக்கு அறிவிக்கும்படி வாசுதேவா அவர்களுக்கு தனி ஒரு கடிதத்தில் தெரிவித்தேன். கலந்து கதைத்து முடிவு எடுக்கப்பட்டாகிவிட்டது. இனிமேல் தயாரிப்பு வேலைகள்தான் பாக்கி இருந்தன.
எங்களிடத்து ஏறக்குறைய ஐம்பது கீறீம் கிறக்கர் பிஸ்கற் பக்கற்ருகள் சேர்ந்திருந்தன. அவற்றை நான்கு பொதிகளாகக் கட்டினோம். சீஸ் இருபது பக்கற் வரையில் இருந்தன. அவற்றையும் பார்சல் செய்தோம். இவற்றினைத் தூக்கிவர வேண்டிய பொறுப்பு நண்பர்; பாரூக் மற்றும் நண்பர் யோகராஜாவிடம் ஒப்படைத்தேன். கொம்பாஸ் மற்றும் இலங்கைப் படத்தை தமிழ்ச்செல்வன் அவர்கள் எடுத்துவரவேண்டும் என்றும் கூறியிருந்தேன். இப்படி அனைத்துப் பணிகளும் அவரவரிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை தகவல்கள் அனுப்பப்பட்டன. ஏற்கனவே எங்கள் தோழர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி தகவல் தெரிவித்திருந்ததால், எங்களது இறுதித் தகவலும் கிடைத்ததும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை காலையிலும் வினாயகர் கோவிலிலிருந்து பக்திப்பாடல்கள் ஒலித்தன. எங்களில் சில பக்தர்கள் கிழக்கு நோக்கி வேண்டிக்கொண்டனர்.
வணபிதா. சிங்கராயர் அவர்கள் என்னிடத்தில் வந்து தனது முடிவினைத் தெரிவித்தார். உங்களால் நூறு சதவீதம் உறுதி தரமுடியாது என்றால் நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்றார். நானும் அதுதான் சரியான முடிவு என்றேன். நீங்கள் மட்டுமல்ல மேலும் மூன்றுபேரும் இங்கே இருப்பதால் நீங்கள் பயமின்றி இருக்கலாம். பாரிய குற்றச்சாட்டுகள் இல்லாதபடியால் விரைவில் விடுவித்துவிடுவார்கள் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்து எங்கள் முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பகலில் திருமதி நிர்மலா நித்தியானந்தன் அவர்களுக்கும், திரு. இராமநாதன் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னரே போர்வைகளைக் கிழித்து கயிறு செய்திருந்தோம். அதனை மேலும் பலப்படுத்தி சோதித்துப் பார்த்தோம். சில சமயங்களில் கீழ்த்தள வாசல்வழியாக வெளியேறி காவலாளிகளைப் பிடிக்கமுடியாமல் போனால், ஜன்னல் வழியாக கட்டடத்தின் பின் புறத்தில் இறங்கி வந்து காவலாளிகளைப் பிடிக்கவேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தோம். அதன்படி போர்வையிலான கயிறு பலம் கொண்டதா என்றும் இரண்டு மூன்று பேர்வரை ஒரே நேரத்தில் இறங்குவதற்கு தாங்கக் கூடியதா என்று பரிசோதித்தோம். தாங்கக்கூடியதாகவே இருந்தது.
காவலாளிகளைப் பிடித்தால் அவர்களைக் கட்டுவதற்கு தேவையான கயிறை அளந்து எடுத்து துண்டுகளாக்கினோம். பிளாஸ்டரைப் பிரித்து சுலபமாக ஒட்டக்கூடிய அளவுக்குத் தயார் செய்தோம். ஒருவரின் வாயை முற்றும் முழுதாக மூடக்கூடிய அளவுக்கு வெட்டி மீண்டும் ஒட்டி வைத்தோம்.
மகசீன் சிறையிலிருந்து வந்தவர்களில் வாமதேவன் அவர்கள் கீழ்த் தளத்திலிருந்த படியால், எமது செயற்பாடுகளுக்கு, வாமதேவன் அவர்களை மட்டும் மேல் தளத்துக்கு அன்று இரவு எடுக்கவேண்டியிருந்தது. அதனால், எமது மேல்தளத் தோழர் பாரூக் அவர்களை கீழ்த் தளத்துக்கு அனுப்பி அந்த இடத்துக்கு வாமதேவன் அவர்களை எடுத்தோம்.
ஆறுமணிக்கு அறைகளைப் பூட்டுவதற்கு வரும் காவலாளிகள் அறையில் இருப்பவர்களின் இலக்கங்களைப் பதிவு செய்து கொண்டு செல்வார்கள். அதிகமான நேரங்களில் ஒருவரே அனைவரினது இலக்கங்களையும் சொல்லிவிடுவர். கீழ்த்தளத்தில் ஒரு அறையில் மூன்று பேர் வீதம் இருந்தனர். எனவே, வாமதேவன் அவர்களின் இலக்கத்தை ஒருவர் சொன்னால் காவலாளி குறித்துக் கொண்டு சென்றுவிடுவார். அவரின் பார்வைக்கு மூன்று பேர் தென்பட்டால் சரி. எனவே, இதனைப் பயன்படுத்தி வாமதேவன் அவர்கள் எடுக்கப்பட்டார் மேல்தளத்துக்கு. இதே போன்று அனைவரும் தமக்குள் தம்மைத் தாமே தயார்படுத்தி வந்தனர்.
மதியம் இரண்டு மணியளவில் பின் பகுதி மின் கம்பத்துக்கு வந்த சங்கர் அவர்கள் தனது கட்டைவிரலை உயர்த்தி தாங்கள் தயார் என்று சைகை காட்டிவிட்டுச் சென்றார். எங்களின் திட்டபடி இன்று உரிய நேரத்துக்கு வாகனங்கள் வராது விட்டாலும் சிறையைப் பிடித்துத் தப்பிப்பதே முடிவாக இருந்தது. மட்டக்களப்பு பொது மருத்துவமனையின் ஆன்புலன்ஸ் எமக்குக் கைகொடுக்கும் என்று மாற்று வழியைத் தீர்மானித்து வைத்திருந்தோம். காரணம் ஞாயிற்றுக் கிழமை எங்களை கொழும்புக்கு அழைத்துச் செல்வார்கள் என உறுதியாகிவிட்டிருந்தது.
வழக்கம் போல் மாலை ஆறுமணிக்கு அறைகளை மூடுவதற்கு அதிகாரிகள் வந்தனர். அன்றும் நாம் தயார் நிலையிலேயே இருந்தோம். எந்தவித சந்தேகமுமின்றி அறைக்கதவுகளை வழமைப் போல் தட்டிப்பார்த்து மூடினார்கள். கீழ்த்தளம் பூட்டப்பட்டு முடிந்ததும், மேல்தளத்துக்கு வந்தனர். குளியலறை ஜன்னல் கழிவறை ஜன்னல் போன்றவற்றைப் பார்த்தவர்கள் அமைதியாக வந்து எங்கள் பகுதியின் கதவை ஆமைப்பூட்டைக் கொண்டு பூட்டினர்.
இரண்டு காவலாளிகள் கீழ்த்தளத்துக்குச் செல்ல ஒருவர் மட்டும் எங்களது இலக்கங்களைப் பதிவு செய்தார். அனைவரது இலக்கங்களும் சொல்லிமுடிந்ததும் குறித்துக்கொண்டு கீழே சென்று அதனை வேறுஒரு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் எமது தளத்துக்கு வந்து கதவிலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்றுகொண்டிருந்தார்.
நாங்கள் தயாரானோம்! திரு. இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி. நிர்மலா நித்தியானந்தன் ஆகியோரின் அறைகளைத் திறக்கும் பெரிய சாவியினை எனது இடுப்பில் சொருகிக்கொண்டேன். எங்கள் பகுதியின் சாவியும் எனது கையிலேயே இருந்தது. இப்போது இரவு ஏழுமணியாகியிருந்தது. குளியலறை ஜன்னல் வழியாக வெளியேயிருந்த எங்கள் தோழர்களது தகவலுக்காக, பாபுஜி அவர்கள் தொங்கிக் கொண்டு காத்திருந்தார்.
அனைவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களான அலுமினியக் கத்தி, இரும்புக்கம்பியிலான கத்தி, மற்றும் அட்டையில் செய்த எஸ்.எம்.ஜி. துப்பாக்கி ஆகியவற்றுடன் அமைதியாகக் காத்திருந்தனர். யாரையும் எழுந்து நடமாடவேண்டாம் என்று கூறியிருந்தோம்.
இந்தத் தாக்குதலில் பங்கு பெறாத எங்கள் தோழர்கள் அனைவரையும் பின்பகுதியின் சுவருக்கு அழைத்துவரும் பொறுப்பு ஞானவேல் அவர்களிடம் ஒப்படைத்திருந்தோம். பிஸ்கற் பொட்டலம், சிறிய றேடியோ மற்றும் டேவிட் ஐயா அவர்களையும் கூடவே அழைத்துவர வேண்டியது ஞானவேல் அவர்களின் கடமை. அவர் தனது பணியில் ஆர்வமாயிருந்தார்.
இரவு ஏழு பதினைந்துக்கு நீலநிறங்கொண்ட வான் ஒன்று நாம் குறிப்பிட்ட ஒழுங்கைக்குள் நிறுத்தப்பட்டது. வானுக்கு மேலே ஏறிய ஒருவர் தனது ஒரு கையை மட்டும் மேலே உயர்த்தி எங்களது ஜன்னலை நோக்கி கையசைத்தார். பாபுஜி அவர்கள் தகவலை எமக்குத் தெரிவித்தார். ஆனால், அடுத்ததாக வரவேண்டிய வான் வரவில்லை. வந்திருக்கும் வான் காந்தியத்துக்குச் சொந்தமானது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
அடுத்த வானுக்காக மேற்கொண்டு அரைமணித்தியாலம் காத்திருந்தோம். நேரம் முடிவடையும் தறுவாயை எட்டியது. எட்டுமணிக்கு இரண்டாவது சிப்ட் காவலர்களும் வந்துவிடுவார்கள்.
ஜன்னல் வழியே தொங்கிக் கொண்டிருந்த பாபுஜி அவர்களும் களைத்து கீழே இறங்கிவிட்டார். வேறொவரை ஏற்றினோம். மணி ஏழு ஐம்பது ஆகிவிட்டது. அப்போதும் அடுத்த வாகனம் வந்து சேரவில்லை. வந்திருக்கும் வாகனத்தைச் சுற்றி எங்கள் தோழர்கள் பத்துப்பேர் வரையில் நடமாடுவது தெரிந்தது. இந்துக் கோவிலிலிருந்து பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இனிமேலும் பொறுக்க முடியாது. நாம் செயலில் இறங்கிவோம் என்று. எற்கனவே, நாம் தெரிவித்திருந்த சைகை வெளிச்சத்தைக் காண்பிக்கும்படி கூறினேன். கடைசி பச்சை வெளிச்சத்தையும் காண்பித்துவிட்டு எங்கள் பகுதிக் காவலாளியிடம் வந்தோம்.
முதலில் நானே அவரிடம் கதைத்தேன். எனக்கு வெளியிலிருந்து உணவு வந்தது. அந்த உணவை உங்கள் காவலாளிகள் எடுத்து உண்டு விட்டனர். இது எவ்வளவு தவறான செயல். வெளியில் உங்களுக்கு உணவு கிடைக்கவில்லையா என்றேன். என்னருகில் மகேஸ்வரன் அவர்களும் வாமதேவன் அவர்களும் மறைவாக நின்று கொண்டிருந்தனர்.
இந்தக் கூற்றைக் கேட்டதும் சற்றே அருகில் வந்தார் அந்தக் காவலாளி. அந்த நேரம் மேல்தளத்தில் வேறு எந்தக் காவலாளியும் இல்லை. மகேஸ்வரன் அவர்களும் என்னுடன் சேர்ந்து பாருங்கள் இப்படியெல்லாம் யாரும் செய்வார்களா? என்று கேட்கும் போது அந்தக் காவலாளி எங்கள் கதவின் கம்பிகளின் அருகே வந்துவிட்டார்.
இதுதான் சரியான நேரம் என்று கருதி நான் கம்பிகளைப் பிடித்துக்கொண்டிருந்த வலது கையினை கம்பிகளின் ஊடாக விட்டு அவரது யூனிபோமின் கொலர் பகுதியைப் பிடித்து கம்பிகளுடன் சேர்த்து பலமாக இழுத்தேன். அவரது நாடி கழுத்து எல்லாம் கம்பிகளின் இடையில் மாட்டிக்கொண்டது. அவர் மூச்சுத் தினறினார். வாயைத் திறக்கமுடியவில்லை.
என்னிடம் இருந்த ஆமைப்பூட்டின் சாவியை எடுத்து வாமதேவன் அவர்கள் கம்பிகளுக்கு நடுவே கைகளை விட்டுத் திறந்தார். அதுவரை நான் பலமாக அவரது யூனிபோமையும் அவரையும் சேர்த்துப் பிடித்திருந்தேன். பூட்டுத்; திற்க்கப்பட்டதும், அவரையும் கதவையும் சேர்த்துத் திறந்து வெளியில் சென்ற மகேஸ்வரன் அவர்களும் வாமதேவன் அவர்களும் அவரது கழுத்தில் அலுமினியக் கத்தியை வைத்து சத்தம் போடக்கூடாது என்று கூறி எங்கள் அறையினுள் அழைத்து வந்து உள்ளே ஓரமாக அமரவைத்தோம்.
நித்தியானந்தன் அவர்களும் சின்னராசா அவர்களும் மற்றும் ஏனையோரும் சேர்ந்து அவரது கைகளைக் கட்டி, பிளாஸ்றர் ஒட்டி உள்மூலையில் அமரவைத்தனர். மூன்று நிமிடங்களுக்குள் இவை முடிவடைந்தன.
தொடரும்...
No comments:
Post a Comment