பகுதி 78
கந்தசாமி - பெரிய செந்தில் - மாணிக்கம் தாசன் |
நான் முதல் முறையாகவும், கடைசி முறையாகும் பார்த்த சண்டை நடந்த காலங்களில் இருந்த எங்கள் முள்ளிக்குளம் என்ற இடத்திலிருந்த முகாமை பார்க்க சந்தோஷமாக இருந்தது. அங்கு ஆயுதங்களுடன் பல தோழர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். சங்கிலி கந்தசாமியை பார்த்தவுடன் எல்லா தோழர்களுக்கும் சரியான சந்தோஷம். பல தோழர்கள் கந்தசாமி அண்ணா வந்து விட்டார் சந்தோஷத்தில் கத்தினார்கள். சிலர் மாணிக்கம் தாசனை எழுப்பி கூட்டிக்கொண்டு வர போனார்கள்.
கந்தசாமி அவர்களைத் தடுத்து விட்டு, நாங்கள் மூவரும் தாசன் இருந்த இடத்துக்குப் போய், தாசனை எழுப்பினோம். சுகசெய்திகள், தேநீர் எல்லாம் முடித்துவிட்டு, தாசன் சில தோழர்களை அழைத்து எங்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும்படி சொன்னார்.நாங்கள் தங்கிய இடத்தில் ஒரு பெரிய சாய்ந்தமரம் இருந்தது. அதில் பல பேர் உட்காரக்கூடிய வசதியும் இருந்தது. அங்கிருந்த கிணற்றில் கை கால் முகம் எல்லாம் கழுவி விட்டு, காலை உணவை முடித்தோம். எமது முகாமுக்கு பக்கத்திலேயே ஒரு கொட்டகை போட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது. சில வெளி நபர்கள் சம்பளத்துக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கு கிட்டத்தட்ட எண்பது தொடக்கம் 100 வரை தோழர்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். குளிப்பதற்கு பக்கத்தில் இருக்கும் கடலுக்கு போக வேண்டும். முதலில் ஆயுதந்தாங்கிய சில தோழர்கள் முன்னால் போய் நிலைமைகளை ஆராய பின்னால் குளிக்கப் போகும் தோழர்கள் போவார்கள். பின்னாலும் பாதுகாப்பாக சில தோழர்கள் வருவார்கள். வழமையாக இது நடந்து கொண்டிருப்பது தான். கந்தசாமி மாற்றுடை லுங்கி கொண்டு வரவில்லை. மாணிக்கம் தாசன் (லுங்கி)சாரம் ஏற்பாடு செய்து கொடுத்தார். என்னிடம் மேலதிகமாக மூன்று நாலு மேல்சட்டை இருந்தபடியால் நானும் கந்தசாமியும் அதை மாறி மாறி தோய்த்து போட்டுக் கொள்வோம்.. திரும்ப வரும்போது கந்தசாமி இடம் கோடுபோட்ட ஒரு வெள்ளை சட்டை கொடுத்திருந்தேன். கடைசி வரை அந்த சட்டையை போட்டு இருந்ததாக அறிந்தேன்.
(அந்த வெள்ளை சட்டையோடு கந்தசாமியின் ஒரு போட்டோ ஆச்சி ராஜன் என்னிடம் வந்து கந்தசாமியின் மரணத்தின் பின் என்னிடம் கொடுத்தார்.)
அங்கு நாங்கள் வந்த போது எனக்கு தெரிந்த பல தோழர்கள் இருந்தார்கள். பல பெயர்கள் மறந்துவிட்டேன். நினைவில் நிற்கும் பெயர்கள் மன்னார் காண்டீபன், முருகன், சந்ததியாரின் சொந்தஅக்காவின் மகன் சாமி, மற்றும் சிவபாலன் போன்ற தோழர்களின் பெயர்கள் நினைவில் உள்ளது. அதோடு எங்கள் தோழர் வசந்த் கையில் குறிப்பு புத்தகங்களுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். பகல் பொழுதில் ஆட்சி ராஜன், சாமி முருகேசு திவாகரன் போன்றவர்களும் கொழும்பிலிருந்து வந்தார்கள். நானும் கந்தசாமியும் ஆட்சி ராஜனும் சேர்ந்து இருந்து கதைத்துக் கதைத்துக் கொண்டிருப்போம். எங்களோட வசந்த் இடைக்கிடை சாமி, சாம் முருகேஷ் ஆகியோரும் வந்து வந்து பேசுவார்கள்.
அங்கு எங்கள் தோழர்கள் இரண்டு மூன்று பிரிவாக வெளியில் தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பது வசந்த் மூலம் எங்களுக்கு தெரிய வந்தது. மாணிக்கம் தாசன் னுக்கு ஆதரவாக ஒரு பிரிவு தோழர்களும், மாணிக்கம் தாசன் தனிப்பட்ட ஒழுக்கம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் பிடிக்காமல் காண்டீபன் போன்ற பல தோழர்களும், செயலதிபர் உமா மகேஸ்வரனின் நேரடி கட்டுப்பாட்டில் மாணிக்கம் தாசனுக்கு எதிராக முருகன் தலைமையில் ஒரு குழுவும் இயங்கியது தெரியவந்தது. ஆட்சி ராஜனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் தன்னிடமும் மாணிக்கம் தாசனின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் படியும், அதாவது பெரியவர் (செயலதிபர் உமா மகேஸ்வரர்) மாணிக்கம் தாசனுக்கு எதிராக தோழர்களை, இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்படி தன்னிடம் சொல்லி அனுப்பியதாக ஒத்துக்கொண்டார்.
ஆட்சி ராஜன் |
1986 ஆண்டு பின்தள மாநாட்டின்போது பெரியவர் கேட்டுக்கொண்டபடி, இயக்கம் நன்றாக வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக பின் தளத்தில் நடந்த கொலைகளுக்கு நான் பொறுப்பு எடுத்தேன். பின்பு எனக்கு இயக்கத்தில் எந்த ஒரு பதவியும் பொறுப்பும் தரவில்லை.பெரியவரை காப்பாற்ற நான் எடுத்த கொலை பொறுப்பை, இப்ப பெருசு தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை போல் ஏதோ அந்த கொலைகளை நான் எனது ஆசைக்காக செய்த மாதிரி பேசுவதைக் கேட்கும்போது மிக கவலையாக இருக்கிறது. என்னைப் பார்த்து பல தோழர்கள் முன்னால் நன்றாக பேசினாலும், பயப்படுகிறார்கள். நான் ஒரு பெரிய கொலைகாரன், முட்டாள் என்றுதான் பின்னால் பேசுகிறார்கள். தமிழில விடுதலை என்று சந்ததியார் பின்னால் தான் இயக்கத்துக்கு வந்தது கடைசியில் கொலைகாரன் என்ற பட்டம்தான் கிடைத்தது. கடைசியில் பெரியவர் ,மாணிக்கம் தாசன் ஐயும் என்னை மாதிரி தூக்கி எறிய தான் போகிறார். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். எங்களால் இனிமேல் ஒதுங்கிப் போய் மக்கள் மத்தியில் வாழ முடியாது வாழவும் விட மாட்டார் கள்.
கந்தசாமி இன்னும் பல தனக்கு பெரியவரால் நடந்த துரோகங்களை கூறினார்.
வெற்றிச்செல்வன் |
கந்தசாமியும் மதனும் கொழும்பு வந்து கல்கிசை என்ற இடத்தில் தங்கி உள்ளார்கள். அவர்களுடன் மாலைத்தீவு சண்டையில்இறந்த வசந்தி என்ற தோழரும் தங்கியுள்ளார். ஒரு நாள் செயலதிபர் உமாமகேஸ்வரன் கந்தசாமியையும் , மதனையும் அழைத்து உடனடியாக பாஸ்போர்ட் எடுப்பதற்கு விண்ணப்பிக்க சொல்லியுள்ளார். நீங்கள் இருவரும் மாலைதீவு போய்வர வேண்டி வர வேண்டியது உள்ளது என்றும் கூறியுள்ளார். தானும் (கந்தசாமி) மதனும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட்டு வந்து இருந்த சில நாட்களின் பின்,R R என்று அழைக்கப்படும் கொழும்பில் ஆயுதமுனையில் செய்யப்படும் ரகசிய காரியங்களுக்கு பொறுப்பானவர். (இவர் மாலைதீவில் பிடிபடும் வரை இவருக்கு கீழ்தான் ஆட்சி ராஜன் போன்றவர்கள் செயல்பட்டார்கள்.) வந்து தங்களது அறையில் ஒரு பார்சல் வைத்துவிட்டு தான் ஊருக்கு போவதாகவும் வந்து எடுப்பதாகவும் சொல்லி போய் உள்ளார். ஆனால் அன்று இரவு சொல்லி வைத்தது போல் திடீரென அதிரடி படையினர் உள்புகுந்து தங்களை கைது செய்ததாகவும், தாங்கள் வெளிநாடு போக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட்டு பாஸ்போர்ட் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த நகலை காட்டியுள்ளார். ஆனால் அதிரடி படையினர் வீட்டை சோதனை செய்து, ஆர் ஆர் கொண்டு வந்து வைத்த பார்சல் எடுத்துள்ளார்கள். தங்களுக்கு இந்த பார்சலில் என்ன எடுத்தது என்று தெரியாதா ம். நண்பர் ஒருவர் ஒருவர் வைத்த பார்சல் என்று கூறியுள்ளார்கள். பார்சலை உடைக்க அதில் கைத்துப்பாக்கிபாகங்கள் இணைக்கப்படாமல் இருந்துள்ளது. அதிரடி படையினர் தங்களுக்கு வந்த தகவல் சரியானது தான் என்று கூறி, தன்னையும் (கந்தசாமி)மதனையும், வசந்தி யையும் கைது செய்து கொண்டு போகும் போது, வாகனத்திலேயே வைத்து அடித்து விசாரித்ததாகவும், பின்பு தங்களை கல்கிசைபோலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து சிறை வைக்கப்பட்டதாகவும் கூறினார். அடுத்தநாள் திடீரென உயரதிகாரிகள் வந்து வசந்தியை விடுதலை செய்து கூட்டி போனதாக கூறினார். தங்களுக்கு அதிர்ச்சியாகவும் வசந்தியை கூட்டிப்போய் கொலை செய்யப் போகிறார்கள் என தங்கள் நினைத்ததாகவும், தாங்கள் சத்தம்போட்டு மதன் சிங்களத்தில் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் நேரடி ஏற்பாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்கள்.தனக்கு அப்போதுதான் செயலதிபர் உமாமகேஸ்வரனின் வஞ்சக நரித்தனம் தெரிந்தது என்றும், ஆனால் மதன் வேறு ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்றும் கூறினார்.
பின்பு மதனையும் தன்னையும், களுத்துறை மாவட்டத்தில் ஜேவிபியின் அடைத்து வைத்திருக்கும் சிறையில் வைக்கப்பட்டதாகவும் பின்பு பூசா சிறையில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் அடைக்கப் அடைக்கப்பட்டு இருந்தனர், செயலதிபர் உமாமகேசுவரனோ, இயக்கமோ தங்களை வெளியில் எடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் மாறன் தனது தனிப்பட்ட முயற்சிகளால் குமார் பொன்னம்பலத்தை யும், விநாயகமூர்த்தி சட்டத்தரணியும் பிடித்து தங்களை பிணையில் எடுத்ததாகவும், வாரத்தில் இரண்டு நாள் கல்கிசை போலீசில் கையெழுத்து போட வேண்டுமென்றும் கல்கிசை ஏரியாவை விட்டு போக கூடாது என்றும் பிணையில் கூறப்பட்டு இருந்தும், செயலதிபர் தன்னை உடனடியாக மலையகத்துக்கு அனுப்பி விட்டார் என்றும், வேறு இடத்தில் தங்கி இருக்கும்படி கூறியதால் தங்களுக்கு அப்போது கோர்ட் கைது செய்யும்படி வாரண்ட் அனுப்பியுள்ளதாகவும் தன்னையும், மதனையும் எப்ப வேண்டுமானாலும் போலீசார் கைது செய்யலாம் என கூறினார். பெரியவர் உமாமகேஸ்வரன் ஆர் ஆர் மூலம் திட்டமிட்டு வேலை செய்ததை தன்னால் கடைசி வரைக்கும் மறக்க முடியாது. என்று வேதனைப்பட்டார். தாங்கள் சிறையில் இருந்து வெளியில் வரும்போது மாலைதீவு புரட்சி முடிந்துவிட்டது என்றான், வசந்தி மரணமடைந்து, ஆர் ஆர் கைது செய்யப்பட்டதையும் அறிய முடிந்தது என்றார்.
தான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது தனது சகோதரன் கொழும்பில் ஒரு கோயிலுக்கு அருகில் வரச் செய்து, (நான் அந்த இடத்தின் பெயரை மறந்துவிட்டேன்) பணத்துடன் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ததாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார். காரணம் எல்லா இலங்கை தமிழர்களிடமும் தன்னை ஒரு கொலைகாரன் ஆகவே செயலதிபர் உமா மகேஸ்வரனும் எங்கள் இயக்கமும் அறிமுகம் செய்துள்ளதால், நான் வெளிநாட்டில் போய் யார் முகத்தில் முழிக்க முடியும். தனது வாழ்க்கை சண்டையில் முடியும். இல்லாவிட்டால் செயலதிபர் உமா மகேஸ்வரன் தனது ஏற்பாட்டில் முடிப்பார் என்று கண் கலங்க எங்களிடம் கூறினார். தனது சகோதரன் அவ்வளவு கெஞ்சியும் வெளிநாட்டுக்கு போக சம் மதிக்காதது தனது அண்ணாவுக்கு பெரியகவலை என்றும், தன்னால் தனது குடும்பத்துக்கும் கெட்ட பெயர் என்றும் கூறி கவலைப்பட்டார்.
தங்களை சிறையில் இருந்து எடுக்கும் முயற்சியில் மாறனுக்கும் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆனால் மாறன் பயப்படாமல் தங்களுக்கு உதவி செய்ததை மறக்க முடியாது என்றும் கூறினார்.
கந்தசாமிஆட்சி ராஜன், வசந்த் இருவரையும் பார்த்து செயலதிபர் உமா மகேஸ்வரணை நம்பி மாணிக்கம் தாசனுக்கு எதிராக செயல்பட வேண்டாம். நீங்களும் கொலை கொள்ளை என்று அவருக்காக செய்துவிட்டு கடைசியில் எனக்கு மாதிரிதான் நடக்கும் என்று கூறி கண்கலங்கினார் கந்தசாமி.
உடன் ஆட்சி ராஜனும் கொழும்பில் தாங்கள் செய்த வேலைகளை கூறி எங்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
தொடரும்.
No comments:
Post a Comment