பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 25 July 2023

பகுதி1 1983வெளிக்கடை சிறைச்சாலை படுகொலை ஒரு நேரடி அனுபவம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 25 July 2023
1983 ஜூலை 25, 27 வெலிக்கடை படுகொலை
(ஞானசேகரன் ராஜன்)

பாகம் 1
 
1983 ஜூலை 25 மற்றும் 27 இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை, ஈழத்தின் தமிழர்களுக்கு மறந்துவிட முடியாத பாடம் ஒன்றினைப் புகட்டியது. அரசாங்கமும் அதிகாரிகளும் இணைந்து நிறைவேற்றிய இந்தப் படுகொலைகள் தமிழர்கள் தனித்தே வாழவேண்டும் என்பதனை உறுதிப்படுத்தியது.

24 ஜூலை இரவு 12 மணிக்கு சற்று மேலாக வெலிக்கடையின் முக்கிய வாயில் பகுதியிலிருந்து மக்களது கூச்சலிடும் சத்தமானது எங்களைத் தட்டி எழுப்பியது. விழித்துக்கொண்ட நாம் காவலுக்கு நின்றவரை அழைத்து “என்ன சத்தம்” கேட்கிறது என்று கேட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லையே, அது சும்மா என்று நழுவி விட்டார். அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களும் கேட்டன. எங்கள் எவருக்குமே என்ன நிகழ்வென்பது தெரியாது.

25 ஆம் திகதி காலை பத்துமணியளவில் பெரும் புகையானது எங்கள் சிறை ஜன்னல் வழியாக தெரியத் தொடங்கியது. அப்போதுதான் எம்மவர் பரபரப்படைந்தனர். சப்பல் வார்ட் (chapel ward) என்று அழைக்கப்பட்ட தரைத் தளத்தின் “பி” பிரிவில் தண்டிக்கப்படாத விடுதலைப் போராளிகள் 27பேரும். “டி” பிரிவில் தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரணை முடிவடையாத மொத்தம் 35 பேருமாக மொத்தம் 52பேர் அன்றைய தினம் சிறையின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

“டி” பகுதியில் திருவாளர். குட்டிமணி. தங்கத்துரை உட்பட 35பேரும் இரு;நதனர். எங்களை தினமும் காலை பத்தரை மணியளவில் சூரிய வெளிச்சம் படுவதற்காக அரை மணிநேரம், முள் கம்பிகளால் பத்து அடி உயரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்வர்.

அன்றைய தினமான ஜூலை 25ம் நாள் காலை பத்துமணிக்கே “டி” பிரிவு போராளிகளை அழைத்துச் சென்றிருந்தனர் அதிகாரிகள். பத்தரை மணியளவில் எங்கள் பகுதியினரை அழைத்தச் சென்றனர். திருவாளர். குட்டிமணியும் ஏனையோரும் அவசர அவசரமாக அதிகாரிகளால் அவர்களது அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தவேளை, நண்பர் குட்டிமணி எனது அருகில் வந்து யாழ்ப்பாணத்தில் 13 ஆமிக்காரரை சுட்டுக் கொன்று விட்டார்களாம். அதனால் கொழும்பில் கலவரமாம் என்று கூறி முடிப்பதற்குள் அதிகாரிகள் அவரை நேரமாகிறது என்று அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதன் பின்னர்தான் “பி” பகுதியிலிருந்த எமக்கு வெளியில் நடந்தவை பற்றித் தெரியவந்தன. எங்களுக்கு அன்று பத்து நிமிடங்கள்தான் கொடுத்திருப்பார்கள் வெய்யிலில் நிற்பதற்கு, உடனே அறைகளுக்கு திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடடனர் அதிகாரிகள். எதற்காக எங்களை அவசரப்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. சிறை மதில்களுக்கப்பால் நாலாபுறமும் புகை மண்டலங்களாகக் காட்சியளித்தது. இது இப்படி அது அப்படி என்று எமக்குள்ளாக கருத்து பறிமாற்றங்கள் ஆனால். வேளியில் நடப்பவைப் பற்றி உண்மை எதுவும் தெரியாது.

பகல் ஒன்று முப்பது மணிக்கு உணவுக்குப் பின் அடைக்கப்பட்ட அறைகளின் இரும்புக் கம்பிகளில் சாய்ந்தபடி வெளியில் நடப்பவை பற்றிய கற்பனையில் மூழ்கியிருந்தோம். எங்கள் அறைகளானது 8அடி நீளம் 6 அடி அகலம் கொண்டது. ஒவ்வொருவரும் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

பிற்பகல் இரண்டுக்கும் இரண்டு முப்பது மணிக்கும் இடையில் பெருந்திரளான மக்கள் கூடி கூச்சலிடும் சத்தம் கேட்டது. திகைத்து எழுந்து நின்று காதுகளைக் கூர்மையாக்கி இரும்புக் கம்பிகளினூடே செலுத்தினர் ஒவ்வொருவரும். அந்தக் கூச்சல் அனைவரையும் மிரளவைத்தது. இப்படி ஓர் கூச்சலை எங்கள் வாழ்நாளில் கேட்டிருக்கவில்லை. ஏனெனில் அன்றைய வெலிக்கடைச் சிறையின் மொத்தக் கைதிகள் இரண்டாயிரம். இவர்கள் அனைவரும் ஆவேசத்துடன் ஆத்திரம் கொண்டு எங்கள் சிறைக் கொட்டடியை நோக்கி நகர்கின்றனர்.

இந்தச் சிங்களக் கைதிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டக் கைதிகள். விடுதலையோ அரசியல் நோக்கமோ இவர்களுக்குக் கிடையாது. பலதரப்பட்ட குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இவர்கள். அரச இராணுவத்தினரால் தூண்டப்பட்டு “சிங்கள ஜனதாவ ஜயவேவா” (சிங்கள் மக்கள் வாழ்க) என்று முழங்கிக் கொண்டு குட்டிமணி ஜெகன் ஆகியோர் தங்கியிருந்த “டி” பிரிவுக்குள் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் இடிபட்டுக்கொண்டு நுழைந்தனர்.

கைகளில் கொலைக் கருவிகள்! வேலிக்கடைச் சிறை பலதரப்பட்ட தொழற்சாலைகளைக் கொண்டது. அந்தத் தொழிற்சாலைகளுக்குள் இருந்த கருக்கான கோடாலி, கத்தி, கடப்பாரை, சுத்தியல், இரும்பிக் கம்பிகள், நீழமான சாவிகள், மரக்கட்டைகள், மரமறுக்கும் உடைந்த வாள்கள், அடுப்பெரிக்கும் விறகு கட்டைகள் என்று சிங்களக் குற்றவாளிகள் படை கையிலேந்திக் கொண்டு புகுந்தது.

திருவாளர். குட்டிமணி தங்கியிருந்த பகுதிக்குள் புகுந்த அந்தக் காடையர் படை ஒவ்வொரு அறையாகத் திறந்து, உள்ளே புகுந்து தங்கள் ஆயுதங்களால் எம்மவரைக் கொன்றனர். வெறுங்கையுடன் ஒவ்வொருவர் ஒரு அறையில், இரண்டாயிரம் சிங்களக் காடையர்கள், கதவுகளின் திறப்புகள் அவர்களது கையில், பேரிரைச்சல், இந்தக் கூட்டத்தை வெறுங்ககையுடன் எந்த வீரனால் தாக்குப்பிடிக்கமுடியும்.

ஒவ்வொரு சிங்களவரின் ஆயுதமும் “டி” பிரிவிலிருந்த 35 பேரையும் தாக்கியது. இறந்து கிடந்த எம்மவர்களை முறைவைத்து அந்தக் காடையர்கள் தாக்கினர். மதியம் 2 மணி முதல் பிற்பகல் நாலே முக்கால் மணிவரை இந்த இரண்டாயிரம் பேரும் எங்கள் இனத்தவரின் சதைகளை கழுகுகள் போன்று பிய்த்தெடுத்தனர்.

இறுதியாக ஐந்து மணியளவில் சிறையின் அதிபர் (சுப்ரின்டென்ட்) சப்பல் வார்டின் மத்திய பகுதிக்கு வந்தார். அதன் முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி சிங்களத்தில் உரை ஒன்று நிகழ்த்தினார். அவ்வுரை பின்வருமாறு:

நீங்கள் எங்கள் மக்களது உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளீர்கள். எங்களது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாங்கள் சரியான பதில் கொடுத்துள்ளோம். இவர்கள், (நண்பர் குட்டிமணி இருந்த பகுதியான வலப்புறத்தைக் காண்பித்து) கொலைகாரர்கள், எங்கள் இனத்தவரைக் கொன்றாலும், இராணுவத்தினரைக் கொன்றாலும் நாங்கள் அவற்றுக்குத் தக்கபதிலடி கொடுப்போம்.

இன்றைய தினம் எங்கள் சரித்திரத்தில் முக்கியமான நாள், எங்கள் இனமும் இளைஞர்களும் நினைத்ததை நீங்கள் செய்து முடித்துள்ளீர்கள். உங்களது இந்த உணர்வுபூர்வமான யுத்தத்துக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த நாடு சிங்கள இனத்துக்கு உரியது என்பதனை நீங்கள் ஏனையோருக்கு உணர்த்தியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை செய்தது போதும், இந்தப் பகுதியினை (நாம் இருந்த பகுதியினை இடது கை மூலம் காண்பித்து) பிறகு பார்த்துக் கொள்வோம். ஆதலால் நீங்கள் அனைவரும் அமைதியாக உங்கள் உங்கள் பகுதிகளுக்குச் செல்லலாம் என்று கூறி முடித்தார்.

சிங்களக் கைதிகள் தங்கள் கைகளிலிருந்த ஆயுதங்களுடன் எங்கள் அறைகளைப்பார்த்து முறைத்தபடி வெளியே இருந்த அரச மரத்தடியை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் கொண்டு சென்ற கருவிகளில் எங்கள் இனத்தவரின் இரத்தக்கறைகள் படிந்திருந்தன.

சிறை அதிபர் அனைவரையும் விலக்கிக் கொண்டு சிறைவாசலை அடைந்தார். சிறிது நேரத்தில் சிறையின் முக்கிய வாசல் கதவு திறக்கப்பட்டது. ஓர் இசுசு லொறி உள்ளே நுழைந்தது. அரச மரத்தைச் சுற்றி வந்த அந்த லொறி எங்கள் சப்பல் வார்டைப் பார்த்து திரும்பி நின்று கொண்டது.

மீண்டும் சிங்களக் கைதிகள் உள்ளே நுழைந்தனர். எங்கள் போராளிகளின் உடல்களை நான்கு பேர் வீதம் இரண்டு கைகளுக்கும் இரண்டு பேர், இரண்டு கால்களுக்கும் இரண்டு பேர் என்று தூக்கிக்கொண்டு வந்து லொறியின் பின்புறத்தில் நின்று கொண்டு, இறந்த எங்கள் இனத்தவரின் உடல்களை முன்னும் பின்னுமாக ஆட்டி, வேகம் அதிகரித்ததும் வீசி எறிந்தனர் லொறியின் உள்பகுதிக்குள்.

அரச மரத்தின் கீழ் நின்ற லொறியினுள் எங்கள் இளைஞர்கள் இவ்விதமாக நிரப்பப்பட்டனர். இந்த இறந்த உடல்களுக்குள் ஒருவர் உயிருடன் இருந்தார். குவிக்கப்பட்ட அவர்களுள் எழுந்திருக்க ஒருவர் முயற்சிப்பதைக் கண்ட சிங்கள கைதி ஒருவர் மீண்டும் லொறியினுள் ஏறி ஏனைய உடல்கள் மீது நின்று கொண்டு எழுந்திருக்க முயற்சித்தவரது தலையில் ஓங்கி தன் கையிலிருந்த கோடாலியினால் கொத்தினார். தலை இரண்டாகப் பிளந்து மீண்டும் சரிந்தது தமிழரது உடல் பினமாக.

வீரசாகசம் புரிந்தவர் போன்று குதித்தார் அந்தக் காடையர். லொறியைச் சுற்றி பெருங்கூட்டம். இந்தக் கூட்டத்தினூடே மயில் வாகனன் என்ற சிறுவன் தென்பட்டான்.

அச் சிறுவன் குட்டிமணி அவர்கள் இருந்த “டி” வார்டில் அடைக்கப்பட்டிருந்தான். அன்றைய எங்கள் இயக்கமான புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவன்தான் சிறுவன் மயில்வாகனன். (வயது 16). “டி” வார்டில் கூட்டம் அதிகரித்ததால் கதவு திறக்கப்படும் போது மறைந்து நின்று கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்து அரச மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். சிங்களக் கைதிகளுக்கு அவனைத் தெரியாது.

ஆனால், “டி” வார்டில் காவலுக்கு நின்ற சிறை அதிகாரி சிறுவன் மயில் வாகனனைக் கண்டு கொண்டார். ஓடிச் சென்ற அந்தக் காவலாளி சிங்களக் கைதி ஒருவரின் கையிலிருந்த கத்தி ஒன்றினைப் பறித்து மயில் வாகனனது தலைமயிரைப் பிடித்து முன்னோக்கி இழுத்துக் கொண்டு ஓங்கி அவனது வயிற்றில் பல முறைக் குத்தினார். மயில் வாகனன் தரையில் வீழ்ந்தான். காவலாளி வீரநடை போட அவரை சிங்களக் கைதிகள் தோள்மீது தூக்கி “ஜெயவேவா” என்று கோசமிட்டனர்.

பின்னர் மயில் வாகனனும் லொறியினுள் தூக்கி வீசப்பட்டான்.

நீண்ட நேரம் காத்திருந்த அந்த லொறி இரவு சுமார் ஏழு மணியளவில் மீண்டும் முக்கிய வாயில் வழியாக வெளியேறியது. எமக்கு அருகிலிருந்த எங்கள் போராளிகள் பிணக்குவியலாக, நாசிகளின் கூடாரத்தை விட்டு சவக்குளிகளுக்குச் சென்றது போல் கொண்டு செல்லப்பட்டது.

நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் “பி” வார்டின் முதல் செல்லிருந்த நானும் எனக்கு எதிர்புறம் இருந்த சிவ சுப்பிரமணியம் அவர்களும் நேரடியாகவும் ஜன்னல் வழியாகவும் அவதானித்துக் கொண்டிருந்தோம். இதே போன்று அரசமரப் பகுதியின் பக்கமாக இருந்த ஜன்னல் வழியாகவும் எங்களில் சிலரும் இவற்றினைக் கண்டு ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இப்போது நேரம் இரவு ஒன்பது முப்பது மணி ஆகிவிட்டது. அனைவரும் விழி பிதுங்க அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தோம். “பி” வார்டின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கறுத்தக் கோட் அணிந்தவர்கள் சிறை அதிகாரிகளுடன் பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர். 28 அறைகள் கொண்ட எங்கள் பகுதியை சற்றுத் தள்ளி நின்றே ஒரு நோட்டம் விட்டனர்.

எனது அறையின் முன் வந்து நின்ற கறுத்த கோட் அணிந்தவர் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நான் முதன்மை நீதிபதி, இங்கு நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நீங்கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்றார். ஆம், நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன் என்றேன். எனது அறையைச் சைகையினால் காண்பித்த நீதிபதி, முதன்மை ஜெயிலரிடம் திறக்கும்படி கூறிவிட்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டுக் கொண்டு மீண்டும் எனது அறை முன்பு வந்து நின்றார்.

எனது அறை திறக்கப்பட்டது. நான் வெளியில் வந்தபோது, தம்பாபிள்ளை மகேஸ்வரன் அவர்களும் தானும் சாட்சியம் சொல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் கேட்கும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது எதற்காக என்று கோபித்த ஜெயிலரைக் கவனித்த முதன்மை நீதிபதி அவரையும் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முதன்மை ஜெயிலரது அலுவலகத்துக்குச் சென்றனர். வாசலில் போடப்பட்டிருந்த வாங்கில் அமரும்படி கூறினர். சரியாக இரவு பத்து முப்பது மணியளவில் எனது பெயரைச் சொல்லி உள்ளே அழைத்தனர்.

உள்ளே பெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. மறுமுனையில் முதன்மை நீதிபதியும் தட்டெழுத்தாளரும் இருக்க, எதிர் முனையில் எனக்கென ஓர் நாற்காலி இருந்தது. அதனைச் சைகையின் மூலம் காட்டி அமரும்படி சொன்னார் நீதிபதி. நானும் அமர்ந்து கொண்டு மேசையின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைக் கவணித்தேன். வெள்ளை உடையில் அமர்ந்திருந்த நபரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கிரகித்துக் கொண்டேன். அவர்தான் திருவாளர் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீதி மன்றத்தில் வாதாடிய அரசு தரப்பு சட்டத்தரணி “திலக் மாறப்பன”. அவருக்கு அருகில் முதன்மை ஜெயிலரும் அவர்களின் எதிர் புறத்தில் சிறையின் அதிபரும் இருந்தனர்.

நீதிபதி என்னைப் பார்த்து வாக்கு மூலத்தை ஆரம்பிக்கலாமா? என்று கேட்டார். மாறப்பனயைப் பார்த்து, “இவரை முதலில் வெளியில் அனுப்புங்கள்” என்று கூறினேன். நீதிபதி அவரைப் பார்த்தார், அவர் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். மீண்டும் நான் முதன்மை ஜெயிலரையும், சிறை அதிகாரியையும் பார்த்தேன். விளங்கிக் கொண்ட நீதிபதி, அவர்கள் இருவரையும் வெளியே செல்லும்படி கூறினார். அவர்களும் வெளியே சென்று விட்டனர். இப்போது நீதிபதியும் தட்டெழுத்தாளரும்தான் அந்த அலுவலகத்தில் இருந்தோம். மீண்டும் என்னைப் பார்த்த நீதிபதி “இப்போது ஆரம்பிக்கலாமா” என்றார்.

தொடரும்...
logoblog

Thanks for reading பகுதி1 1983வெளிக்கடை சிறைச்சாலை படுகொலை ஒரு நேரடி அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment