ஆலடி அருணா - குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படம் |
நான் இப்படி நடந்த சம்பவங்களை பதிவுகளாக போடுவதால், தமிழ் தலைவர்கள் ஒன்றுபட வேண்டிய நேரத்தில் அவர்களை பிரித்து எதிரிக்கு சாதகமாக எனது பதிவுகள் உள்ளதாக ஒரு தோழர் குறைபட்டு கருத்து சொல்லியிருந்தார். அன்று ஆயுதம் தூக்கிதமிழ் மக்களை ஏமாற்றியவர்கள், இன்று வெள்ளை வேட்டி சட்டை போட்டு கொண்டு அதே தமிழ் மக்களை ஏமாற்றுவது தெரியவில்லையா? 2009 பின்பு பெரிய அளவில் தமிழ் மக்கள் அழிந்த பிறகும் இவர்கள் ஒற்றுமை பட்டார்களா?இன்றுவரை பதவிக்காகவும் பணத்துக்காகவும் நாயாய் பேயாய் அலைகிறார்கள் ஒழிய, சிங்கள அரசு தமிழருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒற்றுமைப்பட்டு குரல் கொடுத்தார்களா? இன்று தமிழ் பிரதேசங்கள் முழுக்க புத்த பெருமான் தோன்றி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழ் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு உரியது என்று நிரூபிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்ஒற்றுமையாக ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா? ஆக எனது பதிவால் தான் இவர்கள் ஒற்றுமை படவில்லை என்பதுபோல் கருத்துக்கள் கூற வேண்டாம்.
குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த எனது பேட்டி |
விடுதலைப்புலி இயக்கத்துக்கு மாதாமாதம் இந்திய அரசு பணம் கொடுப்பதை அறிந்து, எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் சார்பாக சித்தார்த்தன் இந்திய பிரதம மந்திரிக்கு தமிழ்நாட்டில் எமக்குள்ள கடன்கள் கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாயை தந்து உதவும்படி எழுதிய கடிதத்தை, நான் பிரதம மந்திரி அலுவலகத்தில் கொடுத்தேன். அந்தக் கடித பிரதியைகீழே தந்துள்ளேன். நான் டெல்லியில் இருக்கும் வரை தமிழ்நாட்டு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளின்றி என்னை சந்திப்பார்கள். அவர்கள் எல்லோரும்ஒரு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதியாக என்னை பார்த்ததைவிட, ஒரு ஈழ தமிழ் போராளி என்ற முறையில்தான் என்னோடு பேசினார்கள். ஆலோசனை கூறினார்கள்.
ஆலடி அருணா எம்பி யோடு செயலதிபர் உமாமகேஸ்வரன் முதல் முறையாக சந்தித்து பேசும்போது, அப்பொழுது செயலதிபர் உமாமகேஸ்வரன் எம்ஜிஆர் ரோடு மிக நெருக்கமாக இருந்த நேரம், ஆலடி அருணா எம்பி செயல் அதிபரிடம் நீங்க கலைஞரை சந்திப்பது இல்லையா என்று கேட்டார். உமாவும் தான் சந்திப்பதாக கூறினார். ஆலடி அருணா எம்ஜிஆர் கட்சியில் இருந்தாலும், அவர் கூறினார் எப்பவும் கலைஞர் ரோடு, தொடர்பில் இருங்கள். காரணம் எந்தப் பிரச்சினை வந்தாலும் திமுக தொண்டர்கள் இலங்கை தமிழர்களுக்கு எப்பவும் உதவி செய்வார்கள். அவர் கூறியது உண்மைதான். ஆரம்ப காலத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் திமுக கட்சியினர் இலங்கை தமிழருக்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள். இதேபோல் டெல்லியை விட்டு போகும் முன்பு ஆலடி அருணா எம்பி மிகவும் கவலைப்பட்டு கூறினார். இலங்கைதமிழ் மக்களை பாது
டெல்லியில் எனது ஸ்கூட்டர் |
டெல்லியில் இலங்கை பிரச்சினைக்காக இந்திய பாராளுமன்றத்தில் ஆரம்பகாலத்தில் குரல்கொடுத்து உதவி செய்தவர்கள், மற்றும் எங்களை சந்தித்து ஆதரித்தவர்கள், எல் கனேசன் எம் பி, வை கோபால்சாமி எம்பி, தண்டபாணி எம்பி, முரசொலி மாறன் எம்பி, வென்கா எம்பி, மோகன், நாகரத்தினம், டாக்டர் கலாநிதி எம் பி போன்றவர்கள் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர். அதே மாதிரி அண்ணா திமுகவை சேர்ந்த ஆலடி அருணா, மோகனரங்கம், சின்னசாமி, ஜனார்த்தனம், கம்பம் செல்வேந்திரன், வலம்புரி ஜான் , மதுரை பெரியகுளம் ஜக்கையன் எம் பி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்ல ஆதரவு கொடுத்தவர்கள். அதே மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் எம்பி அவர்கள் நல்ல உதவிகள் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி, நாகர்கோயில் டென்சில், கோயம்புத்தூர் குப்புசாமி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் நான் போய் சந்தித்தால் நல்ல மரியாதை கொடுத்து இலங்கை பிரச்சினை பற்றி கேட்டு அவர்களால் முடிந்த உதவியே செய்துள்ளார்கள். டெல்லியில் இவர்களை இலகுவாக யாருடைய உதவியும் இல்லாமல் நேரடியாக போய் பேசக்கூடிய எங்கள் கருத்தை கூறக்கூடியதாக அந்த காலத்தில் இருந்தது. நான் சென்னை வந்த பின்பு அவர்களை சந்திக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்பவும் அவர்களைச் சுற்றி பெரிய கட்சிக்காரர்கள் இருப்பார்கள். அதனால் சென்னை வந்தபிறகு அவர்களின் தொடர்பு படிப்படியாக போய்விட்டது. ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்பு முற்றாக அவர்கள் யாரும் எங்களை என்னை சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் கூறிய காரணம் கடைசியில் பாம்புக்கு பால் வார்த்த கதையாகி விட்டது என்று.
ஆறு வருடங்களாக டெல்லியில் தனியாக இருந்து எந்த ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், என்னைப் பொறுத்து எனது பணியை சிறப்பாக செய்து சென்னை திரும்புகிறேன். ஒரே ஒரு கவலை எனது இயக்கம் தளத்திலும் பின் தளத்திலும் தனது சுய பலத்தை இழந்து, எந்த எதிரிக்கு எதிராக புறப்பட்டோம் என்பதை மறந்து எமது செயலதிபர் உமாமகேஸ்வரன், தமிழர்களின் கொடிய எதிரியான அத்துலத் முதலியின் நெருங்கிய கூட்டாளியாக மாறி நமது இயக்கத்தை படிப்படியாக அழித்தது தான் மிச்சம். டெல்லியில் இருந்த காலங்களில் புதுடில்லி, பழைய டெல்லி எல்லா இடங்களையும் ஸ்கூட்டரில் சுற்றி வந்துள்ளேன். எல்லா இடங்களையும் கஷ்டப்படாமல் போய்வர முடிந்தது. செயலதிபர் உமா மகேஸ்வரன், சித்தார்த்தன் வந்து போகும்போது எனது ஸ்கூட்டர் தான் வாகனம். டெல்லியில் அவ்வளவு காலம் இருந்தும் 100 கிலோ மீட்டர் தூரம் இருந்த தாஜ்மஹாலை போய் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. அப்போது டூரிஸ்ட் பஸ்களில் போய்வர நூறு ரூபாய்தான் கட்டணம். டெல்லியில் பூசணி அல்வா சிறப்பு. ரோட்டோரங்களில் சாக்குப் பைகளில் வைத்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பார்கள். நான் அடிக்கடி வாங்குவேன். அதேநேரம்10 ஆப்பிள் இருபது ரூபாய் அல்லது 25 ரூபாய்க்கு விட்டார்கள். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இருக்கவில்லை.இப்போது ஆப்பிள் சாப்பிட விருப்பபட்டாலும் அது வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. என்னது டெல்லி வாழ்க்கையில் பல நினைவுகள் இன்னும் நினைவில் வரவில்லை. நினைவுகள் வரும்போது கட்டாயம் பதிவுகளில் குறிப்பிடுவேன்.
நான் சென்னை வந்து இறங்கியவுடன் எமது வடபழனி அலுவலக இல்லத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை எதிர் நோக்கினேன்.
தொடரும்......
No comments:
Post a Comment