பகுதி 81
வெற்றிச்செல்வன் - உமா மகேஸ்வரன் |
பெரும்பான்மையான தோழர்களுக்கு மாநாட்டில் பெரிய ஆர்வம் இருக்க வில்லை. வசந்த் கொஞ்சம் கொஞ்சமாக சில பிரச்சினைகளை ஆரம்பிக்க, செயலதிபர் உமா மகேஸ்வரன் பதில் சொல்ல ஆரம்பிக்க முன் திவாகரன் தன்னிச்சையாக பதில் சொல்லத் தொடங்கினார். வசந்த் கடுமையாக திவாகரனை வார்த்தைகளால் சாட தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிட்டது போன்ற முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் வழமைபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் ராஜதந்திர நடவடிக்கைகள், நீண்டகால போராட்டம் மக்கள் போராட்டம் போன்ற பல வார்த்தை ஜாலங்கலால் பல உதாரணங்கள் பல கதைகள் கூறி சமாளித்தார்.
வசந்த் |
மாநாட்டில் எல்லா தோழர்கள்லாலும் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வி, நாங்கள் யாருக்கு எதிராக இப்போது போராட்டத்தை நடத்துகிறோம். எங்களுக்கு விடுதலைப்புலிகளும் எதிரிகள், அமைதிப் படையும் எதிரிகள், இலங்கைராணுவமும் எதிரிகள்மற்றும் இந்திய அமைதி படையோடு இருக்கும் மற்ற இயக்கங்களும் எதிரிகளாக தான் இருக்கின்றன. அப்புறம் எதிரிகள் வைத்துக்கொண்டு எங்களால் போராட முடியுமா என்று கேட்ட கேள்விக்கு கடைசிவரை செயலதிபர் உமாமகேஸ்வரன் ஆல் மாநாட்டில் சரி அதற்குப் பின்பும் சரி சரியான பதில் சொல்லவில்லை.
ஆனால் அதை இயக்க தோழர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வந்த தோழர்களிடம் பாட்டாளி வர்க்கப் புரட்சி, சிங்கள தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்ந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பெரும் புரட்சியாளர் போன்று பிரசங்கம் பண்ணி. முடித்தார். பெரும்பான்மையான தோழர்கள் எப்ப மாநாடு முடியுமென்று கேட்கத் தொடங்கினார்கள்.
ஒருநாள் மாநாடு முடிந்து மாலை நேரத்தில் செயலதிபர் மகேஸ்வரனை சுற்றி நாங்கள் சில பேர் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான், வசந்த், ஆட்சி ராஜன், சாம் முருகேசு ,கந்தசாமி, முருகன், காண்டீபன் போன்றவர்கள் எனநினைவில் உள்ளது. வாசுதேவா கண்ணன் சுபாஷ் போன்றவர்களின் கொலை தொடர்பாக, பேசிக்கொண்டிருக்கும்போது விடுதலைப்புலிகளை பழிக்குப் பழி வாங்க வேண்டும், என்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென செயலதிபர் வாசு சுபாஷ் போன்றவர்கள் மரணம் அடைந்தது தனக்கு இயற்கையே உதவி செய்துள்ளதாக, இன்று அவர்கள் இருந்திருந்தால் கிழக்குமாகாண பிரதேசவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு நமது இயக்கத்தை உடைத்துக் கொண்டு போய்விட்டு இருப்பார்கள் என்று கூறினார். நாங்கள் நானும்தான் அவர் கூறியது கேட்டு அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் வசந்த் மட்டும் கடுமையாக நீங்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது பெரிய ஐயா என்று கூற, செயலதிபர் வாய மூடு என்றுஒரே வார்த்தையில் அடக்கி விட்டார். பின்பு மாணிக்கம் தாசன் பற்றி செயலதிபர் குறை கூறி பேச, கந்தசாமி மட்டும் பெரிய ஐயா இப்ப எங்களுக்கு மாணிக்கம் தாசன் தான் பெரிய பலம் என்று கூற, கந்தசாமியை கடுமையாக திட்டினார். பின் தளத்தில் இயக்கத்தை உனது செயல்களால் அழித்தாய். இங்கு இவன் (மாணிக்கம் தாசன்) மிச்சத்தையும் அழித்து விடுவான், எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டு தனித்தனியாக பிரிந்து போனோம். நாங்கள் கூட்டம் சேர்ந்து கதைப்பதை தவிர்த்துக் கொண்டோம். பயம்தான் காரணம். யார் யார் போட்டுக் கொடுப்பார்கள் என்று.
வில்பத்து காடு |
24/03/1989 அன்று மாநாட்டின் முதல் கட்டம் இயக்கத்தின் மத்திய குழுவை தேர்ந்தெடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. காலையில் மாநாடு முடிந்து பகல் உணவுக்குப் பின்பு ஓய்வு நேரம் இருந்தது. என்னையும், KL ராஜனையும் செயலதிபர் அழைப்பதாக கூறினார்கள்.
எங்கள் இருவரையும் தனியாக பாதுகாவலர் இல்லாமல் அழைத்துக் கொண்டு மூவரும் பேசிக்கொண்டே கொஞ்சதூரம் தோழர்கள் இல்லாத இடமாகப் பார்த்து போயிருந்தோம். செயலதிபர் எங்கள் இருவரையும் பார்த்து இன்று நடக்கும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலுக்கு உங்கள் இருவரையும் தேர்தல் நடத்தும் பொறுப்புக்கு நியமிக்க போகிறேன். புதிய மத்திய குழுவிற்கு இயக்கத்தை நல்ல முறையில் நடத்துபவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இங்கு இயக்கத்தை குழப்பி அழிக்கும்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மத்திய குழுவில் தெரிவு செய்யப்பட்டால், எங்கள் இயக்கத்தை புதிய வடிவில் செயல்பட ,வளர்ச்சிபெற விடமாட்டார்கள். அதனால் மாணிக்கம் தாசன், காண்டீபன், வசந்த் வாக்கெடுப்பில் முதல் 7இடங்களில் வந்தாலும் அவர்களின் பெயரை அறிவிக்க வேண்டாம்.முடிந்தளவு முதல் 7 இடங்களில் முதலில் தனது பெயரையும், திவாகரன், ஆனந்தி, முருகன், மாணிக்கம் பிள்ளை போன்ற பெயர்கள் சேர்த்து விடும் படியும் கூறினார். சித்தார்த்தர் ஆனந்தி மாநாட்டுக்கு வராவிட்டாலும் தேர்தலில் நிற்க அவர்கள் பெயரும் கூறப்படும் என்றார். சித்தர்தனக்கு கூடுதல் வாக்கு கிடைத்தாலும், பெரிய ஆதரவு இல்லாத மாதிரி 7 இடத்தில் வரக்கூடிய மாதிரி முடிவுகளை மாற்றி எழுதுங்கள் என்றார். ஆனால் நாங்கள் தோழர்கள் முடிவுகளை காட்டுங்கள் என்று பிரச்சினை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அவரும் ஆகக்கூடிய வாக்குகள் பெற்று இருப்பவர் செயலதிபர் என்றும் அவர் பெயரை மட்டும் கூறினால் போதும் என்றும். இயக்கப் பாதுகாப்பு கருதி மத்திய குழு உறுப்பினர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்படும் என்றார்.
உண்மையில் அவர் என்மேல் ,KL ராஜன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சந்தோசமாக இருந்தாலும், தொடர்ந்து அவர் தோழர்களுக்கு எதிராக செயல்பாடுகளில் ஈடுபடுவது ஒரு தலைவருக்குரிய பண்பாக படவில்லை.
இந்த தேர்தல் அதிகாரி பதவி தான் என்னை இலங்கையை விட்டு தப்பி வர உதவியது. இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
தொடரும்..
No comments:
Post a Comment