1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 15
கீழ்த் தளத்திலிருக்கும் கம்பிகள் வெட்டப்பட்டால், அன்று முதல் நாம் தயார் நிலையில் இருக்கவேண்டும். சில சமயங்களில் கம்பிகளை வெட்டும்போது, காவலாளி கண்ணில்பட்டு தகவல் சிறை அதிகாரிகளைச் சென்றடைந்தால் அனைத்தும் கெட்டுவிடும். விபரிதமாக அவர் கண்டுவிட்டால், அப்போதே அவரை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடவேண்டும். கம்பிகள் வெட்டப்படுவதற்குத் தெரிவு செய்த நேரம் ஞாயிறு பகல் 11மணி முதல் மதிய உணவு 1.30மணிவரை என்பதாகும். அப்படி காவலாளியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் உடனேயே சிறை முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதே அடுத்த கேள்வியாக இருந்தது.
அப்படியாயின் அன்றைய தினத்திலிருந்தே வாகனங்களும், படகுகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் தப்பிச் செல்வதென்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவர் இருவர் என்றால் பகல்நேரம் சாத்தியமாகும். ஐம்பது பேர் வெளியேற வேண்டும். கண்டிப்பாக வாகணம் தேவை. தயார் நிலையில் இருப்பது காந்தியம் வாகனம் ஒன்றுதான். கம்பிகளை வெட்டும்போது, தெரியவருவது என்பது உறுதியானது அல்ல. எனவே, அந்த நேரத்துக்கு வாகனம் ஒன்றினைக் கடத்திவந்து காத்திருக்க வைப்பது வீணான வேலையாகிவிட்டால், மீண்டும் ஒரு தடவை வாகனம் எடுத்துவர முடியாத நிலை ஏற்படலாம். அல்லது எங்கள் மீது சந்தேகம் வலுக்கலாம். எனவே, அன்றைய தினம் வாகனத்தைக் கடத்தி வரும்படி வலியுறுத்தவில்லை.
மட்டக்களப்பு மருத்துவமனையில் இருக்கும் ஆன்புலன்ஸ், மற்றும் தெருவில் வரும் வாகனம் எதையாவது கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்லலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டாலும் பகல் வேளை நாம் படகுத்துறையை அடைந்து கடலில் பயணம் செய்வது பொருந்தாத ஒன்றாகப்பட்டது. காரணம் படகுகளின் இயந்திரங்கள் வெறும் எட்டுக் குதிரைச் சக்திகள் கொண்டவையே. இருப்பினும் கண்ணுக்குத் தெரியாத தூரம்வரை சென்று மீண்டும் கரையில் இறங்கி காட்டுக்குள் புகுந்தால் மட்டுமே நாம் பகலில் தப்பிக்கலாம். இந்த ஒரு காரணத்துக்காகவே, படகுகளை அன்றைய ஞாயிறு முதல் தயார் நிலையில் வைத்திருக்கும்படி வெளியில் இருப்பவர்களுக்கு தெரிவித்தோம்.
அடுத்து, இரவு வேளையில் தப்பித்தால் படகுகள் மூலம் நாம் எங்கு சென்றடைய வேண்டும், திருகோணமலைத் துறைமுகத்தை நாம் கடக்கமுடியாது. நாம் படகுகள் மூலம் திருகோணமலையை அடைய பொழுது விடிந்துவிடும். பொழுது விடிந்தால், கடற்படை சுலபமாக எங்களைத் தாக்கிவிடும். எனவே, திருகோணமலைக்கு முன்னதாகவே படகுகளைவிட்டு நாம் இறங்கிவிடவேண்டும். அதே வேளை அந்தப்படகுகளும் விடிவதற்கு முன்னர் மட்டக்களப்பை வந்தடைந்துவிடவேண்டும். எனவே, வாகரை தொடுவாய் வரை படகுகளில் செல்வது என்றே ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். எனவே, வாகரையில் இருந்து எங்களை அழைத்துச் செல்ல எமது இயக்கத்தவருக்குத் தகவல் கொடுக்கவேண்டும்.
இந்தக் காலக்கட்டத்தில் திருகோணமலையில் எங்கள் இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த திரு. பார்த்தன் (ஜெயச்சந்திரன்) அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தினால். அவர் வாகரை தொடுவாயிலிருந்து திருகோணமலைக்கு எங்களை அழைத்துச் செல்லும் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார் என்று தோன்றியது. உடனே திரு. பார்த்தன் அவர்களைத் தொடர்புகொள்ளும்படியும், அவரிடத்து இதுபற்றி ஆலோசனை செய்யும்படியும் நண்பர் வாசுதேவா அவர்களுக்கு தகவல் கொடுப்பது என்று தீர்மானித்தோம்.
அடுத்ததாக சிறையினை இரவு வேளை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் நாம் எந்த வழியாக வெளியேறுவது என்ற குழப்ப நிலை இருந்தது. காரணம் சிறையின் எதிர்புறத்தில் சிறையின் முக்கிய அலுவலர்களது இருப்பிடங்கள் உள்ளன. அவர்கள் தொலைபேசி மூலமாக காவல்துறை மற்றும் இராணுவத்துக்குத் தகவல் கொடுக்கலாம்.
எந்தப் பிரச்சினையுமின்றி சிறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், சிறையின் தென்கிழக்குப் பகுதியின் சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறலாம். தென்பகுதியில் சிறையை ஒட்டியே சிறையின் காவலர் தங்கும் பறாக்ஸ் இருக்கிறது. அங்கே இருப்பவர்களை எங்கள் தோழர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வைத்திருப்பர். எனவே, கிழக்குப் பகுதியால் வாவிவரை செல்லும் அந்தத் தெருவில் நாங்கள் ஏறிச் செல்லும் வாகனங்களையும் நிறுத்திவைக்கலாம் என்று முடிவாயிற்று.
சிறையின் சுவரை உடைப்பதற்கான ஆயுதங்கள் சிறைக் கழஞ்சியத்தில் இருப்பதை அறிந்து வைத்திருந்தோம். அடுத்ததாக சிறையினுள் இருக்கும் காவலாளிகளை பிடித்தால் என்ன செய்வது? அவர்களைக் கட்டிப் போட்டு செல்களுக்கு அடைத்து வைக்கவேண்டும். அவர்கள் சத்தம் போடாமலிருக்க வாய்களுக்கு பிளாஸ்றிக் ஒட்டவேண்டும். எனவே, பிளாஸ்றிக்கும் இவர்களைக் கட்டுவதற்கான கயிறும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும். சாதாரண பிளாஸ்றிக் என்றால் கழற்றிவிடுவார்கள் எனவே, அறுவைச் சிகிச்சை முடிந்ததும் அவற்றுக்கு ஒட்டுவதற்காகப் பயன்படுத்தும் பிளாஸ்டரே வேண்டும் என்று வெளியில் இருந்தவர்களுக்குத் தகவல் அனுப்பினோம்.
நாம் தப்பிச் சென்று சிலவேளை காடுகளில் தங்கவேண்டியிருந்தால் உணவுக்கு என்ன செய்வது? பிஸ்கற், சீஸ் போன்றவற்றை இப்போதே சேகரித்து தப்பிக்கும் போது எடுத்துச் செல்வதுதான் நல்லது என்று தீர்மானித்து அதனையும் அறிவித்தோம். பிஸ்கற், சீஸ் போன்றவற்றை சிறை நிர்வாகம் மிகவும் சாதாரணமாக அனுமதித்துவந்தனர். எனவே அவற்றை உள்ளே எடுப்பதற்கு சிரமமானது ஒன்றல்ல. கிறீம் மற்றும் கிறக்கற் பிஸ்கற் மட்டுமே வேண்டும் என்று அறிவித்தோம்.
அடுத்து நாம் தீர்மானிக்க வேண்டியது. சிறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதே? எங்கே இருந்து ஆரம்பிப்பது? யாரை முதலில் பிடிப்பது? கீழ்தளத்திலிருந்தா? அல்லது மேல் தளத்திலிருந்தா? ஏனென்றால், கதவுக் கம்பிகள் அறுக்கப்படும் நாளிலிருந்து எந்த நேரத்திலும் எங்கள் முயற்சி அதிகாரிகளுக்குத் தெரியவரலாம். எனவே, யார் யாருக்கு என்ன வேலை என்பதைத் தீர்மானித்தோம்.
எங்கள் பகுதியிலும் கீழ்த் தளத்திலும் இருப்பவர்களில் துணிந்து செயலாற்றக்கூடியவர்களபை; பட்டியலிட்டோம். அவர்களில் திரு. மாணிக்கம்தாசன், திரு. பாபுஜி, திரு. மகேஸ்வரன், திரு. தேவானந்தன், திரு. சிறிதரன், திரு. வாமதேவன், திரு. பரமானந்தன், திரு. தட்சணாமூர்த்தி. திரு. மகேந்திரன். திரு. சிவசுப்பிரமணியம், திரு. ஜெயதிலக ராஜா, திரு. நித்தியானந்தன். திரு. ஜெயகுலராஜா, பாதர். சின்னராசா, ஆகியோரை சேர்த்து மொத்தம் நாம் பதினைந்துபேர்தான் செயல்படக்கூடியவர்கள். இவர்களுக்குத் துணையாக கீழ்த் தளத்தில் இருந்த திரு. தங்கமுகுந்தன். திரு. வரதராஜபெருமாள், திரு. பரமதேவா, திரு. ஜெயக்கொடி, திரு. தமிழ்ச்செல்வன் உட்பட மேலும் பத்து பேரைப் பயன்படுத்தலாம் என்று தேர்வு செய்தோம்.
ஏனையோர் வயது முதிர்ந்தவர்களும், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுமாக இருந்தனர். உதாரணத்துக்கு, வெலிக்கடைசிறையில் படுகாயமடைந்து இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திரு. யோகராசா அவர்கள் நாம் இங்குவந்த ஒருமாதம் கழித்து மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்டு, எமது பகுதியிலேயே அடைக்கப்பட்டார். அவரது காலில் ஏற்பட்ட காயம் அப்போதும் ஆறாமலேயே இருந்தது. எனவே, அவர் போன்றவரையெல்லாம் இதில் ஈடுபடுத்தவில்லை.
கம்பிகள் வெட்;டப்படும் போது காவலாளிகளுக்குத் தெரியவந்தால் அந்தக் காவலாளிகளை உடனேயே பிடித்துவிடவேண்டும். எனவே, எங்கள் இரு பகுதிகளின் காவலாளிகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். உள்ளே நான்கு காவலாளிகள் இருப்பார்கள். பலமாகத் தாளம் போட்டு பாட்டுப்பாடும் வேளை கம்பிகள் அறுக்கப்படவேண்டும். பாட்டுகள் நிறுத்தப்படும் போது அறுக்கப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.
அறுக்கப்படும் சத்தம் பாட்டுக்கச்சேரியையும் தாண்டி காவலாளிகளின் காதுகளுக்கு எட்டினால் அப்போதே காவலாளிகள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவேண்டும். காவலாளிகளுக்கு அருகில் திரு. வாமதேவன், திரு.பாபுஜி, திரு.சிவசுப்பிரமணியம் மற்றும் திரு. சிறிதரன் ஆகியோர் ஏதாவது காரணங்கள். கதைகள் பேசிக்கொண்டு நிற்கவேண்டும். கண்டு கொண்டாலோ, அல்லது சத்தத்தைக் காதில் வாங்கிக் கொண்டாலோ ஒருவரைக் கூட தப்பி ஓட விடக்கூடாது. எங்கள் கட்டிடத்தின் கீழ் வாசல் கதவை மூடிவிடவேண்டும். சத்தமில்லாமல் அந்த நான்கு காவலாளிகளையும் பிடித்துக் கட்டிப்போடவேண்டும். அந்த நிமிடத்திலிருந்தே நாம் அடுத்த கட்ட செயற்பாட்டுக்கு செல்லவேண்டும்.
அதன்படி, திரு. மாணிக்கம்தாசன், திரு. மகேஸ்வரன். சிவசுப்பிரமணியம், திரு. தேவானந்தன், திரு. பாபுஜி, ஆகியோர் உடனடியாக பிரதான வாயிலுக்கு ஓடிச் சென்று அங்கு கடமையில் இருக்கும் அதிகாரிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இவர்களிடத்து அலுமினிய தட்டில் தயார் செய்த கத்திகளும். இரும்புக் கம்பியைக் கூராக்கித் தயார் செய்த கத்தியுமே ஆயுதங்களாக வழங்கப்பட்டன. மாணிக்கம்தாசன் அவர்கள் அட்டையில் தயார் செய்த எஸ்.எம்.ஜி. துவக்கும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை கம்பிகள் அறுக்கும் நேரத்தில் கைகளில் வைத்திருக்க முடியாது என்பதனால் அதனை மேல்தளத்திலேயே வைத்திருந்தோம்.
ஏனைய பகுதிகளில் கடமையிலிருக்கும் காவலாளிகளைப் பிடித்துவரும் பொறுப்பு திரு. வாமதேவன், திரு. தட்சணாமூர்த்தி மற்றம் திரு. சிறிதரன் போன்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கீழ்த் தளத்தில் இருப்பவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஏற்பாடுகள் பகல்வேளை கம்பிகள் வெட்டப்படும்போது மட்டுமே செயற்படுத்தப்படவேண்டியவை. கம்பிகள் வெட்டப்படும் நிகழ்வு நல்ல முறையில் நடந்தேறினால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து வெளியிலிருக்கும் ஏற்பாடுகளுக்கு இணங்க நாம் எமது திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதே எங்கள் முடிவாக இருந்தது. கம்பிகள் வெட்டப்படும் போது, குழப்பம் ஏற்படும் நிலைமை மோசமானால் சிறை முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், நாம் வெளியேறுவது எப்படி என்ற முடிவினை அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அந்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தயாரானோம்.
அதேவேளை வெளியில் இருந்து எமக்காக செயற்பட்டுவரும் தோழர்களுக்கு அவர்கள் செய்து முடிக்கவேண்டியவற்றை நினைவுபடுத்தி தகவல் தெரிவித்தோம். அவைபின்வருமாறு:
சீஸ், பிஸ்கற். பிளாஸ்டர், கயிறு, இலங்கையின் ரூறிஸ்ற் மப், கொம்பாஸ். சுpறிய ரேடியோ (காடுகளுக்குச் சென்ற பின்னர் காவல்துறை, இராணுவம் ஆகியவற்றின் முயற்சிகளை அறிந்து கொள்வதற்காக) ஆகியவற்றை தயார்செய்து அனுப்பிவைக்கவேண்டும் என்றும், திருகோணமலையிலிருந்து பார்த்தன் அவர்களது தொடர்பு மற்றும் அபிப்பிராயங்கள் பெறப்படவேண்டும் என்று துரிதப்படுத்தினோம்.
அடுத்து எங்களின் மேல்தளத்துக்கான ஆமைப்பூட்டின் திறப்பு மீண்டும் கிடைத்ததும் உரிய நேரம் பார்த்து பூட்டைத் திறந்துபார்த்தோம். முடியவில்லை. உள்பகுதியின் ஏதோ ஓர் இடத்தில் தடக்குவது தெரிந்தது. எங்களிடம் சிறிய அளவில் அரம் ஒன்று கிடைத்தால் நாங்களே இதனைச் சரிசெய்துவிடலாம். ஏற்கனவே மாணிக்கம் தாசன் அவர்கள் சிறைக் கழஞ்சியத்திலிருந்து ஓர் கைதியினூடாக, அரம் ஒன்றினை எடுத்து கத்திகள் தயாரிக்கப் பயன்படுத்திவந்தார். அந்த அரம் உருவத்தில் பெரிதாக இருந்ததால் இந்தச் சிறிய திறப்பினை தேய்ப்பதற்கு (ராவுவதற்கு) இயலாமல் இருந்ததது. ஆதலால் மீண்டும் மின்கம்பம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் ஒவ்வொருநாளும் தகவல்கள் கொடுப்போம் என்றறிந்து தினமும் ஒரு தோழரை குறித்த நேரத்துக்கு அந்த மின் கம்பத்துக்கு கடமையில் அமர்த்தினர் வெளியில் செயற்பட்ட தோழர்கள். இதனால் எங்கள் தேவைகளை தினமும் தெரியப்படுத்த முடிந்தது.
தகவல் கொடுத்த மறுதினம் சிறய அரம் ஒன்று கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மூலமாக எங்கள் கைகளை அடைந்தது. அதேவேளை திருகோணமலையிலிருந்து பார்த்தன் அவர்களும் மட்டக்களப்புக்கு வந்து வாசுதேவா அவர்களிடம் தகவல்கள் தெரிவித்திருந்தார். நாங்கள் படகுகளில் வாகரை ஆத்து முகத்துவாரத்துக்கு வருவது நல்லதல்ல என்றும், அதற்கு மூன்று கிலோமீற்றருக்கு முன்னதாகவே கடற்கரையிலிருந்து நூறு மீறறர் தொலைவில் பெரிய பாறை ஒன்று இருப்பதாகவும். அந்தப் பாறைக்கு வந்தால் அங்கிருந்து அழைத்துச் செல்வது சுலபம் என்றும். வாகரைப் பாலத்தில் இராணுவம் கடமையில் இருக்கிறது என்றும். எனவே. காடுகள் வழியாகத்தான் திருகோணமலையை அடைய வேண்டும் என்றும் பார்த்தன் அவர்கள் விபரம் தெரிவித்திருந்தார்.
கடல் வழியாக நாம் போய்ச் சேர வேண்டிய இடம் பற்றி நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. படகுகளில் ஏறுவது வரை மட்டுமே அனைவரிடத்திலும் கலந்துரையாடப்பட்டது. அதனால், பார்த்தன் அவர்கள் சொன்ன பாதைதான் நாம் சென்றடையவேண்டிய இடம் என்பது எனது முடிவாக இருந்தது.
தொடரும்...
No comments:
Post a Comment