பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 26 July 2023

பகுதி 25 1983 ஆண்டு வெளி கட சிறைச்சாலையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

  வெற்றிசெல்வன்       Wednesday, 26 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 25

மட்டக்களப்புத் தோழர்களை அழைத்துக்கொண்டு விடிவதற்குள் கிளிநொச்சியிலிருந்து நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்துவிட்டோம். எனது காலில் வலி குறைந்திருந்தாலும், நடப்பதற்கு முடியவில்லை. காட்டில் தடி ஒன்றை வெட்டி அதன் நுணிப்பகுதியில் சாக்குத் துணிகளால் சுற்றி கமகட்டுக்குள் வைத்துக்கொண்டு நொண்டி நொண்டி நடக்கக் கூடியதாக இருந்தது.

இன்று விடிந்த பின்னர் நாம் நித்திரை கொண்டோம். ஏனையோர் சமைத்து உணவு வழங்கினர். பிற்பகலில் அல்லது மாலையில் எங்களை ஏற்றிச் செல்வதற்கான படகு முகத்துவாரத்துக்கு வந்துவிடும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் வந்தது. நவரெத்தினம் அவர்களின் உதவியாளர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தார். சதீஸ் என்பவர் படகில் வருகிறார். வரும் படகு நாவாந்துறைக்கு மீண்டும் செல்லும், அங்கு வாகனம் தயாராக இருக்கும் அழைத்துச் செல்வதற்கு என்று தெரிவித்தார்.

பகல் உணவு தயாரிக்க தாமதமாகியது. குளத்துக் கட்டில் வாமதேவன் அவர்களையும் மட்டகளப்பிலிருந்து வந்த தோழரையும் காவலுக்கு நிறுத்தியிருந்தோம். கிராமப் பகுதியிலிருந்து குளத்துக்கு வருவதற்கு ஒரே ஒரு பாதைதான் இருந்தது. வாகனங்கள் வரக்கூடிய பாதை அது. அந்தப்பாதையைத் தாண்டி சிறிது தூரத்தில்தான் இருவரும் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைத் தாண்டி சுமார் ஐம்பது மீற்றர் தள்ளி குளத்தின் வெளிப்புறப் பகுதியில்தான் நாங்கள் தங்கி கூடாரம் அடித்திருந்தோம். மதியம் 12.30 மணியளவில் திடீரென ஜீப் வாகனத்தின் சத்தம் கேட்டது. இராணுவம் பயன்படுத்தும் மிற்சுபிசி ஜீப்பின் சத்தம்தான் அது என்பதைத் தெரிந்துகொண்டோம். நாம் இருந்த பகுதி காடு சூழ்ந்ததால் ஜீப்பைக் காணமுடியவில்லை.

நாங்கள் உடனடியாக சமையல் அடுப்பை அனைத்துவிட்டு கூடாரத்தை பிரித்துக் கீழே விழுத்தினோம். எங்களிடம் மூன்று வேட்டைத் துப்பாக்கிகளும், ஒரு 303 றைபிளும், கைத்துப்பாக்கியும் இருந்தது. ஒரு ஜீப்பில் வரும் இராணுவத்தினரை வீழ்த்துவதற்கு இவை போதுமானது. இவர்களைத் தாக்குவோம் என்று கூறி காட்டின் வெளிப்புற கீழ்ப்பகுதியால் எங்கள் தோழர்கள் பதுங்கிப் பதுங்கிச் சென்றனர்.

குளத்தின் கட்டில் ஏறவந்த ஜீப் எங்கள் இரு தோழர்கள் காவல் நின்ற இடத்தருகே நிறுத்தப்பட்டது. காவலுக்கு நின்ற இருவரையும் காணவில்லை என்று தள்ளி நின்று பார்த்து வந்தவர் கூறினார். ஜீப் நிற்கும் இடத்தை அடைந்த தோழர்கள் கவனித்ததில் மூன்று பேர் சிவில் உடையில் கையில் எதையோ எடுத்துவைத்துக்கொண்டு ஜீப்பில் இருப்பவர்களுடன் கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டனர். ஏனையோரைச் சுடவேண்டாம் என்று கூறிவிட்டு பாபுஜி அவர்கள் என்னிடத்தில் ஓடிவந்து, வந்திருப்பவர்கள் இராணுவத்தினர் இல்லை. சிவில் உடையில் இருக்கும் அரசு உத்தியோத்தகர்கள் போல் தோன்றுகிறது, என்ன செய்யலாம் என்று கேட்டார்.

வாகனத்தை திருப்பிச் செல்ல முடியாத அளவுக்கு மறித்து அனைவரையும் அழைத்துவாருங்கள், சரி செய்கிறோம் என்று கூறிய பாபுஜி அவர்கள் ஓடிச்சென்று ஏனையோரிடமும் கூறி அனைவருமாக அவர்களைச் சுற்றி வளைத்து ஜீப்பை விட்டு இறங்கும்படி கூறினர். அவர்களும் கைகளில் இருக்கும் துப்பாக்கியைக் கண்டு விபரீதத்தை தடுக்க வாகனத்தைவிட்டு இறங்கி சற்று முன்னால் வந்து கைகளைத் தலைக்கு மேல் துக்கிக்கொண்டு நின்றனர். ஓட்டுனர் உட்பட அதில் ஆறுபேர் வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரினது கண்களைக் கட்டி நாங்கள் இருந்த இடத்துக்கு அழைத்துவந்தனர். வரிசையாக இருக்கவைத்து அவர்கள்பற்றிக் கேட்டோம். நீர்பாசான பொறியாளர் மற்றும் அவரது உதவியாளர் போக அவரது நண்பர் ஒருவரும் என்று விளக்கம் கொடுத்தனர். இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்தக் குளத்தைப் புனரமைப்புச் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே பார்வையிட வந்தோம் என்று கூறினர். மதிய உணவு உண்டுவிட்டீர்களா என்றதற்கு. இல்லை இரண்டுமணிக்கு மேல்தான் கிராமத்துக்குச் சென்று உண்ணவேண்டும் என்றனர்.

அவர்களை அப்படியே அமரும்படி கூறிவிட்டு எங்களின் இருவர் காவலுக்கு நின்றார்கள், அவர்கள் நின்ற இடத்தில் ஜீப்பை ஏன் நிறுத்தினீர்கள் என்று கேட்டோம்.

நாங்கள் குளக்கட்டில் ஜீப்பை ஏற்றியபோது எங்களைப் பார்த்த இருவர் தமது செருப்புக்களைக் களற்றிவிட்டு குளத்தினுள் குதித்து ஓடினார்கள். இவர்கள் ஏன் ஓடுகிறார்கள் என்று அவர்களது செருப்புக்களை எடுத்துவந்து யோசனை செய்து கொண்டிருக்கும் போதுதான் துப்பாக்கியுடன் இவர்கள் வந்து இங்கே அழைத்து வந்தனர் என்றார்கள் அனைவரும்.

கட்டப்பட்டிருந்த கண்களை அவிழ்த்துவிடும்படி கூறி மதிய உணவை எங்களுடன் உண்ணும்படி கூறினேன். சற்றுத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டனர். எங்களில் இருவரை அழைத்து குதித்து ஓடிய வாமதேவன் அவர்களையும் மற்றவரையும் தேடிக் கண்டுபிடிக்கும்படி அனுப்பிவைத்தேன். நாங்கள் பழையபடி கூடாரத்தை அமைத்து சமையல் செய்து முடிக்கும் தறுவாயில் ஓடிய இருவரும் அழைத்துவரப்பட்டனர். இருவரையும் தனியாக அழைத்து விசாரித்தோம்.

இராணுவ ஜீப் என்று நினைத்துத்தானே ஓடினீர்கள்? என்ற கேள்விக்கு, ஆம் என்றனர். செருப்பை எதற்காகக் களற்றிவிட்டு ஓடினீர்கள் என்ற கேள்விக்கு, வேகமாக ஓடுவதற்கு என்றனர். உங்களை நம்பித்தான் நாம் சமையல் செய்கிறோம், ஓய்வெடுக்கிறோம், எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லாமல் நீங்கள் ஓடிச்சென்றால் நாம் இராணுவத்திடம் அகப்பட்டுக்கொள்ள நேர்ந்துவிடும்தானே என்ற கேள்விக்கு, வாமதேவன் அவர்கள் சரியான பதில் ஒன்று கூறினார், உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் குளத்தின் உள்பகுதிக்குள் குதித்து ஓடினோம் என்றார்.

வசதி எந்தப்பக்கமோ அந்தப் பக்கம் குதித்து ஓடினர் என்பதுதான் சரியானது. ஆனால், எங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் எதிர்த்திசையில் ஓடினேன் என்பது அவர் தப்புவதற்குக் கண்டுபிடித்த உபாயமாகும். இருந்தாலும், எதிரியின் கவனத்தை எதிர்த்திசையில் திருப்பினேன் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

எங்களுக்குத் தெரிவிக்காமல் எதிர்த்திசையில் ஓடியதால் அவர்கள் இருவருக்கும் மறுநாள்வரை உணவு இல்லை என்றும், தொடர்ந்து அன்றைய தினம் முழுவதும் அதே இடத்தில் காவல்புரியவேண்டும் என்றும். எங்கும் அமரக் கூடாது என்றும் கூறி மீண்டும் அதே இடத்திற்கு காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

நீர்ப்பாசானப் பொறியாளரை அழைத்து அவர்பற்றிய விபரங்களை குறித்துக் கொண்டோம். உதவியாளர்கள், மற்றும் ஓட்டுனர் போன்றோரது விபரங்களும் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர்களும் நாங்களும் மதிய உணவு உண்டோம். இப்போது அவர்கள் எங்களுடன் மிகவும் நட்பாக பழகவும் கதைக்கவும் ஆரம்பித்தனர்.

எங்களுக்கு நீங்கள் ஓர் சிறிய உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டேன். கண்டிப்பாகச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றனர். இன்று மாலை ஐந்து முப்பது அல்லது ஆறு மணியளவில் உங்கள் ஜீப்பில் எங்களை இங்கு உள்ள ஒரு பகுக்கு ஏற்றிச்சென்று இறக்கவேண்டும். இரண்டு தடவைகளில் இதைச் செய்யவேண்டும். அதுவரை நீங்கள்; அனைவரும் எங்களுடன் இருக்கவேண்டும் முடியுமா என்று கேட்டேன். மாலைவரையல்ல நாளைகாலை வரைஎன்றாலும் நாங்கள் காத்திருக்கிறோம் என்றவர், நீங்கள் யாரென்று நாங்கள் அறிந்துகொள்ளலாமா? என்றார் பொறியாளர்.

நாங்கள் ஒரு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றேன். மட்டக்களப்பு ஜெயிலிருந்து தப்பியவர்களா என்று நொடியும் தாமதியாமல் கேட்டார் அவர். நான் பதில் கூறாது அவரைப் பார்த்தேன், தப்பாகக் கேட்டால் மன்னிக்கவும் என்றார். தப்பு எதுவுமில்லை, சரிதான் என்றேன்.

அத்துடன் நில்லாது அந்தப் பகுதிபற்றியும். நீர்ப்பாசனம்பற்றியும் பேசினோம். முளங்காவில் பகுதியில் “படித்த வாலிபர்கள் திட்டம்” என்று ஆரம்பிக்கப்பட்ட தோட்ட விவசாயம்பற்றி அவர் விபரமாகச் சொன்னார். விஸ்வமடு முத்தையன்கட்டுப் போன்று பெருமளவு வளர்ச்சிபெறாவிட்டாலும் அவற்றில் பாதி வளர்ச்சியைக்கண்டது என்று கூறினார்.

பிற்பகல் மூன்று மணியளவில் நவரெத்தினம் அவர்களின் நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஐந்து முப்பதுமணியளவில் படகு வந்துவிடும் என்று தகவல் சொன்னார். படகு வந்துவிட்டதா என்பதை உறுதி செய்வதற்காக அவர் மீண்டும் மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டார்.

நாங்கள் இருந்த இடத்துக்கும் படகுவரும் கரைக்கும் எட்டு கிலோ மீற்றர் இருந்தது. இந்த இடத்திலிருந்து நாங்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதிஸ்டவசமாக இந்த ஜீப் எங்களை நோக்கிவந்ததால் நாங்கள் விரைவாகவே படகுநிற்கும் இடத்தை அடையலாம். அதனால்தான் அந்த ஜீப்பை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம்.

மாலை ஐந்து மணியளவில் அதே மோட்டார்சைக்கிளில் வந்தவர் தகவலுடன் வந்தார். படகுவந்துவிட்டது, நாங்கள் புறப்படலாம் என்றார். நாங்கள் இரண்டுதடவைகளில் கரைக்கு சென்றுவந்து மூன்றாவது தடவைதான் ஜீப்பின் ஓட்டுனரை அழைத்துச்சென்று அதை அவரிடத்தில் ஒப்படைக்கவேண்டும். பொறியாளரும் அதற்குச் சம்மதித்தார்.

அதன்படி இரண்டு தடவைகளில் எங்களை ஏற்றிச்சென்று கரையில் இறக்கிவிட்டு மூன்றாவது தடவை ஓட்டுனரை மட்டும் ஏற்றிவந்தார் வாமதேவன் அவர்கள். படகு கரைக்கு வரமுடியவில்லை. எங்கள் இருவரையும் தோழ்மீது சுமந்து கொண்டுசென்று படகில் ஏற்றினர். படகு ஓட்டிகளுடன் சதீஸ் அவர்களும் வந்திருந்தார். அவருடன் இந்தியாவில் தமிழகத்தில் எங்களது இயக்கத்தின் செயற்பாடுகள்பற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போதே அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.

இறுதியில் ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தனர் எங்கள் தோழர்கள். எங்களை இறக்கிவிட்ட ஓட்டுனர், பொறியாளரையும் அவரது உதவியாளர்களையும் ஏற்றிவருவதற்குப் புறப்பட்டார். எங்கள் படகும் நாவான்துறைநோக்கி புறப்பட்டது.

படகில் சதீஸ் அவர்களுடன் மூன்றுபேர் இருந்தனர். சதீஸ் அவர்களை நான் இப்போதுதான் பார்க்கிறேன். நாங்கள் சிறையில் இருந்த காலத்தில் இவர் இயக்கத்தில் இணைந்துள்ளார். சமயோகிதமாக நடந்து வேலைகளை முடிக்கக் கூடியவர் என்பதை அவரது கதையிலிருந்து அறிந்துகொண்டேன்.

வெள்ளாங்குளத்திலிருந்து நாங்கள் இந்தியா சென்றடையும் வரையிலான அனைத்துப் பணிகளையும் சதீஸ் அவர்களே செய்திருந்தார். திரு.பார்த்தன் மற்றும் திரு. சதீஸ் போன்றவர்கள் களவேலைகளுக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தனர். செயற்பாட்டுத் தகுதி அனைவருக்கும் எட்டாது. கொள்கையும், திட்டங்களும் நன்றாகத் தெரியலாம், ஆனால் அதனைச் செயற்படுத்தி முடிக்கும் திறமை அனைவரிடத்திலும் இருப்பதில்லை.

தமீழிழம் என்பது அருமையான நிரந்திரத் தீர்வுக் கொள்கை! இந்தக் கொள்கையை நிலைநாட்டத்தான் பல இயக்கங்கள் தோன்றின. யாராலும் இந்தக் கொள்கையை செயற்படுத்தி வெற்றிகாணமுடியவில்லை. மனிதனது புத்தி நாலாபக்கமும் அலையும், அந்தப்புத்தி தமிழீழக் கொள்கையையும் நாலாபக்கமும் அலைக்களித்துவிட்டது. இன்றும் அதே நிலைதான்!

நாவாந்துறையை நோக்கி படகு விரைகையில். ஏதோ விடுபட்ட எங்கள் பிரதேசத்துக்குள் நுளைவது போன்றதோர் உணர்வு இருந்தது. இரவு ஒன்பது முப்பது மணியளவில் நாங்கள் நாவாந்துறையை அடைந்தோம். எங்களுக்காக இயக்கத் தோழர்கள் காத்திருந்தனர். ஒரு வானும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

எங்களைக் கண்டதும் சில தோழர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். எங்கள் இனத்தின் மீது கொண்ட பற்றுதல் அவர்களை அழத்தூண்டியது. அவர்கள் யாரும் எங்கள் உறவினர்கள் கிடையாது. கொள்கையும், இயக்கமும் எங்களை இரத்த உறவுகளாக்கியிருந்தது.

படகுக்காரருக்கு நன்றி கூறிவிட்டு, வாகனத்தில் நாம் அனைவரும் ஏறினோம். எங்களது துப்பாக்கிகள் தவிர அவர்களும் எஸ்.எம்.ஜி. மற்றும் றிப்பீற்றர் துப்பாக்கியும் கொண்டுவந்திருந்தனர். இராணுவம் அல்லது பொலிஸ் மறித்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்து வானை செலுத்தும்படி கூறி அனைவரும் துப்பாக்கிகளை தயார்நிலையில் வைத்து அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். வாகனம் கொக்குவில் நோக்கி நகர ஆரம்பித்தது.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி 25 1983 ஆண்டு வெளி கட சிறைச்சாலையில் நடந்த இனப்படுகொலை ஒரு நேரடி சாட்சியம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment