1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
ஞானசேகரன் ராஜன்
தோழர்களின் கவனத்திற்க்கு!
வெலிக்கடையில் நடந்த படுகொலைகள் பற்றி பலரும் என்னிடம் எழுதும்படி நீண்டகாலமாக கோரிக்கை வைத்துவந்தனர். அந்த நினைவு தினம் இந்த ஜூலையில் வந்ததால் படுகொலைகள், சிறையுடைப்பு பற்றிய குறிப்புகளை எழுதினேன். இது முழுமையானதல்ல, மாணவர் பேரவை இளைஞர் பேரவை புளொட் பின்னர் ஈ.என்.டி.எல்.எப். என்று எனது அனுபவத்தையும் இவற்றின் வரலாற்றையும் பதிவே செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும், நீண்ட காலமாக தள்ளி போய்க்கொண்டே .
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பலர் வரலாறு என்று பதிவுகள் பலவற்றை செய்துள்ளனர். இவை எல்லாம், ஓயட்டும் என்று நான் காத்திருந்தேன். இப்போது நான் எழுதிய 29 பாகங்களும் முழுமையானதல்ல. இவை இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்தவற்றை தான் 36 ஆண்டுகள் கழித்து எழுதியுள்ளேன்.
குறிப்பாக மட்டக்கிளப்பு சிறையிலிருந்து நாங்கள் தப்பிப்பதற்கு வெளியில் இருந்தவர்கள் பலபேர் உதவிகள் செய்துள்ளனர். இவர்களில் வாசுதேவா, சங்கர் ஆகிய இருவர் பெயரரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அதே போன்று திருகோணமலையில் திரு. பார்த்தான் அவர்களின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன் முல்லைதீவில் திரு. நவரத்தினத்தின் பெயரையும் யாழ்ப்பாணத்தில் சதீஷ் அவர்களுடைய பெயரையும் தான் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் அல்லாமல் பலபேர் இந்தச் சம்பவங்களின் பின்னால் இருக்கின்றனர்.
அவர்கள் அனைவருடைய பெயர்களும் பங்களிப்புகளும் வரவிருக்கும் வரலாற்றுப் புத்தகத்தில் கண்டிப்பாக இடம்பெறும். அதே வேளை 36 ஆண்டுகள் கழித்து எழுதும் பொழுது பலபேருடைய பெயர்களையும் அவர்களுடைய நினைவுகளையும் நான் மறந்திருக்கிறேன்.
மாணவர் பேரவையை சேர்ந்த 42 இளைஞர்கள் 1973 ஆம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்கள், அதில் நானும் ஒருவன். 1976 ஆகஸ்ட் மாதம் விடுதலை பெற்று வரும்போது நான் சிறையில் நடந்த சம்பவங்கள் பற்றிய நாடற்குறிப்புக்கள் அனைத்தையும் கொண்டுவந்திருந்தேன். பஸ்தியான் பிள்ளை உட்பட சி.ஐ.டி. அதிகாரிகள் கொல்லப்பட்டபோது எனது வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் எனது நாட்குறிப்புகள் அனைத்தையும் அள்ளிச்சென்று அதைவைத்தே கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதன் பின்னர் நான் நாட்குறிப்புகள் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.
இருப்பினும் வெளிக்கடையில் நடந்த சம்பவங்கள் பற்றி மட்டக்கிளப்பு சிறையில் இருக்கும் போது அனைத்துக் குறிப்புகளையும் எழுதினேன். நான் சொல்லச் சொல்ல மாணிக்கமதாசனும், பாபுஜியும் தான் அவற்றை எழுதினார். (சிறையினுள் மேசை கதிரை எதுவும் கிடையாது. நிலத்தில் இருந்து குனிந்தபடி தான் எழுத வேண்டும். என்னால் கால்களை மடக்கிக்கொண்டு குனிந்திருந்து எழுத முடியாது. காரணம், நான் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தேன்)
சிறையின் எஸ்.பி. சீப் ஜெயிலர் (Chief Jailor), காவலர்கள் சிங்களக் கைதிகளின் பெயர்களை பின்னாளில் நாங்கள் மறந்துவிடுவோம் என்பதால், 160 பக்கங்களை கொண்ட ஓர் புத்தகத்தில் எழுதினேன்.
அந்தப் புத்தகத்தை திரு. கிருஷ்ணமூர்த்தி மூலம் வாசுவிடம் ஒப்படைத்து அதை வணசிங்கா மாஸ்டரிடம் கையளிக்கும்படி கூறினேன். ஆனால் வாசு அதனை அவரிடம் கையளிக்கவில்லை. எங்கோ பாதுகாப்பாக வைத்து தருகிறேன் என்று கூறியவர் கடைசி வரை அதை எடுத்து தரவில்லை. பின்னாளில் நானும் அதனை மறந்துவிட்டேன். அதனால் தான் எழுதிய குறிப்புகளில் சீப் ஜெயிலர் (Chief Jailor), எஸ்.பி., காவலர்கள் போன்றவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடவில்லை.
அதனால் எழுதி வருகின்ற எங்கள் வரலாற்று குறிப்புகளில் ஏதேனும் விடுபட வாய்ப்பளிக்க கூடாதென்ற முடிவில் உறுதியாகவுள்ளேன். அனைவரிடத்திலும் கண்டிப்பாக தொடர்பு கொண்டு, விவரங்கள் அறிந்துதான் அச்சுக்கு ஏற்றப்படுமென்று அறியத்தருகிறேன். இதுவரை படித்து குறிப்புக்கள் அனுப்பியவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
No comments:
Post a Comment