1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 12
25ம் திகதி நடந்த கொலைகளுக்கு சிறை அதிபர் (எஸ்.பி.) நன்றி தெரிவித்ததையும், ஏனைய பகுதியினை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று உரையாற்றியதை இந்தக் கொமிசனில் மறைத்துள்ளனர். இந்த மூன்று பேரிலும் முக்கியமான குற்றவாளியான சீப் ஜெயிலரை விசாரணைக்கு உட்படுத்தவே இல்லை. முதல்நாள்தான் நடந்துவிட்டது என்று இவர்கள் மறைத்தாலும். அதே போன்று மறுநாளும் நடைபெறுகிறது, அதனையும் பார்த்துக்கொண்டு நின்றனர் இந்த எஸ்.பி.யும், சீப் ஜெயிலரும்.
நாங்கள் கொடுத்த சாட்சியத்தில் இந்த இரண்டு பேரையும்தான் குற்றம் சாட்டியிருந்தோம். இதனாலேயே மறுநாள் அந்த சிங்களவரை ஏவிவிட்டு எங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்னார்கள் அந்த இருவரும்.
இந்த உண்மை கண்டறியும் குழு, உண்மைகளை மறைத்து அதிகாரிகளைக் காப்பாற்றியுள்ளதே தவிர உண்மைகளைக் கண்டறியவில்லை. அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை குற்றம் சாட்டி இருக்கிறதே தவிர அதிகாரிகள் எவருக்கும் பாதிப்படையாமல் பார்த்துள்ளனர். எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் தேவைதானே. அதற்கேற்ப ஜனாதிபதி சந்திரிகாவின் ஆணைக்குழு செயற்பட்டுள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரை சிங்கள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றுதான். இன ரீதியான அரசியல் சிந்தனையே இந்த இருபகுதியினரிடத்திலும் இருக்கும். விசாரணைக் குழுவுக்கென்று யார்வந்தாலும் அவர்களிடத்திலும் இந்தக் கொள்கைத்தான் இருக்கும். விசாரணைக் குழுக்களால் யாருக்கும் எந்தத் தண்டனையும் இதுவரை பெற்றுத் தந்ததாக வரலாறு கிடையாது.
மட்டக்களப்புச் சிறையில், விசாரணைக்கு வந்தவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் என்ற தகவல் சிறை முழுவதும் பரவியிருந்தது. இச் செய்தி இராணுவத்தினருக்கும் சென்றடைந்திருந்தது.
விசாரணைக்கு வந்தவர்கள் விரட்டப்பட்ட செய்தி இராணுவத்தினருக்கு கிடைத்ததிலிருந்து, எங்கள் சிறையைச் சுற்றி அரை மணிநேரத்திற்கு ஒரு தடவை இராணுவ ஜீப் ஒன்று காவல்பணியில் சென்று வரும். இராணுவத்தின் ஒரு பகுதியினரை இந்த ரோந்துப் பணிக்கென அமர்த்தியிருந்தனர். இராணுவத்தினரும் அடிக்கடி சிறைக்கு வந்து வெலிக்கடையிலிருந்து வந்தவர்கள் எப்படியிருக்கின்றனர், பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமா என்று கேட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
இராணுவத்தின் இந்த நடவடிக்கைகளின் காரணமாகவோ என்னவோ சிறையினுள்ளும் வெளியிலும் செய்தி ஒன்று பலமாகப் பரவியிருந்தது. சிறையினுள் இருக்கும் அரசியல் கைதிகளை இராணுவம் கொல்லப்போகிறது என்பதுதான் அந்தச் செய்தியாகும்.. இந்தச் செய்தி இறக்கை கட்டிப்பறந்து கொண்டிருக்கும் வேளை ஒரு நாள் இரவு 10மணியளவில் திடீரென சிறைச்சாலையின் மின்சார விளக்குகள் அனைத்தும் அனைந்துவிட்டன.
விள்க்குகள் அனைந்ததும் சாதாரண குற்றவாளிகள் தங்கியிருந்த பகுதியிலிருந்து யாரோ பலமாகச் சத்தம் போடும் ஓசை கேட்டது. அப்போது எங்கள் பகுதியான மேல்தளத்தில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர். அந்த இருவரும் திடுதிடுவென மேல் மாடியை நோக்கி ஓடினர். இருட்டுச் சூழ்ந்திருந்ததால் நாம் யாரது ஓடுகிறது என்று சத்தம் போட்டுக் கேட்டோம். மிலிற்றரிக்காரர்கள் வந்துவிட்டாங்கள் என்று கூறிக்கொண்டு மொட்டை மாடியை நோக்கி ஓடினர்.
நாங்கள் அவர்களை அழைத்து எங்கள் கதவின் சாவியைத் தந்துவிட்டு ஓடுங்கள் என்று மீண்டும் சத்தமாகக் கேட்டோம். மேலே ஓடியவர்களது சத்தம் அதன் பின்னர் கேட்கவில்லை. நாங்கள் என்னசெய்வதென்று தெரியாது விளித்தோம். உடனே அனைவரையும் சுவர் ஓரமாக நிலத்தில் படுத்துக்கொள்ளும்படி கூறினோம். வாசலில் நின்று துப்பாக்கியால் சுடமுடியாது. உள்ளே வந்துதான் இராணுவத்தினரால் சுடமுடியும். எனவே, கதவின் ஓரமாக நின்று உள்ளே வருபவர்களைத் தாக்கலாம்.
இங்கேயும் அதே வாளிகள் இருந்தன. திரு.மாணிக்கம்தாசன், திரு.மகேஸ்வரன் திரு. பாபுஜி போன்றோரை எங்கள் பகுதியின் கதவுப் பக்கத்தைக் கவணித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, எங்களுடன் இருந்த பேர்வைகளை ஒன்றுடன் ஒன்றை கட்டி இணைத்து எங்கள் பகுதியின் நடுவில் இருந்த தூணுக்கும் பின்சுவரின் ஜன்னலுக்கும் இணைத்துக் கட்டி ஜன்னலைப் பெயர்த்து எடுப்பதற்கான முயற்சியில், திரு. தேவானந்தன், திரு. சிறிதரன், திரு. சுப்பிரமணியம் மற்றும் நான் ஆகியோர் ஈடுபட்டோம். தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் மின்சாரம் வந்து விளக்குகள் எரிந்தன. ஏறக்குறைய ஜன்னல் பெயர்ந்து வரும் வேளையில் மின்விளக்குகள் எரிந்தன.
இராணுவத்தினர் மின்னொளியில் சுலபமாகப் பார்த்து துப்பாக்கியால் சுடலாம் என்பதால் எங்கள் பகுதி மின்விளக்கை அனைத்தோம். மீண்டும் ஜன்னல் பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மொட்டைமாடிக்குச் சென்ற இரண்டு காவலர்களும் படிகளில் இறங்கிவருவதை எம்மவர்கள் பார்த்தனர். கதவருகில் நின்றவர்கள், எங்கே போனீர்கள்? என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டதற்கு, இராணுவம் உள்ளே நுழைந்து சுட்டாலும், என்ற பயத்தில் மொட்டைமாடியுடன் இணைந்தாற் போல் கிளைவிட்டு நின்ற அரச மரத்தின் மேல் ஏறி அதனுள் மறைந்துள்ளனர் அந்த இரண்டு காவலர்களும். எங்களை இராணுவம் சுடும்போது, தங்கள் மீது பட்டு தாங்களும் இறந்துவிட வேண்டிவரும் என்ற பயத்தினால், பாதுகாப்பான இடத்தைத் தேடி மறைந்து கொண்டனராம் அந்த இரு காவலர்களும்.
எல்லாம் சரி இராணுவத்தினர் இப்போது எங்கே இருக்கின்றனர் என்று கேட்டதற்கு, அவர்கள் உள்ளே வரவில்லை, றோட்டால் சென்றனர் அந்த வேளைப்பார்த்து மின்சாரம் நின்றதால், மற்றக் கைதிகள் கத்திவிட்டனர். இதனால் நாங்களும் பயந்து மரத்தில் ஏறிவிட்டோம் என்று தங்கள் அறியாமையையும், பயத்தினையுமிட்டு வருத்தம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் மறைவினில் தரையில் படுத்திருந்தவர்கள் அனைவரையும் எழுந்திருக்கும்படி கூறி, இந்தச் சம்பவத்தை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், உண்மையில் இராணுவம் நுழைந்தால். என்னென்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி தீர்மானித்தோம். துப்பாக்கிகள் எதுவும் உள்ளே எடுக்க முடியாது. எனவே, உள்ளேயே கத்திகள், இரும்புக்கம்பிகள் போன்றவற்றை தயார் செய்து சேகரித்தோம்.
இது ஒருபுறம் இருக்க, நாம் தப்பிப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டோம். அதேவேளை நாம் அனைவரும் ஒன்று சோந்துதான் தப்பிக்க வேண்டும் என்பதனை முக்கியமான அனைவர்களிடத்திலும் கூறினோம். முயற்சிகள் தனித்தனியாக இருந்தாலும், சிறையை விட்டு அனைவரும் ஒன்றாகத்தான் தப்பிப்பது என்றும் அதுவரை இரகசியம் காப்பாற்றப்படவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டும் கூறப்பட்டது. பனாகொடையிலிருந்து தனித்து தப்பித்து ஒடியது போன்று இங்கு யாரும் முயற்சிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
சிறையினுள் இருக்கும் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அதிகமாக இருக்கும் நேரமும், மிக குறைவாக இருக்கும் நேரமும் கணக்கிடப்படவேண்டும். எங்கள் பகுதியையும் கீழ்த் தளப் பகுதியையும் திறப்பதற்கான திறப்புகள் தயாரிக்க வேண்டும. வெளியில் றோந்து பணி எவ்விதம் நடைபெறுகிறது என்பதனைக் கவணிக்க வேண்டும். நாம் உள்ளே இருந்து தப்பித்தால், நீண்ட தூரம் வாகனங்களில் செல்ல முடியாது. காட்டுக்குள்தான் இறங்கவேண்டும். காடுகளை அடைவது என்றாலும் கடல் வழியாகச் சென்றுதான் காட்டையடையவேண்டும்.
சிறையிலிருந்து தப்பித்து, வாகனங்களில் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால், வாழைச்சேனைக்குள் இராணுவம் எங்கள் வாகனங்களை மடக்கிவிடும். சிறையிலிருந்து கடல்வரை வாகனங்கள் பயன்படுத்தபடவேண்டும். எத்தனை வாகனம்? எத்தனை படகுகள்? இவற்றினை வெளியிலிருந்து யார் ஏற்பாடு செய்வது? போன்றவை பற்றி நாங்கள் தனியாக ஆராய்ந்தோம். உள்ளே எமக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கும் வேலையை திரு. மாணிக்கம்தாசன், திரு. பாபுஜி, திரு. வாமதேவன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளித்தொடர்புகள், வாகனங்கள், படகுகள் மற்றும் உரிய இடத்துக்குப் போய்ச் சேரவேண்டிய ஏற்பாட்டினை நானே ஏற்றுக் கொண்டேன். இராணுவ ரோந்து நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, உள்ளே சிறை அதிகாரிகளைக் கண்காணிப்பது இவற்றுக்கும் தனியாக குழு அமைக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் ஆயத்தம் என்ற பின்னர்தான் திட்டமிடுதல் பற்றி கதைப்பது என்ற முடிவெடுத்து நாம் எங்கள் பணிகளை ஆரம்பித்தோம். இதே போன்று ஏனையோரும் தமக்குள் திட்டங்கள் வகுத்துக்கொண்டு செயற்பட்டனர். அவர்களது விடயங்களில் நாங்கள் தலையிடவில்லை.
மட்டக்களப்பில் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மூலமாக தொடர்பை ஏற்படுத்தினேன். திரு. வாசுதேவா அவர்களும், திரு. சங்கர் அவர்களும் எமக்காக செயற்படக் காத்திருந்தனர். அவர்கள் மூலமாக மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து வாகரை முகத்துவாரம் செல்வதற்கான படகுகள் எற்பாடு செய்யும்படி கூறியிருந்தேன். அங்கு விசை கூடிய படகுகள் கிடையாது. டீசல் எஞ்ஜின் பூட்டிய படகுகளும், பத்து கோஸ் பவருக்கு குறைந்த பிளாஸ்டிக் படகுகளும்தான் இருந்தன. எனவே, பிளாஸ்டிக் படகுகளை ஏற்பாடு செய்யும்படி கூறினேன். ஒழுங்கு செய்யும்படி மட்டுமே கூறப்பட்டது. திகதி எதுவென்று கூறவில்லை.
படகுகளுக்கு கூலியும், எண்ணைக்குப் பணமும் வேண்டும் என்ற தகவல் அனுப்பினர். எங்கள் இயக்கத்திலிருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை. எனவே, நான் எனக்குத் தெரிந்த இருவருக்கு திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மூலம் கடிதங்கள் கொடுத்து அனுப்பினேன். அவர்களில் முன்னைநாள் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் வணசிங்கா மாஸ்டர் ரூ 2000ம் கொடுத்தனுப்பியிருந்தார். இன்னொரு நபர் என்ஜினியர் மரியசிங்கம் அவர்கள். அவரோ தனக்கு என்னைத் தெரியாது என்று கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
1978 -1979ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு சூறாவளியின் பின் வடக்கு இளைஞர்கள் 600 பேர் அங்கே தங்கியிருந்து நிவாரணப்பணிகளைச் செய்ததை ஏற்கனவே கூறியிருந்தேன். அப்போது இதே மரியசிங்கம் அவர்கள் என்னைச் சந்திப்பதற்கு, அரசடி மகாவித்தியாலயத்தின் முன்பாகவும், பின்னர் செல்வநாயகம் மெமோரியல்(ஞாபகார்த்த) மண்டபத்துக்கு முன்பாகவும் பலநாள் வந்து காத்து நின்றிருப்பார். காரணம் எங்கள் இளைஞர்களைக் கொண்டு அவர் தெரிவு செய்திருக்கும் பகுதிகளை சீரமைப்பதற்காக அழைத்துச் செல்வார்.
இவரது திணைக்களததில் இருந்து மரமறுக்கும் இயந்திரக் கருவிகள், கோடாலி, மற்றும் வாள் இவற்றைக் கொண்டுதான் மட்டக்களப்பிலிருந்த வாழைச்சேனை சாலைகளில் வீழ்ந்து கிடந்த புளிய மரங்களை வெட்டி அகற்றினோம் 1978ஆம் ஆண்டு. நாம் 300பேர் இரண்டு நாட்களில் அந்தச் சாலையைச் சீர் செய்தோம். பலமாதங்களாக எங்களுடன் பழகிய மரியசிங்கம் அவர்கள் கடிதத்தைப் படித்துவிட்டு தெரியாது என்று கூறியதைத் திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கும் அவரை நன்கு தெரியும். சூறாவளி வேளையில் நாங்கள் பட்ட கஸ்டங்களை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் நன்கு அறிந்திருந்தார்.
பிரதி உபகாரம் எதிர்பார்த்து அவரிடத்து இந்த உதவியைக் கோரவில்லை. நன்கு பழகியவர் என்ற முறையில்தான் பண உதவி கோரினேன். வணசிங்கா மாஸ்டரும் இவர் போன்று பழகியவர்தான். எங்களது தேவை உணர்ந்து அந்த உதவியினைச் செய்தார். அவரது வருவாய்க்கு இந்த உதவி மிகப்பொரியது.
திரு.வாசு அவர்களிடம் இரண்டாயிரம் கொடுக்கப்பட்டது. அவர் படகுகாரர்களுக்கு முன்பணமாக 2000ம் கொடுத்துவிட்டு மேலும் ரூ.2000 தேவை என்றார். ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்திருந்தேன்.
எங்கள் பகுதியான முதலாவது மேல் தளத்துக்கு, பெரிய பூட்டும் திறப்பும்தான் பயன்படுத்திவந்தனர். ஏனைய சிறைகளில் ஒரு சாவிமூலம் அனைத்து கதவுகளையும் திறக்கலாம். வெலிக்கடையிலும், இங்கேயும் நாங்கள் தங்கிய பகுதிகளுக்கு ஆமைப்பூட்டு (Pad Lock) போட்டிருந்தனர். இந்தப் பூட்டுக்கான திறப்பினை நாம் தயாரித்தாக வேண்டும். அவர்களிடமிருந்து தந்திரமாக அவர்களுக்குத் தெரியாமால் எடுத்துத் தரவேண்டியப் பொறுப்பு திரு. வாமதேவன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திரு. வாமதேவன் அவர்கள் ஒரு வாரத்திற்குள் சிறை காவலர்களுடன் பழகி அந்த திறப்பகளை அவர்களுக்குத் தெரியாமல் அபகரித்து கொடுத்தார். ஐந்து நிமிடங்களில் அதைச் சவற்காரத்தில் பதிவு செய்து மீண்டும் சுத்தம் செய்து கொடுத்துவிட்டோம். காவலாளிகள் சந்தேகப்படாத அளவுக்கு மிகவும் லாவகமாக நடந்துகொண்டார் வாமதேவன் அவர்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment