1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 2
சாட்சியை ஆரம்பிக்கலாமா என்று கேட்ட நீதிபதியிடம், நான் நிதானமாகக் கூறினேன். தாங்கள் எங்களது “பி” வார்டின் மேற்பகுதியினைப் பார்த்தீர்கள். கொலையாளிகள் எங்கள் பகுதியையும் உடைத்து உள்ளே நுழைய முனைந்தார்கள். அதன் அடையாளங்கள் அங்கே இருந்தன. நான் சாட்சியம் சொல்லிவிட்டு, அதே பகுதிக்குச் சென்றால் இதே கொலையாளிகள் மீண்டும் எங்கள் பகுதிக்குள் புகுந்து இதே போன்ற படுகொலைகளைச் செய்யலாம்.
எனவே, எங்கள் அனைவரையும் வேறு சிறைச் சாலைக்கு மாற்றினால் நான் சாட்சியம் சொல்கிறேன் என்று ஆணித் தரமாகக் கூறினேன். சற்று யோசித்த நீதிபதி நீங்கள் சொல்வதிலும் நியாயம் உண்டு. ஆனால் சிறைமாற்றம் என்பது என்னால் செய்ய முடியாது. இப்பிரச்சினையை நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் எடுத்துச் சொல்லி விரைவில் மாற்றம் செய்கிறேன் என்று கூறியவர் எழுந்து சென்று முதன்மை ஜெயிலரை அழைத்தார்.
உள்ளே வந்த முதன்மை ஜெயிலரிடத்து சிறை வளாகத்தில் வேறு தனியான இடம் இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயிலர் செக்கிறிகேசன் (Segregation) பகுதி இருக்கிறது அதனைப் பயன்படுத்தலாம் என்றார்.
என்னைப் பார்த்த நீதிபதி, உங்களை இப்போது இருக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இன்று இரவே மாற்றுகிறோம் என்றதும், இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக “தாங்கள் உறுதியளித்தால் நான் சாட்சியம் தருகிறேன்: என்றேன்.
ஜெயிலரை வெளியில் அனுப்பிவிட்டு, எனது பெயர் முகவரியினை தட்டச்சில் பதிவு செய்து கொண்டு முதல் கேள்வியினைக் கேட்டார் நீதிபதி: நீங்கள் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தீர்களா? ஆம் என்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் சொல்ல முடியாத நிலையில், இல்லை என்று சொன்னால் சாட்சியம் செல்லாது என்று எடுத்த எடுப்பிலேயே விசாரணையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த நான் “ஆம் பார்த்தேன்” என்று பதில் கூறினேன்.
“டி” பகுதியில் இருந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பது நேரிடையாக நாம் யாரும் பார்த்ததில்லை. அதே வேளை எங்களுக்கு ஐம்பதடி தொலைவில், ஆயுதங்களுடன் புகுந்து இரண்டாயிரம் பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு, இரத்தக் கரையுடன் கோசமிட்டுச் செல்வதையும் எம் இனத்தவர் இரத்தத்தால் குழிப்பாட்டப்பட்டு அடையாளம் தெரியாத அளவு லொறியினுள் தூக்கி வீசப்படுவதைப் பார்த்த நாம் எப்படி எம்மவருக்காக சாட்சியம் சொல்லாதிருப்பது என்ற அடிப்படையில்தான் நான் சாட்சியம் சொல்ல முன்வந்தேன்.
அதே வேளை, நாங்கள் இருந்த பகுதியில் தொடர்ந்தும் இருந்தால் மீண்டும் நாமும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தினால் எஞ்சிய எம்மவரை இந்தச் சிறையிலிருந்து வேறு பாதுகாப்பான சிறைக்கு மாற்றவேண்டும். எனவே, சாட்சியம் சொல்வதன் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பயந்து போயிருக்கும் எங்கள் தோழர்களை மீட்டுவிடலாம் என்ற முடிவினாலேயே நான் சாட்சியம் சொல்வது என்று முடிவுசெய்தேன்.
நீதிபதியின் அடுத்தக் கேள்வி, நீங்கள் எவற்றை எல்லாம் பார்த்தீர்கள்?
எண்ணமுடியாத கூட்டம், கைகளில் ஆயுதங்களுடன் நண்பர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் தங்கியிருந்த “டி” வார்ட் பகுதியினுள் புகுந்ததை நான் நேரில் பார்த்தேன். அவர்களுள் பலரை என்னால் அடையாளம் காட்ட முடியும். ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் சென்றவர்கள் உள்ளே புகுந்து சத்தமிட்டுக் கொண்டு தாக்குவதும், பின்னர் இரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் வெளியே வருவதும், வெளியே ஆயுதங்களுடன் காத்திருப்போர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களும் எம்மவர் பிணங்களைத் தாக்கிவிட்டு கோசமிட்டுக் கொண்டு வெளியேறியதை நான் பார்த்தேன்.
நீதிபதி: இவை அனைத்தும் தற்செயலாக நடந்தவைதானே? இல்லை! இவை அனைத்தும் திட்டமிடப்பட்டே நடந்தவை என்றேன். எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்? நேற்று இரவு சிறைவாசலில் பலர் கோசமிடுவதும், பின்னர் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. இந்தச் சம்பவம் எங்களுக்கு எதிராக நடந்தவை என்றே நினைக்கிறேன். அடுத்ததாக, மதிய உணவு வழங்கிய பின் தண்டிக்கப்பட்ட கைதிகள் உட்பட அனைவருமே அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு விடுவார்கள். ஆனால், இன்று அப்படி எவரும் அடைக்கப்படவில்லை. உணவு எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அரசமரத்தின் கீழ் கூடிநின்றதை நான் பார்த்தேன்.
நீதிபதி, அப்படிக் கூடி நின்றவர்கள் என்ன செய்தார்கள்? அப்படிக் கூடி நின்றவர்கள் மேலும் பலரைத் திரட்டிக்கொண்டு கோசமிட்டபடி நண்பர் குட்டிமணி இருந்த பகுதிக்குள் புகுந்தனர். அந்தக் கூட்டத்தினுள் சிறை அதிகாரிகளும் இருந்தனர். மரத்தின் கீழ் நின்றவர்களுடன் சிறை அதிகாரிகள் கதைத்துக்கொண்டு நின்றதையும் நான் பார்த்தேன். சிறை அதிகாரிகள் அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கோசமிட்டதையும் நான் நேரிடையாகப் பார்த்தேன்.
நீதிபதி:, நீங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா? இந்தச் சிறையை விட்டு வேறு சிறைக்கு மாற்றினால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் என்று கூறினேன்.
நீதிபதி: ழு.மு. இதனைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். நடைபெற்ற சம்பவங்கள் கைதிகளும் காவலாளிகளும் இணைந்து செய்தனர் என்று கூறுகிறீர்களா? ஆம்! மேலதிகாரிகளும் சேர்ந்து செய்தனர் என்றேன்.
நீதிபதி: எப்படிச் சொல்கிறீர்கள்? மேலதிகாரிகள் அனுமதியின்றி சிறைக்காவலர்கள் தாங்களாகவே மதிய உணவுடன் மூடப்படுபவர்களைத் திறந்துவிட முடியாது. மதிய உணவு வழங்கப்பட்டவுடன் சிறை வளாகமே வெறிச்சோடி கிடக்கும். ஆனால், இன்று மதியம் இரண்டு மணியளவிலும் மொத்தச் சிறைக் கைதிகளும் சிறை மைதானத்திலும், அரச மரத்தடியிலும் முதன்மைச் சிறை அதிகாரியின் அலுவலகத்தின் முன்னும் கூடியிருந்தனர். எனவே, மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் இவை நடைபெற்றன.
நீதிபதி: மேல் அதிகாரிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? முதன்மை ஜெயிலரும் (Chief Jailor) மற்றும் சிறை அதிபரும் (Suprintendent) என்றேன். நீதிபதி: எப்படி? எம்மவர்கள் கொலை செய்யப்பட்டு முடிந்ததும் சிறை அதிபர் ஆற்றிய உரையினை முழுவதுமாக கூறினேன். மேலும் இந்தச் சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களில் ஒரு விமானம் (கெலிகாப்டர்) மிகவும் தாழ்வாக பறந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு முறை சுற்றி வந்து நடந்தவற்றை அவதானித்துச் சென்றது. எங்களுக்கு, விமானத்தின் ஓசை மிக சத்தமாக கேட்டது. இதிலிருந்து இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று கூறினேன். அமைதியாக சிறிது நேரம் யோசனையின் பின் நீதிபதி மீண்டும்.
நீதிபதி: அப்படியாயின் உங்கள் கூற்றுப்படி இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு மேல் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டவை என்கீறீர்களா? ஆம்! என்றேன்.
நீதிபதி: வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எஞ்சியுள்ள எங்கள் அனைவருக்கும் இந்தச் சிறையில் பாதுகாப்பு இல்லை எனவே, எங்களைப் பாதுகாப்பான சிறைக்கு மாற்ற வேண்டும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கும் கொலைகளுக்கும் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவையே நான் சொல்ல விரும்புவது என்று கூறி முடித்தேன் படித்து பார்க்கும் படி கூறி வாக்குமூலத்தின் கீழ் எனது கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார் நீதிபதி.
பின்னர் சிறை அதிகாரிகளை நீதிபதி அழைத்து, என்னை அழைத்துச் செல்லுமாறும், வெளியில் காத்திருந்த மகேஸ்வரனை உள்ளே அழைத்து வரும்படியும் உத்தரவிட்டார்.
வெளியே சென்ற என்னை மகேஸ்வரன் அவர்கள் இருந்த வாங்கில் இருக்கும் படி கூறி மகேஸ்வரன் அவர்களை விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போதைய நேரம் சுமார் இரவு இரண்டு மணியிருக்கும்.
உள்ளே சென்ற மகேஸ்வரன் அவர்கள் பத்து நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தார். அவர் அவ்வளவு வேகமாக என்ன வாக்கு மூலம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே வந்ததும் சற்று முன்னால் மகேஸ்வரன் அவர்களையும், பின்னால் என்னையும் அழைத்துக் கொண்டு ஏறக்குறைய முன்னூறு மீற்றர் தொலைவில் இருக்கும் எங்கள் கொட்டடியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் வேளை,
மகேஸ்வரன் அவர்கள் தன்னருகில் வந்துகொண்டிருக்கும் சிறைக் காவலாளிகளுடன் கதைக்கத் தொடங்கினார். அப்போது ஒரு காவலாளி சிங்களத்தில் கேட்டார். குட்டி மணி பல பேரைக் கொலை செய்துள்ளார். அதனால் அவரைக் கொன்றது சரிதானே என்று மகேஸ்வரனிடத்து கேட்டனர்.
அதற்குப் பதலளித்த மகேஸ்வரன் அவர்கள், குட்டிமணி பலபேரைக் கொன்ற கொலையாளிதான். அவர் கொல்லப்பட்டதில் நான் கவலையடையவில்லை. ஆனால், அவருடன் இருந்த அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டதுதான் எனக்குக் கவலை என்று பதிலளித்தார். அடுத்த சம்பாசனை ஆரம்பிப்பதற்கு முன்னர் நான் சத்தமாக மகேஸ்வரன் அவர்களை அழைத்து என்ன கதை சொல்கிறீர்கள் என்றேன்!
மகேஸ்வரன் அவர்கள் மௌனமாகிவிட்டார். இந்த வேளையில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் பகுதி மூடப்படாமல் மேல் தளத்தில் நின்றவர்கள் எங்களைப்பார்த்து சாட்சியா சொல்லிவிட்டு வருகிறீர்கள். உங்களையும் கொல்வோம் என்று ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.
எங்கள் பகுதிக்கு வந்ததும், எங்கள் தோழர்கள் நடந்தவைபற்றி வினவினர். நடந்தவற்றைக் கூறினேன். சிலர் நின்மதியடைந்தனர். இன்று இரவு வேறு பகுதிக்கு மாற்றிவிடுவார்கள் என்பது அவர்களது திருப்தியாக இருந்தது. மேலும் சிலரோ இது தேவையில்லாத வேலை. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத போது எதற்காக சாட்சியம் சொல்ல வேண்டும் என்று சிலர் கூறினர்.
இறந்த எங்கள் சக போராளிகளுக்காக நான் சாட்சியம் சொல்லச் சென்றது தப்பானதோ என்று என்னை எண்ணத் தூண்டியது. இதனால், கேள்வி எழுப்பிய அனைவருக்கும் நான் விளக்கம் கொடுக்கவேண்டியதானது.
நூன் கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது: நாங்கள் அனைவரும் விடுதலைக்காகப் போராட முன்வந்தோம். “டி” பகுதியில் இருந்தவர்களும் அதே நோக்கத்துடன் செயல்பட்டுவந்தவர்கள்தான். நாங்கள் வேறு வேறு இயக்களாக இருக்கலாம். நோக்கம் ஒன்றுதான். சக போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் போது, நாம் கண்ணால் கண்டவற்றைக் கூட சாட்சியாக சொல்ல முடியாத அளவு பயந்தவர்களாக இருந்தால் நாங்கள் போராடவே வந்திருக்கக் கூடாது. குட்டிமணி ஆட்களின் பகுதிக்குள் நுழைந்ததற்குப் பதிலாக அந்தக் கொலைகாரர்கள் எங்களது பகுதிக்குள் நுழைந்திருந்தால் நாம் யாருமே இப்போது உயிருடன் இருந்திருக்க முடியாது.
நாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பதே சரியானது. நாங்கள் கண்டவற்றை சாட்சியமாகச் சொல்வதற்கு முன்வரவில்லை என்றால் பிற உலகம் எங்களைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் எங்கள் இனத்தவருக்காக சிங்களக் காடையரா சாட்சி சொல்லப் போகிறார்கள். சாட்சிகளே இல்லை என்று திசை திருப்பி விடும் சிங்கள அரசு.
எங்களுக்கு உள்ள ஒரே பயம் சிங்களக் கைதிகள் திருப்பியும் தாக்குவார்கள் என்பதுதான். இந்தப் பகுதியிலிருந்து மாற்றுவோம் என்ற உறுதியின் பின்னர்தான் நான் சாட்சியம் சொன்னேன். அதனையும் மீறி தாக்கப்பட்டால் நான் அதனைச் சந்திக்கத்தான் வேண்டும். நேற்றே நாம் இறந்துவிட்டோம் என்று நினைத்துப் பார்த்தால் இனி ஒருதடவை இறப்பதற்குப் பயப்படவேண்டியதில்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுப்போம் என்று உறுதி எடுத்தால் எவற்றுக்கும் பயப்படவேண்டியதில்லை என்று கதைத்துக்கொண்டிருக்கையில் சிறைக் காவலாளிகள் மிகவும் அவரச அவசரமாக வந்து எங்கள் அறைக்கதவுகளைத் திறந்தனர்.
வரிசையாக, அடுத்தக் கொட்டடியான செக்கிறிகேசனுக்கு நடத்திச் செல்லப்பட்டோம். அங்கே எட்டு அறைகள்தான் இருந்தன. நாம் 27 பேர், ஒவ்வொரு அறையிலும் மூன்று பேராக அடைக்கப்பட்டோம். 24 பேர் போக மேற்கொண்டும் மூன்று பேர் எஞ்சியிருந்தனர். அந்த மூன்று பேரையும் ஒவ்வொரு அறையிலும் அடைத்து மூன்று அறைகளை நால்வர் ஆக்கினர்.
இரவு முழுவதும் யாருக்கும் உறக்கமில்லை எங்களை இந்த எட்டு அறைகளிலும் அடைத்துவிட்டு காவலர்கள் அந்தக் கூட்டத்தின் வாசலில் நின்று கொண்டனர். எங்கள் அறைகளுக்கு தனித்தனி இரும்புக்கம்பிகளாலான கதவுகள் இருந்த போதிலும் இந்த எட்டு அறைகளுக்கும் சேர்த்து ஓர் பொதுவான கம்பிக்கதவும் இருந்தது. அந்தக் கம்பிக்கதவின் அருகேதான் காவலாளிகள் நிற்கின்றனர்.
தொடரும்...
No comments:
Post a Comment