பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 3 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 45

  வெற்றிசெல்வன்       Friday, 3 September 2021

குதி 45  


PLO காலித்

நான்16/07/1986 அன்று ஏற்படுத்தப்பட்ட புதிய பின்தள மா நாட்டில் கலந்து கொள்ளும் தோழர்கள் இருந்த முகாமுக்கு சென்றபோது, என்னை மொட்டை மாடி அலுவலகத்தில் பார்த்த ஒரு சில தோழர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட 85பேர் இருந்த இந்த முகாமில் யாரையும் எனக்கு தெரியாது. அங்கிருந்த யாருக்கும் அனேகமாக டெல்லியில் ஒரு அலுவலகம் இருப்பது கூட தெரியாது. என்னைப் பற்றி விசாரித்த பின்னர் அங்கிருந்த எல்லா தோழர்களுக்கும் மாநாடு நடக்குமா நடக்காதா, மாநாடு நடந்தபின் தங்களை இலங்கை அனுப்புவார்களா இல்லையா கவலையில் தான் இருந்தார்கள்.
தற்சமயம் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி எல்லோரும் கவலையுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களுக்குசெயலதிபர் உமா மகேஸ்வரன், தோழர் பரந்தன் ராஜன் மேல் அவர்களுக்கு சரியான கோபம் தான் இருந்தது. தங்களை பணையம் வைத்து இவர்கள் விளையாடுவதாக அவர்கள் கருதினார்கள். நானும் சந்தடி சாக்கில் இந்தியா செயலதிபர் உமா மகேஸ்வரனை தான் ஆதரிக்கிறார்கள். இந்த பிளவு ஏற்பட்டு இருக்காவிட்டால் மாநாடு நடந்து கட்டாயம் இந்தியா திரும்பவும் பயிற்சி ஆயுதங்கள் கொடுத்து நீங்கள் எல்லாம் இலங்கைக்கு போயிருக்கலாம் என்று கூறினேன். எந்த தோழர்களும் இதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை.
எல்லா தோழர்களுக்கும் காலித் மாதிரி ஒரு சிறந்த தோழர் செயலதிபர் உமாமகேஸ்வரன் தலைமையை மறுத்துப் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காலித் தோடு நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் அங்கிருந்த தோழர்கள் காலித் பற்றி நன்றாக தெரிந்தவர்கள். காலித் போன்ற சிறந்த தளபதிகள் ஒதுங்குவது குறித்து கவலைப்பட்டார்கள். முதன்முறையாக நான் முகாம் வாழ்க்கையை அனுபவித்தேன். உண்மையைக் கூறப்போனால் எனக்கு கஷ்டமாத்தான் இருந்தது. அந்த தோழர்களுடன் பேசி பழகும் போது அவர்களின் மனக்குமுறல்கள் அறியக்கூடியதாக இருந்தது. இரண்டு மூன்று மாதத்தில் பயிற்சியும் ஆயுதங்களுடனும் இலங்கைக்கு திரும்பலாம் தங்கள் குடும்பத்தவர்களுடன் இருந்து போராட்டத்தில் பங்கு கொள்ளலாம், என்ற நினைவிலும்,பல தோழர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்ற கனவில் வந்தவர்கள். இயக்கத்துக்கு போராட வந்த தோழர்களில் யாரும் வீட்டில் சாப்பிட வழியில்லாமல், பொருளாதார கஷ்டத்தால் இங்கு வரவில்லை.
18 வயதுக்கு மேற்பட்ட தோழர்கள் ஓரளவு விஷயம் விளங்கி சிங்கள அரசுக்கு எதிராக, சிங்கள மக்களுக்கு எதிராக போராட புறப்பட்டு வந்தவர்கள். கொஞ்சம் சிறுவயது தோழர்கள் உணர்ச்சி வேகத்தில் வந்தவர்கள் அதில் அனேகமானோர் வீட்டுக்கு தெரியாமல் வந்தவர்கள்.ஒரு ஒரு மாதம் இல்லையென்றால் ரெண்டு மாதத்தில் திரும்ப வந்துவிடலாம் என்ற நினைப்போடு வந்தவர்களே அதிகம். ஆனால் தளத்தில் இலங்கையில் வேலை செய்த எமது அரசியல் பிரிவு தோழர்களின் உணர்ச்சிகரமான பேச்சு, ஏமாற்று வாக்குறுதிகள் போன்றவற்றில் தூண்டப்பட்டு வந்தவர்களே அதிகம். ஆப்பிள் தோட்டத்தில் பயிற்சி, சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்றுகூட பலர் வந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் தளத்தில் சொல்லப்பட்டு, ஏமாந்து பலர் வந்திருக்கிறார்கள்.
எமது இயக்கத்தில் மட்டுமல்ல,பொதுவாக எல்லா இயக்கங்களிலும் முகாம்களிலிருந்து பயிற்சி தோழர்களை தவிர மற்ற நிர்வாகப் பொறுப்புகளில் வேலை செய்த தோழர்களின் நிலை பரவாயில்லை. ஓரளவு வசதியான இருப்பிடம் படுக்கை உணவு வகை பரவாயில்லை. அதோடு வெளிச் செய்திகளை உடனுக்குடன் அறிய கூடியதாகவும் இருந்தது. நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தலைவர்களின்,குட்டி தலைவர்களின் இரட்டை நிலைப்பாடுகள் அவர்களின் துரோக செய்கைகள் எல்லாம் அறியக்கூடியதாக இருந்தது. முகாமில் இருந்த தோழர்களுக்கு எப்ப ஆயுதம் வரும். எப்ப ஊருக்கு போகலாம் இந்த நினைவுதான். அவர்களுக்கு இயக்கத் தலைவர்கள், குட்டித் தலைவர்கள் தங்கள் முகாம்களுக்கு வந்து போவது ஒரு பெரிய சந்தோசமாக இருந்த காலம் உண்டு.
முகாம்களில் தமிழர்களின் சுதந்திர விடுதலைக்காக வந்த இளைஞர்களை அடிமைகள் போல், மூன்று நான்கு வருடங்கள் விடுதலை என்ற பெயரில் ஒரு அனாதை ஆசிரமம் நடத்துவது போல் இந்தத் தலைவர்கள் நடத்திய விதம் ஒரு பெரிய துரோகம். இந்த தலைவர்கள், மற்றும் குட்டித் தலைவர்கள் முகாம்களில் வந்து பெரும் நல்லவர்கள் போல் நடித்து, சோஷலிசம் கம்யூனிசம் எல்லாம் தோழர்களுக்கு எடுத்துரைத்து சர்வதேச போராட்டங்கள் பற்றிய கதைகள் செய்திகள் எல்லாம் கூறி, தோழர்களை ஒருவித தங்களைப் பற்றிய ஒரு கற்பனை நிலையில் வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்தத் தலைவர்கள் முகாம்களில் இருந்த தோழர்களுக்கு கூறிய கருத்துகளுக்கு எதிர்மறையாக இவர்களின் செயல்பாடு இருந்தது. வெளியில் இவர்கள் தங்கள் தலைமையை காப்பாற்றிக்கொள்ள போடும் வேடங்கள் அதிகம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி பெறுவதாக பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் அந்தத் தோழர்கள் 2, 3வருடம் முகாமில் அடைபட்டு கிடைப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் இலங்கைக்கு அனுப்பி போராட்டத்தில் கலந்துகொள்ள செய்வதற்கோ, ஆயுதங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய எந்த முயற்சியும் செய்வதில்லை. எமது இயக்கத்துக்கு இந்தியா மூலம் கிடைத்த ஆயுதங்கள் கூட முழுவதும் இலங்கைக்குப் போகவில்லை. இந்தியாவுக்கு எதிரான போராடும் நக்சலைட் இயக்கங்களுக்கு ஒரு தொகுதி ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட விடயங்கள் உண்மை. teloடெலோ இயக்கம் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்தன.
பயிற்சியில் தோழர்கள்
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் ஒரே நேரத்தில் இந்தியாவில் 300 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்ததாக தெரியவில்லை. பயிற்சி முடிந்த உடன் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி விடுவார்கள். அதேநேரம் தனித்தமிழ் நாட்டு விடுதலைக்காக என்று கூறி பல தமிழ்நாட்டுதமிழர்களை இலங்கைக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து திரும்ப அழைத்து தங்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் சாதகமாக வேலை செய்ய பயன்படுத்திக் கொண்டார்கள். அதேநேரம் தங்களுக்கு சாதகமான தொடர்புகளைப் பயன்படுத்தி பெருமளவு ஆயுதங்கள் கொள்வனவு செய்து இலங்கையில் தங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த செய்திகளை எல்லாம் பிற்காலத்தில் தமிழ்நாட்டு உளவுத்துறையின் உயரதிகாரிகள் எங்களுடன் கலந்துரையாடும் போது எங்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் முகாம் வந்து எங்களை சந்தித்தபோது திரும்பவும் மாநாடு நடத்துவது தளத்தில் இருந்து வந்தவர்களும், ராஜன் ஆதரவாளர்களாலும் தடைப்படும் போல் உள்ளது என்று கூறினார்கள்.18/19 /07/1986 இரு திகதிகளிலும் மாநாட்டுக்கு வந்திருந்த முகாம் தோழர்களால் கையொப்பம் இடப்பட்டு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கும், கழக செயற்குழு விக்கும் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின்பு 21/07/1986 முகம் தோழர்களால் 5 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்து, கழக செயற்குழு, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, ராஜன் குழுவினரையும் மற்றும் தளத்திலிருந்து வந்தவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இந்த மாநாட்டை முகாமில் இருக்கும் தோழர்களே நடத்தப் போகிறோம் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இயக்கத்தை திரும்ப நல்லபடி பழைய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு நல்ல முறையில் இயங்க வும், இங்கு இருக்கு தோழர்களைஇலங்கைக்கு அனுப்பவும் உதவி செய்யும்படி கேட்கவும் தோழர்கள் முடிவு எடுத்து எங்களை அனுப்பினார்கள். தோழர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பேர்.
  • வெற்றிச்செல்வன்
  • காந்தன்
  • வசந்த்
  • சுகுணன்
  • பாபு
நாங்கள் பிற்பகலில் முதலில் செயலதிபர் உமா மகேஸ்வரனைசந்தித்த போது, அவரும் அவருடன் கூட இருந்தவர்களும் எங்கள் கோரிக்கைக்கு உடன்பட்டார்கள். முகாமில்இருக்கும் தோழர்கள் பாதுகாப்புப் கொடுப்பதாகவும் முகாமில் வைத்து அனைவரும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்பு நாங்கள் தோழர் ராஜனே சந்திக்க அவர் இருந்த வீட்டுக்குப் போனபோது, அங்கிருந்த தளத்தில் இருந்து வந்துள்ள தள அரசியல் செயலாளர் ஈஸ்வரன் எங்களைக் கண்டவுடன் தலைமறைவாகிவிட்டார். தோழர் ராஜனோடு நாங்கள் எங்கள் கோரிக்கையை வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜனை எங்களுடன் பேச விடாமல் அவருடன் இருந்தவர்கள் அதிகமாக சத்தம் போட்டு எங்களோடு பேச விடாமல் செய்து விட்டார்கள். அப்படியிருந்தும் ராஜன் கழக மத்திய குழுவைச் சேர்ந்த சீசர் போன்றவர்கள் வந்தால் தானும் வருவதாக கூறி னார்.நாங்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சீசரை சந்திக்கப் போனபோது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சீசர், பொன்னுத்துரை, செல்வராஜா, சுந்தரலிங்கம் போன்றவர்கள் ரகசியமாக இயக்கத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டு இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்பதை அறிந்தோம். தளத்தில் இருந்து வந்தவர்களை சந்திக்கப் போனபோது அவர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டார்கள்.

மாநாட்டு அறிக்கையின் சிறு பகுதி
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள் உடனடியாக முகாம் திரும்பி எல்லா தோழர்களுக்கும் நிலைமைகளை விளக்கினோம். பின்பு உடனடியாக திரும்பி ஐந்து பேரும் ஒரத்தநாடு திரும்பி தோழர் ராஜனை சந்திக்க முயன்றோம் முடியவில்லை. இரவு தோழர் வசந்த மட்டும் முகாம் போய் தோழர்களுக்கு நிலைமைகளை விளக்கி, குறிப்பிட்ட முகாம்களில் இருந்து வந்த தோழர்கள் சிலரை மட்டும் அவரவர் முகாம்களில் போய்மாநாட்டில் கலந்து கொள்ளாத மற்ற தோழர்களுக்கும் உண்மை நிலையை விளக்கச் சொல்லி அனுப்பினார்.
21/07/1986 இல் பொறுமை இழந்த மாநாட்டு தோழர்களில் அரைவாசிப் பேர் ஒரத்தநாடு அலுவலகம் வந்து தகராறு செய்ய தொடங்கிவிட்டார்கள். உடனடியாகஎஞ்சியிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் சமாதானம் செய்ய, தோழர்களும் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிவித்து மாநாட்டை நடத்தும் முழு பொறுப்பும் அந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வுக்கு கொடுத்து,கழகத்தின் சகல நடவடிக்கைகளும் அந்த குழுவிற்கு பொறுப்பு கொடுத்து நடத்தும்படி கேட்டார்கள். செயலதிபர் உமா மகேஸ்வரனும் இதனை ஏற்றுக்கொண்டார்.
21/06/1986இல் தோழர் ராஜனும் ஈஸ்வரனும் கையொப்பமிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்த அறிக்கை 22/06/1986 காலையில் பத்திரிகையில் வந்திருந்தது. அதில் கழகமத்திய குழு உறுப்பினர்கள் 8 பேர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மேல் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியேறி விட்டதாகவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இரண்டாக உடைந்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தி இருந்தது. இந்த செய்தி முகாமில் இருந்த தோழர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 45

Previous
« Prev Post

No comments:

Post a Comment