பகுதி 49
வெற்றிச்செல்வன்-உமா மகேஸ்வரன் |
பெருமளவு பணத்தை வாங்கிய சிங்கப்பூர் லலிதாவும் தொழிலதிபரும் கப்பலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்கள். செயலதிபர் உமா மகேஸ்வரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்திகள் அனுப்பினார். அவர்களும் உடனடியாக கப்பல் வாங்கி தருவதாக கூறி, உபயோகக் காலம் முடிந்து, உடைப்பதற்காக சென்னைக்கு வரும் ஒரு சிறு கப்பலை ஏமாற்றி செயலதிபர் தலையில் கட்டிவிட்டார்கள். சென்னை வந்த கப்பல், யார் கஷ்ட காலமோ சென்னை மெரினா பீச் கடலில் தரை தட்டி விட்டது. கப்பலின் படம் பத்திரிகையில் எல்லாம் வந்தது. உமாமகேஸ்வரன் கோபப்பட ,சிங்கப்பூர் பணம் வாங்கியவர்கள்இதுதான் கப்பல் இனி உங்கள் பொறுப்பு என்று கைவிரித்து விட்டார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி எமது செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மிக நெருங்கியவர். அவர் சிங்கப்பூரில் தன்னால் குறைந்த விலையில் நல்ல கப்பல்கள் வாங்கித் தரமுடியும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். எமது செயலதிபர் கப்பல் வாங்க முடிவு செய்து, சிங்கப்பூர் லலிதாவை தொடர்பு கொள்ள, அவர் சிங்கப்பூரில் பெரும் தொழிலதிபர் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த சிங்கப்பூர் தொழிலதிபருக்கு சென்னை ராயப்பேட்டையில் மிகப்பெரிய துணிக்கடை ஒன்று உள்ளது. இயக்கத்திலுள்ள தோழர்களுக்கு கப்பல் ஒன்று சொந்தமாகப் போகிறது . அதில்ஆயுதங்கள் வரப்போகிறது. என்று வதந்திகள் பரவி தோழர்களுக்கு பெரிய சந்தோசம்.
இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பும் செயலதிபர் உமாமகேஸ்வரன் பல வழிகளில் பணத்தை பெற முயற்சி செய்தபோது, சிங்கப்பூர் ஏமாற்று பேர்வழிகள் அதுதான் ஒப்பந்தம் கையெழுத்தாகி சமாதானமாகி முடிஞ்சது ,சமாதானம் ஏற்பட்டுவிட்டது, இனி என்னத்துக்கு பணமும் , கப்பலும் எனக் கூறிவிட்டார்கள்.பொறுத்துப் பார்த்த செயலதிபர் உமா, தமிழ்நாட்டில் இருந்த தனது ரகசிய வேலைகளைச் செய்யும், வசந்த் தலைமையிலான சில தோழர்களுக்கு கட்டளைகளை அனுப்பினார்.
1988 ஆம் ஆண்டு நான் சென்னை அலுவலகத்தை பொறுப்பு எடுத்த பின்பு, தீபாவளிக்கு முதல் நாள் இரவு சிங்கப்பூர் காரரின் சென்னை துணிக்கடை பரபரப்பாக தீபாவளி விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரம் இரவு 9 மணி போல் வசந்துடன், இன்னொருவரும் போய் கடை மேனேஜரை சுட்டுக் கொன்றார்கள்.
சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், லலிதாவும் பயந்து போய்விட்டார்கள். அவர்களை தொடர்பு கொண்ட செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களிடம்பணத்தைக் கேட்க, அவர்களும் தருவதாக கூறிவிட்டார்கள். அந்தப் பணத்தை பின்பு சித்தார்த்தன் போய் வாங்கி நமது இயக்கத்திற்கு மூன்று பெரிய சூட்கேஸ்களில் அடங்கக்கூடிய அளவுகம்யூனிகேஷன் சாமான்கள் வாங்கி அங்கு வைத்து விட்டார். இதுதான் கப்பல் வாங்கிய கதை.
நடேசன் |
மாதங்கள் வருடம் மறந்துவிட்டேன் புதுக்கோட்டையில் உள்ள எமது முகாமில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்னை வந்தேன். செயலதிபர் உமாமகேஸ்வரன் வாசுதேவா காரில் பயணமானார்கள் .காரை ரோபோட் என்ற தோழர் ஓட்டிச் சென்றார். மாணிக்கம் தாசன் நாங்கள் போவதற்கு ஒரு வேனை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். வேகக் கட்டுப்பாடு பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. அந்த வாகனத்தில் நான் ,மாதவன் அண்ணா, ஆனந்தி அண்ணா, திவாகரன், என நினைக்கிறேன், மற்றும் நடேசன் சென்றோம் மற்றும் கூட யார் வந்தவர்கள் என்றும் மறந்து விட்டேன். மாணிக்கம் தாசன், அவருக்கு வானில் காலை மடக்கிக்கொண்டு இருந்து வருவது கஷ்டம் என்று அவர் பஸ்ஸில் போய் விட்டார். நாங்கள் திருச்சிக்கு அருகில் சமயபுரம் என்ற ஊரை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு அம்பாசிடர் கார் விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து இருந்தது சுற்றி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த காரை கடக்கும்போது, நடேசன் இது பெரியவர் வந்த கார் என கத்த தொடங்கினார். எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. உடனடியாக இறங்கி காரை பார்த்தபோது டிரைவர் சீட்டில் எல்லாம் ஒரே ரத்தம். காரில் யாரும் இல்லை. முன் சீட்டில் கைத்துப்பாக்கி கீழே விழுந்து கிடந்தது. அப்போது போலீசார் யாரும் வரவில்லை. அங்கிருந்த மக்கள் இப்பதான் பஸ்ஸில் காயம்பட்டு இருந்தவர்களை போட்டுக் கொண்டு போகிறார்கள் என்று கூறினார்கள். நாங்கள் உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போனோம். அங்கு அப்பதான் செயலதிபர் உமாமகேஸ்வரன், மாணிக்கம் தாசன் இருவரும் ஸ்ட்ரெச்சரில் வாசுதேவா மற்றும் இருவரை தள்ளிக்கொண்டு போனார்கள். எங்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கும், அவர்களைப் பார்த்தவுடன் எங்களுக்கும் மனம் அமைதியாக இருந்தது. காரின் நிலைமையை பார்த்த எங்களுக்கு செயலதிபர் மிக பாரதூரமாக காயம் பட்டு இருப்பார் என நினைத்தோம். ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போகும் போதே ரோபோட் பெருமளவு இரத்தம் இழந்து மரணம் அடைந்து விட்டார்.
மாணிக்கம் தாசன் |
எப்படி மாணிக்கதாசன் அந்த நேரம் அங்கு வந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது செயலதிபர் கூறினார். விபத்து ஏற்பட்டவுடன் லேசாகத் தான் அடிபட்டதாக வும், வாசுதேவா மயங்கி விட்டதாகவும், காரை ஓட்டிய டேவிட், மற்றும் தனது பாதுகாவலர் படுகாயத்துடன் இருந்ததாகவும், எதில் மோதி விபத்து என்று மறந்துவிட்டேன். அரசாங்க பஸ்சுடன் என்றுதான் நினைக்கிறேன். தான் உடனடியாக நடு ரோட்டுக்கு வந்து, சென்னை பக்கம் இருந்து திருச்சி போகும் வாகனங்களை பதட்டத்துடன் நிறுத்த, அவர்கள் நிறுத்தாமல் போக, வந்த அரசாங்க பஸ் ஒன்று நிறுத்தி என்னவென்று கேட்க நடந்த விபத்தை குழு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக உதவும் படி கேட்டுள்ளார். முதலில் வாசுவை தூக்கிக்கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்ற வாசலுக்கு நேராக இருந்த சீட்டில் இருந்த வரை தட்டி தட்டி எழுப்பி, விஷயத்தைக் கூறி அவருக்கு சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். அந்த சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் மாணிக்கம் தாசன். அவர் வாசு தேவாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி பாய்ந்து இறங்கி ஓடி இருக்கிறார். அங்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் பார்த்தவுடன், பரபரப்பாக சென்று இருவரும் காயம்பட்ட இருப்பவர்களையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு திருச்சி பெரியாஸ்பத்திரியில் இறக்கியிருக்கிறார்கள். அந்த நேரம் தான் நாங்கள் போனது. செயலதிபர் உமா மகேஸ்வரன் கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருந்தார். மாணிக்கம் தாசன் பரபரப்பாக சில வேலைகள் எங்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு, மாதவன் அண்ணாவிடம் உடனடியாக புதுக்கோட்டை முகாமில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லும் படி கூறிவிட்டு, நடேசன் என்று நினைக்கிறேன் அழைத்துக்கொண்டு விபத்து நடந்த இடத்துக்கு போய் கைத்துப்பாக்கி, காரில் மறைத்து வைத்திருந்த மற்ற துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு, நடேசனை பாதுகாப்பாக அனுப்பி விட்டு திரும்ப திருச்சி பெரியாஸ்பத்திரி வந்தார். ஒரு இரண்டு மணி நேரத்தில் கந்தசாமி கண்ணன் எல்லோரும் வந்துவிட்டார்கள். மாணிக்கம் தாசன் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து விபத்து பற்றி விசாரிக்க வந்த போலீசாரிடமும் பேசி ஒழுங்கு செய்துவிட்டு, எல்லோருக்கும் காலை உணவு வாங்கித் தந்து எங்களை புதுக்கோட்டை முகாமுக்குஅனுப்பி வைத்தார்.
ரோபோட் மரணம் அடைந்தது எல்லோருக்கும் சரியான கவலை. மற்றவரும் மரணமடைந்து இருக்கவேண்டும் என நினைக்கிறேன். மறந்துவிட்டேன். தயவு செய்து இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருக்கும் தோழர்கள் பின் குறிப்பில் பதிவு போடும்படி அன்புடன் கேட்கிறேன். புதுக்கோட்டை முகாமில் இறுதி சடங்குகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் வந்துவிட்டார். மரணமடைந்தவர்கள் சடலம் வரவில்லை. ஷெர்லி காந்தப்பாசென்னையில் இருந்து நேரடியாக அரசு பஸ்சில் வந்தார். செயலதிபர் உடனடியாக என்னையும் ஷெர்லி கந்தப்பாவையும் திரும்ப உடனடியாக சென்னைக்கு போய் சில வேலைகளை செய்யச் சொல்லிவிட்டு ,என்னை வேலைகளை முடித்துவிட்டு புதுடில்லிக்கு போகச் சொன்னார். எமது கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.
நானும் கந்தப்பா வும் மௌனமாக கனத்த இதயத்தோடு சென்னை திரும்பி செயலதிபர் உமா மகேஸ்வரன் சொன்ன வேலைகளை செய்துவிட்டு நான் டெல்லி புறப்பட்டேன்
தொடரும்......
No comments:
Post a Comment