பகுதி 76
வசந்த் |
தேர்தல் நடப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முதலே என நினைக்கிறேன். எனது இருப்பிடத்தை கொள்ளுப்பிட்டி கடற்கரையோரம் இருந்த ஒரு சிறிய அறைக்கு மாற்றி விட்டார்கள் . அந்த அறையில் கட்டுக்கட்டாக நூற்றுக்கணக்கான புத்தகங்கள்,அந்தப் புத்தகங்கள் பெயர் வங்கம் தந்த பாடம்.அதை பார்த்தவுடன் சந்ததியார் இன் நினைவுதான் வந்தது. செயலதிபர் உமா மகேஸ்வரன் ஆல் கொழும்பில் புதிதாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. சந்ததியாரின் கொலையின் பின் டெல்லி அதிகாரிகளிடம் சந்ததியார் இந்தப் புத்தகத்தை அச்சடித்து இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதால் சந்ததியருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதாக செயலதிபர் உமா மகேஸ்வரன் நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
வெற்றிச்செல்வன் -சாம் முருகேஷ் |
.அங்கு என்னோடு அய்யும், சாம் முருகேஷ் தங்கினார்கள். நானும், அய்யும் மும் தினசரி இரவு சாப்பாட்டுக்கு பாணும் (bread) சிறிய அல்லது பெரிய டின் மீன் வாங்கி வந்து உடைத்து பச்சையாக தொட்டு சாப்பிடுவோம். சாம்முருகேசு இரவில் வரும்போது ஓரளவு குடிவெறியில் எங்களுக்கும் சாப்பாடு கட்டிக் கொண்டு வருவார். அதோடு பியர்போத்தல்களும் வாங்கி வருவர். சாம் முருகேசன் மூலம் பல கதைகள் அறியக்கூடியதாக இருந்தது. மாலைதீவு பிரச்சினை உட்பட. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது சித்தார்த்தனின் மெய்ப்பாதுகாவலர் அய்யும் இடம் சித்தார்தனை கவனமாக பாதுகாக்கும் படியும், தனியாக விட வேண்டாம் என்றும் கூறினார். முருகேசு சொன்னவிதம் எங்களுக்கு பெரிய விஷயத்தை மறைப்பதாக தோன்றியது. நாங்கள், துருவித் துருவிக் கேட்டபோது, எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு பல திடுக்கிடும் செய்திகளை கூறினார்.உமா மகேஸ்வரனின்நெருங்கிய விசுவாசியாக இருந்தாலும், சித்தார்த்தன் ஓடும் நல்ல மரியாதை வைத்திருந்தார். சங்கிலி கந்தசாமியும் நானும் நல்ல நண்பர்கள் என்றபடியால் ஒரத்தநாடு பின்தள மாநாட்டு காலங்களில் இருந்து என்னோட பாசமா பழகுபவர். அதனால் குடிவெறியில் பல உண்மைகளை கூறினார். சிங்கள ஜேவிபி ஆட்களை சந்திக்க செயலதிபர் உமா போகும்போது அவர் கூடுதலாக சாம் முருகேசனை தான்கூட்டிக்கொண்டு போவார். தேர்தல் இறுதி கட்ட நேர சந்திப்பில் ஜேவிபி காரர்கள் எமது இந்தியா ஆதரவு பிரச்சாரங்கள் சம்பந்தமாக கோபப்பட, செயலதிபர் சமாளித்து தான் எப்போதும் இந்திய எதிர்ப்பு நிலையில் இருப்பதாகவும், அரசியல் கட்சியை சேர்ந்த சித்தார்த்தன் போன்றவர்கள் இந்திய ஆதரவு நிலையில் இருப்பதால் தான் பிரச்சினை என்று கூறியுள்ளார்.அதற்கு ஜேவிபி சித்தார்த்தனை அப்புறப்படுத்த சொல்லியுள்ளார்கள். அதற்கு எங்கள் அன்புக்குரிய செயலதிபர் உமா மகேஸ்வரன் தான் நடவடிக்கை எடுத்தால் இப்போது எங்கள் இயக்கம் இருக்கும் நிலையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆனால் நீங்கள் ஜேவிபி சித்தார்த்தனை அப்புறப் படுத்தினாள் நான் கவலைப்படப் போவது இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு எங்களுக்கு கவலையாக இருந்தது ஆனால் அதிர்ச்சி அளிக்கவில்லை. காரணம் கடந்தகால எமது தலைவரின் செயல்பாடுகள் மனதில் வந்து போயின.
வெற்றிச்செல்வன் |
மாலைதீவு புரட்சிக்கு காரணமான மாலத்தீவு வாசி லுதுபி வைத்திருந்த கோழிப்பண்ணை ஜா-எல என்ற இடத்தில் என நினைக்கிறேன் உமா மகேஸ்வரனின் சொத்தாக இப்போது இருந்தது அதை நிர்வாகம் முழுக்க சாம் முருகேசு தான் பார்த்துக் கொண்டார்.மேலும் மாலைத்தீவு காரனின் பண்ணை வீட்டுக்கு அடிக்கடி செயலதிபர் போகும்போது , தானும் கூட போவதாகும் சிலவேளைகளில் இலங்கை அமைச்சர் அத்துலத் முதலியும் வந்து எல்லோரும் மகிழ்ச்சியாக குளித்து,சமைத்து சாப்பிட்டு வந்ததாகவும், சில நேரங்களில் தங்களது உற்சாகத்தில் சிங்கள பெண்களும் கலந்து கொண்டதாகவும் கூறினார். அதோடு இந்த முட்டாள் மாலத்தீவு காரனுக்கு உதவி செய்ய ,தேவையில்லாமல் எங்கள் தோழர்களை பறி,பலிகொடுத்து விட்டோம். என்று கவலைப்பட்டார். அங்கிருந்த சித்தார்த்தன் தராக்கி ஏன் மாணிக்கம் தாசன் உட்பட பல பேருடன்பேசிய அளவில் யாரும் எங்கள் இயக்கத் தோழர்கள் மாலைதீவு போன விடயம் தேவையில்லாதது என்ற கருத்தை தான் கூறினார்கள் யாரும் இது பெரிய ஒரு புரட்சி, மாலைத்தீவு பிடித்திருந்தால் எமக்கு ஒரு தளம் கிடைத்திருக்கும் என்று நம்பவில்லை. எங்கள் தோழர்கள் எல்லோருக்கும் மன்னார் வவுனியா தான் மிகப்பெரிய எமது இயக்கசொந்த தளமாக இருக்க விரும்பியது ஆக அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் மாலத்தீவுக்கு முன்னும் பின்னும் எமது உண்மை தெரிந்த, தெரியாதஆதரவாளர்களால் இன்றுவரை மாலைதீவு புரட்சி பற்றி உண்மைக்குப் புறம்பான பல கட்டுக்கதைகள் உண்மை போல் எழுதப்பட்டு வருகின்றன. சாம் முருகேசு உடன் கதைத்த பின்புதான் இதன் பின்னால் இருந்த அசிங்கங்கள் தெரியவந்தன.
இந்தியாவிலிருந்து வந்த வசந்த் , துணிச்சலாக கடந்த காலத் தவறுகளில் இருந்து இயக்கம் மீண்டும் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தனது பல தோழர்கள் உடன் கழகத்தைப் பற்றி பல விமர்சனங்களை வைத்து கருத்துக்கள் கட்டியுள்ளார். இந்த விமர்சனம் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு தெரிந்து வசந்த் அவர் நண்பர் சிவபாலன் என நினைக்கிறேன். கடும் எச்சரிக்கை விடுத்தார். ஆட்சி ராஜன் மூலம் உமா மகேஸ்வரன் வசந்துக்கு கொலை மிரட்டல் விட்டார். ஆனால் ஆட்சி ராஜனும் வசந்தும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று அவருக்கு தெரியாது. ஆட்சி ராஜன் உட்பட பல முக்கிய தோழர்களின் மனம் மாற்றத்துக்கும், நாங்கள் விடுதலை என்ற பெயரில் ஒரு கொலைகார கொள்ளை கோஷ்டியாக செயல்படுவதை பற்றி பல தோழர்களிடம் வசந்த் கூறி, எமது செயல் அதிபரின் தவறான தலைமைப் பதவியை பற்றியும் கதைத்து உள்ளார்.
மாலை நேரத்தில்நானும் , அய்யுமும், சித்தார்த்தர் உடன் நடக்கும்போது சாம் முருகேசு சொன்ன ஜேவிபி கதையை கூறினோம். சித்தார்த்தன் அதிர்ச்சி அடைந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எங்களைத்தான் எச்சரித்தார் வெளியில்
இந்த கதையை சொல்லி திரியாதீர்கள். உங்களுக்குத்தான் ஆபத்து என்று. ஆனாலும் நாங்கள் தனியாக திரிவதை நிறுத்திக் கொண்டோம்.. கடைசியாக மூவரும் பம்பலப்பிட்டி ஓடியன் தியேட்டர் என்று நினைக்கிறேன். அங்கு ஓடிய பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஆங்கில போர் சம்பந்தமான படமான platoon படம் பார்த்தோம். படமும் எங்கள் மனதில் பலத்த சஞ்சலத்தை ஏற்படுத்தியது. கனத்த மனதுடன் அவரவர் இடங்களுக்கு திரும்பினோம்.
தேர்தல் அன்று கொழும்பில் தமிழ் மக்கள் யாழ் மாவட்டத்திற்கு வாக்களிக்கலாம் என்று இருந்ததால், செயலதிபர் உமா மகேஸ்வரன் காரில் வந்து என்னையும், அண்மையில் லண்டனில் காலமானார் சுரேஷ், சாம் முருகேசு, ராபின் போன்றவர்களும் ஒன்றாக காரில் போய் பல தேர்தல் பூத்களில் வோட் போட்டோம். கையில் பூசிய மையை உடனடியாக அழித்து விடுவோம். காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அன்றைய தேர்தல் நாள் ஒருவிதமகிழ்ச்சியோடு முடிந்தது.1977 ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பல இடங்களில் கள்ள ஓட்டு போட்டு அதன் பின்பு 1989 ஆண்டு அப்போதுதான் கள்ள ஓட்டு போட வசதி கிடைத்தது.
எங்களுக்கு புதிதாக ஒரு பிரச்சனை , உமா மகேஸ்வரனுக்கும், அத்துலத்முதலி க்கும் உள்ள நெருங்கிய நட்பும், அத்துடன் ஜேவிபி கூட்டங்களில் ஜனாதிபதி பிரேமதாசா க்கு எதிராக உமாமகேஸ்வரன் பேசிய பேச்சுக்களும் பிரேமதாசா எங்கள்இயக்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்ற பயம் இருந்தது. அதனால் கொழும்பில் இருந்த தோழர்களை முள்ளிக்குளம் அனுப்பவும் மற்றவர்களை கொழும்பில் பாதுகாப்பாக இருக்கவும் செய்யும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
தொடரும்.
No comments:
Post a Comment