பகுதி 67
வெற்றிச்செல்வன் |
கடந்த காலங்களைப் போல் டெல்லியில் எனக்குரிய இயக்கவேலைகளை இலகுவாக செய்ததுபோல், சென்னையில் புளொட் இயக்கத்தின் இந்திய பிரதிநிதி என்ற வேலை சுலபமாக இருக்கவில்லை. அரசியல் வேலைகள் இருக்கவில்லை. கழகத் அலுவலகம் , வீடுவாடகை பணம் கட்ட காசு இருக்கவில்லை. சாப்பிட கூட பணம் இருக்காது. அதைவிட காயம்பட்ட தோழர்களுக்கு, நோயுள்ள தோழர்களுக்கு மருத்துவ செலவுகள், சிறைகளில் இருக்கும் தோழர்களுக்கு போய் பார்க்க வர செலவு. என்னோடு இருந்த தோழர்கள் வெகு சுலபமாக அண்ணா நீங்க தானே பொறுப்பு. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் கூறிவிடுவார்கள். நானும் வசந்த் எப்ப ரகசியமாக சென்னை வருவார் என எதிர்பார்த்து கொஞ்சம் பணம் வாங்குவேன். வசந்துக்கு சென்னை நிலவரம் புரிந்தாலும் செயல் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பயந்து கொள்ளையடித்த பணத்தை சென்னை தலைமை கழக தோழர்களுக்கு செலவழிக்க பயந்தார். சென்னையில் எமது பகல் சாப்பாடு சைவக் கடையில் அளவு சாப்பாடு இரண்டு ரூபாய். காசு இருந்தால் எமது 5 ஸ்டார் சாப்பாடு பரோட்டா முட்டை குருமா.
செயலதிபர் உமா மகேஸ்வரன் |
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் இயக்கங்களை சேர்ந்தவர்களை தற்காலிகமாக கைது செய்து போலீஸ் நிலையத்தில் காவல் வைப்பார்கள். கியூ பிரான்ச் எஸ்பி முதல் நாளே ரகசியமாக கூறிவிடுவார் நாளை உங்களையெல்லாம் தற்காலிகமாக கைது செய்ய அதிகாரிகள் வருவார்கள் என்று. நானும் என்னோடு இருந்த தோழர்களும் இரவு முன் கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு பின்கதவால் வீட்டுக்குள் வந்து லைட் எல்லாம் மறைத்துவிட்டு சத்தம் போடாமல் இருப்போம். அதிகாலை நாலு மணிக்கு கியூ பிரான்ச் போலீசார் வந்து பார்த்து வீட்டைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கதைப்பது கேட்கும். அடுத்தநாள் பகல் வரை உள்ளேயே இருப்போம்.பின்பு எங்களது விளையாட்டு எங்களை கண்காணிக்கும் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரத்துக்கு தெரிந்துவிட்டது. நாங்கள் எந்தவித பிரச்சினையும் கொடுக்காததால், எங்களை கண்டும் காணாமல் விட்டு விட்டார். எங்களை காலையில் சந்திக்க வரும் கியூ பிரான்ச் ஹெட் கான்ஸ்டபிள் ராஜசேகரன் பலமுறை எனக்கும் நண்பர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். எங்கள் நிலையறிந்து அனைவருக்கும் பகல் சாப்பிட பல நாள் காசு கொடுத்து இருக்கிறார். நாங்கள் மறுத்தாலும் ஒரு சகோதரனாக நினைத்து வாங்கிக்கொள் என்று கூறுவர். அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது. இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல கஷ்டப்பட்ட பல இலங்கைத் தமிழர்களுக்கு பலவித உதவிகள் செய்து உள்ளார்கள். அதேநேரம் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள், ஈழ விடுதலை என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் தங்கியிருந்து கொண்டு தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்களோடு, இந்தியா எதிர்ப்பு இயக்கங்களோடு சேர்ந்து மறைமுகமாக இயங்கும் இலங்கை தமிழர்கள் போன்றவர்கள் பிடிபட்டால் மிகக் கடுமையான சித்திரவதை தான். இப்படியானவர்களின் செயலால் பலஅதிகாரிகள் அதிகாரிகள் எல்லா இலங்கை தமிழர்களையும் குற்றவாளிகள் போல் தான் பார்த்தார்கள். ஒரு சில அதிகாரிகள் தான் இலங்கைத் தமிழர்களின் வித்தியாசங்களை கண்டு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்கள். குறிப்பாக கியூ பிரான்ச்இன்ஸ்பெக்டர்கள் ஏகாம்பரம் முரளி போன்றவர்கள் ஒரு இயக்க பையனைப் பார்த்து எந்த இயக்கம் என்று சரியாக கூறிவிடுவார்கள். ஒரு முறை அவரிடம் எப்படி உங்களால் முடிகிறது என்று கேட்டேன். ஒவ்வொரு இயக்க பையன்களுக்கும் நடை உடை பேசும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை பற்றி கேட்டேன். உங்கள்இயக்க தோழர்கள் எடுத்தெறிந்து பேசுவார்கள், அதிகாரிகளை மதிக்கமாட்டார்கள். சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். நீயும், சித்தார்த்தனும் மட்டும்தான் வித்தியாசமானவர்கள் அதிகாரிகளை மதித்து நடந்து கொண்டவர்கள் என்று ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டு கியூ பிரான்ச்அதிகாரிகளை இலங்கை தமிழர்கள் எல்லோரும் கடுமையாகவிமர்சித்து எழுதுகிறார்கள் எழுதுவார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பட்ட அமைப்பு, ஈழவிடுதலை என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நாங்கள் நடந்து கொண்டால், அவர்கள் அமைதியாகபார்த்துக் கொண்டிருப்பார்கள், எங்களை கௌரவமாக நடத்துவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. அதேநேரம் ஒவ்வொரு இயக்கமும் தங்கள் இயக்கத்துக்கும், தங்கள் தலைமைக்கும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று சொந்த தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்து இருக்கிறோம். ஒரு விடுதலை இயக்கமே இப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் போலீசார் மட்டும் எங்களிடம் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா,?
ஒரு நாள் அதிகாலை வசந்த், கரூர் விஜயனும் ஒரு வேனை எடுத்துக் கொண்டு வந்து, சென்னையில் இருந்த இயக்க முக்கியமான ஆவணங்கள், நாலு பெரிய பெட்டிகளிலும், நான் டெல்லியில் சேகரித்து வைத்திருந்த எமது இயக்க, மற்ற இயக்க வெளியீடுகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் மூன்று பெட்டிகளில் இருந்தன, எல்லாவற்றையும் இலங்கைக்கு அனுப்ப lசொல்லி செயலதிபர் உமா மகேஸ்வரன் சொல்லியிருக்கிறார் எனவும் அவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் போவதாகவும் சொன்னார்கள். அதோடு இரண்டு நாளில் தாங்கள் செயலதிபர் ஓடு வயர்லெஸ் செட்டில் பேசப் போவதாகவும், விரும்பினால்என்னையும் வரச் சொன்னார்கள். எனக்கும் ஒரு மாற்றம் என்று சந்தோசமாக அவர்களுடன் வேனில் கிளம்பிவிட்டேன். வசந்தும், கரூர் விஜியனும் மாரி மாரி வண்டியோட்டி போனார்கள். போகும்போது திருச்சி சமயபுரத்தில் வைத்து வண்டியின் முன் கண்ணாடி சிதறிவிட்டது. ஒரு மாதிரி ஒட்டிக் கொண்டு போய் கரூரில் சிறு தொழில் செய்த வசந்தின் நண்பன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக எமது இயக்க எல்லா பெட்டிகளையும் இறக்கி வைத்துவிட்டு, நாங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் வசந்தின் இடத்திலிருந்து உடனடியாக நானும் வசந்ததும் ரயில் மூலம் கேரளா போனோம்.
போகும்போது வசந்த் கேரளாவின் பல இடங்களை குறிப்பிட்டுக் காட்டினார். அந்த இடங்களில் எல்லாம் தாங்கள்கைவரிசையை காட்டியுள்ளதாக கூறினார். நாங்கள் திருவனந்தபுரம் போய் இறங்கி, இருந்து பஸ் மூலம் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, பின்பு ஜீப்பில் காட்டுப் பிரதேசம் ரப்பர் தோட்டங்கள் உள்ள இடங்களில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, அதன்பின்பு 2மணிநேரம் மலை உச்சியில் நடை பயணம் செய்து வசந்த் கூட்டிக்கொண்டு போனார். சன நடமாட்டமே இல்லை. எனக்கு பயமாகி விட்டது. செயலதிபர் உமா மகேஸ்வரனும் வசந்த இடம் என்னை கொலை செய்ய கூறிவிட்டார் என்று நம்பி விட்டேன். வசந்த் இடம் உண்மையைக் கூறும்படி கேட்டேன் என்னை கொலை செய்ய தானே கூட்டி கொண்டு போகிறாய் என்று. வசந்த் சிரித்த சிரிப்பு இருக்கிறதே, எனக்கு பயமாகி விட்டது. எமது வயர்லெஸ் செட் இங்கு மலை உச்சியில் இருக்கும் கேரள தீவிர நக்சலைட் ஒருவரின் வீட்டில் இருப்பதாகவும் அங்கு எமது தோழர் ஒருவர் நிரந்தரமாக இருப்பதாகவும் கூறினார். எங்களைக் கண்டவுடன் எமது தோழருக்கு மிகவும் சந்தோசம். வெளியுலகத் தொடர்பும் இன்றி, டீ குடிப்பதற்கு கூட மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் வர வேண்டும். கேரளா நக்சலைட் தோழரின் தூரத்தில் இருக்கும் ரகசிய வீட்டிலிருந்து காலையில் தேநீர் வரும் . பின்பு பகலும் இரவும் சோறும் மாட்டு இறைச்சியும் தாராளமாக வரும். நக்சலைட்தோழரும் வந்து இருந்து கதைத்துக் கொண்டிருப்பார். கரண்ட் இல்லை. எமது வயர்லெஸ் செட் கார் பேட்டரி மூலம் இயக்கி கொண்டிருந்தார்கள்.
வசந்த் |
இரவில் வீட்டைச்சுற்றி காட்டு மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். மயான அமைதி. அங்கிருந்த நாலு நாட்களும் செயலதிபர் உமாமகேஸ்வரன்உடன் வசந்த தொடர்பு கொள்ள முடியவில்லை. நானும் வசந்தம் திரும்ப வரும்போது அங்கிருந்த தோழருக்கு மிகவும் கவலை சோகம். இந்த கேரளா நக்சலைட் தோழர் நாங்கள் கொண்டு போக அன்போடு நிறைய செவ்வாழை பழங்கள் கொடுத்துவிட்டார். நானும் வசந்தனும் திரும்ப திருவனந்தபுரம் மூவி பஸ் மூலம் செங்கோட்டை வழியாக மதுரை வந்தோம். வரும்போது வசந்த் பல கதைகளைக் கூறினார். இந்தியாவுக்கு கொடுத்த ஆயுதங்களை உமா மகேஸ்வரன் இந்த கேரளா நக்சலைட் தொடர்பு மூலம் பல ஆயுதங்களை விற்றதாகவும், சிலதை சும்மா கொடுத்ததாகவும் கூறினர். அதோடு கேரளாவில் தாங்கள் இந்த நக்சலைட்டுகளின் உதவிய கொள்ளைகள் செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தையும் தங்கமாக மாற்றி, இலங்கைக்கு செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கு அனுப்பி வருவதாகவும் கூறினர். பயணத்தின்போது இருவரும் மனம் விட்டுபேசிக் கொண்டதில் நாங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை விட ஒரு கொள்ளை கூட்ட இயக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது என்று கவலைப் பட்டோம்.
வசந்த் தவறான இந்த வேலைகளை செய்தாலும், மனதுக்குள் எமது இயக்கத் தலைமையைப் பற்றி கொதித்து கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. தனது அம்மா அப்பா தான் செய்யும் இந்த வேலைகளை வெளிப்பட்டால் உயிரையே விட்டு விடுவார்கள், அதோடு தானும் இயக்கத்திற்கு வரும்போது தனது வாழ்க்கை போராளியாக இல்லாமல் ஒரு பொறுக்கியாக மாறும் என்று நினைக்கவே இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார். பல எமது இயக்கத் தோழர்களின் மனநிலை உண்மையில் அப்படித்தான் இருந்தது வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.
நாங்கள் பஸ்ஸில் வரும்போது தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்க மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியல். கடைகள் எல்லாம் பூட்டு. கஷ்டப்பட்டு வசந்த் திருச்சி போக நான் சென்னை வந்தேன்.
தொடரும்.
No comments:
Post a Comment