1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)
பாகம் 17
நாம் குறிப்பிடும் நேரத்துக்கு வெளியில் இருப்பவர்கள், இரண்டு வாகனங்கள் சிறையின் தென்கிழக்கு மூலையின் வழியாக வாவிக்குச் செல்லும் தார் சாலையிலிருந்து பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக ஓர் ஒழுங்கை செல்கின்றது. அந்த ஒழுங்கையில் இந்த இரண்டு வாகனங்களும் நிறுத்தப்படவேண்டும். இந்த வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தை எங்களது மேல்தள கழிவறையின் வழியாக நாம் பார்க்கலாம்.
வாகனங்கள் வந்துவிட்டன என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் நாங்கள் வெளியில் இறங்குவோம். காந்திய வாகனம் போக மற்றொரு வானைக் கொண்டு வருவது உங்களது கடமை. ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் அறிமுகம் செய்து வைத்த குண்சி என்பவர் இந்த முயற்சியில் ஈடுபடுவதால் அவருடன் கதைத்து மற்றும் ஒரு வாகனத்தையும் கொண்டு வரவும்.
எங்களது இறுதி முடிவின்படி ஈ.பி.ஆர்.எல்,எப். இயக்கத் தோழர்கள் தப்பித்து எங்களுடனே வருவது என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர் பரமதேவா ஆகியோர் சிறையின் பின்புற வாவி வழியாகச் செல்வதென்றும் மகேஸ்வரன் அவர்களும் அவரது நண்பர் சிவசுப்பிரமணியம் அவர்களும் அதேபோன்று வாவி வழியாகச் செல்வதென்றும் முடிவாயிற்று.
வாவியைக் கடப்பதற்கு துடுப்புகளாலான படகு ஒன்றை மகேஸ்வரன் அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். அதே போன்று விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஐந்து பேர் வாவி தாண்டிச் செல்வதற்கும் பரமதேவா அவர்கள் துடுப்புகளாலான படகு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் துடுப்புகளால் வலித்தால், இவர்கள் வாவியின் மறுகரையை அடையலாம். எனவே, இவர்கள் தப்பித்து மறு கரையை அடைவது சுலபம்.
நாம் கலந்துரையாடி முடித்ததும், வணபிதா. சிங்கராயர் அவர்கள் என்னிடத்தில் வந்து உங்களுடன் சிறிதுநேரம் கதைக்க வேண்டும் என்றார். தனியாகச் சென்று என்ன விடயம் என்று கேட்டேன். அவர் தயங்கி தயங்கி, நீங்கள் இங்கிருந்து தப்பித்துச் செல்லும் போது நானும் வரலாம். என்னை எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் கொண்டு சென்று யாழ்ப்பாணத்தில் விடுவீர்கள் என்றால் உங்களுடன் வருகிறேன். உங்களால் அது முடியுமா? என்றார்.
பாதுகாப்பாக அழைத்துச் செல்வோம் என்று கூறமுடியாது. காரணம், காவல்துறை, இராணுவம் போன்றவற்றின் குறுக்கீடுகள் வரலாம். அவற்றுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இந்த முடிவு எடுத்தோம். நீங்களும் அது போன்ற விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்றால் எங்களுடன் வரலாம். அதுவுமல்லாமல் நாங்கள் காடுகள் வழியாகத்தான் செல்லப்போகிறோம் எனவே, நீங்கள் பல மைல்கள் நடந்தும் வரவேண்டியிருக்கும். எனவே, நீங்கள் யோசனை செய்து முடிவைச் சொல்லவும்.
அதுவுமல்லாமல், டொக்டர். தர்மலிங்கம், கோவை மகேசன் அவர்கள், ஜெகதாஸ் அவர்கள் ஆகிய மூன்றுபேரும் இங்கே தங்கியிருக்கப் போகிறார்கள். அவர்களை விரைவில் அரசாங்கம் விடுவித்துவிடும். நீங்களும் தப்பித்துவராவிட்டால் அவர்களுடன் சேர்த்து உங்களையும் விடுவித்துவிடுவார்கள். எதற்கும் தாங்கள் யோசனை செய்து முடிவைத் தெரிவிக்கவும் என்றேன். அவரும் நாளை சொல்கிறேன் என்றார்.
பின்னர் கலந்துரையாடிய விடயங்கள்பற்றி விபரமாக வெளியில் இருப்பவர்களுக்கு எழுதி அன்று மாலையே தகவல் தெரிவித்தோம்.
கொண்டுவரப்படும் வாகனங்கள் உரிய இடத்துக்கு வந்ததும், எங்கள் பார்வைக்கு அவை தெரிந்தால் நாங்கள் ஜன்னல் வழியாக மூன்று தடவை சாதாரண ரோர்ச் லைட் மூலம் வெளிச்சம் இயக்கிக் காண்பிப்போம். நீங்கள் இரண்டு வாகனமும் கொண்டு வந்து தயார் என்றால், பச்சை நிறத்தில் வெளிச்சத்தைக் காட்டவேண்டும். ஒரு வான் வந்து இன்னொன்று வரவில்லை என்றால் சாதாரண வெளிச்சத்தைக் காட்டவேண்டும். அதுவும் அல்லாமல் விபரீதம் ஏதும் என்றால் சிவப்பு நிறத்திலான வெளிச்சத்தைக் காட்டவேண்டும்.
நாங்கள் தயார் என்றால், பச்சை நிறத்திலான வெளிச்சத்தை இடமிருந்து வலமாகக் காண்பிப்போம். அப்படிக் காட்டப்பட்டால், நீங்கள் தயார் என்பதை பச்சை வெளிச்சத்தை மேலும் கீழுமாகக் காண்பிக்கவேண்டும். அந்த ஒளி கிடைத்ததும் நாமும் மேலிருந்து கீழாக மூன்றுதடவை காண்பித்துவிட்டு சிறைக் காவலாளிகளை பிடிப்பதற்குப் புறப்பட்டுவிடுவோம். அதன் பின் எந்தவித வெளி;சசங்களும் காட்டப்படமாட்டாது. செயலில் இறங்கிவிட்டோம் என்பதுவே முடிவாகும்.
அதேபோல், எங்களது கடைசி வெளிச்சம் காட்டப்பட்டதும் நீங்கள் பறாக்சில் ஓய்விலிருக்கும் அதிகாரிகளை பிடிப்பதற்கு அவர்களது பகுதிக்குள் நுழைந்துவிட வேண்டும். இந்த இரண்டு செயற்பாடுகளும் ஒரே நேரத்தில் நிகழவேண்டும். ஏதேனும் ஒன்று தாமதித்து நிகழ்ந்தால் அந்தப்பகுதி உசாரடைந்துவிடும். எனவே, தயார் என்ற பின்னர்தான் சமிஞ்சை காண்பிக்கவேண்டும். உங்களது இறுதி சைகை கிடைத்தப் பின்னர்தான் நாம் செயற்படுவோம்.
சிறை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் நாம் வெளியேறுவோம். சிறையின் தென்கிழக்கு மூலையில் சுவரை இடித்து அதன் வழியாகத்தான் வெளியேறுவோம். ஓய்வில் இருக்கும் காவலாளிகளில் ஒருவரைக்கூட நீங்கள் தப்பிக்க விட்டுவிடக் கூடாது. அதற்கேற்றாற் போல் தோழர்களை முன்னதாகவே அவர்கள் இருப்பிடத்தைச் சுற்றி நிறுத்திவைக்கவும்.
வெளியேயிருந்து வாகனம் கொண்டுவருவது, பறாக்சில் ஓய்வில் இருக்கும் அதிகாரிகளைப் பிடிப்பது போன்ற விடயங்களில் குண்சி அவர்கள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களுடன் இணைந்து செயற்படவும் என்று வாசுதேவா அவர்களுக்கும், சங்கர் அவர்களுக்கும் விபரமாக எழுதி அனுப்பினோம்.
நாம் முன்னரே எழுதி அனுப்பியிருந்தபடி. எமக்குத் தேவையான பொருட்கள் பல வழிகளிலும் உள்ளே வந்து சேர்ந்தன. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மாலை ஆறுமணியளவில் வழக்கமாக அறைக்கதவுகளை அடைக்க வருபவர்கள் சாதாரணமாகப் பூட்டிவிட்டுச் சென்றனர். வியாழக்கிழமை வந்த ஒரு காவல் அதிகாரி பூட்டிவிட்டுக் கம்பியில் தட்டினார். அவர் தட்டியது குறுக்கே இருக்கும் கம்பிக்கு மேல்ப்பகுதியில்தான். சத்தம் ஒருவிதமாக இருக்கவே அவர் மீண்டும் ஒரு தடவை அதிலிருந்த ஒரு கம்பியில் தட்டினார். நாங்கள் உடனடியாக அவர் அருகில் சென்றோம். அதன் சத்தத்தைக் கேட்ட அந்த அதிகாரி திருப்தி அடைந்தவராக அடுத்த அறைக்குச் சென்றார்.
உண்மையில் அதே கம்பியின் கீழ்ப்பகுதியில் தட்டியிருந்தால் விபரீதமாகியிருக்கும். மறுநாள் காலையில் ஓர் சிறிய மரத்துண்டு ஒன்றினால் அதே கம்பியைத் தட்டிப்பார்த்தோம் ஏனையவற்றுக்கும் அடியில் வெட்டப்பட்ட கம்பிக்குமான சத்தத்தில் வேறுபாடு தெரிந்தது. அந்த அறையிலிருந்த தோழரிடம் இனிமேல் கதவை மூடும்போது காவலாளி தட்டிப்பார்க்காதபடி இந்தக் கம்பியின் மீது கையை வைத்திருக்கும்படி அறிவுறுத்தினோம்.
வியாழன் அன்று மதிய உணவு வழங்கப்படும் போது எங்களை நோக்கிவிரைவாக வந்த நண்பர் கிருஸ்ணமூர்த்தி, இன்று இரவு என்னை கண்டிக்கு வேறு கைதிகளை அழைத்துச் செல்லும்படி உத்தரவு போட்டுள்ளார்கள். இன்று இரவு புறப்பட்டுச்சென்று கைதிகளை கண்டிச் சிறையில் ஒப்படைத்துவிட்டு சனிக்கிழமை மாலையில்தான் வருவேன். நீங்கள் எதுவும் செய்வதென்றால் திங்கள் கிழமைக்குத் தள்ளிவைக்கவும் என்று கூறிமுடித்தார்.
அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். நாமோ இதுவரை திகதியை முடிவு செய்யாமல் இருக்கிறோம் காரணம் வெளித் தயாரிப்புகளிலும். உள்தயாரிப்புகளிலும் சில குறைபாடுகள் முடிக்கப்படாமல் இருந்தன.
வியாழன் பிற்பகலில் (22-09-1983) வாமதேவன் அவர்கள் ஒரு தகவலைச் சொன்னார். சிறையின் அதிகாரி ஒருவர் கூறியதாக அந்தத் தகவலைச் சொன்னார். வரும் ஞாயிறு அல்லது திங்கள் கிழமை கிளிநொச்சி வங்கிக் கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கொழும்புக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.
அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நாம் ஐந்து பேர்தான் மட்டக்களப்புச் சிறையில் இருக்கிறோம். வாமதேவன் அவர்கள் சிறை அதிகாரிகளிடம் அடிக்கடி சிகெரட் வாங்கிப் புகைப்பார். வெளியிலிருந்து வாங்கி அவர்களுக்கும் கொடுப்பார். காவலுக்கு வரும் அதிகாரிகளுடன் உறவு முறைகொண்டு அழைத்து மிகவும் உரிமையோடு பழகுவார். இதனால் அவருக்கு சிறையின் நிர்வாகத் தகவல்கள் சுலபமாகக் கிடைத்தது. எந்த அதிகாரி இந்தத் தகவலைச் சொன்னவர் என்பதனையும் எங்களிடத்துக் காண்பித்தார்.
அந்த அதிகாரியிடம் சென்ற மாணிக்கம்தாசன் அவர்கள், வெளி விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கிளிநொச்சி வங்கிக் கொள்ளை வழக்கு சம்பந்தமாக அவரிடத்துக் கேட்டார். அவரும் உண்மைதான், ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்றார். எங்களது விசாரணைக்கான அடுத்த திகதியை நாங்கள் மறந்து விட்டோம். எங்களை மட்டக்களப்புக்கு மாற்றிய பின்னர், எங்களது சட்டத்தரணிகள் யாரும் எங்களை நேராக வந்து சந்திக்கவில்லை.
எங்களை நீதிமன்றம் கொண்டு சென்று மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டன. எனவே, இந்தத் தகவலில் உண்மையிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம். நாம் தப்பிக்கும் போது நண்பர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கடைமையில் இருந்தால், எங்களுக்கு பேரூதவியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. இப்போது கிருஸ்ணமூர்த்தி அவர்கள் இல்லை. எனவே, நாம் திங்கள் வரை காத்திருக்க முடியாது. சனிக்கிழமைக்குள் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். உடனே வியாழன் இரவு மீண்டும் கூடினோம்.
வியாழன் அன்று கூடி, குளியலறையின் ஜன்னல் வழியாக இராணுவ ரோந்து மற்றும் சிறை அதிகாரிகள் நடமாட்டம் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தோம். மாலை ஆறு முப்பது மணியிலிருந்து இரவு 9மணிவரை இராணுவ வாகனம் எதுவும் கிழக்கு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதைத் தெரிந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை தோறும் கிழக்குப்பகுதியின் தார்ச் சாலைக்கு அப்பால் இருக்கும் கோவிலில் ஒலி பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. மாலை வேளையில் மிக அதிகமாகவே பாடல் ஒலி சிறையினுள் கேட்கிறது, இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தோம்.
சிறை அதிகாரிகள் இரவு எட்டுமணிக்கு இரண்டு மடங்காகிவிடுவார்கள். இரவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழு எனப் பிரித்துள்ளனர். இவர்கள் அனைவரும் காலைவரை சிறையினுள்ளேயே தங்குவர். முதல் குழு ஆறுமணிக்கே வந்து விடுவர். இரண்டாவது குழு எட்டுமணிக்கு, எனவே இரண்டாவது குழு வருவதற்கு முன்னர் நாம் சிறையை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்.
தொடரும்...
No comments:
Post a Comment