பகுதி 57
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு, ஈழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவளித்த பல தமிழ் அமைப்புகள், டெல்லியில் வேலை செய்யும் தமிழர்கள், இந்தியப் படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சண்டை ஏற்பட்டது, பற்றி மிகவும் கவலைப்பட்டார்கள். எல்லா இலங்கை போராட்டஇயக்கங்களுக்கும், பின் தளமாக செயல்பட்ட இந்திய மண்ணை, பகைத்துக்கொண்டு போராட்டத்தை உங்களால் தொடர்ந்து நடத்த முடியாது. முடிந்தளவு ராஜதந்திர நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாட்டின் தலைவர் ஜெயவர்தனா ராஜதந்திர ரீதியில் செயல்பட்டதால் இன்று இலங்கைத் தமிழர்கள், இந்தியாவும் பகையாளி .
அவர்கள் அன்று கூறிய கருத்துக்கள் கசப்பாக இருந்தாலும், இன்று அதன் உண்மை தெரிகிறது. ஆயுதம் தூக்கியதால் மட்டும் ஒருவர் தலைவர் ஆகிவிட முடியாது. நல்ல தளபதியாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவர், புறச் சூழல்களை கருத்தில் கொண்டு தனது மக்களை பாதுகாத்து மண்ணையும் பாதுகாக்க வேண்டும். தனது இயக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒருவர் ஒரு நல்ல தளபதி. ஆனால் மக்களையும் காப்பாற்றி செயல்படுபவர்கள் தான் நல்ல தலைவராக இருக்க முடியும். டெல்லியில் பல படித்த தமிழ் பேராசிரியர்கள் பத்திரிகையாளர்களின் தங்களின் அனுபவ கருத்துக்களைச் சொல்லும் போது, அன்று அவர்களை இவர்களுக்கு என்ன போராட்டத்தைப் பற்றி தெரியும் என்று. மனத்துக்குள் எரிச்சல் அடைந்தேன்.
M.R. நாராயணசுவாமி |
நானும் அவர்களிடம் அமைதி காக்கச் சென்ற இந்தியப்படை பல பொது மக்களை கொன்றது பற்றியும், தரைக்கு கீழ் இருந்த பங்கர் களில் அடைக்கலம் தேடி இருந்த மக்களை குண்டுகள் வீசி கொன்றவர்கள் பற்றியும் விவாதிக்கும் போது, அவர்கள் கூறியது உலகின் எல்லா நாட்டு ராணுவமும் ஒரே மாதிரிதான். மகாத்மாகாந்தி பிறந்த நாட்டில் இருக்கும் ராணுவம் அகிம்சையை கடைபிடிக்கும் என்று நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம். காந்தி மகாத்மா காந்தி போராடியது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், இன்று மகாத்மா காந்தி இருந்து போராடி இருந்தால் அவரும் இந்திய போலீசாரால் தாக்கப்பட்டு இருப்பார். நீங்கள் டெல்லியில் இருப்பதால் உங்களுக்கு பஞ்சாபில் நடக்கும் நடந்த பொற்கோயில் மீட்பு போரில் நடந்த செய்திகளும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ராணுவம் ராணுவம் தான். அந்த ராணுவத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த உங்கள் தலைவர்களுக்கு தெரியவில்லை.ஆனால் சிறந்த அனுபவசாலியான ஜெயவர்தனா எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரம் நீங்கள் எங்களிடம் இந்தியப்படை பற்றி மட்டும் குறை கூறுகிறீர்கள். விடுதலை புலிகளுக்கு எதிரான தமிழ் இயக்கங்கள் மட்டும், இந்தியப் படைகளின் ஆதரவோடு ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுத்திருக்கலாம் தானே. அதை விடுத்து அந்த இயக்கங்கள் என்ன செய்தன இந்தியப் படைகளின் ஆதரவோடுவிடுதலைப்புலிகளையும் அவர்களின் குடும்பங்களையும் தேடித்தேடி அழித்திர்கள். அதே மாதிரி விடுதலைப்புலிகளும் மற்றைய இயக்கங்களை தேடித்தேடி அழித்தார் கள். ரெண்டு பக்கமும் அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் உங்கள் சகோதரர்கள். சிங்கள ராணுவம் செய்ய வேண்டியதை எல்லாம் நீங்களே செய்து விட்டு, இப்ப
. இந்திய படைகளை பற்றி குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களுக்கு எல்லா செய்திகளும் அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் எல்லா இயக்கமும் உங்களை மாதிரி நீங்கள் நீங்கள் தான் உத்தமர்கள் போல் செய்திகள் எங்களுக்கு சொல்லுகிறீர்கள். உங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை குரங்கு கையில் பூமாலை போல் சிதறச் செய்து விட்டீர்கள்.இதில் விடுதலைப் புலிகள் உட்பட எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல.
அவர்கள் அன்று கூறிய கருத்துக்கள், இன்று நினைக்கும் போது இவ்வளவு உண்மைகள். அதன் பிறகு டெல்லியில் இருக்கும் வரை எனது பிரச்சாரங்கள் பெரிதாக இருக்கவில்லை. தொடர்ந்து நான் அவமானப்பட விரும்பவில்லை.
கல்கி வார இதழில் எழுத்தாளர் வாஸந்தி ,இந்திரா காந்தியின் மறைவின்போது வட இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி ஒரு தொடர்கதை எழுதியிருந்தார். அதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. எழுத்தாளர் வாசந்தி டெல்லி என்பதால்என்பதால், அவரை தொடர்பு கொண்டு சந்திக்க விரும்பினேன். அவரும் சந்திக்க நேரம் தந்தார். அவரும் இலங்கையிலிருந்து வரும் செய்திகளை அறிந்து முதலில் பயந்து இருப்பார். பின்பு நான் வெறும்அரசியல் பிரிவுதான், என்று அறிந்தும், பின்பு எனது உருவத்தை பார்த்து எனக்கும் ஆயுதங்களுக்கும்எந்தவித சம்பந்தமும் இருக்காது என நினைத்து சகஜமாக பேசத் தொடங்கினார். நான் உடனடியாக இலங்கைப் பிரச்சினை பற்றியும் ஒரு கதை எழுதச் சொன்னேன். அவர் சிரித்தபடி ஆரம்பகால இலங்கையில் தமிழருக்கு இருந்த பிரச்சனை, விடுதலை இயக்கங்கள் தோன்றிய வரலாறு, இயக்கங்கள் தங்களுக்கு முரண்பட்ட வரலாறு , இயக்கங்களின் கொலை வரலாறுஎன்று பல எமது பெருமைகளை எடுத்துரைத்தேன். எமது வரலாற்றுப் பெருமைகளை கேட்ட அவர் திகைத்து விட்டார். பலமுறை சந்தித்து எமது இலங்கைத் தமிழர் பெருமைகளை கூறி இருக்கிறேன். சித்தார்த்தன் டெல்லி வந்தபோது அவரையும் கூட்டிக்கொண்டு போய் சந்தித்திருக்கிறேன்.
அப்படி நானும் சித்தார்த்தனும் எழுத்தாளர் வாசந்தி அவர்களை சந்திக்கும் போது,AFP செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் நாராயணசாமி என்னும் பத்திரிகையாளரை சந்திக்க விருப்பமா என்று கேட்டார். நாங்களும் சரி என்றோம். அவரும் நாராயணசாமி பத்திரிகையாளரை அழைத்து எங்களை சந்திக்க வைத்தார். நாராயணசாமி இலங்கை பற்றியும் எங்கே பிரச்சினை பற்றியும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தான் அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார். ஆனாலும் எங்களை அடிக்கடி சந்தித்து மிக நீண்ட நேரம் உரையாடி எமது பிரச்சினைகள் பற்றி ஓரளவு தெளிவாக விளங்கிக் கொண்டார் என நினைக்கிறேன். பிற்காலத்தில் இலங்கை பிரச்சினை சம்பந்தமான இவரது ஆங்கில கட்டுரைகள் மிக பிரபலமானது. இலங்கை பிரச்சினை சம்பந்தமாகவும் பிரபாகரன் விடுதலைப்புலிகள் பற்றியும் ஆங்கிலத்தில் இவர் எழுதிய புத்தகங்கள் பிரபல்யமானவை. இவரது புத்தகங்களை மேற்கோள்காட்டி பல எழுத்தாளர்கள் இலங்கை பிரச்சினை பற்றி எழுதுவார்கள். இப்போது அவருடன் தொடர்பில் இல்லை. எழுத்தாளர் வாஸந்தி இலங்கை பிரச்சினை பற்றி கல்கியில் நிற்க நிழல் வேண்டும் என்ற தலைப்பில் ஒரு தொடர் நாவல் எழுதினார். அந்த நாவலில் என்னை பற்றியும் வேறு பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது என்றும் கூறினார்.
வாசந்தி எழுதிய நாவல் - நாராயண சவாமி எழுதிய புத்தகங்கள் |
நான் மீண்டும் டெல்லி சிறையில் இருக்கும் வெளிநாட்டுக்கு போக வந்து இலங்கைத் தமிழர்கள் பெண்கள் குழந்தைகளைப் பற்றி அவர்களை சிறையிலிருந்துஎடுப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் கதவை தட்ட தொடங்கினேன்.
தொடரும்.
No comments:
Post a Comment