பகுதி 65
வெற்றிச்செல்வன் |
சித்தார்த்தர் இலங்கை போகும் முன்பு, இயக்கத் தோழர்கள் சிலரை பாஸ்போர்ட் எடுத்து கொழும்பு அனுப்புவதற்காக, சென்னை இலங்கை தூதுவராலயத்தின் முதன்மைச் செயலாளரை சந்திக்கசென்றோம். அவர் பெயர் அமரசேகர என நினைக்கிறேன். அவர் எமது நாட்டின் குழப்ப நிலைமைகளை கூறி மிகவும் கவலைப் பட்டார்.ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கை தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் சுயநல நோக்கத்திற்காக பிரச்சினைகளை கிளப்பி விட்டு, இன்று அந்நிய நாட்டுக்காரன் அதாவது இந்தியா காரன் வந்து நாட்டாமை செய்கிறான் என்று கூறி கவலைப்பட்டு இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டார்.
சித்தார்த்தன் மிகவும் கூலாக சிம்பிள் விஷயம். இலங்கை அரசு நினைத்தால் ரெண்டு வருடத்தில் பிரச்சினையை தீர்க்கலாம் என்றார். அவரும், நானும் ஆர்வமாக எப்படி என்று கேட்டோம். வடக்கு கிழக்குப் பகுதியை ஆட்சி செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பிடம் கொடுத்து விடுங்கள். அவர்கள் அங்கிருக்கும் அரைவாசிதமிழ் மக்களை துரோகிகள் என்று கொன்று விடுவார்கள். அதற்கு எதிராக மற்ற இயக்கங்களும் விடுதலைப் புலிகளுடன் சண்டை போடும் அரைவாசி தமிழர்கள் செத்து விடுவார்கள். மிச்சமிருக்கும் தமிழர்கள் சிங்கள பகுதிக்கு அகதிகளாக வந்து விடுவார்கள். இதெல்லாம் இரண்டு வருடத்தில் சுலபமாக நடந்துவிடும் என்று கூறினார். அன்று இருந்த நிலை அப்படி.
இலங்கை தூதுவராலய துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த ராஜா , டுமால் இருவரும் எங்கள் வக்கீலின் வாதத்திறமையால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட இரண்டொரு நாளில் நடந்த சுதந்திர தின விழாவில் இவர்களை எம்பஸி வாசலில் கைது செய்த போலீஸ்காரருக்கு வீர செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் வழக்கில் இந்த இருவரும் சம்பந்தப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டார்கள்.
டுமால் |
ராஜா , டு மால் என்னோடு தங்கி இருந்தாலும், ராஜா தான் வெளியில் தங்கி கொள்வதாக கூறி சென்றுவிட்டார். அடிக்கடி வந்து போவார். நாங்கள் சரியான பணக்கஷ்டத்தில் இருந்தோம். மாணிக்கம் தாசன் இன் அம்மாவும் பக்கத்தில் தங்கியிருந்தார். அடிக்கடி எமது அலுவலகம் வந்து மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருப்பர். மிக மிக நகைச்சுவையாக பேசுவார்.நாங்கள் டீ குடிக்கக்கூட பணமில்லாமல் இருந்தோம். அவர் வரும் போது எமது நிலையை அறிந்து எங்களுக்கும் டீ வாங்கி கொடுப்பார்.மாணிக்கம் தாசன் இன் முரட்டு குணத்துக்கும் அவரின் அம்மாவின் குணத்துக்கும் எட்டா பொருத்தம். இதைப்பற்றி அம்மாவிடமே கருத்துப் பரிமாற்றம் செய்தோம்.
எமது அலுவலக வீட்டில் பல இடங்களில் இருந்து வந்த பல டேபிள்கள் தேவைக்கு அதிகமான கதிரைகள் பீரோக்கள் இருந்தன. மாணிக்கம் தாசனின்அம்மா போட்டுக் கொடுத்த ஐடியா படி, அவற்றை விற்று எமது செலவுக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். தாசனின் அம்மாவே முன்நின்று அவற்றை விற்று நமக்கு பணம் கிடைக்க ஆவன செய்தார்.
வழமைபோல் கியூ பிராஞ்ச் அதிகாரி கள், ராணுவ உளவுத்துறை பொறுப்பாளர்கள் அடிக்கடி சந்திக்க தொடங்கினார்கள். எம்மோடு தொடர்பான ரா அதிகாரிகள் இலங்கையில் படு பிஸியாக இருந்தார்கள்.பணம் அனுப்புவதாக கூறி சென்ற சித்தார்த்தனும் ஒன்றும் செய்யவில்லை. நான் வசந்த் மூலம் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு தகவல் அனுப்பியும் சென்னை அலுவலகத்தை கண்டுகொள்ளவில்லை. சில வேளைகளில் வசந்த் எமது செலவுக்கு பணம் தந்து உதவி உள்ளார்.
88 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் சென்னைராயப்பேட்டையில் செயலதிபர் உமா மகேஸ்வரனின் கட்டளைக்கிணங்கஒரு கொலையை செய்துவிட்டு வசந்த் நண்பர்கள் திருச்சியில் தலைமறைவாகி விட்டார்கள்.
இரண்டொரு நாளில் ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்
பன்னீர்செல்வம் எமது வடபழனி அலுவலகம் வந்து வீட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்த போது என்னோடு இருந்த டுமால் நடுங்கிப் போய்விட்டார். திரும்பவும் தனக்கு ஜெயிலா என்று. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் எனது அரசியல்தொடர்புகளை கேட்டு மிக மரியாதையாக நடத்தினார். கியூ பிராஞ்ச் அதிகாரி களும் ஓரளவு என்னைப்பற்றி நல்லது சொன்ன படியால், எனக்கும் இந்த கொலைகும் நேரடி சம்பந்தம் இருக்கும் என்று அவர் நம்பவில்லை.அவர்கள் எமது வீட்டை சோதனை செய்தபோது ஒரு பழுதான வயர்லெஸ் ஹெட் துணியில் சுற்றி வைத்து இருந்தோம். அதை கண்டுபிடித்த போலீஸ்காரர் மிகவும் உற்சாகமாக,பன்னீர்செல்வத்திடம் ஐயா இந்த வயர்லெஸ் மூலந்தான் முகுந்தனும் இவர்களும் தொடர்பு கொள்கிறார்கள், என்று கூற இன்ஸ்பெக்டரும் ஆவலாக அதை பரிசோதித்து பார்த்த போது அது வேலை செய்யவில்லை. அவர் அதைஎடுத்துச் செல்ல முயலும் போது, நான் திடீரென இது இந்திய அரசாங்கம் கொடுத்தது,பழுதான படியால் அதை திரும்ப அவர்கள் ஒப்படைக்க சொல்லி உள்ளார்கள் என கூறினேன். அவரும் நம்பி விட்டார்.
வசந்த் |
பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவும், உயர் அதிகாரி சந்திக்கவும் வரச் சொன்னார். நாளை காலை வருவதாயின் என்னிடம் பஸ்சுக்கு காசு இல்லை பிறகு ஒருநாள் வருகிறேன் என்று கூறினேன். உடனே அந்த இன்ஸ்பெக்டர் பஸ்சுக்கு ஒரு இருபது ரூபாய் பணத்தை கொடுத்தார். அடுத்த நாள் போலீஸ் நிலையம் போனபோது,இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வமும் உயர் அதிகாரியும் நல்ல முறையில் பேசினார்கள். தங்களுக்கு கிடைத்த தகவல்படி உமா மகேஸ்வரனுக்கு ம் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறினார். நான் டெல்லியிலிருந்து இப்போதுதான் சென்னை வந்துள்ளேன் அதனால் எனக்கு இதைப் பற்றி தெரியாது.அதோடு எனது தொடர்புகள் அரசியல் சம்பந்தப் பட்டது. ஆயுத பிரிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்று கூறிவிட்டேன்.மேலும் விபரங்கள் அறிய கிடைத்தால் தங்களுக்கு தந்து உதவவேண்டுகோள் வைத்தார்கள் நானும் ஏற்றுக் கொண்டேன். போகும்போது பஸ்சுக்கு 100 ரூபாய் கொடுத்தார்கள். அடுத்த நாள் மிச்ச காசில் மாட்டு இறைச்சி வாங்கி சமைத்து சந்தோசமாக சாப்பிட்டோம்.
தொடரும்.
No comments:
Post a Comment