1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 13
மாணிக்கம்தாசன் அவர்கள் ஓர் எஸ்.எம்.ஜி. துப்பாக்கியை அட்டையில் தயார் செய்து கொண்டிருந்தார். எங்களுக்கு சாப்பாட்டுக்காகத் தரப்பட்ட அலுமினியம் தட்டுகள் தடிப்பானதாகவும் பலமுள்ளதாகவும் இருந்தன. அவற்றினை கத்தியின் வடிவத்தில் வெட்டி கூராக்கி அடிப்பகுதியில் பழைய துணிகளைச் சுற்றி, கத்தியைக் கைகளால் பற்றினால் வழுக்கிச் செல்லாத அளவுக்கு பலமுள்ளதாக தயாரிக்கப்பட்ன. இந்த அலுமினியம் கத்தியால் ஓர் காவலாளியின் சீருடையில் குத்தினால் அதனை ஊடுருவி உடலைத் தாக்காது வளைந்து போகும். சீருடையைக் களற்றிவிட்டு நேரடியாகக்குத்தினால் உடலைச் சேதப்படுத்தும். பார்ப்பவர்களைப் பயமுறுத்துமளவுக்குத்தான் இதனை அதிகம் பயன்படுத்தலாம் என்பதில் நாம் தெளிவாக இருந்தோம்.
எங்கள் பகுதிகள் போக மருத்துவமனையில் இருந்த திரு. இராமநாதன் அவர்களின் அறைக்கதவையும், திருமதி. நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் இருந்த மகளீர் பிரிவுக் கதவையும் திறப்பதற்கு பொதுவான ஒரு திறப்பே போதுமானது. எனவே, அந்தத் திறப்பின் அச்சுவடிவத்தையும் சவற்காரத்தில் பதிவு செய்தோம். இந்த முயற்சிக்கு திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் பெரிதும் உதவி புரிந்தார்.
எங்கள் சிறையின் மதிலுக்கு வெளியில் இருக்கும் தெருவின் மின்கம்பம் எங்களது பகுதி கழிவறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் துல்லியமாகத் தெரியும். இந்த இடத்தைத் தெரிவு செய்து வெளியில் இருக்கும் நண்பர் வாசுதேவா அவர்களுக்கு தகவல் கொடுத்தோம். பகல் பத்து முப்பது (10-30) மணியளவில் அந்த இடத்தில் எங்கள் தோழர் ஒருவரை நிறுத்தும்படியும், அவர் அணிந்திருக்க வேண்டிய சட்டையின் நிறத்தையும் தெரிவித்தோம்.
அந்தக் கம்பத்துக்கு அருகில் வந்ததும், அந்தக் கம்பத்தை உற்றுப் பார்த்துக் கொண்டும், அதனைத் தட்டிப்பார்த்துக் கொண்டும் நிற்க வேண்டும். அவர்தான் எங்கள் தோழர் என்பதனை உறுதிப்படுத்தியதும் உடற்பயிற்சிக்காகவும், வெயில் உடலில் படுவதற்காகவும் சிறையின் அந்த மூலைப்பகுதிக்குச் செல்பவர்கள் கையில் வைத்திருக்கும் பொருளை சிறைக்கு வெளியில் எறிவார்கள். அந்தப் பொருளில் எங்கள் தேவைகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றினைப் பார்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
கிருஸ்ணமூர்த்தி அவர்கள் தினமும் எங்கள் பகுதிக்கு வரமுடியாது. ஆதலால் சில வேலைகளை மட்டும்தான் அவரிடத்துக் கொடுத்தோம். இப்போது அளவு எடுத்துவைத்திருந்த சவற்காரத்தை வெளியில் அனுப்புவதற்கு இந்த மின் கம்ப அடையாளததைப் பயன்படுத்தினோம். வாசுதேவா அவர்களுக்கு தகவல் அறிவித்ததும், குறித்த நேரத்தில் சங்கர் அவர்களை அந்த இடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
சங்கர் அவர்கள் வந்து கம்பத்தை முறைத்துப் பார்த்து தட்டிக் கொண்டு நின்றார். மாடி ஜன்னல் வழியாகக் கவணித்து கீழே தயாராக நின்றவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடமையிலிருக்கும் காவலாளிகளின் கண்ணில் அகப்படாமல் சவற்காரமும் விபரங்களும் எழுதப்பட்ட பொருள்களும் கம்பத்தை நோக்கி வீசப்பட்டது. சங்கர் அவர்கள் பொருளை எடுத்துக்கொண்டு சைகையினால் வெற்றிச் சின்னத்தைக் காட்டிச் சென்றுவிட்டார்.
நாம் பலரும் விரைவும் வேகமும் கலந்து செயல்படுவதை ஏனையோரும் கவணித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை நான் அறிந்து கொள்ள விரும்பவில்லை. இதனால் சந்தேகம் அவர்களுக்குள் பரவியது. நித்தியானந்தன் அவர்களும், ஜெயகுலராஜா அவர்களும் நாம் தப்பித்து செல்வதென்றால் எங்களுடனேயே சேர்ந்து வருவதாகவும் தேவையான ஒத்துழைப்புகள் தருவதாகவும் தெரிவித்தனர்.
எங்களுடன் இருந்த திரு. டேவிட் ஐயா அவர்களை, கட்டட வரைவுக்கலைஞர் என்ற முறையில் அழைத்து சிறையின் வரைபடத்தை வரைந்து தரும்படி கூறினேன். அவர்களும் கட்டடம் கட்டுவதற்குப் படம் வரைவது போன்று துல்லியமாக வரைந்து கொடுத்தார். அந்த வரைபடம் பின்னர் எமக்குத் தேவைப்படவில்லை. சிறை முழுவதும் எமக்குத் தெரியவந்தபடியால் வரைபடம் அவசியம் இல்லாதுபோய்விட்டது. என்றாலும் சிறையின் முழுவிபரம் தெரியாதவர்கள் அவர்களின் வரைபடத்தைப் பார்த்து துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு நுனுக்கமாக வரைந்திருந்தார்.
மரியாதைக்குரிய டேவிட் ஐயாவும் எங்களது பணிகளைச் செய்துவருதை அறிந்தோ என்னவோ, அவர்கள் மூலமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் என்ன என்று என்னிடம் கேட்கப்பட்டது. எல்லோரையும் அழைத்துக் கொண்டுதான் வெளியேறுவது என்ற முடிவில் நாம் இருப்பதால் சேர்ந்தே அனைத்தையும் செய்யலாம் என்றேன். இதன்பின்னர் முக்கியமானவர்கள் ஒன்று கூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, திரு. நித்தியானந்தன் அவர்கள், திரு. மகேஸ்வரன் அவர்கள், திரு. தேவானந்தன் அவர்கள், திரு. மாணிக்கம்தாசன் அவர்கள், திரு. பாபுஜி அவர்கள். திரு. ஜெயதிலகராஜா அவர்கள், திரு. டேவிட் ஐயா அவர்கள் மற்றும் நானும் கலந்து கொண்டு ஒன்றுபட்டுச் செயல்படுவது பற்றிக் கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலில் எங்களுக்குள் இருந்த பல ஒழிவு மறைவு வேலைகள் சுலபமாயின. எல்லோரது நோக்கமும் இங்கிருந்து தப்பிப்பது மட்டுமே. வெளியில் சென்று ஒன்றுபட்டு இயங்குவது கிடையாது தப்பிக்கும் வரை ஒற்றுமை.
எங்களது திட்டமிடப்பட்ட செயல்கள் ஏறக்குறைய 90 வீதம் முடிவரைந்த நிலையில்தான் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பட்டது. இந்த ஒன்று கூடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிறையினுள் இருப்பவர்கள் அனைத்துத் தேவையான வேலைகளையும் பகிர்ந்து செய்வது, அதே போன்று வெளியில் வேலை செய்பவர்களை ஒன்றுபட்டு பகிர்ந்து பணியாற்றவைப்பது என்பவையும் இந்த சிறையினுள் நாம் என்னென்ன வேலைகள் யார் யார் செய்வது என்பவைப்பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒன்று கூடலில் எழுப்பப்பட்ட சந்தேகங்களும் வினாக்களும், ஏறக்குறைய ஐம்பது பேரும் ஒன்றாகத் தப்பித்து ஒரு திசையை நோக்கிச் செல்லமுடியுமா? என்பது சந்தேகம்! முடியும் என்பது எனது பதில். முடியாது என்பது திரு. மகேஸ்வரன், திரு. நித்தியானந்தன் போன்றோர் கூறினர்.
அப்படியாயின், இங்கிருந்து தப்பிப்பதற்கு மட்டும் இணைந்து செயற்படுவோம். தப்பித்த பின்னர் அவர் அவர் விருப்பப்படி செல்லலாம் என்று நான் பதில் கூறினேன். திரு. தேவானந்தன் அவர்கள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் எம்முடனே வருவதாகத் தெரிவித்தனர். புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களான நித்தியானந்தன் அவர்களும் மற்றும் அவருடன் ஐந்துபேரும் தாங்கள் தனியாகச் செல்வது என்றும் கூறினர்.
நாங்கள் எந்த வழியில் செல்லப் போகிறோம் என்று கேட்டனர். புளியந்தீவிலிருந்து வெளியேற இரண்டு வழிககள்தான் உண்டு. வடக்குப்பக்கமிருக்கும் பாலத்தின் வழியாக காவல்நிலையத்தைத் தாண்டிச் செல்லவேண்டும். அல்லது தெற்குப்பக்கம் இருக்கும் விமான நிலைய சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த இரண்டு வழிகளையும் தவிர சிறையின் பின்பகுதியில் இருக்கும் வாவியைத் தாண்டிச் சென்றால் அப்படியே ஊர்புறங்களுக்கும் புல்லுமலைக் காட்டுப்பகுதிக்கும் சென்றடையலாம்.
புலிகள் அமைப்பின் ஆதரவுத் தோழர்களும், திரு. மகேஸ்வரன் அவர்களது தோழர்களும் ஆற்றைத் தாண்டிச் செல்வதாகக் கூறியதற்குக் காரணம் தரைவழியில் சென்றால் காவல்துறையையும் விமானப் படையையும் தாண்டித்தான் செல்லவேண்டுமே தவிர வேறு மார்க்கம் கிடையாது. முதலில் தகவலறிந்து காவல்துறைதான் சிறைக்கு வந்து சேரும். அல்லது காவல் சோதனைச் சாவடியில் நாங்கள் மாட்டிக்கொள்வோம். அதனால் சிறையின் பின்பகுதியால் தப்பித்து ஆற்றுவழியே செல்பவர்கள் எந்தவிதத் தடையுமின்றிச் செல்லலாம். என்பது ஏனையவர்களின் கணிப்பாக இருந்தது.
ஆனால் காவல் நிலையத்தைத் தாண்டிச் சென்றால்தான் வடக்குப்பகுதியை அடைவது சுலபம் கீழ்த் திசையில் நாம் அனைவரும் சென்றால் பல இன்னல்களைச் சந்தித்துத்தான் நாம் வடக்கை அடையமுடியும். எனவே, காவல்நிலையத்தைத் தாண்டிச் செல்வது என்பதில் நான் உறுதி தெரிவித்தேன். அதேவேளை வங்காள விரிகுடாவை அடைவதற்கும் நாம் காவல் நிலையத்தைத் தாண்டினால்தான் அது சாத்தியம்.
இந்தக் கலந்துரையாடல் முடிவடையும் தருவாயில் ஓர் கேள்வி எழுந்தது. வெளிக்கடையிலிருந்த அனைவரும் எங்களுடன் இணைந்து வருவதற்குச் சம்மதமா? என்பதுதான் அந்தக் கேள்வி! திரு. கோவை மகேசன் அவர்கள், டொக்டர் தர்மலிங்கம் அவர்கள், திரு. ஜெகதாஸ் அவர்கள் ஆகியோர் சிறையிலையே தங்கிவிடுவது என்றும், வணபிதா. சிங்கராயர் அவர்கள் யோசனை செய்து பின்னர் சொல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் போக ஏனைய அனைவரும் சிறையை விட்டு வெளியேறுவது என்றும் முடிவாயிற்று.
இப்போது அவர் அவர் சார்ந்த இயக்கத் தோழர்களுக்கு தகவல் சொல்லலாம், அதே வேளை இந்த விடயம் சம்பந்தமாக எந்தவிதத் தகவலும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லப்பட்டது. அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இரண்டு நாட்களில் மீண்டும் சந்திப்பதாகக் கூறி ஆலோசனைக் கூட்டம் கலைக்கப்பட்டது.
இப்போது இராணுவத்தின் ரோந்து பணியைக் கவணிக்க என 24மணி நேரமும் எங்கள் தோழர்களை நியமித்தோம். 2மணி நேரத்துக்கு ஒருவர் குளியலறை ஜன்னல் வழியாக ரோந்துப் பணியினைக் கவணித்து குறிப்புப் புத்தகம் ஒன்றில் எழுதவேண்டும். அவர்களுக்கென கைக்கடிகாரம் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்தப் பணியில் அனைவரையும் அதாவது மேல்தளத்திலிருந்தவர்களைப் பயன்படுத்தினோம்.
சிறையின் கிழக்குப் பக்கமாக சுவரை ஒட்டி ஓர் தார்ச்சாலை செல்கிறது. தார்ச் சாலையின் மறுபுறத்தில் வினாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு வார முடிவில் வெள்ளிக்கிழமையன்று ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டு பிராத்தனை நடைபெறுவதைக் கவணித்தோம். மற்றப்படிக்கு அங்கு எந்தவித ஆள்நடமாட்டமும் இருப்பதைக் காணமுடியவில்லை. மாலை ஆறுமணியளவில் ஆரம்பமாகும் பக்திப்பாடல்கள் இரவு எட்டு மணி வரை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும். இந்த நிகழ்வு கணக்கில் எடுக்கப்பட்டது.
அடுத்து சிறைக்காவலர்கள் ஒருதடவைக்கு மொத்தம் பதினெட்டு பேர் உள் பகுதியில் காவலுக்கு நிற்கின்றனர். அலுவலகங்களில் ஏறக்குறைய பத்துபேர் வந்து செல்கின்றனர். மூன்று பகுதி நேரமாக (சிப்ட்) முறைவைத்து கடமையாற்றுகின்றனர். பறாக்சில் இருப்பவர்கள் கடமையில் இருப்பவர்கள் என்று பார்த்தால் சுமார் எழுபது பேர் வரை காவலாளிகள் உள்ளனர்.
இரவுக் கடமைக்கு எட்டு முப்பது மணிக்கு கடமைக்கு வருபவர்களின் தொகை இரண்டு மடங்காகும். இரண்டு மணிக்கு ஒருதடவை காவலாளிகளும் மாறிக்கொள்வார்கள். இரவு வேளை இப்படி மாறுபவர்கள் சிறையினுள்ளேயே தங்கிவிடுவர். மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு முப்பது மணிவரை சிறையினுள் பதினெட்டு காவலாளிகள் மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மகளீர் பகுதிக்குள் மாலை ஆறுமணி முதல் எட்டு முப்பது மணி வரை இரண்டு காவல் பெண்கள் மட்டுமே கடமையிலிருப்பர் என்ற தகவலும் எமக்குக் கிடைத்தது. இவை போக சிறை அதிகாரிகளுக்கான ஆயுதங்கள் எங்கே வைக்கப்படுகின்றன என்பவைபற்றி தகவல் சேகரிக்கப்பட்;டது.
பிரதான வாயிலை அடுத்து, இருபது அடி தொலைவில் மற்றுமொரு இரும்புக் கம்பியினாலான கதவும் போடப்பட்டுள்ளது. அந்தக் கதவின் அகலம் சுமார் பதினைந்து அடி இருக்கும். இந்த இரண்டு பகுதிக்கும் இடையில் நிரந்தரமாக இரண்டு காவலாளிகள் கடமையில் இருப்பார்கள். உள்ளே வருபவர்கள் போவோர்களைப் பதிவு செய்வது சோதனைச் செய்வது போன்ற கடமைகள் அவர்களுக்கு.
அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்குப் பின்னால் சிறிய அறை ஒன்று உண்டு. அந்த அறையில்தான் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த அறையின் கதவுக்கான திறப்புகள் அந்தக் காவலாளிகளிடம் இல்லை. முதன்மை ஜெயலிரிடம்தான் அந்தத் திறப்புகள் இருந்தன. அவரது அனுமதியின்றி ஆயுதங்களை எடுக்கமுடியாது.
தொடரும்...
No comments:
Post a Comment