பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 25 July 2023

பகுதி 5 1983 வேலிக்கடை சிறை படுகொலைகள் நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 25 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 5

வெலிக்கடை சிறையில் கதவுகள் திறக்கப்பட்டதும், ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு வரிசையாக இரண்டு வாங்குகளில் அமரும்படி கூறினர்.

பின்னர் ஒவ்வொருவராக பதிவு செய்ய ஆரம்பித்தனர். பதிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது, இராணுவ கேணல் ஒருவர் கையில் ஒரு கோப்புடன் சிறை அலுவலகத்துக்குள் நுழைந்தார். சிறை அதிபரின் அலுவலகத்தில் ஐந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தவர் இராணுவ வாகனங்களைத் தயார் நிலையில் வைக்கும் படி கூறிவிட்டு எம்மைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் வாருங்கள் வந்து வாகனத்தில் ஏறும்படி பணித்தார். நாம் சிறை அதிகாரிகளைப் பார்த்தோம்.

மீண்டும் உங்களை இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லும்படி பாதுகாப்பு மந்திரியின் உத்தரவுடன் கேணல் வந்துள்ளார். எனவே, நீங்கள் வாகனத்தில் ஏறி பனாகொடைக்குச் செல்லலாம் என்றார் சிறை அதிகாரி. எங்களது தோழர்களது முகம்களில் மீண்டும் மிரட்சி தொற்றிக்கொண்டது. மீண்டும் பனாகொடையா? எங்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. இராணுவத்தினர் முகம்களில் வெற்றியின் ரேகைகள் தெரிந்தன.

மீண்டும் பனாகொடை நோக்கி வாகனங்கள் நகரும் போது கப்டன் செனிவிரத்தின என்னைப் பார்த்து பயங்கர முறைப்;பினை வெளிப்படுத்தினார். பனாகொடை சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதும், என்னை மட்டும் அருகில் இருந்த நாற்காலியில் இருக்கும்படி கூறிவிட்டு ஏனைய அனைவரையும் அவரவர் அறைகளில் அடைத்துவிட்டு மீண்டும் என்னிடம் வந்து சிங்களத்தில் மிரட்ட ஆரம்பித்தனர். சிங்களம் தெரியாது என்று ஏற்கனவே, நான் சொல்லியிருந்தபடியால் அவர்கள் பேசியவை எதுவும் எனக்கு விளங்காதது போல் இருந்து விட்டேன். பின்னர் ஆங்கிலத்தில் திட்டுவதற்கு ஆரம்பித்தனர்.

நீ தமிழில் என்ன பேசினாய்? என்று இறுதியில் கேட்டனர். இராணுவப் பாதுகாப்பிலிருந்து சிவில் சிறைச்சாலைக்கு மாற்றும்படி கேட்டேன் என்று கூறினேன். எதற்காக சிறைக்குச் செல்லவேண்டும் என்று கேட்டாய்? என்றனர். நீங்கள் தினமும் எம்மவர்களை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் அதனால் சிறைச்சாலைக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டேன். உன்னை யார் அடித்தார்கள்? என்னை அடிக்கவில்லை. என்னுடன் சம்பந்தப்பட்டவர்களையும், இங்கே இருக்கும் ஏனையோர்களையும் நீங்கள் தாக்குகிறீர்கள். எனக்கு குண்டுகாயமும், அறுவைச் சிகிச்சை செய்த காயமும் ஆறாது இருக்கிறபடியினால் என்னை தாக்காமல் விட்டுவிட்டுள்ளீர்கள். இல்லையெனில் நானும் தாக்கப்பட்டிருப்பேன் என்று பதிலளித்ததும், அவர்களது கோபம் அதிகரித்தது.

உன்னை சும்மாவிடக் கூடாது. நொண்டியான உனது மறு காலையும் உடைக்கவேண்டும் என்று சிங்களத்தில் கத்தினார். இவனை இந்த அறைகளில் அடைத்தால் இருப்பவர்களையும் கெடுத்துவிடுவான். கேற்றில் இருக்கும் அறையில்தான் இவனைப் போட வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆயினும், என்னை யாரும் அடிக்கவும் இல்லை, தாக்கவும் இல்லை. காரணம் ஏற்கனவே எனது தலை முடியை கண்டபடி வெட்டி மாட்டிக்கொண்டதன் பயமாக இருக்கலாம். அதே வேளை எனது உடலிலிருந்த காயங்களும் நான் அடியிலிருந்து தப்பிப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

இரவு ஏழுமணிவரை வாசலில் வைத்துவிட்டு வேறு வழியின்றி மீண்டும் நான் இருந்த அறையினுள் அடைத்தனர். அடைத்த பின்னர் மேஜர் உடுகம்பொளை வந்தார். எனது அறை அருகே வந்தவர் சிங்களத்தில் அடே! உனக்கு காயம் இருந்தபடியால்தான் இவ்வளவு நாளும் நீ தப்பித்தாய். காயாம் ஆறட்டும் நான் யாரென்று காண்பிக்கிறேன். நீ சிவில் சிறைக்கு போனால் பாரவாயில்லை. இங்கு இருப்பவர்களையும் சேர்த்துக் கொண்டு போகப்பார்க்கிறாய் என்று கூறி தனது சப்பாத்துக் காலால் எனது அறையின் கதவுக் கம்பியில் உதைத்துவிட்டு, இரடா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்த மேஜர் உடுகம்பொளை காவல்துறை அதிகாரியாக (எஸ்.பி.) இருந்து பல கொடுமைகள் செய்த உடுகம்பொளையின் தம்பியாவார்.

என்னுடன் நீதிமன்றம் வந்த எனது தோழர்களுக்குத்தான் பயம் அதிகமாக இருந்தது. இரவைக்கு உடுகம்பொளை மதுவை நிரப்பிக் கொண்டு வந்து தலைகீழாகத் தொங்கவிடப் போகிறான் என்று சைகையினால் பேசிக் கொண்டனர். பனாகொடை சிறையில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியாது. ஒரு செய்தியை மற்றவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாயின் சைகையினாள் ஒவ்வொரு எழுத்தாகக் காற்றினில் எழுதிக் காண்பிப்போம். ஒவ்வொரு எழுத்துக்கும் விரலால் தலையைத் தொட்டுக் காண்பித்து விளங்கிவிட்டதா என்று கேட்டு, அவர் தலையசைத்ததும்தான் அடுத்த எழுத்தை எழுதமுடியும். இப்படியாக ஒரு செய்தியைச் சொல்லி முடிக்க குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் பிடிக்கும். அதுவும் எதிர் அறையில் இருப்பவருக்குத்தான் இந்தச் சைகை மொழியைச் சொல்லமுடியும். பிறகு அவர் எனக்கு அருகில் இருக்கும் நண்பருக்குச் சொல்வார். இப்படியாக சிறை முழுவதும் இருப்பவர்களுக்கு செய்தி சென்றடையும். ஒரு அறைக்கும் எதிர் அறைக்கும் உள்ள இடைவெளி சுமார் 50 அடிகள் இருக்கும்.

ஒரு தடவை சைகை மொழி பேசும் போது, சிறையின் பின் ஜன்னல் வழியாக சிப்பாய் ஒருவர் கண்டுவிட்டார். சிறிதரன் என்பவர்தான் இப்படி மாட்டியவர். அழைத்துச் சென்றுவிட்டனர் அலுவலகத்துக்கு! நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? தப்பி ஓடுவதற்கு நீ எதிர் அறையிலிருப்பவருடன் சைகையில் பேசியதை நான் பார்த்தேன் என்றார் இராணுவ சிப்பாய். இவரோ, நான் நுளம்பு கலைத்தேன் என்றார். அவரோ இப்படி நுளம்பு கலைப்பதில்லை. நீ தப்பி ஓட பிளான் பண்னியதைப் பார்த்தேன் என்று உடுகம்பொளையிடம் அடித்துச் சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து சிறிதரன் அவர்களை பதம் பார்த்து மீண்டும் அறையில் அடைத்தனர்.

மீண்டும் பனாகொடையில் அடைக்கப்பட்ட நாம் இரண்டு நாட்களாக எந்தத் தாக்குதலுக்கும் ஆஜராகவில்லை. மூன்றாவது நாள் மதிய உணவுக்குப் பின் உள்ளே வந்த சார்ஜன், மேஜர், எல்லோரும் தயாராகுங்கள் உங்கள் அனைவரையும் சிறைச் சாலைக்கு மாற்றும்படி உத்தரவு வந்துள்ளது. உங்கள் உடைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு சரியாக நான்கு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார். அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நாங்கள் இருபத்தி ஒன்பது (29) பேர் தயாரானோம்.

கவச வாகனங்கள், லொறிகள், ஜீப்புகள் என நாப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் புடை சூழ பனாகொடையிலிருந்து வெலிக்கடை சிறைவரை சாலையை மறித்து பொதுப் பாவனைக்கு விடாது தடுத்து மாலை ஐந்து மணியளவில் வெலிக்கடை சிறை அதிகாரிகளிடம் எம்மை ஒப்படைத்தனர். பின்நாளில் எமக்கு ஏற்படவிருந்த விபரீதம் தெரியாமல் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஓர் மோசமான நரகத்திலிருந்து மீண்ட நின்மதி ஏற்பட்டது நமக்கு.

 நீதிமன்ற உத்தரவில் சிறைக்கு மாற்றப்பட்ட நாம் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவில் பனாகொடைக்கு இழுத்துச் சென்றனர். கேட்காமலேயே இப்போது அழைத்து வந்து ஒப்படைத்துள்ளனர் சிறை அதிகாரிகளிடம். இது எப்படி என்பது எமக்கு புதிராக இருந்தது.

சில நாட்கள் கழத்துத்தான் தெரிய வந்தது அதன் பின்னணியில் இருந்தவர் மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் (வு.ரு.டு.கு) தலைவர் திரு.எம். சிவசிதம்பரம் அவர்கள் என்பது. எங்களது வழக்குக்கு ஆஜாராக முன்வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. எம். சிவசிதம்பரம் அவர்களும், மற்றும் சட்டத்தரணி திரு. கரிகாலன் அவர்களும்தான்.

மூன்று பேர் அடங்கிய பெஞ்ச் உயர் நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு பிறப்பித்த உத்தரவினை, ஓர் அமைச்சர் ரத்து செய்யும் உரிமை கிடையாது. எங்களுக்கான சிறைமாற்ற உத்தரவு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதனை மறைத்து இராணுவம், பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை பெற்றுக்கொண்டுதான் மீண்டும் எம்மை பனாகொடைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் செயலானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். திரு. சிவசிதம்பரம் அவர்கள் அன்றைய அற்ரோனி ஜெனரல் அவர்களைச் சந்தித்து மறுதினம் வழக்குப் பதிவு செய்யப் போவதாகச் சொன்னதும் மிரண்டுவிட்டனர் அமைச்சரும் அற்ரோணி ஜெனரலும். தவறு நடந்துவிட்டது. உடனே உத்தரவை வாபஸ் வாங்கி நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற உறுதிமொழியினால்தான் நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக பனாகொடை சிறையிலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டோம்.

வெலிக்கடையில், செக்கிறிகேசன் பகுதிக்கு எங்களை மாற்றிய வேளையில், “அங்கேயே (பானகொடை) இருந்திருக்கலாம்” என்று தோழர் சிறிக்குமார் அவர்கள் சொன்னதன் அர்த்தம், “நீ செய்துவிட்ட வேலையால்தான் இந்த அவஸ்தை” என்று மறைமுகமாக என்னால் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டதைச் சுட்டிக் காட்டியதே!

மீண்டும் பனாகொடை சிறை நினைவுகளிலிருந்து மீண்டு, வெலிக்கடையில், காலை உணவை சிலர் உண்டனர். காலை உணவு என்பது பாணும் சம்பலும், சிலர் அதனைப் பார்த்துக்கொண்டு வெறித்துக்கொண்டிருந்தனர். மதியம் ஒரு மணிக்கு உணவு வந்தது. மற்ற நாட்களில் சோறு மற்றும் மரக்கறியை எங்கள் உணவுத் தட்டில் பெற்றுக்கொள்வோம். குழம்பைக் குவழையில் பெற்றுக்கொள்வோம், காரணம் சோற்றை துப்புறவு செய்துதான் உண்ண வேண்டும் என்பதனால். ஆனால் இன்று குழம்பை குவழையில் ஊற்ற மறுத்துவிட்டனர் உணவு வழங்குபவர்கள். அனைத்துத் தட்டுகளிலும் குழம்பை ஊற்றினர். குவழைகளில் ஊற்ற முடியாது என்று அடம் பிடித்தனர்.

இந்த விடயம் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் உரத்த குரலில் அனைவரிடத்திலும் கூறினேன். சோற்றில் ஊற்றப்பட்ட குழம்பை மீண்டும் குவழையில் வடித்துவைக்கவும், அப்படி வடிக்கப்படும் குழம்பும் கண்ணில் பட்டால் எரியும் எனவே, எல்லோரும் வடித்து வைக்கவேண்டும் என்று கூறினேன்.

அனைவரும் கடுமையான பசியில் இருந்தமையால், அப்படியே உண்டுவிட்டனர். நாங்கள் அதாவது எனது அறையில் இருந்த சிறிதரன் அவர்கள் மற்றும் ஜெகதாஸ் அவர்களின் சோற்றில் இருந்த குழம்பை வடித்து குவழைகளில் சேகரித்துக் கொண்டோம். எதிர் அறையில் இருந்த திரு. சிறிகுமார் அவர்களின் குழுவினர் எதையும் செய்யவில்லை. உண்டு முடித்ததும் உறங்கி விட்டனர். அனைவரும் கண்விளித்து இருந்தபடியால் மதிய உணவுக்குப் பின் கண்களில் உறக்கம் தொற்றிக்கொண்டது. சாய்ந்து பாதி உறக்கத்தில் இருக்கும் போது அதே சத்தம், முதலில் கேட்ட அதே பேரொலி எங்கள் பாதி உறக்கத்தைக் கலைத்தது.

நான் ஜெகநாதன் அவர்களிடம் சொன்னேன், பின்பக்க ஜன்னல் வழியாக பார்க்கும்படி, அவரும் தாவிப் பாய்ந்து ஜன்னலில் தொங்கிக் கொண்டு அண்ணே! அவங்கள்தான் வாறாங்கள் என்றார். மறுவினாடியே உரத்தக்குரலில் கன்வஸ் பாயைக் கிழித்து கதவையும் ஜன்னலையும் கட்டும்படி கூறினேன். நான் கன்வசை கிழித்து ஒரு துண்டை ஜெகதாஸ் அவர்களிடம் ஜன்னலில் கட்டும்படி கூறி, மூன்று துண்டுகளையும் ஒன்றுடன் ஒன்றை இணைத்து கம்பிக் கதவில் கட்டினேன். கட்டி முடிக்கும் போது அந்த சிங்கள வெறியர்கள் எங்கள் கதவருகே வந்துவிட்டனர்.

இதுவரைக்கும் எதிர் அறையில் இருந்த சிறிகுமார் அவர்கள் எதுவுமே செய்யாது எங்களது அறையைப் பார்த்துக்கொண்டு அவரது கதவருகே நின்று கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததும் சத்தம் போட்டேன். என்ன செய்து கொண்டு நிற்கிறீர்கள்? உள்ளே இருக்கும் வாளியை என்றாலும் கையிலெடுங்கள் என்று கத்தும் போது எங்கள் கதவைத் திறக்க ஒரு கூட்டம் வந்தது. ஒருவன் சாவியை போட்டு திறப்பதற்கு முயற்சித்த வேளை எனது கையிலிருந்த (நான் ஊன்றி நடக்கும்) தடியினால் அவனது முகத்தில் குத்தினேன். மகே அம்மே! என்று கத்திக்கொண்டு இன்னொருவன் மீது சாய்ந்தான். அவனிடமிருந்த சாவியை வேறொருவன் எடுத்துக்கொண்டு மீண்டும் திறக்க முயற்சித்தான். அவனுக்கும் கழுத்தில் தடியினால் குத்தினேன். அவன் சத்தமே போடாமல் சாய்ந்தான்.

இவர்களது சத்தம் கேட்டதும் எனது கையிலிருந்த ஊன்று கோல் தடியினை கம்பிக் கதவுக்கும் நிலத்துக்கும் இடையில் நுழைத்து திருகினேன். அது உடைந்து முனைப்புப் பகுதி கூரானது. இதுவே, எமக்கு ஆயுதமானது. குவழையில் எடுத்து வைத்திருந்த குழம்பை சிறுநீர் கழிக்கும் வாளியில் ஊற்றி தண்ணீரை விட்டு சிறிதரன் அவர்கள் அந்தக் கூட்டத்தின் முகங்களில், தனது இறுதிக்கட்ட மரணப் போராட்டமாக மிகவும் ஆவேசத்துடன் வீசினார். பலர் கண்களைப் பொத்திக்கொண்டு இடிபட்டு விழுந்தனர்.

நான் ஜெகதாஸ் அவர்களிடம் தடியைக் கொடுத்துவிட்டு, வருபவர்களிடம் நான் சிங்களத்தில் பேசுகிறேன். நான் விலகியதும் தடியின் கூர் பகுதியால் குத்தவும் என்று கூறிக்கொண்டு, சிறிகுமார் அவர்கள் இருந்த அறையைப் பார்த்தேன், அங்கு பலர் சாவிபோட்டு திறப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். மீண்டும் நான் கத்;தினேன். சிறிகுமார் அவர்களே, வாளியை எடுத்து கதவினில் ஓங்கி அடியுங்கள் இவங்கள் ஓடிவிடுவார்கள் என்று. அவரோ அசையாமல் இரண்டு கைகளையும் குறுக்காக தோள்கள் மீது வைத்துக்கொண்டு என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. அவரை மரியாதைக் குறைவாகப் பேசி சிறிக்குமார் வாளியை எடடா! அவங்கள் உன்னைக் கொல்லப் போகிறாங்கள் என்று கத்தினேன். அப்போதும் அவர் ஏதும் செய்யாது கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 5 1983 வேலிக்கடை சிறை படுகொலைகள் நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment