பகுதி 44
செயலதிபர் உமா மகேஸ்வரன் |
43 பதிவிலிருந்து எமது பின் தள மாநாட்டைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். என்னிடம் பின்தள மாநாட்டு அறிக்கை முழுமையாக உள்ளதால் அதைப் பார்த்து சில புள்ளி விபரங்களை எழுதினேன். அதை வைத்து நான் எழுதினால் எனக்கும் விளங்காது, இயக்கத்தில் இல்லாத நண்பர்களுக்கும் விளங்காது. முகாம்களிலும், முகாம் பொறுப்புகளிலும இருந்ததோழர்களுக்கு அந்த விபரங்கள் தோழர்களின் பெயர்கள் முழுமையாக விளங்கும். நான் எமது இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தாலும் முகாம் பற்றிய அறிவு, முகாம் பற்றிய வாழ்க்கை, முகாம் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் பதிவு போடும் போது தோழர்களின் பொறுப்புகள் பதவிகள் நாம் பற்றிய விபரங்கள் யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது அதனால் என்னை மன்னிக்கவும். அதுமட்டுமல்ல இலங்கையில் தளத்தில் அமைப்பு பற்றிய விபரங்கள் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் இதுவும் எனக்கு தெரியாது. டெல்லியில் எனக்குத் தேவையான பிரச்சாரங்களுக்கு உதவும் செய்திகள் மட்டுமே தலைமை கழகத்தில் இருந்து வரும். அதைவிட எமது இயக்கத்தின் நல்லது கெட்டது பற்றிய ரகசிய செய்திகள் கழக சென்னை நிர்வாகிகள் மட்டத்தில் நாங்கள் பேசிக் கொள்வோம்.
கழகத் தோழர்களுடன் நான் |
யாரும் பின்தள மாநாடு பற்றிய விபரங்கள் தீர்மானங்கள் அறிய விரும்பினால் நான் அதை போட்டோ வடிவில் போட்டு விடுகிறேன்.
இனி நான் மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி எனது நேரடி அனுபவத்தை எழுதுகிறேன்.
19/07/1986 நடக்கவிருந்த பின் தள மாநாட்டுக்கு டெல்லி கிளையின் சார்பாக நான் முதன்முறையாக பயிற்சி முகாம் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தேன். டெல்லி கிளையின் சார்பாக சென்னையில் இருந்த பரதனும் அழைக்கப்பட்டிருந்தார். ஒரத்தநாட்டில் மொட்டைமாடி என்றழைக்கப்படும் எமது அலுவலகத்தில் வந்திருந்தேன். அங்கு எழுத்து வேலைகளில் பரபரப்பாக இருந்த மாதவன் அண்ணா ஆனந்தி அண்ணா போன்றவர்களுக்கு மிகவும் சந்தோஷம். குளித்துவிட்டு வந்த பின்பு மாதவன் அண்ணா சாப்பிட அழைத்து போனார். சின்ன சின்ன கடைகள். நான் நினைக்கிறேன் ஒரு ரூபாய்க்கு கிட்டத்தட்ட சின்ன சின்ன10 இட்டலிக்கு மேல். தேனீர் அம்பது காசு என்று நினைக்கிறேன்.
எனக்கும் அவர்கள் எழுத்து வேலைகள், மற்றும் அவர்கள் செய்த வேலைகளில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு முகாம்களில் இருந்து வந்து போகும் தோழர்களின் காரசாரமான பேச்சுசத்தங்கள் தான் பயங்கரமாக கேட்டது. செயலதிபர்உமா மகேஸ்வரன் உட்பட முன்னணி தோழர்கள் கூடிக்கூடி பேசுவதும் போவதும் வருவதுமாக பிஸியாக இருந்தார்கள். முன்னணி தோழர்களையும் லெபனான் பயிற்சிக்கு போய் வந்த தோழர்களையும் மட்டும் தான் எனக்கு தெரியும். முகாமில் இருந்து வந்த தோழர்களுக்கு என்னை தெரியாது எனக்கும் அவர்களை தெரியாது. அவர்கள் முன்னணி தோழர்களை பார்த்து முறைத்த மாதிரியே என்னையும் கோபமாகப் பார்த்தார்கள். மாதவன் அண்ணா என்னை தனியாக வெளியில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்.
தளத்தில் இருந்து வந்த தோழர்கள் யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அதில் விவசாய அணி தலைவராக செயலாளராக வந்திருந்த சுதுமலை சேர்ந்த பரிபூரண ஆனந்தன் என்னோடு ஒன்றாக படித்தவர். சுதுமலையில் வீடுகளும் அருகருகில். அவர் மட்டும் என் அருகில் வந்து என்னை பற்றி விசாரித்து எல்லாம் கேட்டுவிட்டு,நீங்கள் எல்லாம் சேர்ந்து பயிற்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான தோழர்களே கொலை செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா,மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். நான் முதல் முறையாக இப்போதுதான் முகாம் பக்கம் வருகிறேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. ஆனாலும் நட்புடன் பேசி விடைபெற்றார். அவரின் இயக்க பெயர் தெரியவில்லை, மறந்துவிட்டேன்.
முகாமில்பயிற்சி பெறும் தோழர்கள் |
நான் எமக்கு பல உதவிகள் செய்த உரத்த நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி போன்றவர்களை சந்திக்க விரும்பினேன். மாதவன் அண்ணா தடுத்துவிட்டார். இப்போ அவர்கள் ராஜன் தோழருக்கு முழு உதவியும் செய்கிறார்கள். அங்கு போனால் இங்கு பிரச்சனை வரும் என்று கூறி தடுத்துவிட்டார். ஒரு மூன்று ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம். தளத்தில் இருந்து வந்தவர்கள் இங்கு மாநாடு நடப்பதை விரும்பவில்லை. அதேநேரம் தளஅரசியல் செயலாளர் ராஜனோடு நின்றார். அங்கு நான் கேள்விப்பட்டது தளத்தின் அரசியல் பொறுப்பாளர் என்ற பெரிய பதவியை வைத்திருந்த ஈஸ்வரன் இங்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் , ராஜனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி செய்யாமல் சண்டையை பெரிதாக்கி, தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சிதறச் போகச் செய்து, தளத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவராக முயற்சி செய்வதாக எல்லோரும் பேசிக் கொள்ளப்பட்டது. முகாமில் இருந்த தோழர்களுக்கும் ஈஸ்வரன் மேல் கடும் கோபம் இருந்தது.
செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மிக மிக நெருக்கமாக இருந்த பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான செந்தில் பாபுஜி போன்றவர்கள் தள மாநாட்டுக்கு போய் வந்தபின், குற்றச்சாட்டுகளை செயலதிபர் உமா மகேஸ்வரன் கந்தசாமி மேல் சுமத்திவிட்டு மத்தியகுழு உறுப்பினர் என்ற கோதாவில் ராஜனுக்கு ஆதரவளித்தார்கள்.. அன்றும் முகாம்களில் இருந்த பல தோழர்கள் செந்தில் பாபுஜி எதிராக இருந்த தோழர்கள் ராஜனே ஆதரிக்க தயங்கினார்கள். செந்தில் பாபு ஜி இல்லாவிட்டால் பெருமளவு தோழர்கள் ராஜனை ஆதரித்து இருந்திருப்பார்கள்.
மாணிக்கம் தாசன் |
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முகாம்தோழர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 100 பேர் வரை இருக்கும் ஒரு முகாமில் இருந்தார்கள். ஓரத நாட்டில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இரவில் பரபரப்பாக இருக்கும் மாணிக்கம் தாசன் ஆயுதங்களுடன் சில தோழர்களுடன் பரபரப்பாக வாகனத்தில் திரிவர். கந்தசாமி, PLO பவன் போன்றவர்கள் ஒரு பக்கம் பாதுகாப்பு கொடுப்பார்கள். காரணம் ராஜன் எங்களை ஆயுதங்களுடன் தாக்க வருவதாகவும், பல முகாம்களை தாக்க ராஜன் ஆதரவாளர்கள் போய் வருவதாகவும் பலவித வதந்திகள் அப்போது உலாவின. எதையும் நம்ப முடியாது நம்பாமலும் இருக்க முடியாது.
PLO பவன் தனது தொடர்பில் இருந்த TELO இயக்க முக்கிய தோழர்களிடம் இருந்து சில புதிய ஆயுதங்களை தற்காலிகமாக வாங்கிக்கொண்டு வந்திருந்தார். புதிய ஆயுதங்களை பார்த்த தோழர்களுக்கு பெருந்தொகையான ஆயுதங்கள் செயலதிபர் உமா மகேஸ்வரன் ஏற்பாடு செய்து விட்டதாகவும் முதல் பகுதி வந்துவிட்டதாகவும் கதைகள் பரவத் தொடங்கின. இப்படியான கதைகள் எமது பக்கத்தில் இருந்து பரப்பப்பட்டன.
இதேநேரம் கண்ணன், வாசுதேவா, செயலதிபர் உமா மகேஸ்வரன் என்னை அழைத்து நாளை காலை மாநாட்டுக்கு தெரிவுசெய்யப்பட்ட தோழர்கள் உள்ள முகாம் போய் என்னை தங்க சொன்னார்கள். அங்கு தோழர்களிடம் எமக்கு சாதகமான சில செய்திகளை கூறச் சொன்னார்கள். அதேநேரம் முகாமில் இருந்த தோழர்களுக்கு எமது பக்க நம்பிக்கையான சில தோழர்களுக்கு என்னைப் பற்றியும் சில செய்திகளை சொல்லி அனுப்பியிருந்தார்கள், அதாவது எமது இயக்கத்துக்கு இந்திய அரசாங்கத்தோடு பயிற்சி மற்றும் ஆயுதம் வாங்குவதற்கு இவர்தான் தொடர்பில் உள்ளவர் என்றும் வதந்தி பரப்பப்பட்டது.
அடுத்தநாள் நான் மாநாட்டில் பங்கு கொள்ளும் தோழர்கள் இருந்த முகாம் புறப்பட்டேன். மாதவன் அண்ணா ஆனந்தி அண்ணா போன்றவர்கள் பல எச்சரிக்கைகள் செய்து அனுப்பினார்கள்.
தொடரும்.....
No comments:
Post a Comment