பகுதி 54
இலங்கை இந்தியா ஒப்பந்தம் |
இலங்கையில் இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கும் , இலங்கைஜனாதிபதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் எங்களுக்கு சொல்லப்பட்டது. அதேநேரம் இலங்கை பிரதம மந்திரி பிரேமதாசா ஒப்பந்தத்துக்கு எதிராக இருப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்தன. இது உண்மையில் பிரேமதாசா எதிராக இருந்தாரா? அல்லது ஜெயவர்த்தனாவின் ராஜதந்திரம் எனவும் பேசப்பட்டது. தன் மீது திணிக்கப்பட்ட வேறு வழியில்லாமல் தன்னால் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை, தனது நாட்டிலுள்ள தலைவர்கள் ஏற்கவில்லை என்பதை காட்ட முற்பட்ட சம்பவம் எனவும் பலவித பேச்சுக்கள் இருந்தன.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ராஜீவ் காந்தி குழுவினர் இந்தியா புறப்படும் முன் இந்திய பிரதமருக்கு வழியனுப்பு ராணுவ அணிவகுப்பில் கடற்படை வீரர் தாக்கியது சம்பந்தமாகவும் பல்வேறு கருத்துக்கள் இருந்தன. ஜெயவர்தனா மறைமுகமாக தனது எதிர்ப்பைக் காட்ட அந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. அதேநேரம் இந்திய பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் ராஜீவ் காந்திக்கு பெரிய அனுதாபத்தை பெற்றுக்கொடுத்தது
ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தம் |
இலங்கை-இந்திய ஒப்பந்தம் உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக திட்டமிடப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் இல்லை. விடுதலைப்புலிகளை காப்பாற்ற விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர்பாலசிங்கம் எம்ஜிஆர் மூலமும் தனது தனிப்பட்ட முயற்சிகள் மூலமும், இந்தியாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்தார் என்பதுதான் உண்மை. இந்தியாவில் ராஜீவ் காந்திக்கும் அவரது அரசுக்கும் போபோஸ் பீரங்கி ஊழல் சம்பந்தமாக மிக நெருக்கடியான நேரத்தில், பாலசிங்கத்தின் அழைப்பு தங்கள் இமேஜை காப்பாற்றிக்கொள்ள, பத்திரிகைகளின் பார்வையை போபோஸ் பீரங்கி பேர ஊழலில் இருந்து திசை திருப்ப வேண்டிய வாய்ப்பாக அமைந்தது.
விடுதலைப்புலிகளால் மற்றைய விடுதலை இயக்கங்கள் தடை செய்யப்பட முன் எல்லா இயக்கங்களும் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை ஒவ்வொரு வழிகளில் தடை செய்து பாதுகாப்பு கொடுத்தனர் என்பது உண்மையே. அதேநேரம் விடுதலைப்புலிகளால் மற்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்ட பின்பு இலங்கை ராணுவம் பல வழிகளில் முன்னேறி தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல கூடிய சூழ்நிலை உருவாகியது. அப்போது வேறு எந்த ஒரு இயக்கமும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அதோடு மற்றைய இயக்கங்கள் யாரும் இந்தியா தலையிட வேண்டும் என்றும் கேட்கவில்லை. பாலசிங்கம் மட்டும்தான் கேட்டார். அதுவும் எப்படி, இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண குடா நாட்டை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்க குள் கொண்டு வந்தால் இந்தியா ஒரு காலமும் இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது அதனால் உடனடியாக தலையிட்டு விடுதலைப் புலிகளை காப்பாற்ற வேண்டும் தேவையானால் இந்தியா படை எடுக்க வேண்டும். அன்று ஜெயவர்த்தனா அரசு பயப்படாமல் சண்டையை தொடர்ந்திருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது.
1987 ஆரம்ப மாதங்களில்புளொட் இயக்க முகாம் தோழர்களின் உணவு பிரச்சனை மற்றும் அவர்களை இலங்கை அனுப்புவதற்கான தேவை கருதி, கடைசி கட்ட முயற்சியாக டெல்லியில் வைத்து நான், பவன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் முயற்சியால் எமது கழகத் தோழர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கிடைத்தன. இதுபற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த நேரம் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வருமா என்று கூட யாருக்கும் தெரியாது. உங்களுக்கு 1987 இந்திய பயிற்சிகள் கிடைக்கப் போகிறது என்று தெரிந்தவுடனே செயலதிபர் முக்கியமான தோழர்களை எல்லாம் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி அங்கு முகாம் போட ஏற்பாடு செய்துள்ளார். அப்படிப் போன நடேசன் விடுதலைப்புலிகளால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்தம் ஏற்படும் முன்பே எமது இயக்கம் ஆயுதங்கள் மற்றும் பெருமளவு தோழர்களையும் இலங்கையை நோக்கி அனுப்பியாகிவிட்டது. அங்கு மாணிக்கம் தாசன், கந்தசாமி, சேவல் கொடி போன்ற முக்கிய போராளிகள் விடுதலைப்புலிகளுடன் கடும் சண்டை போட்டுக்கொண்டே முன்னேறி செட்டிகுளம் மூன்று முடிச்சு போன்ற இடங்களில் முகாம் அமைத்திருந்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தால் துரத்தப்பட்ட புலிகளின் பெரும்பான்மையான வர்கள்,வன்னி பிரதேசத்திற்கு வந்து அடைக்கலம் தேடி இருந்தார்கள். இதே நேரம் மற்றைய இயக்கங்களும் இந்தியாவிலிருந்து ஆயுதங்களுடன் வந்தவர்கள் விடுதலைப்புலிகளுடன் சண்டையில் ஈடுபட்டார்கள். ஒரே நேரத்தில் பலமுனைகளில் தாக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தம் பாதுகாப்பு கொடுத்தது என்பது உண்மை.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்ட பின்பு இயக்கங்கள் ஆயுதங்கள் கொண்டு போவது தடை செய்யப்பட்டிருந்தது. புளொட் இயக்கம் உட்பட மற்றைய இயக்கங்கள் ஆயுதங்கள் எல்லாம் முதலிலேயே கொண்டுபோய் விட்டனர். எஞ்சிய தோழர்களை எல்லா இயக்கமும் ஐ பி கே ஃப் விமானங்களில் அனுப்பினார். ஒப்பந்தத்தின் பின்பு கடலில் படகு மூலம் ஆயுதங்களுடன் வந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரப்பா குழுவினரை சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இலங்கை இராணுவம் கைது செய்தது எல்லோரும் அறிந்ததே.
ஒப்பந்தப்படி ஆயுதங்கள் சரண்டர் என்பது இயக்கங்களிடம் இருந்த முழு ஆயுதங்களையும் ஒப்படைப்பது அல்ல. அடையாளத்துக்காக சில ஆயுதங்களை இந்திய படைகளின் முன்பாக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, தாங்கள் இனி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தப் போவதில்லை என்று ஓர் உறுதிமொழி என்று விளங்க படுத்தப்பட்டது.
இலங்கையில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் |
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எல்லா விடுதலை இயக்கங்களையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது உண்மை. காரணம் இவர்கள் எல்லா தேவைக்கும் ஏந்திய மண்ணையே நம்பியிருந்தார்கள். ஆயுதம் பயிற்சி போன்றவை. அதோடு யாழ்ப்பாணத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் காப்பாற்றும்படி பாலசிங்கம் நின்றதையும் பார்த்து இந்தியா தான் சொல்வதை விடுதலைப்புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் கேட்கும் என தப்புக் கணக்குப் போட்டார்கள்.
விடுதலை புலிகள் மேல் இருந்த கடும் கோபத்தால் மற்றைய இயக்கங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், குறிப்பாக புளொட் கடுமையாகத் தாக்கி பலத்த உயிர் சேதத்தை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தினார்கள். இந்திய ராணுவ உளவுத்துறையும், ரா உளவு அமைப்பும், இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் என்னை பலமுறை கூப்பிட்டு எச்சரித்தார்கள். விடுதலைப்புலிகள், புளொட் அமைப்பு ஒப்பந்த நேரத்தை பயன்படுத்தி தங்களை பலமாகத் தாக்கி வருவதாகவும், இந்திய அரசு அவர்களே கட்டுப்படுத்தாவிட்டால் தாங்கள் திரும்பவும் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்று மாத்தையா இந்திய IPKF உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துள்ளார். இந்திய அதிகாரிகள் டெல்லியில் என்னிடமும் சென்னையில் சித்தார்த்தன் இடமும் உங்கள் தலைவர் சொகுசாக அத்துலத் முதலியின் ஆதரவில் கொழும்பில் இருந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்க இலங்கை அரசோடு வேலை செய்கிறார் என குற்றம் சாட்டினார்கள். நாங்கள் இதை எங்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இந்த செய்தியை கூறும்போது, அவர் எங்களால் தன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிக் கொண்டு இருங்கள் என்று கூறினார்.
இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இனி இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழக்கூடிய நிலை வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை ஒவ்வொரு விடுதலை இயக்கமும் மற்றஇயக்கங்களை கொலை செய்வதும், மற்ற இயக்க அங்கத்தவர்களின் குடும்பங்களை கொலை செய்வதும் கொள்ளை அடிப்பதும் பார்த்து எல்லோரும் கேட்டது ஈழ விடுதலை என்று கூறிவந்த இயக்கங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஏன் இந்தியா வர வேண்டும் அவர்கள்? உண்மையான மக்கள் மேல் அன்பும் பாதுகாப்பும் கொண்ட இயக்கங்கள் என்றால் இந்தியாவைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். நான் சந்தித்த பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் என் முன் முன்வைத்த கேள்வி. இவர் கள் கேட்ட கேள்விகள் மூலம் உண்மையின் இலங்கை தமிழர்விடுதலை இயக்கங்களின் முகமூடிகள் கழன்று விழுந்தன.
பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனம் |
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் தான் பிரபாகரன் டெல்லியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. காரணம் பிரபாகரன் குழுவினரை இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை சந்திக்க இந்திய வெளிவிவகார அமைச்சு விடவில்லை. இந்தியப்படைகள் முற்றுமுழுதாக இலங்கை வட கிழக்கு பகுதியில் நிலை கொள்ளும் வரை, பிரபாகரன் குழுவினரை அங்கு அனுப்ப விரும்பவில்லை என்பதே உண்மை.
இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பதை விட, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையை ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே விரும்பினார்கள். இதில் வெற்றி பெற்றால் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்கு போட்டார்கள். எங்கே இந்தியா ஒப்பந்தத்தின் முழு பொறுப்பையும் இலங்கையின் இந்திய ஹை கமிஷனர் டிக்சித் ஏற்றுக் கொண்டு எல்லா இயக்கங்களையும் அலட்சியப்படுத்தி தான் ஒரு சுப்பர் பவர் போல் நடந்து கொண்டார். இதுவும் குழப்பத்துக்கு ஒரு காரணம் மற்றும்இன்றுவரை எதற்கெடுத்தாலும் இந்திய ரா உளவுத்துறை தான் எல்லாத்துக்கும் காரணம் என்று எழுதுகிறார்கள். உண்மையில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷிய உளவுத்துறைகள் போல் ரா உளவுத்துறை தன்னிச்சையாக இயங்க முடியாது. இந்திய பிரதம மந்திரிக்கு கட்டுப்பட்டு தான் செயல்படும். அதோடு அவர்கள் இந்தியபோலீஸ் துறையில் இருந்து மத்திய அரசுக்கு பிரதம மந்திரிக்கு வேண்டிய அல்லது கட்டுப்படக்கூடிய அதிகாரிகளை தான் எல்லா உளவுத் துறைகளின் தலைவர்களாக இந்தியாவில் நியமிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் அரசியல் தலைமை என்ன விரும்புகிறதோ அதைத்தான் செய்கிறார்கள்.
தொடரும்.......
No comments:
Post a Comment